ஆகமம் அறிவோம் பகுதி 17: 'வேறு சில சிரார்த்த விபரங்கள்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ங்களுக்கு, சென்ற வாரத்தில்,
அன்னசிரார்த்தம், ஆமசிரார்த்தம் ஆகியவை பற்றிய விபரங்களைச் சொல்லியிருந்தேன்.
அவை பற்றி இன்னும் சில சொல்லவேண்டியிருக்கிறது.
 
🌺 🌺 🌺
 
ஆம, அன்ன சிரார்த்தங்களை
எவரெவர் செய்யலாம் என்பது பற்றிய விபரங்கள்
பிராமணர், ஷத்திரியர், வைஷிகர் ஆகிய மூன்று வர்ணத்தவரும்,
அன்னசிரார்த்தமே செய்யவேண்டும் என நூல்கள் வகுக்கின்றன.
மேற் சொன்ன வர்ணத்தவர்களும் ஆபத்துக் காலங்களிலும்,
தீர்த்தயாத்திரைகள் செல்லும்போதும், வேறு ஊர்களுக்குப் பயணம் செய்யும்போதும்,
கிரகண காலத்தின்போதும் ஆமசிரார்த்தமே செய்க என்று நூல்கள் சொல்கின்றன.
மற்;றைய வர்ணத்தவர்கள் எப்போதும் ஆமசிரார்த்தமே செய்யவேண்டும் என்பது விதி.
ஆமசிரார்த்தமும் செய்யமுடியாதபட்சத்தில்,
இயன்ற தட்சணையை நற்பிராமணர்க்குக்  கொடுத்தல் வேண்டுமாம்.
 
🌺 🌺 🌺
 
சிரார்த்தம் செய்ய வசதியற்றோர்க்கான வழி
சிரார்த்தம் செய்யப் பொருள் இல்லாதவர்கள்,
காய், கனி, கிழங்கு, எள்ளு போன்ற இவைகளையேனும்,
நல்லியல்புள்ள பிராமணர்க்குக் கொடுத்து அவர்களை வலம் வந்து நமஸ்கரித்து,
எள்ளுத் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு நல்லபடி உணவிடவேண்டுமாம்.
தர்ப்பணம் செய்வதற்கும் வசதியில்லாத இடத்து,
பசுக்களுக்கு புல்லையிட்டு அவற்றைத் திருப்தி செய்தால் போதும் என்று,
நூல்கள் சொல்கின்றன.
 
🌺 🌺 🌺
 
சிரார்த்தம் செய்யத்தக்க இடங்கள்
தனது வீடு, நந்தவனம், மலை, புண்ணிய தீர்த்தங்கள், திருக்கோயில்கள்,
குருக்களது வீடு, பசுவின் சாணத்தால் மெழுகப்பட்ட இடம் ஆகியவற்றில் ஒன்றில்,
சிரார்த்த கடமைகளைச் செய்யலாம் என்று நூல்கள் உரைக்கின்றன.
 
🌺 🌺 🌺
 
சிரார்த்தம் செய்யத்தக்க காலம்
நமது தமிழ், காலஅளவையின்படி,
ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் ஆகும்.
எனவே ஆங்கில முறைப்படி 24 மணித்தியாலங்களைக் கொண்ட,
ஒரு நாளில் 60 நாழிகைகள் அடங்கும்.
60 நாழிகை ஒரு நாளாகும்.
(60 நாழிகைகள் ஒ  24 நிமிடங்கள்  ஸ்ரீ 1440 நிமிடங்கள் ஸ்ரீ 24மணித்தியாலங்கள் ஸ்ரீ ஒரு நாள்)
 
🌺 🌺 🌺
 
ஒரு நாளின் பகற்பொழுதை மட்டும் ஐந்து பகுதிகளாகப் பிரித்து,
அவற்றிற்கு பிராதக்காலம், சங்கவ காலம், 
மத்தியானகாலம், அபரான்ன காலம், சாயான்ன காலம் என,
நம் பெரியவர்கள் பெயரிட்டுள்ளனர்.
பஞ்சாங்கத்தில் போடப்பட்டுள்ள,
சூரிய உதய நேரத்திலிருந்து எண்ணப்படும்,
முதல் ஆறு நாழிகையும் பிராதக்காலமாம். 
இரண்டாவது ஆறு நாழிகையும் சங்கவகாலமாம். 
மூன்றாவது ஆறு நாழிகையும் மத்தியானகாலமாம்.
நான்காவது ஆறு நாழிகையும் அபரான்னகாலமாம்.
ஐந்தாவது ஆறு நாழிகையும் சாயான்னகாலமாம்.
 
🌺 🌺 🌺
 
சிரார்த்தத்தினை,
இராக்காலத்திலும், பிராதக்காலத்திலும்,
இராக்காலத்தின் இறுதி முகூர்த்தமாகிய இரண்டு நாழிகையிலும்,
பகற்காலத்தின் இறுதி முகூர்த்தமாகிய இரண்டு நாழிகையிலும் அமைகின்ற,
சந்தியாக்காலங்களிலும் செய்தல் ஆகாது.
அக்காலங்களில் செய்தால் அது இராட்சதர்களுக்குப் பிரீதியானதாகுமாம்.
அன்னசிரார்த்தத்தினை அபரான்ன காலத்தில் செய்யவேண்டும் என்பது விதி.
ஆம சிரார்த்தத்தை சங்கவகாலத்தில் செய்து,
அபரான்ன காலத்தில் போசணம் செய்தல் வேண்டும் என்பதும் விதியாம்.
 
🌺 🌺 🌺
 
முற்பகலில் தேவ காரியங்களையும்,
அபரான்ன காலத்தில் பிதிர் சிரார்த்தத்தையும்,
மத்தியான காலத்தில் ஏகோதிட்டத்தினையும்,
பிராதகாலத்தில் விருத்திச் சிரார்த்தத்தினையும் செய்தல் வேண்டும் என,
நூல்கள் கூறுகின்றன.
ஏகோதிட்டம் பற்றிப் பின்னர் கூறுகிறேன்.
 
🌺 🌺 🌺
 
சிரார்த்த தினத்தில் செய்யத் தக்கவைகள்
சிரார்த்தம் செய்யும் தினத்தில் தம்மால் இயன்ற அளவில் கோயிலில்,
அபிஷேகம், பூசை, திருவிளக்கு ஏற்றுதல், 
பசுக்களுக்கு உணவிடுதல் முதலிய நற்காரியங்களைச் செய்தல் வேண்டுமாம்.
 
🌺 🌺 🌺
 
சிரார்த்த தினத்தில் செய்யத் தகாத கருமங்கள்
சிரார்த்த தினத்தன்று அழுதல், கோபப்படுதல், சிற்றின்பத்தில் ஈடுபடுதல் முதலிய காரியங்களைச் செய்தல் ஆகாதாம்.
சோற்றினைக் காலால் மிதித்தலும் இலையில் சோற்றை தூவிப் பரிமாறலும் ஆகாதாம்.
சிரார்த்தத்தை கண்ணீருடன் செய்தல் பிரேத ஜன்மங்களையும், 
கோபத்துடன் செய்தால் சத்ருக்களையும், 
பொய் சொல்லிச் செய்தால் நாய்களையும், 
அன்னத்தை மிதித்துச் செய்தால் இராக்கதர்களையும், 
சோற்றைத் தூவிப் பரிமாறினால் பாவிகளையும் 
அச்சிரார்த்தத்தின் பலன் சென்றடையும் என நூல்கள் சொல்கின்றன.
இவை தவிர வேறு செய்யத்தகாத குற்றங்களும் நூல்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
நெற்குத்தல்
பிச்சையிடுதல் 
தயிர்கடைதல்
நெய் முதலிய பொருட்களை வாங்குதல், கொடுத்தல் முதலியன,
சிராத்தத்தைச் செய்ய இருப்பவர் சிராத்த தினத்திலும், 
சிராத்தத்துக்கு முதல் தினத்திலும், 
சிராத்தத்துக்கு மறுநாளும் சவரம் செய்து கொள்ளுதல், 
இரண்டாம் முறையும் புசித்தல், 
என்பவைகளைத் தவிர்த்;து விரத சீலனாய் இருத்தல் வேண்டும் என,
உயர்ந்தோர் வகுத்துள்ளனர்.
 
🌺 🌺 🌺
 
சிரார்த்தத்திற்கான சமையல் செய்பவர்களுக்கான கட்டுப்பாடுகள்
சமசாதி அல்லாதவர்கள்.
சிவதீட்சை பெறாதவர்கள்.
நித்திய கருமவிதியினை இயற்றாதவர்கள்.
சுத்தம் அற்றவர்கள்.
சிரார்த்தம் நிறைவேறுவதற்கு முன் அவ் உணவுகளை உண்ண நினைப்பவர்கள்.
வெற்றிலை, பாக்கு போட்டபடி சமைப்பவர்கள் போன்ற,
குற்றமுடையவர்களால் சமைக்கப்படும் உணவு வகைகளை,
பிதிர்கள் விரும்பமாட்டார்களாம். 
அவற்றை இராக்கதர்களே விரும்பாவார்களாம்,
இது நூல்கள் கூறும் முடிவு.
 
🌺 🌺 🌺
 
சிரார்த்தத்திற்குரிய பொருட்கள்
எள்ளு, நெல்லரிசி, கோதுமை, சிறுபயறு,
உழுந்து , சர்க்கரை, தேன், பசுநெய், பசும்பால்,
பசுத்தயிர், எண்ணெய், சிகைக்காய், உப்பு, புளி,
மிளகு, சீரகம், மஞ்சள், கடுகு, இஞ்சிக்கிழங்கு,
வாழையிலை, வாழைத்தண்டு, வாழைக்காய்,
வாழைப்பழம், மாங்காய், மாம்பழம், பலாப்பழம்
தேங்காய், இளநீர், பலாக்காய், புடலங்காய், அவரைக்காய், பாகற்காய், 
எலுமிச்சம்பழம், நெல்லிக்காய், சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு,
கீரை, முன்னையிலை, முசுட்டையிலை, காரையிலை,
பிரண்டை, கருவேப்பிலை, வெற்றிலை, பாக்கு, ஏலம்,
சுக்கு, கிராம்பு, சாதிக்காய், சாதிபத்திரி முதலியன,
சிரார்த்திற்குரிய பொருட்களாம்.
 
🌺 🌺 🌺
 
சிரார்த்தத்திற்கு விலக்கப்பட்ட பொருட்கள்
நூல்கள்,
கடலை, பீர்க்கங்காய்,  நீற்றுப்பூசனிக்காய்,
சுரைக்காய், கத்தரிக்காய், அத்திக்காய், முருங்கைக்காய்,
வாழைப்பூ, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கொவ்வைக்காய், எருமைப்பால்,
எருமைத்தயிர், எருமைநெய், ஆட்டுப்பால், ஆட்டுத்தயிர் முதலியவை,
சிரார்த்தத்திற்கு விலக்கப்பட்ட பொருட்கள்  என்கின்றன. 
 
🌺 🌺 🌺
 
சிரார்த்தத்திற்குரிய பத்திர(இலைகள்) புஷ்பங்கள்
துளசி, வில்வம், தாமரை, சண்பகம், அறுகு, 
புன்னை, நந்தியாவர்த்தை, எள்ளுப்பூ, மருக்கொழுந்து,
வெட்டிவேர் முதலியவைகள்,
சிரார்த்தத்திற்கு உரிய பத்திர புஷ்பங்களாம்.
 
🌺 🌺 🌺
 
சிரார்த்தத்திற்குரிய ஆகாத பத்திர புஷ்பங்கள்
மகிழம்பூ, தாழம்பூ, அலரிப்பூ, சிறுசண்பகப்பூ முதலியவைகளை,
சிரார்த்தத்தின்போது பயன்படுத்தலாகாது என,
நம் நூல்கள் விதித்துள்ளன.
மேற்கூறியவற்றுக்கான ஆதாரங்களை காரணாகமம் முதலிய ஆகமங்களிலும், 
அகோரசிவாசாரிய பத்ததியிலும், ஸ்மிருதிகளிலும் (தர்மசாஸ்திரங்கள்) காணலாம்.
(தொடரும்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்