இவ்வாண்டுப் புதுவருட வழிபாட்டை இயற்றுவது எப்படி? -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகம் உவக்க, தமிழ்ப் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. உலகில் ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையை மனங்கொண்டு வழமைபோலல்லாது இவ்வாண்டு புத்தாண்டை அமைதியாக வழிபாட்டுடன் அனுசரிக்கும் அவசியத்தில் நாம் உள்ளோம். வழக்கமாக மருத்து நீர் வைத்து நீராடிப் புத்தாடை தரித்து ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இல்லங்களிலும் இறைவழிபாடு இயற்றிப் பெரியோர்களிடம் கைவிசேடமும் ஆசியும் பெற்று மகிழ்வது எம் பாரம்பரிய மரபு. இவ்வாண்டு உலகம் முழுவதையும் அச்சுறுத்தி நிற்கும் நோய் பரவாது தடுப்பதற்காக நம் நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இவ்வழிபாடுகளை எங்ஙனம் இயற்றுவது? என, பல அன்பர்கள் தொலைபேசி மூலமும் மின்னஞ்சல் மூலமுமாகக் கேட்டு நிற்கின்றனர். அவர் தம்மை நெறி செய்யுமுகமாகவே இக்கட்டுரையை வரைகிறேன்.

இறைவனது அருளால் ஒளி சூழ்ந்திருக்கும் இவ் உலகை அவ்வப்போது இருள் சூழ்ந்து துன்பம் செய்வது வரலாற்றில் பதிவான விடயமேயாம். அங்ஙனம் துன்பம்நேரும் போதெல்லாம் நம் மூதாதையர்கள் இறைவழிபாட்டில் இருந்து தவறவில்லை. தாம் அதுவரை செய்து வந்த வழிபாட்டின் அடிப்படைகளில் மாற்றம் செய்யாது, அதே நேரத்தில் சூழ்நிலைகளை அனுசரித்து புற நிலை வழிபாட்டில் மட்டும் மாற்றங்கள் செய்து அவர்கள் தம் மரபைத் தொடர்ந்து பேணினார்கள். இன்றைய நிலையில் அம்மரபை ஒட்டியே புத்தாண்டு வழிபாட்டை நாம் இயற்ற வேண்டும். அம்மாற்றங்களை எங்ஙனம் செய்வது?என்பது பற்றிக் கீழே குறிப்பிடுகிறேன்.

மருத்துநீர் -
இன்றைய சூழ்நிலையில் ஆலயங்களிலோ இல்லங்களிலோ முறைப்படியான மருத்துநீரை தயாரிப்பதோ பெற்றுக் கொள்வதோ முடியாத காரியமாகும் அதற்கு மாற்றாகத் தூய நீரில் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதால் நினைந்தும் வாயால் உச்சரித்தும் விரலால் அந்நீரின்மேல் அவ் அச்சரங்களை எழுத வேண்டும். பின்னர் அந்நீரில் மஞ்சற்ப்; பொடியையும் சிறிதளவு திருநீற்றையும் கலந்து இறைவனை நினைந்து அதனை மருத்துநீராய் பயன்படுத்தலாம. விபூதிக்கு 'பவித்திரம்' என்ற பெயர் உள்ளது. அது மக்களின் அகத்தை தூய்மை செய்யும். மஞ்சற்ப் பொடி மனித உடம்பின் புறத்தை தூய்மை செய்ய வல்லது. அதனால் இக்கலவையை தாராளமாக மருத்துநீராய் பயன்படுத்த முடியும். (கிடைக்கும் பட்சத்தில் சிறிது அறுகம்புல், பால் அல்லது தயிர் முதலியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். அறுகம் புல் விக்கினேஸ்வரனின் பிரசாதமாய் அமைந்து விக்கினங்களைத் தீர்க்க வல்லது. பால் அல்லது தயிர் பஞ்ச கவ்வியத்தின் குறியீடாய் அமையும்.)  

ஆலயவழிபாடு -
நம் ஆலய வழிபாட்டை அகவழிபாடு - புறவழிபாடு என இரு கூறுகளாய்ப் நம் பெரியோர்கள் பிரித்துள்ளனர். இவ்இரு வழிபாட்டினுள் அகவழிபாடே சிறந்தது என்பது பெரியோர்கள் முடிபு. அவ்வழிபாட்டை இயற்ற மனஒடுக்கம் தேவை. அது நம்போன்றவர்களுக்கு சற்று கடினமாக இருப்பதாலேயே புற வழிபாட்டை நாம் இயற்றி வருகிறோம். இம்முறை புற வழிபாட்டை இயற்றும் சூழ்நிலை இல்லாததால் அதனினும் சிறந்ததான அகவழிபாட்டை  மனப் பொறுமையோடு நாம் இயற்றுதல் வேண்டும். அவ்வழிபாட்டையே 'மானதபூசை' என்று நமது நூல்கள் சொல்கின்றன. அதனை எங்ஙனம் இயற்றுவது என்று சொல்கிறேன். புத்தாண்டு தினத்தன்று நீராடியபின் நமசிவாய என்று சொல்லி விபூதி தரித்து, பூசையறையில் விளக்கேற்றி, அதன்முன் அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் கண்மூடி மனதினுள்ளே வழமையாகச் செல்லும் ஆலயத்திற்கு செல்வது போலவும், வழமையாக அங்குஇயற்றும் வழிபாட்டுக் கிரியைகளை ஒவ்வொன்றாய் செய்வது போலவும், பின்னர் இறைவனுக்கு நடக்கும் பூசையைத் தரிசிப்பதுபோலவும், தீபாராதனையை காண்பது போலவும், விபூதி, தீர்த்தம் முதலியவற்றைப் பெற்றுக் கொள்வது போலவும், ஒவ்வொன்றாக மனதில் கற்பனை செய்து கொள்ள வேண்டும். முடிவில், இவ்வழிபாட்டின் பயனை நல்குமாறு சண்டேஸ்வரரை மனதில் பிரார்த்தித்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இதுவே அகவழிபாடு செய்யும் முறையாகும்.

புத்தாடை -
தூய்மை நோக்கியே வருடப்பிறப்பன்று புத்தாடை அணியும் வழக்கம் உருவானது. இம்முறை சூழ்நிலை காரணமாகப் புத்தாடை அணிவது எல்லோர்க்கும் சாத்தியமாகாது. அதனால் இவ்வாண்டு, இருக்கும் உடைகளில் நல்லதான ஒன்றை தேர்ந்தெடுத்து அதனைத் தூய்மை செய்து புத்தாடையாய் அணிந்து கொள்ளலாம்.

கைவிசேடம் -
வெற்றிலை கிடைக்காதபட்சத்தில் மாஇலை போன்ற ஏதாவது ஒரு இலையில் ('யாவர்க்குமாம் ஒரு பச்சிலை') ஒரு நாணயக்குற்றியையும் பூவையும் வைத்து, அதனை வீட்டில் உள்ள மூத்தவர் ஒருவரிடம்  கொடுத்து அதனைக் கைவிசேடமாகப் பெற்றுக் கொள்ளலாம். 


அந்தணப் பெருமக்கள் ஆலயங்களில் தாம் செய்யும் வழக்கமான பூசைகளை, கோயில் பூட்டிய நிலையில் உள்ளிருந்து இயற்றி, உலகம் நன்மையுற பிரார்த்திக்க வேண்டும். நம் வழிபாட்டு மரபுகளைக் கைவிடாமலும், அதே நேரத்தில், நம் நன்மை நோக்கி அரசு விதித்துள்ள சட்டங்களை மீறாமலும், மேற்சொன்னவாறு புத்தாண்டு வழிபாடுகளை இயற்றுவதே பொருத்தமாகும் என்று கருதுகிறேன். இக்கருத்தை ஏற்று செயற்படுமாறு அன்பர்களை வேண்டிக் கொள்கிறேன்.

'இன்பமே எந்நாளும் துன்பமில்லை'

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்