ஆகமம் அறிவோம் - பகுதி 11: 'அபரக் கிரியைகளின் பலன்' - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ங்களது எதிர்பார்ப்புக்கான அபரக்கிரியைகள் பற்றிய விடயங்கள்,
இன்னும் சற்றுத் தாமதமாகத்தான் வரப்போகின்றன.
தயைகூர்ந்து பொறுத்தருளுங்கள்.
இம்முறை அபரக்கிரியைகளின் பலன்கள்பற்றி,
நமது புராண, இதிகாசங்களில் வரும் மேற்கோள்கள் சிலவற்றைச் சொல்லிவிட்டு,
பின்னர் பிதிர்த்தெய்வங்கள் ஆற்றும் கடமைகள் பற்றியும் சொல்லலாம் என்று இருக்கிறேன்.
அடுத்தமுறையிலிருந்து நடைமுறை சார்ந்த அபரக்கிரியைகள் பற்றிய விபரங்களைச் சொல்கிறேன். 

🍁 🍁 🍁
இல்வாழ்வான் செய்யவேண்டிய ஐந்து கடமைகளில்,
தென்புலத்தார் கடனே முக்கியமானது என்கிறார் நமது வள்ளுவப்பெருமான்.
தென்புலத்தார் தெய்வம் விருந்(து) ஒக்கல் தான் என்(று) ஆங்(கு) 
ஐம்புலத்தார் ஓம்பல் தலை
என்னும் குறளிலே,
தென்புலத்தாரை முதலில் வைத்ததே இதற்காண சான்றாம். 

🍁 🍁 🍁

சிரார்த்தமானது செய்யப்பட்டால் சிவபெருமானுடைய மகாத்மியத்தினால்,
தேவர்கள், மனிதர்கள், பிதிரர்கள், அசுரர்கள் ஆகிய இவர்கள் திருப்தியடைந்து,
கணவன், மனைவி ஆகியோரது இரு குலங்களும் விருத்தியாகும் என,
சோமசம்பு பத்ததியில் சொல்லப்பட்டிருக்கிறது.

🍁 🍁 🍁

'மனு' வம்சத்திலே தோன்றிய மன்னனாகிய திலீபன் புத்திரப்பேறு இன்மையால் வருந்தி,
தனது குலகுருவாகிய வசிட்ட மகாமுனிவரிடம் 'புதல்வர் இல்லாமையினாலே, 
எமது முன்னோரான பிதிரர்களுக்குக் கொடுக்கும்,
பிண்டமிடுதல், தருப்பணம் செய்தல் முதலிய கடன்களைச் செய்ய முடியாமல்,
வருந்துகின்றேன்'
என்று  சொன்னான்.
பின்னர் வசிட்டருடைய அனுக்கிரகத்தால் பிறந்த 
திலீபனுடைய புத்திரனாகிய இரகு, 
யோக மார்க்கத்தினாலே தேகத்தை விட்டு முத்தி அடைந்தபொழுது,
அவனது புத்திரனாகிய அஜகுமாரன் நிட்டையிலிருந்து,
இறந்தோருக்குச் செய்யும் கடமைகளைச் சந்நியாசிகளைக் கொண்டு செய்வித்து,
பின்னர் பிதிர்கள்மேல் இருந்த பக்தியினால் அந்த இரகுவுக்கும்,
திலோதக பிண்டதானம் முதலியவைகளைச் செய்தானென இரகுவமிசம் கூறுகின்றது.
(திலம் - எள்ளு, உதகம் - நீர்)

🍁 🍁 🍁

தசரதன் இறந்தபிறகு அவன் மகனாகிய பரதனும்,
சடாயு உயிர்நீத்த பின் ஸ்ரீராமபிரானும்,
அவர்களுக்கு அந்தியக் கிரியைகளைச் சிரத்தையோடு செய்தமையை,
இராமாயணம் எடுத்துக் கூறுகிறது.

🍁 🍁 🍁

தவ சிரேட்டராய் விளங்கிய குச்சக முனிவர்,
தமது புத்திரராகிய மிருககண்டூயரை நோக்கி,
'புத்திரனே! நீ பிதிர்கள் உய்வடையும் வண்ணம்,
பிதிர்க்கடன்களைச் செய்வதற்காய்,
புதல்வரைப் பெறும்பொருட்டு மணம் செய்ய வேண்டும்.'
எனக் கூறியதாய்,
கந்தபுராணம் கூறுகிறது.

🍁 🍁 🍁

'பிதிரர் பொருட்டு ஓமம், பிண்டதானம், தர்ப்பணம் முதலியவைகளை,
மறக்காமல் செய்வானாகிய புத்திரனை உடையவனே,
பெரிய சுவர்க்கத்தை அடைவான்'
என்று மத்தியந்த முனிவர்,
தமது புத்திரராகிய வியாக்கிரபாத முனிவருக்குக் கூறினார் என்று,
உமாபதிசிவாசாரியார் 'கோயில்புராணத்தில்' பதிவு செய்திருக்கிறார்.

🍁 🍁 🍁

புகழனாரும், அவரது துணைவியார் ஆகிய மாதினியாரும் இறந்தபின், 
அவர்கள் பிள்ளைகளாகிய திலகவதியாரும், மருள்நீக்கியாரும்,
அவர்களுக்குச் செய்யும் அந்திய கருமங்களை,
குறைவின்றி முடித்தார்கள் என்று பெரியபுராணம் கூறுகின்றது.

🍁 🍁 🍁

மேற்கண்டவாறு பிதிர்க்கடன் செய்வதன் அவசியத்தை,
நமது சமய நூல்கள் பலவும் உறுதி செய்கின்றன.
புலவராயினும், ஞானிகளாயினும், மூடர்களாயினும், 
பெண்களாயினும், பிரமச்சாரியாயினும், அரசராயினும், 
மற்று எவர்களாயினும் பிதா, மாதா முதலாயினோருக்கு,
சிராத்தத்தைச் செய்யாது விட்டால், 
கோடி  பிறவியில் அவர்கள் சண்டாளர் ஆவார்கள் என்பது,
நமது உயர் நூல்களின் துணிபாம்.

🍁 🍁 🍁

பிதிர்த்தேவர்களின் பணி 
சைவசமயத்தில் பிறந்தும் சிராத்த உண்மைகளை அறியாத சிலர்,
'இறந்தவர் எந்தப் பிறவியில் புகுந்தார்களோ? எங்கே போனார்களோ? 
அவர்கள் பொருட்டுச் செய்யும் சிராத்தம் முதலியவைகளை,
அவர்கள் எங்ஙனம் ஏற்றுப் பலன் அடைவார்கள் என வினவுவர்.
இறந்த தந்தை, தாயர் தங்கள் வினைக்கு ஏற்ப, 
எங்கு சென்றார்களோ என்று நாம் அறிந்து,
பிதிர்க்காரியங்களைச் செய்தல் இயலாதாம்.
அதனாலேயே எல்லா வல்லமையும் உடையராகிய சிவபெருமான், 
பிதிர்வழிபாட்டை ஏற்று அதன் பயனை,
இறந்தவர்கள் எப்பிறப்பில் புகுந்தனரோ அப்பிறவியில் செலுத்தி,
பயன் அடைவித்தல் பொருட்டே,
பிதிர்த்தேவர்களைப் படைத்தனர் என்று நமது சமயம் கூறுகிறது.

🍁 🍁 🍁

அப் பிதிர்த்தேவர்கள் கோபம் இல்லாதவர்களாயும், 
எப்பொழுதும் சிவத்தியானம் உள்ளவர்களாயும், 
பிரசித்தர்களாயும், பரிசுத்தர்களாயும் இருப்பார்களாம்.
இறந்தவர்கள் தங்கள் தங்கள் வினைக்கேற்ப பிறக்கும் பிறவிகளுக்கு, 
சிரார்த்த வழிபாட்டுப் பயனைக் கொண்டு சேர்ப்பது,
இவர்தம் கடமையாகும் என்று நூல்கள் உரைக்கின்றன.

🍁 🍁 🍁

நாம் பிதிர்தேவர்களைப் பூசிக்க அவர்கள் அவ்வழிபாட்டை ஏற்று,
இறந்தவர்களுக்கு அதன் பலனைக் கொடுத்து உதவுவார்கள் என அறிந்தோம்.
அது எவ்வாறு என்பதை விளக்க ஓர் உதாரணத்தை உரைக்கலாம். 
வெளிநாட்டில் வாழும் ஒருவர்,
இங்கு வாழும் தமது உறவினர்க்காக அனுப்பும் வெளிநாட்டுப் பணத்தை,
இங்குள்ள வங்கியோ,  தபால்நிலையமோ பெற்றுக்கொண்டு,
அப்பணத்தை இங்குள்ளவர் பயன்படுத்தும் பணமாய் மாற்றிக் கொடுப்பது போலவே,
மேற்படி பிதிர்களின் பணி நிகழும் என்பதனை நாம் அறிதல் வேண்டும்.

🍁 🍁 🍁

(தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்