உன்னைச் சரணடைந்தேன்: பகுதி 24 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

போராளி பரதனுடன் முரண்பட்டேன்

அக்காலத்தில் புலிகள் இயக்கத்தின் சார்பாக,
'நிதர்சனம்' எனும் தொலைக்காட்சி இயக்கப்பட்டது.
அதற்குப் பொறுப்பாளராக பரதன் என்பவர் இருந்தார்.
ஆற்றலாளர், ஆனால் முன்கோபி.
அக்காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்து மாணவர்கள்.
தங்களுக்குள் கொண்டாடிய ஓர் ஆண்டுவிழாவில்,
இளைஞர்களுக்கே உரிய குழப்படிகள் செய்ததையும்,
அவர்களுடைய மதிய விருந்தில் 
மிச்சமாகக் கொட்டப்பட்ட உணவுகனை,
நாய்கள் தின்பதையும் வீடியோ எடுத்து,
அகதிகள் உணவுக்குக் கஷ்டப்படுவதையும், 
இதையும் இணைத்துக்காட்டி,
'இதில் யார் நாய்கள்' எனக் கடுமையான விமர்சனத்துடன்,
அந்நிகழ்ச்சியை பரதன் முடித்திருந்தார்.
அம்முடிவை என்னால் ஏற்கமுடியவில்லை.
இச்சம்பவம் நடந்த சில நாட்களின் முன்னர்தான்,
ஊர்விட்டு ஊர் வந்த அகதிகளுக்கு,
பல்கலைக்கழக மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து,
கொட்டில்கள் போட்டுக் கொடுத்ததை,
பத்திரிகையில் படித்திருந்தேன்.
இளைஞர்களிடம் இவ்விரு இயல்பும் இருப்பது இயற்கைதான்,
என்பது என் எண்ணம்.
அவர்களது ஒருநாள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தை வைத்து,
அவர்களை நாய் என்று இழிவு செய்வதை என்னால் ஏற்கமுடியவில்லை.
இது நடந்து ஓரிரு மாதத்தின் பின்னர்,
நிதர்சனத்தின் ஓர் ஆண்டு நிறைவு விழா ஒன்றை பரதன் நடத்தினார்.
வைமன் றோட்டு எல்லையில் இருந்த நாவலர் மணிமண்டபத்தில்,
அந்நிகழ்ச்சி நடைபெற்றது.
யாழில் அப்போது இருந்த அறிவியலாளர்கள்,
அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
அவ்வாண்டு ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகள் முழுவதும் காட்டப்பட்டு,
வந்தவர்களிடம் அது பற்றி அபிப்பிராயம் கேட்கப்பட்டது.
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எல்லாம் மௌனமாயிருக்க,
நான் மட்டும் எழுந்து மாணவர்களை,
'தனித்த ஒரு சம்பவத்தை வைத்து நாய்கள் என்று சொல்வது பொருத்தமில்லை. அவர்கள் நன்மையும் செய்கிறார்கள்' என்றேன்.
'இன்று கூட எங்களுக்கு மதிய உணவு தந்தீர்கள்.
அங்கு சென்று பாருங்கள். 
அங்கும் உணவுகள் கொட்டப்பட்டு நாய்கள் தின்கின்றன.
இதையும் தேசப்பற்றின்மை என்று சொல்லலாமா?
இது எங்கும் நடக்கும் ஒரு விஷயம் தான்
இதைப் பெரிதுபடுத்துவது நல்லதல்ல' என்றேன்.
எனக்கும் பரதனுக்குமான சிறு முரண்பாட்டுடன் கூட்டம் முடிந்தது.
அன்றிரவு வைமன் றோட்டில் நான் தங்கியிருந்த வீட்டிற்கு பரதன்,
புதுவையை மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏற்றிக்கொண்டு வந்தார்.
வெளியில் வந்த என்னிடம்,
'உங்கள் பேச்சு நன்றாக இருந்தது' என்றார்.
அவரது முகபாவத்தை வைத்து,
அவர் கிண்டலாய்ப் பேசுகிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
இருவருக்கும் வாக்குவாதம் விளைந்தது.
கருத்துக் கேட்டுவிட்டு,
உங்களைச் சந்தோஷப்படுத்த நாங்கள் பேசவேண்டும் என்று ,
எதிர்பார்க்காதீர்கள் என,
அவரிடம் கடுமையாய்ச் சொன்னேன்.
புதுவை ஒரு ஓரமாய்த் தள்ளி நின்றார்.
நான் பணியாததைக் கண்ட பரதன்,
மோட்டார் சைக்கிளை உறுமச்செய்து வேகமாய் வெளியேறினார்.
அப்போது இயக்கம் எங்களோடு முரண்பட்டிருக்கவில்லை.

🚩🚩🚩🚩
பத்தாவது கம்பன் விழா
(17.07.1987)

இந்திய இராணுவம் இலங்கையரசை மீறி,
'ஒப்பரேசன் பூமாலை' என்ற பெயரில்,
04.06.1987 இல் விமானம் மூலம்,
யாழ். மக்களுக்கு உணவு கொண்டுவந்து கொடுத்தது.
'பூரி' என்பவரின் தலைமையில் 
இந்திய அதிகாரிகள் யாழ். வந்தனர். 
அவர்களுக்கு யாழ். மக்களால் பெரும் வரவேற்பு 
அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நெல்லியடியில் மில்லரால்,
இராணுவம் முகாம் மீதான கரும்புலித்தாக்குதல்,
05.07.1987 இல் நடைபெற்றது.
அத்தாக்குதலில் பல இராணுவத்தினர் மடிந்தனர்.
பின் இராணுவம் பல பொதுமக்களைக் கொன்றது.
எந்நேரமும் இராணுவம் யாழ்ப்பாணத்தினுள் 
புகுந்து விடலாம் எனும்,
இக்கட்டான சூழ்நிலையில்த்தான்,
இவ்விழாவினை நடாத்தினோம்.
இவ்விழா 1987 ஜுலை 17, 18, 19 ஆகிய திகதிகளில்,
யாழ். நல்லையாதீனத்தில் நடந்தது.
விழாவில் பெருங்கூட்டமாக மக்கள் கலந்துகொண்டனர்.
அன்றைய சூழ்நிலையை மையப்படுத்தி,
பட்டிமண்டபத் தலைப்பு அமைத்தோம்.
'இன்றைய சூழலில் எம்மவர் நெஞ்சில பெரிதும் பதியவேண்டியது,
சீதையின் உறுதியே!, 
சுமித்திரையின் தியாகமே!, 
கும்பகர்ணன் வீரமே!'
என்ற தலைப்பில் நடந்த பட்டிமண்டபம் 
அக்காலத்தில் பெரும் புகழ்பெற்றது. 
கும்பகர்ணனின் மரணத்தை மில்லரின் 
மரணத்தோடு ஒப்பிட்டும்,
தூதனாய் வந்த அனுமனை முதல் இந்தியத்தூதர் என வர்ணித்தும்,
இலக்கியப் பேச்சாளர்கள் பேச,
அடுத்தநாள் பத்திரிகைகளிளெல்லாம் 
அதுவே தலைப்புச் செய்தியாயிற்று.
இவ்விழாவில் நடந்த கவியரங்கமும் மிக முக்கியமானது.
இவ்விழாவில் கவிஞர் ச.வே. பஞ்சாட்சரம் பாடிய
'வடமராட்சித் தாலிக்கொடியை நம்பி - அங்கே
பொடிமெனிக்கே காத்திருந்தாள் வெம்பி
வடமராட்சிக் கொடியுமில்ல 
மகிந்த செத்த பொடியுமில்ல - பாவம்'
என்பதான கவிதை,
விழாவின் பின்பும் இளைஞர்களால் 
சினிமாப்பாட்டுப்போற் பாடப்பட்டது.
இவ்விழாவில்த்தான் கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை,
பண்டிதர் வீரகத்தி, பண்டிதர் ஈஸ்வரநாதபிள்ளை, 
கவிஞர் வாசுதேவன், ஈ. சரவணபவன் ஆகியோர் 
முதன்முதலில் பங்கேற்றனர்.
🚩🚩🚩🚩

தலை தப்பியது!

இவ்விழா நடந்து முடிந்த சில நாட்களில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 
அப்போது, இந்திய அதிகாரிகள் பலர் 
'சுபாஷ்' ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
இவ்விழாவில் நாட்டின் 
நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வை,
இலக்கியத்தின் மூலம் நாம் அணுகியிருந்தோம்.
அந்த அணுகுமுறைக்குப் பெரிய வரவேற்பு இருந்தது.
எந்த நேரமும் வடமராட்சியிலிருந்து 
இராணுவம் புறப்படலாம் என்ற நிலையில்,
நடத்தப்பட்ட விழா இது. 
ஆனாலும், விழாவில் பெருங்கூட்டம் கூடியது.
இந்த விழா முடிந்து ஒரு வாரமாகியிருக்கும்.
அப்போது வைமன் ரோட்டில் 
கம்பன் கழக அலுவலகம் அமைந்திருந்தது.
ஒரு மாலைப்பொழுதில் 
நாங்களும் கவிஞர் சோ.ப.வும் உட்கார்ந்து,
விழாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
திடீரென ஓர் இந்தியச் சீக்கிய அதிகாரி உள்நுழைந்தார்.
அவர் தன்னை ஒரு பத்திரிகையாளராய் 
அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தனி ஆங்கிலத்திலேயே எங்களுடன் உரையாற்றினார்.
கவிஞர் சோ.ப. இருந்ததால் 
மொழிபெயர்ப்பு வசதி இருந்தது. 
எங்கள் விழாப்பற்றி நிறைய விசாரித்தார்.
நாங்களும் ஏதோ இந்தியப் பத்திரிகையில்,
எங்கள் விழாவைப் பற்றி எழுதப்போகிறார் என்று நினைத்து,
ஆனந்தமாகச் செய்திகளைச் சொல்லத் தொடங்கினோம்.
திரும்பத் திரும்ப 
'இந்திய அமைதிப்படையின் வருகை பற்றி,
உங்கள் அறிஞர்கள் என்ன கருத்துச் சொன்னார்கள்?'

என்ற கேள்வியையே கேட்டார்.
'எம்மை இந்தியா வந்து காப்பாற்றாதா?' என,
ஈழத் தமிழர்கள் ஏங்கியிருந்த காலம் அது.
அனைவரும் இந்தியாவின் துணையை 
ஆதரிக்கிறார்கள் என்ற 
கருத்தை,நாங்கள் சொல்லச்சொல்ல 
சோ.ப. ஆங்கிலத்தில் அவருக்கு எடுத்துக் கூறினார்.
முடிவில் எங்கள் 'விழாப் படங்கள் இரண்டு தரமுடியுமா?' 
என்று வந்தவர் கேட்டார்.
கைவசம் படம் இருக்கவில்லை. 
'நாளை தரலாம்' என்றோம்.
தம் முகவரியைக் கொடுத்து,
'சுபாஷ் ஹோட்டலில்' கொண்டு வந்து தரும்படி கேட்டுக்கொண்டார்.
கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் 
ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தவர்,
முகவரியைத் தந்து பேசியபோது இறுதியில் நல்ல தமிழில் பேசினார்.
அவருக்குத் தமிழ் தெரியாது என்று நினைத்திருந்த நாங்கள் 
திகைத்துப்போனோம்.
அவருக்குத் தமிழ் தெரியாது என்ற நினைப்பில்,
எங்களுக்குள் நாங்கள் உரையாடிய கருத்துகளும்கூட,
நல்லகாலமாய் வித்தியாசமாய் அமைந்திருக்கவில்லை.
அவர் தமிழில் பேசியதும்தான்,
அவர் ஓர் இந்தியப் புலனாய்வு அதிகாரியாய் இருக்கவேண்டும் எனும்,
உண்மையைத் தெரிந்து நாம் திகைத்தோம்.
பின்னாளில் இந்திய உளவுத்துறையினரால்,
பிழையானவர்களாகக் கணிக்கப்பட்ட நம்மவர் பலர்,
ஏதோ விதத்தில் அழிக்கப்பட்டனர்.
நல்ல காலமாய் எம் தலை தப்பியது!

🚩🚩🚩🚩
பொன். சுந்தரலிங்கத்தின் திருமுறை வெளியீடு

இக்காலத்தில்  சங்கீத பூஷணம் பொன் சுந்தரலிங்கம்,
எம்மோடு மிக நெருங்கியிருந்தார்.
வித்துவான் ஆறுமுகம் அவர்களின் மரண வீட்டில் நான் கதறியழுதது,
அவரின் மருமகனான சுந்தரலிங்கத்தைப் பெரிதும் பாதித்திருந்தது.
திருமுறைகளை ஆறு ஒலிப்பதிவு நாடாக்களாக,
தொகுத்து வெளியிட முயற்சித்த சுந்தரலிங்கம்,
அம்முயற்சிக்கு என் ஆதரவைக் கோரியிருந்தார்.
அக்காலத்தில் எங்களோடு நெருங்கியிருந்த,
கவிஞர் சோ.ப. வுக்கு திருமுறைகளில் ஆட்சி அதிகம் இருந்ததால்,
ஓர் அதிகாலைப் பொழுதில்,
சுந்தரலிங்கத்தின் மோட்டார் சைக்கிளில்,
சோ. ப. வீட்டிற்குச் சென்று,
அவரைச் சுந்தரலிங்கத்திற்கு அறிமுகம் செய்து வைத்தேன்.
சுந்தரலிங்கத்தோடு எப்படிப் பழகவேண்டும் என்று,
சோ.ப. வை வழிப்படுத்தினேன்.
'அவர்கள் பணம் தந்தால் வாங்காதீர்கள்.
அவர்களுடைய கடமைப்பாடு பின்னாளில் உங்களுக்கு,
பெரிய உதவியாய் இருக்கும்'
என்று நான் சொன்னதை,
சோ.ப. ஏற்று நடந்தார்.
பின்னாளில் அவ்விருவரும் நெருங்கிய நண்பர்களாகி,
என்னையும் கழகத்தையும் பகைத்து,
நிறைய இடைஞ்சல்கள் செய்தனர்.
அவர்களோடு இணைந்திருந்த 'முரசொலி' சிவராஜா அவர்கள்,
பின்னாளில் நஷ்டப்பட,
இவ்விருவரும் அவரை விட்டு மெல்ல விலகினர். ஆனால்,
சிவராஜா அவர்களின் நட்பு 
இன்றும் கழகத்தோடு நெருக்கமாய்த் தொடர்கிறது.

🚩🚩🚩🚩
பொன். சுந்தரலிங்கம் வாக்கு மாறினார்

'அந்த ஒலிப்பதிவு நாடாக்களை,
கம்பன் கழகத்தின் பெயரில் வெளியிட வேண்டும்'
என,
எம்மைச் சுந்தரலிங்கம் வலிந்து கேட்டதால்,
நாம் அதற்குச் சம்மதித்திருந்தோம்.
பத்திரிகையிலும் கம்பன் கழக வெளியீடாய்,
திருமுறை ஒலிநாடாக்கள் வரப்போவதாய் விளம்பரம் வந்தது.
இக்காலத்தில்தான் யாழ்ப்பாணத்தில்,
'முரசொலி' எனும் பத்திரிகையை,
மு.சிவராஜா என்பவர் ஆரம்பித்திருந்தார்.
அக்காலத்தில் அவர் மிக வசதியோடிருந்தார்.
கலைஞர்களுக்கு உதவுவதில் விருப்பங் கொண்டிருந்தார்.
ஆதீனத்தோடு நெருக்கமாயிருந்த அவர்,
எங்கள் கம்பன் விழாவில் வைத்து,
பொன். சுந்தரலிங்கத்தோடு அறிமுகமாகி,
'திருமுறை நாடாக்களை,
ஆதீனத்தின் பெயரில்தான் வெளியிட வேண்டும்' 

எனக் கேட்டுக்கொள்ள,
சுந்தரலிங்கமும் அவரினால் வரும் பயனைக் கருதி,
அப்படியே வெளியிடச் சம்மதித்துவிட்டு,
அத்தவறுக்காக எங்களைச் சமாளிக்க முயன்றார்.
நாங்கள் சுந்தரலிங்கத்தின் நட்பைக் கருதி,
அந்த விடயத்ததை அதிகம் பெரிதுபடுத்தவில்லை.
அவ்வெளியீட்டு முயற்சியின்போது,
நாம் வாடகைக்கிருந்த வசதியில்லாத அறையிலிருந்தபடியே,
ரியசலில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு,
சமையல் செய்து நான் அனுப்பி வைப்பேன்.

🚩🚩🚩🚩
கவிஞர் சோ.ப.வின் தொடர்பு

இவ்விடத்தில் கவிஞர் சோ. பத்மநாதன் அவர்களுடனான,
கழகத்தின் உறவு பற்றி சொல்ல விரும்புகிறேன்.
உரும்பிராயில் வித்துவான் வேலன் தலைமையில் நடைபெற்ற,
ஒரு பட்டிமண்டபத்தில் சோ.ப. பேச,
அதைக்கேட்டு மகிழ்ந்த வித்துவான் வேலன்,
கம்பன் விழாவில் அவரைப் பயன்படுத்துமாறு 
எங்களைக் கேட்டுக்கொண்டார்.
அவரின் ஆலோசனைப்படி,
ஒரு கம்பன் விழாவில் சோ.ப. வை அறிமுகம் செய்தோம்.
அப்பொழுது சோ.ப. பெரிய அளவில் பிரபலமாகி இருக்கவில்லை.
கம்பன் விழாக் கவியரங்கங்களில் சோ.ப. தன் திறமையைக் காட்டி,
கொடி கட்டிப் பறக்கத் தொடங்கினார்.
நல்ல தமிழறிவு, திறமையான கவியாற்றல், 
ஆங்கிலப் புலமை என அனைத்தும்சேர,
அவர் திறமை பெரிதும் வெளிப்பட்டது.
அக்காலத்தில், அவர் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில்,
விரிவுரையாளராய் இருந்தார்.
அப்போது அவருக்கு
லண்டன் 'ஸ்கொலசிப்' வாய்ப்பு ஒன்று வந்தது.
அவரிடம் அப்போது 'பாஸ்போட்' இருக்கவில்லை.
அக்காலத்தில் 'பாஸ்போட்' எடுப்பதானால்,
அரசாங்க உயர் உத்தியோகத்தர் ஒருவர்,
அத்தாட்சிப்படுத்தி கையொப்பம் இடவேண்டும்.
சோ.ப.வுக்காக நானே கொழும்பு சென்று,
எனது சின்னையா ஒருவரைக்கொண்டு,
கையொப்பம் இடுவித்து 
'பாஸ்போட்' எடுத்து வந்தேன்.
வந்த ஒரு வாரத்தில் பாஸ்போர்டோடு வருமாறு,
சோ.ப.வுக்குத் தூதரகத்திலிருந்து கடிதம் வந்தது.
'பாஸ்போட்' கையிலிருந்ததால்,
சோ.ப.வுக்கு 
அந்த 'ஸ்கொலசிப்' கிடைத்தது.
இல்லாவிட்டால் 
அந்த வாய்ப்பை அவர் இழந்திருப்பார்.
லண்டன் போக சோ.ப.வுக்கு 
மற்றொரு பிரச்சினையும் இருந்தது.
வீட்டைப் பொறுப்பாகப் பார்க்க,
அவருக்கு நெருக்கமான உறவு இருக்கவில்லை.
பிள்ளைகள் சிறியவர்கள்,
மனைவியால் தனியே பொறுப்புக்கள் சுமக்கமுடியாத நிலை.
இந்நிலையில் மாதாமாதம் கோண்டாவில் சென்று,
அவர் குடும்பக்காரியங்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை,
அவரின் வேண்டுகோளையேற்று,
நானும் குமாரதாசனும் ஓர் ஆண்டு செயற்படுத்தினோம்.
பரிசுப் பொருட்கள் பலவற்றை (அவர் பணத்தில்) வாங்கிக்கொடுத்து,
லண்டனில் அவருடைய ஆங்கில விரிவுரையாளர்களுக்கு வழங்கி,
அவர்களுடைய அன்பைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறி,
அனுப்பி வைத்தோம்.
அப்போது லண்டனில் அவருக்கு யாரையும் தெரிந்திருக்கவில்லை. 
எங்கள் நண்பன் சிவகுமாரை அவருக்கு அறிமுகம் செய்து,
லண்டனில் துணை செய்யச்செய்தோம்.
இப்படி சோ.ப.வுக்கும் எங்களுக்குமான உறவு,
சகோதர உறவாய் நெருங்கித் தொடர்ந்தது.
லண்டன் சென்று வந்ததும்,
சோ.ப.வுக்கு யாழ்ப்பாணத்தில் மதிப்பு அதிகரித்தது.
பின்னாளில் எங்கள் பணிவைப் புரிந்து கொள்ளாத சோ.ப.,
அதைப் பலவீனமாய்க் கருதி எங்களை அலட்சியம் செய்தார்.
பயன் கருதித் தனக்குத் துணை செய்தவர்களுக்கெல்லாம்,
பணிந்து நடந்தார்.
தன்னை ஏவியவர்களுக்கெல்லாம் பணிவிடை செய்து,
பணிந்த எங்களை ஏவ முயற்சித்தார்.
அது பற்றிப் பின் சொல்கிறேன்.

🚩🚩🚩🚩
சமாதானப் படையின் சன்னதம்

தமிழர்களின் சார்பாய் இலங்கை வந்த இந்திய சமாதானப் படைக்கு,
தமிழர்கள் மத்தியில் ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு இருந்தது.
யாழ்ப்பாணம் வந்த ஓர் இந்திய சமாதானப் படைவீரன்,
யாழ். கோட்டை அருகில் கண்ணிவெடி அகற்றும்போது நிகழ்ந்த,
வெடி விபத்தில் இறந்துபோக,
அவருக்காக யாழ். மக்கள் மனமுருகிக் கண்ணீர் வடித்தனர்.
ஆனால், பின்னாளில் அரசியல் சூழல்களால்,
புலிகளுக்கும் இந்திய சமாதானப் படைக்கும் போர் தொடங்கிற்று.
நாம் அதுவரை யாழில் கண்டிருந்த போரைவிட,
இப்போர் மிகக் கொடூரமாய் இருந்தது.
மக்களின் பாதுகாப்பைப் பற்றி எதுவித கவலையுமின்றி,
இருதரப்பினரும் மிகக் கடுமையான 'ஷெல்' தாக்குதல்களை நடாத்தினர்.
மாரி மழைபோல 'ஷெல்' பொழிந்தது.
பலரும் இடம்பெயர வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

🚩🚩🚩🚩

வளரும்...

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்