உன்னைச் சரணடைந்தேன்: பகுதி 22 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

🚩🚩🚩🚩
புதுவை இரத்தினதுரை

மிகச்சிறந்த கவிஞர் இவர்.
பின்னாளில் புலிகள் இயக்கத்தில் இணைந்து,
அவர்களின் ஆஸ்தான கவிஞராய் இயங்கியவர்.
அதுபற்றிப் பின் சொல்கிறேன். 
இவர் சிறந்த கவிஞர் மட்டுமன்றி, பெரும் கலைஞராயும் இருந்தார்.
தேர்ச்சிற்பங்கள் செய்வதில் கைதேர்ந்தவர் அவர்.
வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு,
அப்போதுதான் நாடு திரும்பியிருந்தார்.
அக்காலத்தில்,
கம்பன் கோட்டக் கட்டட வேலைகள் நடந்துகொண்டிருந்தன.
வீதி வழியாகச் செல்கையில்,
கூலியாட்கள்போல் நாங்களே வேலை செய்வதைப் பார்த்துவிட்டு,
அவருக்கு எங்களில் மதிப்பு ஏற்பட, 
'கம்பன் கோட்டத்திற்குக் கைகொடுங்கள்' என்று,
மல்லிகை சஞ்சிகையில் அப்போது அவர் ஒரு கடிதம் எழுதினார்.
அப்படி ஏற்பட்ட நட்பு, பின் நெருக்கமானது.
கழக இளைஞர்கள் எல்லோரும்,
சட்டநாதர் கோயிலடி மூலையில் இருந்த,
புதுவை அண்ணன் வீட்டு மாமரத்தின் கீழ்,
தினமும் காலையில் கூடிவிடுவோம்.
அவர் சிற்பம் செதுக்கிச் செதுக்கி எங்களோடு பேசுவார்.
கிண்டலும் கேலியுமான அப்பேச்சுக்கள் மறக்கமுடியாதவை.
அவரது அன்பு நெருக்கமாக,
எங்கள் கம்பன் கோட்டத்திற்குச் சித்திர வேலைப்பாட்டுடன் கூடிய,
வாசல் கதவு நிலை ஒன்றினைத் தன் கையினாலேயே செய்து தந்தார்.
முதல்முதலாக எங்களது 1986 ஆம் ஆண்டுக் கம்பன்விழாக் கவியரங்கத்தில் கலந்து கொண்டு,
அற்புதமாகக் கவிதை பாடினார்.
பின்பு காரைநகர்க் கம்பன்விழாக் கவியரங்கிலும் கவிதை பாடினார்.
'இக்காலத்தில் கம்பன்விழா தேவைதானா?' என விமர்சித்து,
சிலர் சுவர்களில் எழுத,
அக்கவியரங்கில் அவர்களுக்குப் 
புதுவை கடுமையாய்ப் பதிலடி கொடுத்தார்.
பின்னர்  எங்களது கம்பன் கழகத்தின் 1987 விழாக் கவியரங்கிலும்,
1992 கவியரங்கிலும் கவிதை பாடினார்.
🚩🚩🚩🚩
கல்வயல் குமாரசாமி

இவர் எமது கழகத்தில் 1986 இல் இணைந்தவர்.
சிறந்த கவிஞர்.
கவிஞர் முருகையனின் ஒன்றுவிட்ட சகோதரர்.
குறியீட்டுக் கவிதைகள் எழுதுவதில் வல்லவர்.
ஏனோ இவரால் முருகையன் அளவு பிரசித்தி பெற முடியவில்லை.
ஆனாலும், தனித்துவத்தோடு தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். 
என் அபிப்பிராயப்படி முருகையனைவிடச் சிறந்த கவிஞர்.
விழா நிகழ்ச்சிகளுக்கப்பால்,
கழக உறவை உண்மையாய்ப் பேணியவர்.
தன்னைப் பற்றி எந்நேரமும் அதிக உயர்வாய்ச் சிந்திப்பவர்.
அதனால், மற்றவர்களைக் குறை சொல்வதை 
வழக்கமாய்க் கொண்டிருந்தார்.
இப்பண்பால் நிறையப்பகை சம்பாதித்து
ஓரளவு தனிமைப்படுத்தப்பட்டார்.
வெளிப்படப் பேசும் எனது இயல்புக்குக் கொஞ்சம் பயப்படுவார்.
அவரை உரிமையாய்க் கண்டிக்கும் ஒரே ஆள் நானே!
என்னையும் நான் இல்லாத நேரங்களில் திட்டுவதாய்க் 
கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால், அவர் என்மேல் கொண்ட அன்பு 
சத்தியமானது என்பதை அறிவேன்.
எங்களை உண்மையாய் நேசித்தவர் அவர்.
கல்வயலிலிருந்து அரிசியும், பலாப்பழமும் 
சைக்கிளில் கட்டிக்கொண்டு,
எங்களுக்காகக் கஷ்டப்பட்டு எடுத்து வருவார்.
முன்கோபி.
இவரைப் புரிந்துகொண்டவர்கள் ஒரு சிலரே.
1995 இடம்பெயர்வின்போது திடீரெனச் சாவகச்சேரி வந்த,
கழக உறுப்பினர்கள் அத்தனைபேரும் 
இவரிடம்தான் தஞ்சம் புகுந்தோம்.
உறவாய் எம்மைக் காத்தார்.
இவரின் கவித்திறத்தைப் பராட்டி,
2011 கொழும்பு விழாவில் இவருக்கு 'மகரந்தச்சிறகு' விருதளித்தோம்.
மறக்க முடியாதவர்.
🚩🚩🚩🚩
எழுத்தாளர் அநுவை நாகராஜன்

எங்களை நேசித்தவர்களில் இவரும் ஒருவர்.
ஆசிரியராய் இருந்து அதிபராகிக் கல்வி அதிகாரியாய் ஆனவர்.
உழைத்துக் கொண்டேயிருப்பார்.
உழைப்பின் கடுமையால் ஓரளவு இளமையிலேயே,
பக்கவாதத்தால் தாக்கப்பட்டார்
அதன் பின்னரும் அவரது இலக்கிய முயற்சிகளும்,
சமூக அக்கறையும் ஓயவில்லை.
இவரது துணைவியார் நேசபூபதி அவர்கள்,
ஓர் இசைக்கலைஞர்.
அவரும் எங்களை நன்கு நேசித்தார்.
நாங்கள் கம்பன் கோட்டத்தைக் கட்டத் தொடங்கியபோது,
இத்தம்பதியரும், பேராசிரியர் சண்முகதாஸ் தம்பதியரைப் போல,
தங்கள் வீடுகளை இழந்த நிலையிலும்,
எங்களுக்குப் பத்தாயிரம் ரூபாவைக் கட்டிட நிதியாகத் தந்துதவினர்.
கொழும்பு வந்தபிறகும் இவர்களுடனான எங்கள் அன்பு தொடர்ந்தது.

🚩🚩🚩🚩
கடவுள் காத்தார்!

கம்பன் கழகத்தின் அங்குரார்ப்பண நாளை,
வசதிப்படும் போதெல்லாம் கொண்டாடுவது எமது வழக்கம்.
ஓர் ஆண்டு வைமன் ரோட் அலுவலகத்தில்,
அந்நிகழ்வைக் கொண்டாட ஆயத்தம் செய்திருந்தோம்.
குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் சொல்லி 
இரவு விருந்திற்கு அழைத்திருந்தோம்.
அன்று விருந்துக்காக உணவுகள் தயாரிக்கத் தொடங்கிவிட்ட நேரத்தில்,
காலை ஓர் அநாமதேயத் தொலைபேசி அழைப்பு வந்தது.
பேசிய குரல், 'விருந்தை நடத்தக் கூடாது' என்று எச்சரித்தது.
குழம்பிப்போனோம்.
எல்லா இயக்கங்களும் சமநிலையில் இருந்த காலமது. 
யாருடைய தொலைபேசி எனத் தெரியாத சூழ்நிலையில்,
என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்தபோது,
தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை நடாத்திக் கொண்டிருந்த,
எங்கள் நண்பன் ஐங்கரநேசன் 
(தற்போதைய வடமாகாணசபை அமைச்சர்),
அங்கு வந்தான்.
எங்கள் குழுவிலிருந்த மகாராஜாவின் நெருங்கிய நண்பன் அவன்.
அத்தொடர்பால் எங்களுக்கும் நெருங்கிய நண்பனாகி இருந்தான்.
அப்போது அவன்  காலை,'ரெலோ' இயக்கத்தின் நெருங்கிய ஆதரவாளன்.
அந்த இயக்கத் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின்,
நெருங்கிய நண்பனாய் அவன் இருந்தான்.
அவரிடம் நிறையச் செல்வாக்குப் பெற்றிருந்தான்.
எங்கள் பிரச்சினையைச் சொன்னதும்,
'நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதைங்கோ,
நான் எங்கட ஆக்களிட்டைச் சொல்லி,
பின்னேரம் உங்கட வீட்டைச் சுற்றி,
'காட்' பண்ணச் சொல்கிறன்'
என்றான்.
அந்த நேரம், அவன் சொன்னது தெம்பாக இருந்தாலும்,
நான் தீர்க்கமாய் யோசித்து, அவன் உதவியை நிராகரித்தேன்.
🚩🚩🚩🚩
சிறைப்பட்ட ஐங்கரநேசன்

அங்ஙனம் நிராகரித்தது நல்லதாய்ப் போயிற்று.
ஓரிரு வாரத்திலேயே புலிகள் இயக்கத்திற்கும் 'ரெலோ' இயக்கத்திற்கும்,
பெரும் மோதல் மூண்டது.
அந்த மோதலில் 'ரெலோ' இயக்கம் முற்றாக நசுக்கப்பட்டது. 
எங்கள் நண்பன் ஐங்கரநேசனும் புலிகளால் கைது செய்யப்பட்டான்.
அவன் உயிருடன் இருக்கிறானா? இல்லையா? என்பதே தெரியவில்லை.
ஒருநாள் கந்தர்மடச் சந்தியில் இருந்த C.T.B தியாகராஜா வீட்டில்,
அவனது தமக்கையைச் சந்தித்தோம்.
அவனது தமக்கை, தம்பி பற்றி முடிவு தெரியாமல் கதறியழுதார்.
🚩🚩🚩🚩
காக்கா என்னும் மனோகர்

போராட்டம் தொடங்கிய 80 களில்,
புலிகள் இயக்க உறுப்பினர்கள் 
விரல்விட்டு எண்ணும் படியாக இருந்தபோது,
அம் முதல் உறுப்பினர்களில் ஒருவனாக இருந்தவன் மனோகர்.
இவன் எனது உயிர் நண்பனான 
நாயன்மார்கட்டு சிவகுமாரின் நெருங்கிய நண்பன்.
உணர்ச்சிகரமானவன். 
சிவகுமார் மேல் கொண்ட அன்பால் 
என்மேல் மதிப்புக் கொண்டவன்.
இவன் இயக்கத்தில் சேர்ந்ததும், பயிற்சி பெற்றதும்,
பல காலத்தின் பின்தான் எங்களுக்குத் தெரியவந்தது.
புலிகளின் ஆரம்பகால நடவடிக்கைகளில் 
இவன் முக்கிய இடம்பெற்றதாய்ப் பின்னர் அறிந்தோம்.
இயக்கம் வளர்ந்துவிட்ட பிறகு, 
பலகாலம் இவனை நான் சந்திக்கவில்லை.
இவனது இயக்கப் பெயர் காக்கா, 
இயக்கங்களுக்குள் முரண்பாடு வளர்ந்து விட்ட நிலையில்,
ரெலோ இயக்கம், புலிகளோடு மோத எண்ணி 
இவனைக் கடத்திச் சென்றது.
அக்காலத்தில் புலிகள் அமைப்பின் தளபதியாய்,
மிகவீரியமாய் இயங்கி வந்த கிட்டு,
'காக்கா அண்ணையைத் தொட்டா  விடுவமோ?' எனக் கூறி,
ரெலோ இயக்கத்தைத் தாக்கத் தொடங்கினாராம்.
பேரழிவு விளைவித்த அச்சண்டையில் மனோகர் மீட்கப்பட்டான்.
இடையில் மீண்டும் சண்டையில் காயப்பட்டு,
மனோகர் பலகாலம் இந்தியாவில் இருந்;தான்.
பிற் காலத்தில் இயக்கத்தில்  அவனுக்கு,
பெரிய முக்கியத்துவம் இருக்கவில்லை.
இவனது தொடர்புதான் இயக்கத்துடனான எங்களது முதற்தொடர்பு,
🚩🚩🚩🚩
ஐங்கரநேசனை மீட்கத் துணைசெய்தேன்

ஐங்கரநேசனுக்காக, புலிகள் இயக்கத்தில் இருந்த,
மேற்சொன்ன மனோகரிடம் சென்று பேசினேன்.
'ஐங்கரநேசன் கல்வியுலகைச் சார்ந்தவன்.
நாட்டிற்குத் தேவையானவன்.
அவன் உயிருக்கு ஓர் ஆபத்தும் வரக் கூடாது.
எனக்காக அவனைக் காப்பாற்ற வேண்டும்'
எனக் கெஞ்சினேன்.
அப்போது இயக்கத்தில் மனோகருக்கு நல்ல மதிப்பு இருந்தது.
நான் போய்ப் பேசியதும், 
'நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம்,
ஐங்கரநேசன் உயிரோடிருக்கிறான்'
என்று,
அவன் எனக்கு ஆறுதல் சொன்னான்.
அப்போதும் எனக்கு நம்பிக்கை வரவில்லை.
அவன் உயிரோடு இருப்பதற்கு,
ஏதாவது ஆதாரம் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
ஐங்கரநேசனிடம் ஒரு கடிதம் வாங்கிவந்து தந்தான்.
அக்கடிதத்தைக் கொண்டுபோய்க் கொடுத்து,
ஐங்கரநேசனின் தமக்கையை ஆறுதல்படுத்தினேன்.
பின்னர், விடுதலை செய்யப்பட்டு வீடு வந்து சேர்ந்ததும்,
ஐங்கரநேசன் எனக்கு நன்றி சொன்னான்.
ஒரு சில நாட்களில், தலைமறைவாகியிருந்த,
ரெலோ இயக்கத் தலைவர் ஸ்ரீ சபாரத்தினம்,
கோண்டாவிலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அன்று நட்பின் நெருக்கத்தால் ஒரு குழந்தைபோல,
ஐங்கரநேசன் கதறி அழுதது இன்றும் என் கண்களில் நிற்கிறது.
பிற்காலத்தில், புலிகள் இயக்கத்தில் இருந்த புதுவை இரத்தினதுரையோடு,
நெருக்கமாக இருந்த ஐங்கரநேசன்,
பின்னர் சிலகாலம் குடும்பத்துடன் இந்தியாவில் தங்கியிருந்தான்.
அக்காலத்தில் ஒருதரம் புதுவையின் மகனுக்கு இந்திய விசா 
எடுத்துத்தரும்படி தொலைபேசியில் கேட்டுக் கொண்டான்.
மற்றொருமுறை தன் தமக்கைக்கு ஒரு வேலை எடுத்து
கொடுக்கும்படி கேட்டுக் கடிதம் எழுதினான்.
இப்படியாக எம்மோடு தொடர்பில் இருந்த ஐங்கரநேசன்
போரின் பின், கூட்டமைப்பின் சார்பில் 
மாகாண சபைத் தேர்தலில் நின்று வென்று,
இன்று மாகாண விவசாய அமைச்சராக இருந்து வருகிறான்.
அமைச்சரான பின்னர் கழகத்துடன் அவனுக்கு 
அதிகம் தொடர்பில்லை.
🚩🚩🚩🚩
(தொடரும்)

குறிப்பு: 'உன்னைச் சரணடைந்தேன் (யாழில் கம்பன் 1980-1995)' எனும் நூல், அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்திய கொழும்புக் கம்பன் விழாவில், 24.03.2016அன்று வெளியிடப்பட்டது. உகரத்தில் பதிவேற்றப்பட்டுவருகின்ற இப் பாகங்கள், இந்நூலிலிருந்து பெறப்பட்டவையே.

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்