ஆகமம் அறிவோம் பகுதி 13: 'சிரார்த்த வகைகள்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகில் இல்வாழ்க்கை தர்மத்தில் ஒழுகுபவனால் செய்யப்படும் பிதிர் வழிபாடு,
சிரார்த்தம், தர்ப்பணம் என இருவகைப்படும் எனக் கண்டோம்.
மேற்சொன்ன விடயங்களுக்கான ஆதாரங்களைக் காமிக ஆகமத்திலும்,
ஆசௌசதீபிகை, காஞ்சிபுராணம், சித்தாந்த சாராவழி வியாக்கியானம்,
சோமசம்பு பத்ததி, கிரண ஆகமம் முதலியவற்றில் காணலாம்.
 
🔔 🔔 🔔
 
மற்றொன்றையும் இவ்விடத்தில் கூற வேண்டும்.
மேற்சொன்னவை, ஒருவர் இறந்ததன் பின் சந்ததியினர் செய்யும் கருமங்களாகும்.
அங்ஙனமன்றி இறக்கப்போகிறவரேகூட, 
தனது இறப்பு நிகழப்போகும் நேரத்தில்,
தாம் செய்த பாவங்கள் நீங்கி நற்கதிப்பேறு அடைவதற்காக,
பிராமணரை வருவித்து பசுத்தானம் முதலியவற்றை செய்யும்படி,
மேற்படி நூல்கள் கூறுகின்றன.
இத்தானங்களை அவர்கள் செய்ய முடியாத பட்சத்தில்,
அவரது புத்திரர் போன்றோர் அவற்றைச் செய்யலாம்.
 
🔔 🔔 🔔
 
அடுத்து சிரார்த்தங்கள் பற்றிய விபரங்களைக் கூறும் முன்பாக,
நமது சமயத்தில் அடிப்படை அறிவேனும் இல்லாதவர்களுக்காக,
ஒருசில விடயங்களைக் குறிப்பிடவேண்டியிருக்கிறது.
நமது கிரியைகள் அவ்வவற்றிற்குப் பொருத்தமான,
காலவிஷேடங்களில் இயற்றப்பட வேண்டும் என  நூல்கள் கூறுகின்றன.
அபரக்கிரியைகளைப் பொறுத்தவரை அக்கால விஷேடங்கள்,
பெரும்பான்மை பற்றி இரண்டு விதமாகப் பிரிக்கப்படுகின்றன.
அவற்றுள் ஒன்று 'திதி' என்பதாகும்.
மற்றையது 'நட்சத்திரம்' என்பதாகும்.
 
🔔 🔔 🔔
 
திதி என்பது சந்திரனது இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
சந்திரன் பதினைந்து நாள் வளர்ந்து பின் பதினைந்து நாள் தேயும் என்பது,
அனைவரும் அறிந்த செய்தியே.
அங்ஙனம் வளர்ந்து, தேயும் தனித்தனி பதினைந்து நாட்களையே 'திதிகள்' என்கிறோம்.
சந்திரன் பூரணமாய் வளர்ந்ததான நாளை 'பௌர்ணமி'  என்றும்,
சந்திரன் பூரணமாய் தேய்ந்து மறையும்  நாளை 'அமாவாசை' என்றும் சொல்கிறோம்.
சந்திரன் பௌர்ணமியின் பின் தேயத் தொடங்கும் நாட்களை,
'அபரபட்சம்' அல்லது 'கிருஷ்ணபட்சம்' என்று சொல்வது வழக்கம்.
இக்காலத்தையே 'தேய்பிறைக்காலம்'  என்று ஊர் வழக்கில் நாம் சொல்கிறோம்.
அதுபோலவே அமாவாசையின் பின் சந்திரன் வளரத் தொடங்கும் காலத்தை,
'பூர்வபட்சம்' அல்லது 'சுக்கிலபட்சம்' என்று சொல்வது வழக்கம்.
இக்காலத்தையே 'வளர்பிறைக்காலம்' என்று ஊர் வழக்கில் நாம் சொல்கிறோம்.
பட்சம் என்ற வடசொல்லே பக்கம் என்று தமிழில் உரைக்கப்படுகிறது.
 
🔔 🔔 🔔
 
பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களிற்குப் பின்,
சந்திரன் வளரும் அல்லது தேயும் நாட்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர்கள் உண்டு.
முதலாவது நாள் 'பிரதமை' என்றும்,
இரண்டாவது நாள் 'துதியை' என்றும்,
மூன்றாவது நாள் 'திருதியை' என்றும்,
நான்காவது நாள் 'சதுர்த்தி' என்றும்,
ஐந்தாவது நாள் 'பஞ்சமி' என்றும்,
ஆறாவது நாள் 'சஷ்டி' என்றும்,
ஏழாவது நாள் 'சப்தமி' என்றும்,
எட்டாவது நாள் 'அட்டமி' என்றும்,
ஒன்பதாவது நாள் 'நவமி' என்றும்,
பத்தாவது நாள் 'தசமி' என்றும்,
பதினோராவது நாள் 'ஏகாதசி' என்றும்,
பன்னிரண்டாவது நாள் 'துவாதசி' என்றும்,
பதின்மூன்றாவது நாள் 'திரயோதசி' என்றும்,
பதினான்காவது நாள் 'சதுர்த்தசி' என்றும் சொல்லப்படுகின்றது
தேய்பிறைக் காலமானால் பதினைந்தாவது நாள் அமாவாசையாகவும்,
வளர்பிறைக் காலமானால் பதினைந்தாவது நாள் பௌர்ணமியாகவும் அமையும்
 
🔔 🔔 🔔
 
சிரார்த்தம், திதியின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது.
ஒருவரின் சிரார்த்த திதியை,
அவர் இறந்த மாதத்தையும்,
அம்மாதத்தில் அவர் இறந்த திதியையும்,
அம்மாதத்தில் அத்திதி வளர்பிறையில் வந்ததா?
தேய்பிறையில் வந்ததா? என்பதையும் வைத்தே நிச்சயித்தல் வேண்டும்.
உதாரணத்திற்கு,
ஒருவரது சிரார்த்ததிதியைக் கீழ்கண்டவாறு சொல்லலாம்.
'தைமாதம் பூர்வபக்கத் துவாதசி' என்பதுவே திதியை சொல்லும் முறையாம்.
 
🔔 🔔 🔔
 
நட்சத்திரம் என்பது, 
மேஷ ராசியின் ஆரம்பத்திலிருந்து மீனராசியின் முடிவுவரை,
சந்திரன் 13 பாகை 20 கலை வீதம் விலகிச் செல்வதினால் ஏற்படும் 27 காலப் பகுப்புக்களாகும்.
இவ் 27 காலப்பகுப்புக்களும், 
1.அச்சுவினி 2. பரணி 3. கார்த்திகை 4. ரோகிணி 5. மிருகசீரிடம் 6. திருவாதிரை 7. புநர்பூசம் 8. பூசம்  9. ஆயிலியம் 10. மகம் 11. பூரம் 12. உத்தரம் 13. அத்தம் 14. சித்திரை 15. சுவாதி 16. விசாகம் 17.அனுஸம் 18. கேட்டை 19. மூலம் 20. பூராடம்  21. உத்தராடம் 22. திருவோணம் 23. அவிட்டம் 24.சதயம் 25. பூரட்டாதி  26. உத்தரட்டாதி  27. ரேவதி என்று சொல்லப்படும்.
இவையே நட்சத்திரங்களின் பெயர்களாம்.
 
🔔 🔔 🔔
 
இந்தத் திதி, நட்சத்திரம் தவிர்ந்த சில காலவிஷேடங்களும்,
அபரக்கிரியைகளுக்கு உரியவையாய்ச் சொல்லப்படுகின்றன.
அவற்றுள் 'சங்கிராந்தி' என்பது ஒன்று.
தமிழ்மாதப் பிறப்பையே சங்கிராந்தி என்பர்.
இதுதவிர சந்திர, சூரிய கிரகண நாட்களும்,
பிதிர்க்காரியங்களுக்குரிய நாட்களாய் உரைக்கப்படுகின்றன.
இவ் அடிப்படையைத் தெரிந்து கொண்டு,
இனி சிரார்த்தங்களின் வகைகள்பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்வோம்.
 
🔔 🔔 🔔
 
சிரார்த்தம் மொத்தம் 96 வகைப்படும் எனக் கூறப்படுகிறது.
இவற்றிற்கு 'ஷண்ணவதி சிரார்த்தம்' என்பது பொதுப்பெயராகும்.
'ஷண்ணவதி' என்ற வார்த்தைக்கு 96 என்பது பொருளாம்.
இவற்றுள் 
மனுவாதி தின சிரார்த்தம் - 14
மகாளய சிரார்த்தம் - 16
யுகாதி சிரார்த்தம் - 04
சங்கிராந்தி சிரார்த்தம் - 12
அமாவாசை சிரார்த்தம் - 12
வியதிபாதச் சிரார்த்தம் - 13
வைதிருதி சிரார்த்தம் - 13
அட்டகைச் சிரார்த்தம் - 12
இவற்றின் கூட்டுத்தொகை 96 ஆகிறது.
இனி மேற் சொன்ன சிரார்த்தங்களின் விபரங்களைக் காணலாம்.
 
🔔 🔔 🔔
 
(தொடரும்)...
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்