ஆகமம் அறிவோம் - பகுதி 12: 'அபரக் கிரியைகளின் பலன்' - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

த்தரக்கிரியைகளைச் செய்து மூதாதையரை வழிபடுதல்,
புத்திரர்களுக்குரிய கட்டாய கடமையாகும்.
உத்தரம் என்ற வார்த்தைக்குப் பின் நிகழ்வது என்பது பொருள்.
கிரியை என்ற வார்த்தைக்குச் செயல் என்று பொருள்.
ஒருவரது மரணத்தின் பின்பாக அவரைக் குறித்துச் செய்யும் கருமங்களே,
உத்தரக்கிரியை என்று சொல்லப்படுகிறது.
இவ் உத்தரக்கிரியையினையே அபரக்கிரியை என்றும் சொல்கின்றோம்.

🌼 🌼 🌼

நமது சைவ சமயத்தில் தீட்சை என்பது மிகமுக்கியமான ஒரு கிரியையாகும்.
தீட்சை என்ற சொல்லுக்குப் பாசத்தை அறுத்து,
ஞானத்தைக் கொடுப்பது என்பது பொருளாகும்.
தீட்சைகள் பலவகைப்பட்டன.
சமயதீட்சை, விஷேட தீட்சை, நிர்வாண தீட்சை என்பன சிலவாம்.
இத்தீட்சைகளைப் பெற்றவர்களுக்கான கடமைகள்,
வெவ்வேறாய் உரைக்கப்படுகின்றன
தீட்சைக் காலத்தில் தீட்சை தரும் குருவினால் போதிக்கப்பட்ட,
சைவ ஆசாரங்களை வழுவாது ஒழுகுதல்,
சைவசமயத்தில் பிறந்த ஒவ்வொருவரதும் கட்டாய கடமையாகும்.
மேற்படி தீட்சைகளைப் பெற்றவர்கள்,
வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

🌼 🌼 🌼

சமய தீட்சையை மட்டும் பெற்று சிவாகம விதிப்படி,
குரு உபதேசிக்கும் நித்திய கருமங்களையும்,
சிவாலயத் தொண்டையும் மாத்திரம் செய்பவர்,
சமயி என்று அழைக்கப்படுவார்.

🌼 🌼 🌼

சமய, விஷேட தீட்சைகளைப் பெற்று,
ஸ்நானம், தர்ப்பணம், சிவபூசை, அக்கினி காரியம்,
சிவத்தியானம் ஆகியவற்றைச் செய்து தமக்கு மேம்பட்டவர்களான,
ஆசாரியர், சாதகர் என்போர் அன்புடன் ஏவியதைச் செய்பவர்,
புத்திரகர் என்று அழைக்கப்படுவர்.

🌼 🌼 🌼

சமயம், விஷேடம், நிர்வாணம் ஆகிய,
மூன்று தீட்சைகளையும் பெற்று,
நித்திய (தினம் செய்வது), நைமித்திய (விஷேடங்களில் செய்வது) கருமங்களை,
சிவாகம விதிப்படி செய்து,
ஆசாரியன் என்று சொல்லப்படுபவரை வணங்கி,
சிவனுடைய திருவடிகளில் அன்பு பொருந்தி,
தன்னில் படிந்துள்ள மும்மலங்களையும் நீக்க முயல்வோர்,
சாதகர் என்று அழைக்கப்படுவர்.

🌼 🌼 🌼

மேற்கூறிய மூன்று தீட்சைகளுடன்,
ஆசாரிய அபிஷேகமும் பெற்று நித்திய, நைமித்திய,
காமிக (விருப்பங்களை நிறைவேற்றச் செய்வது) கருமங்களைச் செய்து,
சமயிகள், புத்திரகர், சாதகர் எனும் மூவகை மாணாக்கர்களையும் கொண்டு,
அவரவர் அதிகாரத்திற்குரிய கருமங்களைச் செய்விப்பவர்,
ஆசாரியர் என அழைக்கப்படுவர்.

🌼 🌼 🌼

தீட்சை பெற்று அதில் உரைக்கப்பட்ட ஆசாரங்களை வழுவாது,
அனுஷ்டித்த மாணாக்கர்கள் இம்மையில் போகத்தையும்,
மறுமையில் மோட்சத்தையும் அடைவார்கள் என நம் நூல்கள் கூறுகின்றன.
இதென்ன? இவர் திடீரெனத் தீட்சை பற்றிக் கூறுகிறார்,
இதற்கும் பிதிர்க்காரியங்களுக்கும் என்ன தொடர்பு என்று சிந்திப்பீர்கள்.
அதுபற்றி இனிச் சொல்கிறேன்.

🌼 🌼 🌼

தீட்சை ஆசாரங்களை அனுட்டிக்காதவர்கள்,
நமது சமயம் சொல்லும் 36 தத்துவங்களில்,
புத்தி தத்துவத்தில் உள்ளதான பைசாச புவனத்திலே,
பிசாசுக்களாகி அங்கு நூறு ரிஷி வருடங்கள் வரையும்,
துன்பம் அனுபவிப்பர் என்று நமது நூல்கள் கூறுகின்றன.

🌼 🌼 🌼

தீட்சை ஆசாரத்தில் தவறிய குற்றம்,
அறிந்து தவறியது, அறியாது தவறியது என இருவகைப்படும்.
அவற்றுள் அறிந்து தவறிய குற்றங்கள் பிராயச்சித்தங்களைச் செய்வதனால் நீங்கும் என்றும்,
அறியாமல் தவறிய குற்றங்கள் அபரக்கிரியைகளைச் செய்வதால் நீங்கும் என்றும்,
நமது நூல்கள் உரைக்கின்றன.

🌼 🌼 🌼

இப்போது உங்களுக்கு அபரக்கிரியைகள் பற்றிச் சொல்லத் தொடங்கி,
இடையில் தீட்சை பற்றிச் சொன்னதன் காரணம் புரிந்திருக்கும்.

🌼 🌼 🌼

விதிவிலக்காக ஒன்றைக் கூற வேண்டும்,
சமய ஆசாரங்களில் விருப்பமும் பற்றும் இல்லாதிருக்கும்,
நைட்டிக பிரமச்சாரியும் (வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரியம் காப்பவன்), சந்நியாசியும்,
தமது சமய ஆசாரத்திலே சில குறைகள் வந்தால்,
தனது மரண காலத்தின்போது,
பஞ்சாட்சர மந்திரத்தினைப் பத்தாயிரம் முறை செபிக்க வேண்டும். 
அன்றேல் ஒரு சிவஞானிக்குப் பூசை செய்ய வேண்டும் என நூல்கள் உரைக்கின்றன.

🌼 🌼 🌼

தீட்சை ஆசாரங்களில் அறியாமல் தவறிய குற்றங்கள்,
அபரக்கிரியைகளைச் செய்வதால் நீங்கும் என்று கூறினேன்.
அந்த அபரக்கிரியைகள் பற்றிய விபரங்களை இனிக் கூறுகிறேன்.

🌼 🌼 🌼

ஒரு இல்வாழ்வானால் செய்யப்படும் பிதிர் வழிபாடு,
சிரார்த்தம், தர்ப்பணம் என இரு வகைப்படும்.
அவற்றுள் தர்ப்பணம் என்பது பிதா முதலியோரைக் குறித்து,
செய்யப்படும் கிரியை ஆகும்.
மேற்படி தர்ப்பணங்களைச் செய்வோர் பூணூலை இடப்புறத்தில் தரித்து,
இடது முழங்காலை ஊன்றித் தென்திசை நோக்கி இருந்து செய்தல் வேண்டும்.
தென்திசை அல்லாதவிடத்து மேற்கு நோக்கியிருந்தும் அக்கருமங்களைச் செய்யலாம்.
நமது பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திற்கு,
உரை செய்த நச்சினார்க்கினியார் எனும் பெரும்புலவர்,
தென்புலத்தார்க்கு வேண்டுவன செய்வார், 
தெற்கும் மேற்கும் நோக்கியும் கருமங்களைச் செய்வாராதலின்
எனக் கூறுகிறார்.

🌼 🌼 🌼

சிரார்த்தம் என்பதன் அர்த்தம் சிரத்தையோடு (அக்கறையோடு) செய்யப்படுவது என்பதாகும்.
அக்கறையின்றி செய்யப்படுவது சிரார்த்தம் ஆகாது.
அக்கறையோடு ஹோமம் முதலியவை செய்து,
மறைந்த தந்தை, தந்தையின் தந்தை, அவரது தந்தை,
பிதாமகர், பிதாமகி முதலியவர்களை நினைந்து,
ஒழுக்கமுடைய உயர்ந்த பிராமணர்களுக்கு,
உணவு முதலியவற்றைக் கொடுப்பதே சிரார்த்தம் ஆகும்.
தாய் வழியில் மூன்று தலைமுறையினரையும்,
தந்தை வழியில் மூன்று தலைமுறையினரையும் நினைந்து,
ஒருவன் சிரார்த்தத்தினைச் செய்தல் வேண்டும்.

🌼 🌼 🌼

மேற் சொன்ன விடயத்தில் ஒழுக்கமுடைய பிராமணர்களுக்கு,
தானங்கள் வழங்குவது என்பது மிக முக்கியமான ஒன்று என நூல்கள் சொல்கின்றன.
பிராமண குலத்தில் பிறந்து, சீலத்தினையும் ஆசாரத்தினையும் பேணாத பிராமணர்களை,
அப்பிராமணர் என நூல்கள் குறிக்கின்றன.
அத்தகைய அப்பிராமணர்களுக்கு சிரார்த்ததானம் வழங்கப்பட்டால்,
அதனால் பிதிர்களுக்குப் புண்ணியம் சேர்வதற்குப் பதிலாக,
பாவமே சேரும் எனவும் உயர் நூல்கள் உரைக்கின்றன.
நாம் செய்யும் சிரார்த்தங்கள் நம் மூதாதையருக்குப் புண்ணியம் சேர்க்குமா? என்பது,
தானம் வழங்கப்போகிற பிராமணனின் தகுதியிலேயே தங்கியிருக்கிறது.

🌼 🌼 🌼

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்