ஆகமம் அறிவோம் - பகுதி 9: 'பிதிர்க்கடன்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

லகை உய்விக்கப் பிறந்த நமது இந்து இந்துமத ஆகமங்களில்,
மரணத்தின் பின்னர் ஓர் ஆத்மாவின் நன்மைநோக்கி செய்யப்படவேண்டிய,
கிரியைகள்பற்றி விரிவாகச் சொல்லப்படுகிறது.
அத்தகு கிரியைகளைச் செய்வதால்,
மரணித்த ஆன்மாக்கள் மட்டுமன்றி,
அக்கிரியைகளைச் செய்யும் மானுடரும் பயன்கொள்வர் என்று,
நமது உயர் ஆகமநூல்கள் உரைக்கின்றன.

🍁🍁🍁🍁 

திருக்குறளில் பிதிர்க்கடமை பற்றிய செய்தி

நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர்,
தனது குறள்நூலின் இல்லறவியல் எனும் பகுதியில்,
இல்வாழ்க்கை எனும் அதிகாரத்தில்,
இல்வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒருவன்,
ஐந்து கடமைகளைக்  கட்டாயம் செய்யவேண்டும் என்கிறார்.
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், உறவினர், தான் என்னும்,
ஐவர்க்கான கடமைகளையும்,
ஓர் இல்வாழ்வான் செய்யவேண்டும் என்பது அவர்தம் கட்டளை.
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை
என்பது அச்செய்தியை உரைக்கும் குறளாகும்.

🍁🍁🍁🍁

இக்குறளில் 'தென்புலத்தார்' என வள்ளுவர் உரைப்பது,
இறந்த நமது மூதாதையர்களையாம்.
இவர்களைப் பிதிர்கள் எனப் பொதுப்பட உரைப்பது வழக்கம்.
ஆனால் உண்மையில் பிதிர்கள் என்பது,
பிரமனால் உலகம் உருவாக்கப்பட்டபோது படைக்கப்பட்ட,
ஓர் தெய்வசாதியினரைக் குறிக்கும் பெயராகும்.
அத்தெய்வச் சாதியினர் தென்திசையில் வீற்றிருப்பர் ஆதலால்,
அப்பிதிர்த் தெய்வங்களைத் 'தென்புலத்தார்' என உரைப்பது வழக்கமாயிற்று.
இந்தப் பிதிர்தெய்வங்களுக்கும் நம் மூதாதையரான பிதிர்களுக்கும்,
உள்ள தொடர்பினை பின்னர் அறிவோம்

🍁🍁🍁🍁

நம்முடைய மரபில் ஓர் இல்வாழ்வான்,
ஐம்பெரும் வேள்விகளை இயற்றவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த ஐம்பெரும் வேள்விகளை வடமொழியில்,
'பஞ்சமகாயக்ஞம்' என்று  கூறுவர்.
பிரம்மயக்ஞம், தேவயக்ஞம், பிதிர்யக்ஞம், பூதயக்ஞம், மானுடயக்ஞம் என்பiயே,
'பஞ்சமகாயக்ஞம்' என்று உரைக்கப்படும்.
யக்ஞம் என்ற சொல்லுக்கு வேள்வி என்பது பொருள்.

🍁🍁🍁🍁

மேற்சொன்ன ஐந்து யக்ஞங்களால் ஓர் இல்வாழ்வான்,
ஐந்துவிதமானோரைத் திருப்தி செய்யவேண்டும் என்பது,
பெரியோர்தம் கட்டளை.
அவற்றுள்,
பிரம்மயக்ஞம் என்பது வேதத்தினை ஓதுதலாம்.
இச்செயலால் வேதங்களை உலகுக்குப் பெற்றுத் தந்த,
முனிவர்கள் திருப்தியுறுகின்றனர்.
தேவயக்ஞம் என்பது அக்கினி வளர்த்து ஹோமம் செய்தலாம்.
இச்செயலால் தேவர்கள் திருப்தியுறுகின்றனர்.
பிதிர்யக்ஞம் என்பது சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றைச் செய்தலாம்.
இச்செயலால் பிதிர்கள் திருப்தியுறுகின்றனர்
பூதயக்ஞம் என்பது பஞ்சபூதங்களுக்குப் பலி அன்னமிடுதல்.
அது வாயசபலி முதலியனவாம். (வாயசபலி என்பது காகத்திற்கு உணவிடுவது.)
இச்செயலால் பூதங்கள் திருப்தியாகின்றன.
மானுடயக்ஞம் என்பது விருந்தினர்களுக்கு உணவிடுதலாம்.
இதனால் மனிதர்கள் திருப்தியாகின்றனர்.

🍁🍁🍁🍁

மேற்சொன்ன பஞ்சயக்ஞம் பற்றிய விபரங்கள்,
காசிகாண்டம், ஆசாரம் கூறிய அத்தியாயத்தில் பின்புவருமாறு கூறப்பட்டுள்ளது.

சதுர் மறை பகர்தல் பிரம நன் மகமாம் தருப்பணம் பிதிர் மகமாகும்
விதிமுறை ஓமம் இயற்றுதல் தேவ எச்சமாம் விளம்பு நற் பலிகள்
உதவுதல் பூத எச்சமாம் உள்ளம் உவந்து தன்பால் இனிதின் அடைந்த
அதிதியர்க் களித்தல் மானுட எச்சமாம்அவை ஐந்தெச்சம் -என்றறைவர்.

(எச்சம் - யாகம்,  மகம் - யாகம்)

🍁🍁🍁🍁

இனி பிதிர்த்தேவர்கள் என்றால் யார்? என்று கூறுகிறேன்.
பிரம்மதேவர் உலகத்தைப் படைக்கத் தொடங்கிய காலத்தில்,
சில தேவர்களைப் படைத்துத் தம்மைப் பூசிக்கும்படியாக உத்தரவிட்டார்.
ஆனால் அத்தேவர்கள் அவர் கட்டளையை மதிக்காது,
தம்மைத்தாமே பூஜித்தபடி இருந்தனர்.
அதனால் கோபம் கொண்ட பிரமன்,
அவர்களை அறிவில்லாதவர்களாக ஆகும்படி சபித்தார். 
அது கேட்டு வருந்திய அத்தேவர்கள்,
பிரமனைப் பணிந்து சாப விமோசனம் வேண்ட,
பிரம்மதேவர் தனது புத்திரர்களைக் கேட்டு,
அச்சாப விமோசனத்தை அறிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

🍁🍁🍁🍁

சாபம் பெற்ற அத்தேவர்கள்,
பிரம்ம புத்திரர்களை சாபவிமோசனம் தரும்படி வேண்டிக் கொண்டனர். 
பிரம்ம புத்திரர்கள் அத்தேவர்களை கருணையுடன் நோக்கி,
'புத்திரர்களே, உங்களைப் பிரம்மதேவருடைய சாபம் பாதிக்காது, 
நீங்கள் விரும்பியபடி செல்வீர்களாக' என்று கூறி,
பிரம்மதேவருடைய சாபத்தை நீக்கினார்கள். 
அப்பொழுது அங்கு தோன்றிய பிரம்மதேவர்,
சாபவிமோசனம் அடைந்த அத்தேவர்களை நோக்கி,
'நீங்கள் எனது பிள்ளைகளால்,
புத்திரர்களே! என அழைக்கப்பட்டமையால், 
அவர்கள் பிதிரர்களாகவும் நீங்கள் புத்திரர்களாகவும் விளங்குவீர்களாக' என்று,
அருள் செய்தார். 
அங்ஙனம் பிரம்மனால் பிதிர்த்தேவர்களாய்ச் சொல்லப்பட்ட,
ஏழு பிரம்மகுமாரர்களுமே பிதிர்த்தேவர்கள் எனப்படுகின்றனர்.
(ஆதாரம் -அபிதானசிந்தாமணி)

🍁🍁🍁🍁

பிரம்மதேவரின் புதல்வர்களாகிய அவ்வேழு பிதிர்த்தேவர்களும்,
கவ்வியவாகன், அனலன், சோமன், யாமன், அரியமான், 
அக்னிஸ்வாத்தன், பர்ஹிஷதன் என்று அழைக்கப்படுவர்.
இவர்களில் நால்வர் உடம்போடும்,
மற்றைய மூவரும் உடம்பின்றியும் இருப்பார்கள். 
(அபிதானசிந்தாமணி)

🍁🍁🍁🍁

இந்தப் பிதிர்த்தேவர்கள் தவிரவும்,
வேறு ஏழு பிதிர்தேவர்களும் இருப்பதாய்ச்  சொல்லப்படுகின்றது.
அவர்கள்பற்றிய விபரங்களை அடுத்தவாரம் சொல்கிறேன்.

🍁🍁🍁🍁

(தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்