ஆகமம் அறிவோம் - பகுதி 10: 'பிதிர்த்தேவர்கள்' - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-


ஆகமம் அறிவோம் - பகுதி 10: 'பிதிர்த்தேவர்கள்' - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

 
ங்களில் பலர் இக்கட்டுரைத் தொடருக்குத் தரும் ஆதரவுக்கு,
மீண்டும் ஒருதரம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மிகப்பழமையான விடயங்களைப் பற்றி எழுதப்போகிறேனே,
நவீன உலகில் வாழும் யாருக்கு இது தேவைப்படப்போகிறது?
யார் இதைப் படிக்கப் போகிறார்கள்? என்று நினைத்திருந்த எனக்கு,
உங்கள் ஆர்வம் ஆச்சரியம் தருகிறது.
நீங்கள் காட்டும் ஆர்வம் மூலம்,
எவ்வளவுதான் காலம் வளர்ச்சியுற்றாலும்,
நம்முடைய சமய நம்பிக்கையும் மரபு ஈடுபாடுகளும்,
என்றும் மாறாது எனும் உண்மையை அறிந்து மகிழ்கிறேன்.
நன்றி! நன்றி! நன்றி!
ஆனால் இம்முறை நான் எழுதப்போகும் அத்தியாயம்,
நிச்சயமாய் உங்களில் பலருக்கு 'போர்' அடிக்கப்போகிறது.
அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அதற்கான காரணத்தையும் சொல்லிவிடுகிறேன்.
நமது சமயத்தில் புராணங்களின் அடிப்படையிலான செய்திகளை,
ஏற்று இயங்கும் பலர் இருக்கின்றனர்.
அவர்களை 'பௌராணிகர்கள்' என்று உரைப்பார்கள்.
அத்தகு பௌராணிகர்களால் உரைக்கப்படும்,
புராணங்களின் அடிப்படையிலான பிதிர்கள் பற்றிய பல செய்திகளும் உள்ளன.
இனி, அவர்கள் உரைக்கும் அச்செய்திகளைத்தான் இங்கு உரைக்கப்போகிறேன்.
ஒருவேளை அச்செய்திகள் உங்களுக்குக் கடுமையாக 'போர்' அடித்தால்,
அச்செய்திகளைத் தாண்டிச் செல்லுமாறு உங்களை நமஸ்கரித்துக் கேட்டுக் கொள்கிறேன்.
உலகில் பிதிர்த்தேவர்கள் பல்வகைப்படுகின்றனர்.
சென்றவாரம் பிரம்ம புத்திரர்களாகிய ஏழு பிதிர்த்தேவர்கள் பற்றிச் சொல்லியிருந்தேன்.
இம்முறை, அவர்களைத் தவிர பிரம்மனது ஆரம்பப் படைப்பில் உண்டாக்கப்பட்ட,
ஏழு பிதிர்த்தேவர்கள் பற்றிச் சொல்கிறேன்.
தனது ஆரம்பப் படைப்பில் பிரம்மதேவர்,
ஏழு பிதிர்த்தேவர்களை படைத்தாராம்.
இவர்களிலும் நால்வர் உடம்பு பெற்றவர்கள். 
மற்றைய மூவரும் ஒளி வடிவானவர்கள் என்று உரைக்கப்படுகிறது.
(ஆதாரம்- அபிதானசிந்தாமணி)
இவர்களுக்கான உணவு சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றால் கிடைக்கும்படி,
பிரம்மதேவர் ஓர் ஒழுங்கினைச் செய்தாராம்.
இந்த ஏழு தேவர்களுக்கும் 'ஸ்வதா' என்பவள் மனைவியாவாள் என்று புராணங்கள் சொல்கின்றன.
இக்கட்டுரைக்காகச் சென்ற வாரம் தேடியபோது,
பிதிர்த்தெய்வங்கள் இன்னும் பலராய் விரிவது தெரியவந்தது.
இப்பதிவு பூரணமாக வேண்டும் என்பதற்காக அவர்கள் பற்றியும் இங்குச் சொல்லிவிடுகிறேன்.
'சோமபர்' என்னும் வேறு பிதிர்க்களும் உள்ளனராம்.
இவர்களின் மானச புத்திரியான 'நர்மதை' அதிவேகமுடையவளாக இருப்பாளாம்.
பிதிர்கள் பலராதலால், அந்தணர்கள் சரியான பிதிர்களை அறிந்து,
சிரார்த்தம் முதலியவற்றைச் செய்ய வேண்டும் என மச்சபுராணம் சொல்கிறதாம்.
பிதிர்களின் வம்ச விபரம்
பிதிர்கள் ஏழு வம்சங்களாகப் பிரிக்கப்படுகின்றனர்.
அவர்களுள் முதல் மூன்று கணத்தவரும் சரீரமற்றவர்களாகவும்,
மற்றைய நான்கு கணத்தவரும் சரீரத்தோடு இருப்பவர்களாகவும் சொல்லப்படுகிறது.
சரீரம் பெறாத பிதிர்களுக்குத் தனிப்பெயர்கள் உண்டு.
அவர்கள்  'வைராஜர்' என்று அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் யோகநிலை உற்றவர்களாயும், 
தெய்வத்தைப் பூசிப்பவர்களாயும் இருந்து,
பிரம்மனது ஆயுள் முடியும் காலத்தில் பிரம்மவேதிகளாய்ப் பிறந்து,
முற்பிறவி ஞானத்துடன் உத்தம பிறவியை அடைவார்களாம்.
உடம்பு பெற்ற பிதிர்களுக்கு 'மேனை' என்னும் மானசபுத்திரி பிறந்தனளாம்.
அந்த மேனைக்கு 'மைனாகன்' எனும் புதல்வனும்,
அவனுக்கு 'கிரவுஞ்சன்' எனும் புதல்வனும் பிறந்தனராம்.
பின்னும் இப்பிதிர்களுக்கு,
'உமை', 'ஏகவருணை', 'அபரணை'  என மூன்று பெண்கள் பிறந்து,
அவர்கள் முறையே, 'ருத்ரன்', 'பிருகு', 'சைகிஷவ்யன்' என்பாரை,
 மணந்ததாகப் புராணங்கள் கூறுகின்றனவாம்.
 
மேற்சொன்ன பிதிர்த்தெய்வங்கள் தவிர,
இன்னும் சில பிதிர்த்தெய்வங்களும் உளவாம்.
விப்ராஜர், பார்க்கிஷர் என்பது அவர்தம் பெயர்களாம். 
இவர்கள் புலத்திய வம்சத்தில் தோன்றியவர்கள். 
தேவர், யட்சர், இராட்சதர், காந்தர்வர் போன்றோரால் இவர்கள் பூசிக்கப்படுவார்கள். 
இவர்களில் 'பீவிரி' என்னும் யோகினி,
விஷ்ணுவை எண்ணி கணவன் பொருட்டுத் தவஞ்செய்து,
 'குசிகனை' மணந்து, 'கிருத்தி' என்னும் பெண்ணையும்,
'கிருஷ்ண', 'கௌர', 'பிரபு', 'சம்பு' என்னும் நான்கு புதல்வர்களையும் பெற்றனள்.
'கிருத்தி', 'பாஞ்சாலதேச அதிபதியை' மணந்தனள்.
இவை புராணங்கள் கூறும் வரலாறுகள்.
ஏற்கனவே அந்தணத் துவேசமும் வர்ணாச்சிரமதர்ம துவேசமும் கொண்டவர்கள்,
என்னைத் தமது விமர்சனங்களால் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்,
கண்ணைத் திறந்து கொண்டே கிணற்றுக்குள் பாய்பவது போல,
அவர்களுக்கு மேலும் ஆத்திரம் தரும் ஒரு செய்தியை இனிச் சொல்லப்போகிறேன்.
ஒரு விடயத்தைத் தொகுக்கும்போது,
அவ்விடயம் பற்றிய முழுமைச் செய்திகளும் உள்ளடங்க வேண்டும் என்பது என் கருத்து.
அதனால் எதிர்ப்பாளருக்கு அஞ்சி,
புராணங்கள் கூறும் சில செய்திகளை மறைத்துவிட நான் விரும்பவில்லை.
இனி, அச்செய்திகளைக் காண்போம்.
பிராமணர்களுக்கான பிதிர்கள்
இப்பிதிர்த்தேவர்களைத் தவிரவும் இன்னும் சில பிதிர்த்தேவர்களும் உளராம்.
வசிட்டருடைய மானச புத்திரர்களாய்த் தோன்றியவர்களான,
சுமூர்த்தி, மந்தன் ஆகிய இருவரும் பிதிர்த்தேவர்களாம். 
இவர்கள் பிராமணரால் பூசிக்கப்படுவர். 
இந்தப் பிராமண பிதுர்களுக்கு சோமபாள் என்பது பொதுப்பெயர்.
இவர்கள் சுவர்க்கத்துக்கு மேல் உள்ள ஊர்த்துவலோகத்தை இடமாய்ப் பெற்றனராம்.
மேற் சொன்ன 'சுமூர்த்தி', 'மந்தன்' எனும் பிதிர்களுக்கு,
'கௌ' என்னும் மானஸ புத்திரி பிறந்து 'சுக்கிரனை' மணந்தனள் என்பர்.
மேற் சொன்னவர்கள் தவிர,
அக்னிதத்தர்கள் சோமபர்கள் பருஹ்ஷத்துகள், 
அக்னிஷ்வாத்தர்கள், சௌமியாள்,
என்பவர்களும் பிராமண பிதுர்க்களாவர் எனப்படுகிறது.
ஷத்திரியர்களுக்கான பிதிர்கள்
இவர்களன்றி அங்கீரஸ முனிவரின் புத்திரர்களும், 
மரீசி முனிவரின் புத்திரர்களும் 
ஷத்திரியர்களின் பிதிர்க்கள் எனப்படுகின்றனராம். 
இவர்கள் சூரிய மண்டலத்தில் வசிப்பார்கள் எனப்படுகிறது.
இந்தச் ஷத்திரிய பிதிர்களுக்கு ஹவிர்புக்கு என்பது பொதுப்பெயர்.
இவர்களுடைய மானச புதல்வியான 'யசோதை',
பஞ்சவன் புத்திரனான 'பாசுமதனை' மணந்து,
'திலீபன், பகீரதன் ஆகியோரைப் புதல்வராகப் பெற்றனளாம்.
என்ன ரொம்பத்தான் களைத்துவிட்டீர்கள் போலிருக்கிறது.
நீங்கள் என்ன? நானே களைத்துத்தான் போனேன்!
என்ன செய்ய, பிதிர்கள் பற்றிய முழு விபரங்களையும்,
தொகுக்கவேண்டியிருப்பதால்த்தான்  இந்தக் கஷ்டம்.
ஊசி போடும் டாக்டர்,
'இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்வது போல,
நானும் சொல்லவேண்டியிருக்கிறது.
தயைகூர்ந்து சகித்து மேலே வாருங்கள்.
வைசியர்களுக்கான பிதிர்கள்
மேற் சொன்ன பிதிர்களன்றி,
'கார்த்த', புலக' பிரசாபதிகளின் புதல்வர்களான,
'சுவதர்', 'ஆஜ்யபர்' என்பவர்களும்,
பிதிர்த்தெய்வங்களாய்ப் போற்றப்படுகின்றனர் என்றும்,
இவர்கள் வைசியர்களுக்குப் பிதிர்களாவர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
வைசிக பிதிர்களுக்கு 'ஆஜ்யபர்' என்பது பொதுப் பெயராகவும் வழங்கப்படுகிறது.
இவர்களின் மானச புத்திரியான 'விரசை',
'நகுஷனது மனைவியாகி 'யயாதி' என்னும் குமரனைப் பெற்றாள் என்றும்,
புராணங்கள் உரைக்கின்றன.
சூத்திரர்களுக்கான பிதிர்கள்
மேற்  சொன்ன பிதிர்கள் தவிர,
நகுசன், விரசை ஆகியோரது புதல்வர்களாகிய,
'மானஸர்' என்னும் நாலாவது பிதிர்க்கணங்களும்,
பிதிர்த் தெய்வங்களாய்ப் போற்றப்பட்டு வருகின்றனர்.
சத்தியலோகத்தில் இருக்கும் இவர்கள்,
சூத்திரர்களுக்குப் பிதிர்களாவராம்.
இவர்களது மானஸ புதல்வியே நர்மதை என்று சொல்லப்படுகின்றது.
இந்தச் சூத்திர பிதிர்களுக்குச் சுகாலிகள் என்பது பொதுப்பெயர்.
வேறு பிதிர்கள்
மேற் சொன்ன இவர்கள் மட்டுமல்லாமல்,
விராட் புருஷனாலே சிருட்டிக்கப்பட்ட,
'சோமசதர்கள்', சத்திய தேவர்களுக்குப் பிதிர்களாவர் என்றும், 
'மரீசி' முதலியவர்களால் சிருட்டிக்கப்பட்ட 'அக்னிஷ்வாத்தர்கள்,
தேவர்களின் பிதிர்களாவர் என்றும், 
அத்திரி முனிவரின் புத்திரர்களான பருஹிஷத்துக்கள், தயித்தியர் ஆகியோர்,
தானவர், யஷர், கந்தருவர், உரகர், இராக்கதர், சுபர்நர், கின்னரர், 
ஆகியோரின் பிதிர்க்களாவர் என்றும் புராணங்கள் உரைக்கின்றன.
இவர்களில் 'சோமபாள்' பிருகு புத்திரர்,
'ஹவிர்புக்கு'கள் ஆங்கீரச புத்திரர்கள்,
'ஆஜ்யபர்' புலஸ்திய புத்திரர் 
'சுகாலிகள்' வசிட்ட புத்திரர்.
மேற்சொன்ன அனைத்துப் பிதிர்த்தேவர்களுக்கான உணவாக,
சிரார்த்தத்தின் மூலமும் தர்ப்பணத்தின் மூலமுமே,
உணவினைப் பிரம்மன் வகுத்துள்ளார் என்பர்.
பிரேத பிதிர்கள்
இவர்களைத் தவிர, 
பிதாவின் குலம், மாதாவின் குலம் இரண்டிலும் குருவால் கிரியை செய்யப்படாது,
நரகத்திலே கிடப்பவர்கள் பிரேத பிதிர்கள் எனப்படுவர்.
இவர்கள் யம உலகில் வாழ்வார்கள். 
இச்செய்தியினை மிருகேந்திர ஆகமம் உரைக்கிறது.
விஷூவ தேவர்கள்
பிதிர்த் தேவர்களைத் தவிர,
உத்தரக் கிரியைகளின் பலனை நல்கும், வேறு தேவர்களும் உளர்.
அவர்கள் விஷூவ தேவர்கள் என்று அழைக்கப்படுவர். 
தருமனுக்கு விசுவா என்பவளிடம் உதித்த குமாரர்களே விசுவதேவர் எனப்படுவர். 
இவர்கள் சிரார்த்தத்தில் பூசிக்கப்படுவர். 
வசுபந்தர். கிருதுதக்ஷர், காலகாமர், துரிவிரோஷனர், பூரூரவார்த்திரவர் முதலிய
பதின்மரே இத்தேவர்களாவர்.
வேத நெறிப்படி ஒழுகுவோர்க்கு செய்யப்படும் சிரார்த்த பயனை,
புரூரவர், ஆர்த்திரவர் எனும் விஷூவ தேவர்களும்,
சபிண்டீகரணத்தின் பயனைக் காலர், காமர் எனும் விஷுவதேவர்களும் நல்குவர்.
வைதிகருக்குரிய பிதிர்த்தேவர்களும், விஷூவதேவர்களும் பற்றிய விபரங்கள் பின்வருமாறு
வைதிகருக்குரிய பிதிர்தேவர்கள்  வசுருத்திரர், ஆதித்தர்  ஆகியோர்.
விசுவதேவர்கள் சிராத்தத்தில் பயன் தருவோர் புரூரவர், ஆர்த்திரவர் ஆகியோர்
சபிண்டீகரணத்தில் பயன் தருவோர் காலர், காமர் ஆகியோர்.
புவநேசுவர பதம் கொடுக்கும் லோகதர்மிணீ தீட்ஷை பெற்றோருக்குரிய,
பிதிர்த்தேவர்களும், விசுவதேவர்களும் பற்றிய விபரம் பின்வருமாறு:
பிதிர்தேவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரர் ஆகியோர்.
விசுவதேவர் - யமன், அருணன் ஆகியோருமாம்.
சமயிக்கும், புத்திரருக்கும் உரிய பிதிர்த்தேவர்களும், விசுவதேவர்களும் பற்றிய செய்திகள் பின்வருமாறு:
பிதிர்தேவர் - கந்தர், சண்டர், கணாதீசர் ஆகியோர்
விசுவதேவர் - நந்தி, மகாகாளர் ஆகியோர்.
சாதகருக்கும், ஆசாரியருக்கும் உரிய பிதிர்த்தேவர்களும், விசுவதேவர்களும் பற்றிய, செய்திகள் பின்வருமாறு:
பிதிர்தேவர் - ஈசர், சதாசிவர், சாந்தர் ஆகியோர்
விசுவதேவர் - கலாக்கினி உருத்திர், அநந்தர் ஆகியோர்.
பிதிர்தேவரையும், விசுவதேவர்களையும் சிவசக்தி அதிட்டித்து நிற்பதால்,
அவர்களுக்குச் சக்தி கிட்டுகிறது.
பிரமா முதலிய மூவரும் லௌகிக தேவர் என்றும்,
கந்தர் முதலிய மூவரும் உருத்திரதேவர் என்றும்,
ஈசர் முதலிய மூவரும் சிவதேவர் என்றும் சொல்லப்படுவர்.
இத்தோடு பிதிர்தேவர்களின் விபரம் முற்றுப்பெற்றது.
வரும் வாரத்திலிருந்து பிதிர்க்காரியங்கள் பற்றிய விபரங்களைக் காணலாம்.
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்