உன்னைச் சரணடைந்தேன்: பகுதி 23 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

நீண்ட இடைவெளியின்பின்
ஒன்பதாவது கம்பன் விழா

01.08.1986

இவ்விழா 1986 ஆம் ஆண்டு 
ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 3ஆம் திகதி வரை, நல்லையாதீனத்தில் நடைபெற்றது.
1983 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவின் பின் ஏற்பட்ட நாட்டுச் சூழலால். கம்பன் விழாக்கள் நடைபெற முடியாமற்போயின.
நீண்ட நாட்களின்பின் இவ்விழா நடைபெற்றது.
வழக்கம்போலவே பட்டிமண்டபம், கவியரங்கம்,கருத்தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள்,
இவ்விழாவிலும் நடைபெற்றன. 
இவ் இடைக் காலத்தில், கம்பன் விழாக்களை நடத்தாவிட்டாலும்,
நாம் யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களுக்கும் சென்று,
ஆலயத் திருவிழாக்களில் பட்டிமண்டபங்களை நடாத்தி வந்தோம். 
அப் பட்டிமண்டபங்கள் எனது தலைமையில் நடைபெற்றன. 
இதனால், கிராமங்களில் எல்லாம் கழகம் ஆழமாய்ப் பதிவாயிற்று. 
இக் கம்பன்விழாவில் வித்துவான் வேலன் தலைமையில் 
பட்டிமண்டபம் நடந்தது. 
பட்டிமண்டபத்தில் பேசிய புலவர் ஈழத்துச் சிவானந்தனுக்கும்,
வித்துவான் வேலனுக்குமிடையில் 
மேடையிலேயே மோதல் வெடிக்கப்பார்த்தது. 
ஒருவாறு சமாளித்தோம்.
வழக்கமாக எமது கவியரங்கங்களுக்குத் தலைமைதாங்கி வந்த,
வித்துவான் ஆறுமுகம் மறைந்துவிட்டதால், 
இவ்வாண்டுக் கம்பன் விழாக் கவியரங்கத்திற்கு,
சொக்கனைத் தலைமை தாங்க வைத்தோம். 
ஆனால், அவர் தலைமை பெரிய அளவில் சோபிக்கவில்லை.
தமிழருவி த. சிவகுமாரனும், காரை கணேசமூர்த்தியும்,
முதன்முதல் இவ்விழாவிற்தான் அறிமுகமாயினர்.
கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களும்,
இவ்விழாவிற்தான் எங்கள் அரங்கத்தில் முதன்முதலாகப் பாடினார். 
இவ்விழாவில் புதுவை பாடிய,
'கோட்டை முனியப்பரைப் பார்த்தவரைப் பார்த்து,
பலகாலம் ஆகிவிட்ட நேச்சரிலே என்ன பேச்சுவார்த்தை'  

'நிம்மதியாய்ச் சற்று நீட்டிப்படுத்திருக்க சம்மதியாப் பூமி இது' போன்ற,
பல கவிதைகளும் அக்காலத்தில் ஊரெல்லாம் பிரபலமாயின. 
ஒரு சினிமா நடிகனைச் சூழுமாற்போல்,
அன்று புதுவையை இரசிகர்கள் சூழ்ந்தனர்.
ஓரளவே வேலை முடிந்திருந்த 
எங்கள் கம்பன் கோட்டத்தின் கீழ்ப்பகுதியில், 
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அறிஞர்கள் அனைவருக்கும்,
விழா நாட்களில் உணவளித்தோம். 
🚩🚩🚩🚩

தமிழருவி த. சிவகுமாரன்

இவனும் யாழ். இந்துக்கல்லூரி மாணவன்தான்.
எங்களைவிட வயதில் இளையவன்.
யாழ். இந்துக் கல்லூரியில் 'ஃபுட்போல் பிளேயராய்' இருந்தவன்.
பின் யாழ். இந்துக் கல்லூரியில் விளையாட்டு ஆசிரியனாய் இணைந்தான்.
இவன் காரைநகரைச் சேர்ந்தவன்.
அதே ஊரைச்சேர்ந்த கணேசமூர்த்தியும் இவனுமாக,
ஒருநாள் என்னைச் சந்தித்து,
காரைநகரில் தாங்கள் இருவரும் 
ஒரு பட்டிமண்டபத்திற் பேசியதாகச் சொல்லி,
அந்நிகழ்ச்சியின் 'வீடியோ கசெற்றைக்' கொண்டுவந்து கொடுத்தனர். 
அதில் இருவரும் ஓரளவு நன்றாகப் பேசி இருந்ததால்,
1986 ஆம் ஆண்டுக் கம்பன் விழாப் பட்டிமண்டபத்தில்,
அவர்கள் இருவரையும் சேர்த்துக் கொண்டேன்.
சிவகுமாரனுக்கு இயல்பாகப் பேச்சு வந்தது.
அப்போது கிராமந்தோறும் நான் நடாத்திவந்த பட்டிமண்டபங்களில்,
அவனையும் இணைத்துக்கொண்டேன்.
ஆர்வமாய் நிகழ்ச்சிகளிற் கலந்துகொள்வான்.
பின்னர், இவன் தனது ஊரான காரைநகரில்,
ஒரு கம்பன் கழகத்தை ஆரம்பிக்கவேண்டுமென விரும்பி,
எங்கள் ஆதரவோடு காரைநகர்க் கம்பன் கழகத்தை ஸ்தாபித்தான்.
அக்கழகத்தின் சார்பில் ஐந்து விழாக்களை அவன் நடாத்தினான்.
எங்களது கிராமப் பட்டிமண்டபங்களால் பிரபலமாகி,
பின்னர் தனிச் சொற்பொழிவு செய்ய ஆரம்பித்து,
'தமிழருவி'யாய்ப் புகழ்பெற்றான்.
ஒருமுறை ஓர் ஆலயத்தில் இவன் தொடர் விரிவுரையாற்றி முடிக்கையில்,
அவ் ஆலயத்தைச் சேர்ந்தவர்கள் இவனுக்கு ஒரு பட்டம் வழங்க விரும்பி,
அப் பட்டத்தினைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை எங்களிடமே தந்தனர்.
கழகத்தார் எல்லோரும் ஆலோசித்துக் கொண்டிருக்கையில்,
அவனுக்கான 'தமிழருவிப்' பட்டத்தை,
எங்களது ஜெ.கி. ஜெயசீலனே தேர்ந்தெடுத்துக் கொடுத்தான்.
மிக இக்கட்டான சூழ்நிலைகளிலும்,
துணிந்து சோராமல் கம்பன் விழாக்களை நடாத்தியவன் இவன்.
ஒரு முறை காரைநகர் கம்பன் விழாத் தொடங்க இருந்த நேரத்தில்,
இராணுவத்தைத் தாக்க என, விழா மண்டபத்திற்கு முன்பாக,
புலிகள் கண்ணிவெடி வைத்துவிட்டனர்.
ஆபத்தான அச்சூழ்நிலையில் புலிகளுடன் வாதிட்டு,
கண்ணிவெடியை எடுக்கச்செய்து விழாவினை இவன் நடாத்தி முடித்தான்.
அளவுக்கதிகமான தன்னுணர்ச்சியினால்,
மற்றவர்மேல் நட்பும் அன்பும் இவனிடம் குறைவுபட்டிருந்தது.
அதனால், மற்றவர்களை முழுமையாய் ஈர்க்க இவனால் முடியவில்லை. 
என்னைப்போல அனைவரையும் ஆளுமை செய்யவேண்டும் என்பது,
அவனது விருப்பம்.
காரைநகர்க் கம்பன் கழகத்தை,
தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் விரும்பினான்.
மேற்சொன்ன அவனது சுயநலக்குணத்தால் அது சாத்தியப்படாமல் போக,
ஊரில் ஓரளவு பகை தேடினான்.
என்னை வென்றுவிட வேண்டுமென்பது,
எப்போதும் இவனது இலட்சியமாய் இருந்தது.
பட்டிமண்டபத் தீர்ப்புக்களில் பலதரம் என்னோடு முரண்படுவான். 
மேடைப்பேச்சுக்காக புதிது புதிதாய் விடயங்கள் தேடி நிறையப் படிப்பான்.
பின்னாளில் புலிகள் இயக்கத்தோடு நாம் முரண்பட்டு,
கழகத்தார் யாரும் யாழ்ப்பாணத்தில் இனிப் பேசுவதில்லை என முடிவெடுத்தபோது,
ஆரம்பத்தில் எம்மோடு உடன்பட்டுவிட்டு,
பின், பேச்சினால் வந்த வருவாய் நின்று விடும் என்பதற்காக,
எம்மை விட்டு விலகி நின்றான்.
மற்றவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி 
தனக்கான  தளம் அமைக்க நினைப்பது,
இவனின் குறைபாடு.
இடப்பெயர்வின் பின், பல நாடுகளுக்கும் சென்று,
சொற்பொழிவு ஆற்றிப் புகழ் தேடினான்.
வெளிநாட்டுப் பயணங்களை ஆரம்பத்தில் வெற்றிகரமாய்ச் செய்து,
பின்னர், அதிலும் நிறையக் குழறுபடிகள் செய்தான்.
அதனால் ஆரம்பத்தில் அங்கு பெற்றிருந்த மதிப்பினை இழந்தான்.
பேசுவதில் ஆசை, பொருள் பற்று, புகழ் விருப்பம், 
சுயநலத்தாழ்ச்சி முதலியன தவிர்த்து,
இவன் மட்டும் தன்னைச் சற்றுச் செம்மை செய்துகொண்டிருந்தால்,
மற்றையோர் மனதில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருப்பான்.
அவ்வாய்ப்பை வீணாய்த் தவறவிட்டான்.
1995 இடப்பெயர்வின் பின் வவுனியாவிற் குடியேறி,
சில காரணங்களால் கம்பன் கழக முயற்சிகளைக் கைவிட்டு,
இன்று வவுனியா தமிழ்ச் சங்கத் தலைவராய்ச் 
செயற்பட்டுக்கொண்டிருக்கிறான்.
இவனது பிள்ளைகளுக்கு நானே பெயர் வைத்தேன்.
என்னையும் கழகத்தையும் நாம் இல்லாத இடங்களில் திட்டினாலும்,
எம்மோடு சில வேளைகளில் முரண்பட்டு நின்றாலும்,
அவனது ஆழ்மனதில் 
அவனை அறியாமல் என்மீதும் கழகத்தின்மீதும் பற்றுண்டு.
திட்டமிட்டு வஞ்சனை செய்யத் தெரியாத வெகுளி.
தமிழின் மீதான அவனது காதல் மிகப்பெரிது.
அக்காதல் ஒருமுகப்பட்டிருந்தால் 
யாழ் மண் ஒரு பேரறிஞனைப் பெற்றிருக்கும்.
ஈழத்தின் இன்றைய பேச்சாளர்களில் 
விரற்கு முன்னிற்கும் வீரனாய்த் திகழ்கிறான்.
இன்று வரை கழக மேடைகளைச் சிறப்பித்து வருகிறான்.
அறிவில் வளர்ந்திருந்தாலும் இயல்பில்,
அவனை முதல் முதலில் கண்டபொழுது எப்படி இருந்தானோ,
அதுபோலவே இன்றும் இருக்கிறான்.
🚩🚩🚩🚩

காரைநகர்க் கம்பன் கழகம்
(06.09.1986)

இக்கழகம் 1986 செப்ரெம்பர் 6ஆம் திகதி,
எமது சேய்க்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
அன்று காலை 9 மணிக்கு எங்கள் கழகத் தலைவன் திருநந்தகுமார்,
இக்கழகத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தான்.
அன்று மாலையும் அடுத்தநாளும்,
காரைநகர்க் கம்பன்கழகத்தின் முதற்கம்பன்விழா நடந்தது.
இக்கழகத்தின் தலைவராகச் சட்டத்தரணி ஏகநாதனும்,
அமைப்பாளராகச் சிவகுமாரனும் நியமிக்கப்பட்டனர்.
இவர்களைத் தவிர ந. கணேசமூர்த்தி, வித்வான் சபாரட்ணம்,
பண்டிதர் க. வேலாயுதபிள்ளை ஆகியோரும்,
இக்கழக நிர்வாகத்தில் சேர்ந்து இயங்கினர்.
சிவகுமாரனே அக்கழகத்தின் முழு முயற்சிகளினதும் 
முதுகெலும்பாய் நின்றான்.
இக்கழகம் 1986, 1987, 1988, 1989, 1994 ஆகிய ஆண்டுகளில்,
ஐந்து கம்பன்விழாக்களை நடாத்தியது.
1986, 1987, 1988, 1989 விழாக்கள் காரைநகரிலும், 
இராணுவ நடவடிக்கை காரணமாக காரைநகர் மக்கள் இடம்பெயர்ந்ததால்,
1994 ஆம் ஆண்டு விழா,
யாழ். இளங்கலைஞர் மன்ற மண்டபத்திலும் நடைபெற்றன. 
இது தவிர,
எங்கள் கழகக் கட்டிட நிதிக்கான நிதியுதவி நிகழ்ச்சியொன்றும்,
இக்கழகத்தால் காரைநகரில் 1987 இல் நடாத்தப்பட்டது.
இங்கு நடந்த விழாக்களிலும் ஆயிரமாய் மக்கள் கூடினர்.
காரைநகர் யாழ்ரன் கல்லூரி மண்டபத்தில் இவ்விழாக்கள் நடைபெற்றன.
நல்லதொரு அமைப்பாளனாகச் சிவகுமார் செயற்பட்டான்.
அங்கு இரண்டு, மூன்று வீடுகள் எடுத்து,
பேச்சாளர்களை எல்லாம் தங்க வைத்து,
விருந்திட்டு, சிவகுமார் விழா நடாத்தினான்.
காரைநகர் விருந்தில் இருந்த காரத்தால்,
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பேச்சாளர்கள் பெரும்பாடுபட்டனர்.
விழா முடிந்து இரவில் அறிஞர் அனைவரும் குழந்தைகளாய் மாறி,
ஒருவருக்கொருவர் 'ஏ' ஜோக்குகள் சொல்ல,
'நாங்கள் இளைஞர்களா? அவர்கள் இளைஞர்களா?' என வியந்தோம்.
இவ்விடயத்தில் சுப்ரமணிய ஐயர், அறிஞர் சோமசுந்தரம்,
கவிஞர் முருகையன், வித்துவான் குமாரசாமி ஆகியோர் 
போட்டி போட்டனர்.
'இவர்களா இப்படிப் பேசுகின்றார்கள்?' என ஆச்சரியப்பட்டோம்.
மறக்கமுடியாத அனுபவம் அது.
காரைநகர் வர்த்தகப் பிரமுகர்கள் எல்லோரும் 
இவ்விழா முயற்சியில் பங்கேற்றனர்.
காரைநகர்க் கம்பன் கழகத்தின் ஐந்தாவது விழா 
சட்டநாதர் கோயிலடியிலிருந்த,
பொன் சுந்தரலிங்கத்தின் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் 
நடைபெற்றது.
போற்றும்படி இயங்கி வந்த காரைநகர் கம்பன்கழக முயற்சிகளும்,
1995 இடப்பெயர்வோடு நின்றுபோயின.
🚩🚩🚩🚩

புலியான புதுவை

எங்கள் கம்பன் விழாவில் இவர் பாடிய கவிதையைக் கேட்டு,
அக்காலத்தில்,
புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பாளராவிருந்த மலரவன்,
புதுவையின் இரசிகனாகி, மெல்ல மெல்லப் புதுவையை அணுகி,
பின், புதுவையைப் போராளியாக்கித் தன் இயக்கத்தில் சேரச் செய்தான்.
போராட்டத்தில் நுழைந்து இவர் எம்மைவிட்டுத் தூரப்போய் விட்டாலும்,
மானசீகமான எங்கள் அன்புக்கு எந்தப் பங்கமும் ஏற்படவில்லை.
எமக்குப் புலிகளோடு முரண்பாடு ஏற்பட்டபோது,
இவரே அதிகம் சங்கடப்பட்டார்.
பிடித்தவரைத் தூக்குவதும், 
பிடியாதவரைத் தாக்குவதும் இவரின் பலவீனங்கள்.
எந்தக் கொள்கையிலும் நிலைத்து நில்லாதவர்.
அவ்வப்போது ஏற்றுக்கொள்ளும் கொள்கைக்காய்,
அவ்வக்காலங்களில் உண்மையாய்ப் பாடுபடுவார்.
அவரின் கொள்கை,
நிலைநின்ற இடங்களில் எங்களின் கழகமும் ஒன்று.
1995 இடப்பெயர்வின் பின் நாம் பிரிந்தோம்.
இடையில் ஏற்பட்ட சமாதான காலத்தில் கொழும்பு வந்து,
என்னிடம் நடந்தவற்றிற்காய் மன்னிப்புக் கோரினார்.
இன்று அவரின் இருப்பே சந்தேகமான நிலையில்.
அவர் மீண்டுவரப் பிரார்த்தித்தபடி இருக்கிறேன்.
நாங்கள் கொழும்பிலும் அவர் வன்னியிலும் இருந்த காலத்தில்,
மல்லிகை ஆசிரியரின் கோரிக்கைக்கிணங்கி,
மல்லிகையில் இவரது அட்டைப்படக் கட்டுரையை வரைந்தேன்.
வன்னியில் இருந்தபடி அக்கட்டுரையைப் படித்துவிட்டு,
தொலைபேசியில் என்னிடம் மகிழ்ந்து நெகிழ்ந்தார்.
(40ஆவது இயலில், புதுவைபற்றிய 'அக்கினிக்குஞ்சு' கட்டுரை காண்க)
🚩🚩🚩🚩

பேராசிரியர் சண்முகதாஸ்

எங்களுடனான இவரது தொடர்பு மறக்கமுடியாதது. 
பல்கலைக்கழக அறிஞர்களுள் எங்களோடு நெருங்கி நின்றவர் இவரே.
நான் இந்துக்கல்லூரியில் ஏ.எல். வகுப்புப் படிக்கும்போது,
நடாத்திய கதம்ப விழாவில் முதன்முதலாய்க் கலந்துகொண்டார்.
அப்போதுதான் முதன்முதலாய் இவரோடு அறிமுகமானேன்.
கல்லூரி விழாவிற்கு, 'றேசிங் சைக்கிளில்' வந்திறங்கிய,
இவரது எளிமை கண்டு மயங்கினேன்.
இவரும் எங்களது ஆற்றல் கண்டு, என்மேல் அன்பு பூண்டார்.
பின்னர் கம்பன் கழகம் ஆரம்பித்த பின்பு அவ்வுறவு மேலும் நெருங்கியது.
என்மேலும் கழகத்தின்மேலும் உண்மை அக்கறை கொண்டிருந்தார்.
கழகத்தினதும், கழக உறுப்பினரதும் வளர்ச்சிக்கு,
இவர் செய்த உதவிகளை மறக்கமுடியாது.
🚩🚩🚩🚩

திருமதி மனோன்மணி சண்முகதாஸ்

பேராசிரியரின் துணைவியார் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும்,
எங்கள்மேல், அக்கறையும் அன்பும் கொண்டிருந்தார்.
அறிவுத்துறை சார்ந்த பெண்மணி அவர்.
எப்போதும் கல்வி முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
சற்றுப் பிடிவாதக்காரர்.
பெண்மைக்கு முரணான முரட்டுச் சுபாவம் கொண்டவர்.
கல்வியில் உண்மைப் பிரியம் கொண்டிருந்தார்.
யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுள் நுழைய முயன்று, 
பல தரம் இவர் தோற்றார்.
ஆனாலும், யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில்,
பேராசிரியர், துறைத்தலைவராய் இருக்கும் வரையும்,
இவரது செல்வாக்கு ஆழப்பதிந்திருந்தது.
எங்கள் கழகம் பின்னாளில் ஆண்டுக்கொரு நூலை வெளியிட,
தூண்டுதல் செய்தவர் திருமதி சண்முகதாஸ் அவர்களே.
எங்களை உளமார நேசித்தாலும்,
கழக உறுப்பினர்கள் யாழ் பல்கலைக்கழகத்தினுள் பலம் பெறுவதை,
விரும்பவில்லை என்பதை,
அத்துறை சார்ந்தவர்கள் சொல்லக் கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.
🚩🚩🚩🚩

கழகத்தார்க்கு 
பேராசிரியர் சண்முகதாஸ் செய்த உதவிகள்

பேராசிரியரும் துணைவியாரும்,
தங்களுக்கென ஒரு சொந்தவீடு இல்லாத நேரத்திலும்,
நாங்கள் தொடங்கிய கட்டிட முயற்சிக்காக,
பத்தாயிரம் ரூபாவை (அது அப்போது பெரிய தொகை) 
மனமுவந்து தந்தனர்.
இந்திய இராணுவத்திற்கும், புலிகளுக்குமான மோதலின் போது,
அம்மையார் வெளிநாட்டிலிருந்தார்.
அப்போது பேராசிரியர் சிலகாலம் எங்களோடு,
வைமன் வீதி அலுவலகத்தில் தங்கியிருந்தார்.
அக்காலத்தில் பெற்ற பிள்ளைகளாக 
எங்களை அவர் நேசித்துப் பாதுகாத்தார்.
குமாரதாசனுக்குப் பல்கலைக்கழகத்தில் வேலை எடுத்துக்கொடுத்தும், 
ரகுபரனின் உயர்வை நெறிப்படுத்தியும், 
பிரசாந்தனின் பட்ட மேற்படிப்பில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்தும்,
எமக்கு இவர் செய்த உதவிகள் பற்பல.
🚩🚩🚩🚩

வாய்ப்பிழந்த மகேஸ்வரன்

இந்திய இராணுவ வருகையின்போது இவர் எங்களோடு இருந்த காலத்தில்,
என் கருத்துக்களை மதித்துச் செவிமடுப்பார்.
அக்காலத்தில், யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு,
விரிவுரையாளர் ஒருவரை எடுப்பதற்கான நேர்முகத் தேர்வு நடந்தது.
அப்போது, பேராசிரியர் வேலுப்பிள்ளைக்கும்,
பேராசிரியர் சிவத்தம்பிக்கும் இடையில் இருந்த முரண்பாட்டில்,
'யாரை எடுப்பது?' என்பதில் சிக்கல் ஏற்பட,
எல்லோருக்கும் நல்லவராய் இருந்த பேராசிரியர் சண்முகதாஸ்,
எனது சிபாரிசை ஏற்று, அவ்விருவரையும் சமாளித்து,
இன்றைய பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் மகேஸ்வரனை,
விரிவுரையாளராய்த் தேர்ந்தெடுக்க ஒழுங்கு செய்தார்.
மகேஸ்வரனைத் தேர்ந்தெடுப்பது, 
நூறு வீதமாக முடிவாகி இருந்த நிலையில்,
மகேஸ்வரனின் கஷ்ட காலத்தால்,
அன்று பயண ஒழுங்கில் ஏற்பட்ட தடை காரணமாக,
அவர் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள முடியாமற் போயிற்று.
அப்போது தற்காலிக விரிவுரையாளராகப் பேராதனையில் 
இருந்த மகேஸ்வரன்,
இந்த வாய்ப்புத் தவறியதில் பெரிதும் கவலைப்பட்டார்.
எனது சிபாரிசுக்கு மனமுவந்து நன்றி கூறினார்.
பிற்காலத்தில், எங்கள் கழக உறுப்பினரான பிரசாந்தன்,
பேராதனையில் விரிவுரையாளராய் வருவதை,
மகேஸ்வரனும் விரும்பவில்லை.
பல்கலைக்கழக அணி சார்ந்து,
கம்பன் கழகத்தைப் பகைத்து நின்றார்.
🚩🚩🚩🚩

பேராசிரியர் சண்முகதாஸூடனான முரண்பாடு

அக்காலத்தில், 'மாற்றம்' என்ற சஞ்சிகை யாழில் வெளிவந்தது.
அச்சஞ்சிகையில் தொடர்ச்சியாக,
வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதி வந்தேன்.
யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பற்றி,
கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு,
'பாவம் தமிழ்' எனப் பதிலளித்தேன்.
அப்பதில் சமூகத்தில் பெரிதாய்ப் பேசப்பட்டது.
அப்பதில் கண்டு, தமிழ்த்துறை என்னோடு கடுமையாய் முரண்பட்டது.
தொடர்ந்து அடுத்தவாரத்தில் மற்றொரு வாசகர், 
'உங்களோடு நெருங்கியிருக்கும் பேராசிரியர். சண்முகதாஸைப் பற்றி,
என்ன சொல்லப் போகிறீர்கள்'
என்று மீண்டும் கேள்வி கேட்க,
'பாவம் தமிழ் மட்டுமல்ல, சண்முகதாஸூம்தான்' எனப் பதிலளித்தேன்.
பல்கலைக்கழகத்தோடு எனக்கேற்பட்ட இம்முரண்பாட்டில்,
பேராசிரியர் சற்றுத் தூரப்போனாலும்,
எங்கள்மேல் அவர் கொண்டிருந்த அன்பு குறையவில்லை. 
கழகம் இக்குடும்பத்திற்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது.
🚩🚩🚩🚩

சுப்பிரமணிய ஐயர்

இவர் யாழ்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் இருந்தார்.
விரிவுரையாளர் ஆவதற்கு முன்பு 
யாழ் இந்துக்கல்லூரியில் சிலகாலம் கற்பித்தார்.
அப்போது இவரிடம் பட்டிமண்டபங்களில் பேச சென்று 
பொயின்ஸ் கேட்பேன்.
கம்பன் கழகம் ஆரம்பித்தநாள் தொடக்கம் 
எங்களுக்குப் பெரும் துணையாக இருந்து வந்தார்.
வன்னிப்பகுதியைச் சேர்ந்தவர் இவர்.
ஆரம்பகாலத்தில் மிக வெகுளியாக எல்லோரிடமும் அன்பாய்ப் பழகுவார்.
கண்டால் கட்டிப்பிடித்து உரிமை பாராட்டுவார்.
தான் அந்தணர் என்று பார்க்காமல் எங்களோடு சேர்ந்து உண்பார்.
பிற்காலத்தில் மெல்ல மெல்ல மாறத்தொடங்கினார்.
பட்டிமண்டபங்களில் சுவைபடப்பேசி வந்த இவர்,
பின்னர் பட்டிமண்டபங்களில் பேச மறுத்தார்.
பண்டிதர் உமா மகேஸ்வரன், கவிஞர் சோ.ப ஆகியோரோடு சேர்ந்து,
மெல்ல மெல்ல கழக முயற்சிகளிலிருந்து விடுபடத்தொடங்கினார்.
ஒருநாள் பல்கலைக்கழகம் சென்று 
இவரோடு அதுபற்றிக் கடுமையாய் வாதிட்டேன்.
அதன்பிறகு எங்கள் உறவில் திரைவிழத் தொடங்கியது.
எளிய மனிதராக இருந்த இவர். 
பின்னர் தன்னைக் கடுமையான மனிதராய் 
செயற்கையாய் மாற்றிக்கொண்டார்.
என்னால் அதனை ரசிக்க முடியவில்லை.
அவர் தொடர்பு அப்படியே மழுங்கிப்போயிற்று.
🚩🚩🚩🚩

கம்பன் கோட்டத்தில் நிகழ்ந்த விமானத்தாக்குதல்

1987 இல் யாழ்ப்பாணத்தில்,
இலங்கை இராணுவத்தின் தாக்குதல் அதிகமாகியிருந்தது.
அத்துலத்;முதலி பாதுகாப்பு அமைச்சராக இருந்த 
காலம் அது என்று நினைக்கிறேன்.
பீப்பாய்க்குண்டு என்ற ஒன்று,
யாழ்ப்பாணத்தில் போடப்பட்டுக் கொண்டிருந்தது.
குண்டுவீச்சு விமானம் அல்லாத,
பெரிய விமானத்திலிருந்து அப்பீப்பாய்க்குண்டு உருட்டப்படும்.
அப்போது நாங்கள் வைமன்ரோட்டில் இருந்தோம்.
விமானம் வந்ததும் நாம் அமைத்து வைத்திருந்த,
'பங்கருக்குள்' ஓடிப்போய் இறங்கி விடுவோம்.
போகும்போது, கையில் 'றேடியோவையும்' எடுத்துச் செல்வோம்.
'பங்கருக்குள்' இருந்தபடி, 'றேடியோவைப்' போட்டால்,
குண்டு வீச்சு விமானத்தில் இருப்பவர்கள் பேசுவது எமக்குக் கேட்கும்.
சிங்களத்தில் சொல்லப்படும்,
'இன்ன இடத்தில் குண்டைப் போடு!' என்பதான,
உத்தரவுகள் காதில் விழக் குலை நடுங்கிப்போவோம்.
அமைச்சரே விமானத்திலிருந்து பேசுவதாக அக்காலத்தில் சொல்வார்கள்.
அரைகுறையாய் முடிக்கப்பட்டிருந்த 
கம்பன் கோட்டத்தின் ஒரு அறையில்,
குமாரதாசனின் கடைசித்தம்பி கண்ணதாசனும்,
அவனது சில நண்பர்களும் தங்கிப் படித்து வந்தனர்.
ஒருநாள் மாலை விமானத் தாக்குதல் நிகழ்ந்தது.
அன்றுதான் வண்ணார்பண்ணைச் சிவன்கோயிலும் தாக்கப்பட்டது.
தாக்குதல் நேரத்தில் 'பங்கருக்குள்' இருந்துவிட்டு,
மைம்மல் பொழுதானதும் நானும் குமாரதாசனும்,
கம்பன்கோட்டத்தைச் சும்மா பார்த்து வரலாம் எனச்சென்றோம்.
கதவைத் திறந்தால், உள்ளே புகையும் இடிபாடுகளும் நிறைந்திருந்தன.
கோட்டமும் விமானத்தாக்குதலுக்கு ஆளானது 
அப்போதுதான் எமக்குத் தெரியவந்தது.
எமக்குக் கை, கால் எல்லாம் நடுங்கத் தொடங்கி விட்டன.
கட்டிட 'பிளாட்டை' உடைத்து உள் கதவையும் உடைத்து,
ஒரு 'ரொக்கற் லோஞ்சர்' அறையினுள் உட்சென்றிருந்தது.
தங்கியிருந்து படித்த மாணவர்கள்,
அந்நேரம் அங்கில்லாதபடியால் உயிர் தப்பினார்கள்.
நாங்களும் தான்.
பின்னர் கஷ்டப்பட்டு அப்பகுதியைத் திருத்தினோம்.
🚩🚩🚩🚩
தொடரும்...

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்