உலகெலாம்......நிறைவுப் பகுதி: -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

(சென்றவாரம்)
வாழ்த்துதல் நாவின் செயல். வணங்குதல் மெய்யின் செயல். நினைத்தலின்றி, வாழ்த்துதலும் வணங்குதலும் இல்லையாம். இங்கு வாழ்த்துதலும் வணங்குதலும் சொல்லப்பட்டு, நினைதல் குறிப்பால் உணர்த்தப்பட்டது. ஆகவே, இறைவனை நினைந்து வாழ்த்தி வணங்க, அவன் திருவடி தொடும் பேறும், திருவடி தொடும் பேற்றினால், உருவ, அருவுருவ, அருவ வழிபாட்டுநிலைகளை எய்தும் பேறும், அவ்வழிபாடுகளால் சொரூபநிலை இறையோடு ஒன்றும்பேறும், எய்தப்படும் பேருண்மை, இம்முதற்பாடலில் பொதிந்து கிடந்து, நம்மை வியப்படைய வைக்கிறது.

'மலர்சிலம்படி' பொருள் 
கொள்ளும் முறை

லகெலாம் எனத்தொடங்கும்,
இப்பாடலில் வரும் மலர் சிலம்படி எனும் தொடர்,
பலபொருள்களை உள்ளடக்கி நின்று,
விரித்துணர மகிழ்வு தருகிறது.
மலர்ந்த, சிலம்பினைப் பூண்ட அடி என,
இத்தொடருக்குப் பொதுவாகப் பொருளுரைக்கலாம்.
அடியெனும் சொல்லை முன்னும் கூட்டி,
மலரடி, சிலம்படி எனப் பிரித்துப் பொருள் கொள்ளலும் கூடும்.

மலரடி

மலரடி என்ற சொல்லுக்கு,
அடியார்தம் உள்ளக்கமலத்தை மலர்விக்கும் அடி என,
பொருள் கொண்டு மகிழலாம்.
முக்காலத்தையும் உள்ளடக்கி நிற்பது,
வினைத்தொகையின் இலக்கணம்.
ஊறுகாய், சுடுகாடு என்பவை வினைத்தொகைக்காம் உதாரணங்கள்.
முன்பும் ஊறியகாய், இப்போதும் ஊறும்காய், இனியும் ஊறப்போகும்காய் எனவும்,
முன்பும் சுட்டகாடு, இப்போதும் சுடும்காடு, இனியும் சுடப்போகும் காடு எனவும்,
இத்தொடர்களை வினைத்தொகையால் விரித்துரைக்கலாம்.
மலரடி என்பதும் வினைத்தொகையாம்.
ஆதலால், இத்தொடரை,
மலர்ந்த அடி, மலர்கின்ற அடி, மலரப்போகும் அடி என,
வினைத்தொகை இலக்கணத்தால் விரிக்க முடியும்.
இறைவன் திருவடி அன்பர்தம் உள்ளத்தை எக்காலத்தும்,
மலர்விக்கும் தன்மையை,
இத்தொடரால் உணர்ந்து மகிழ்கிறோம் நாம். 

   ♦

மலரடி - மற்றொரு பொருள்

இனி, மலரடி என்ற தொடரிற்கு,
அன்பர்தம் உள்ளக்கமலத்தின்கண் பொருந்திய அடி என,
பொருள் கொள்ளினும் பொருத்தமாம்.
மலர்மிசை ஏகினான் என்னும் குறளுக்கு உரைசெய்யும் பரிமேலழகர், 
மலர் என்பதனை,
'அன்பான் நினைவாரது உள்ளக்கமலமாய்' உரைப்பார்.
அம்மேற்கோள் கொண்டுணர, மலரடி எனும் தொடர்,
அன்பான் நினைவாரது உள்ளக்கமலத்தில் பொருந்திய அடி என,
பொருள்தந்து மகிழ்விக்கிறது.
இங்கும், அத்தொடரை வினைத்தொகையாய்க் கொள்ள,
அன்பால் நினைவாரது உள்ளக்கமலத்தில்,
முன்பும் பொருந்திய அடி, 
இப்போதும் பொருந்துகின்ற அடி,
இனியும் பொருந்தப்போகும் அடி என அர்த்தம் பிறந்து,
எக்காலத்தும் ஆன்மாக்களை ஈடேற்றும்,
இறைவன் திருவடிப்பெருமையைத் தெளிவுற வெளிப்படுகின்றது.

   ♦

சிலம்படி

இனி, 
சிலம்படி எனும் தொடருக்காம் பொருள் காண விழைகிறோம்.
சிலம்பினைப் பூண்ட அடி என்றும்,
சிலம்போசையை எழுப்புகிற அடி என்றும்,
இத்தொடருக்குப் பொருள் கொள்ளலாம்.
அம்பலத்தாடும் இறைவனின்,
பாதத்தில் பொருந்திய சிலம்பு,
இறைவன்தன் ஆட்டத்தினால் ஓசை எழுப்புகிறது.
அம்பலம் என்பது சித்தாகாசம்.
அதினின்று இறைவன் ஆடுகிறான்.
இறைவனின் ஆட்டம் ஐந்தொழில்களைக் குறிப்பது.

   ♦

முப்பத்தாறு தத்துவங்களை வகைசெய்த சித்தாந்திகள்,
அவற்றின் முதல் ஐந்து தத்துவங்களைச் சிவ தத்துவங்கள் என்றும்,
அடுத்த ஏழு தத்துவங்களை வித்யா தத்துவங்கள் என்றும்,
மிகுதி இருபத்துநான்கு தத்துவங்களை,
ஆத்ம தத்துவங்கள் என்றும் வகுத்தனர்.
முதன்மையான சிவ தத்துவங்கள் ஐந்தினுள்ளும்,
நாத தத்துவமே முதல்த் தத்துவமாம்.
அந்நாதத்தினின்றே மற்றைய தத்துவங்கள் விரிகின்றன.
அத்தத்துவங்களைக் கொண்டே,
மலவயப்பட்ட ஆன்மாக்களை இறைவன் தூய்மைப்படுத்துகிறான்.
தத்துவங்களுள் முதன்மையானதான நாத தத்துவமே,
இறைவன் திருவடிச் சிலம்போசையாய் எழுகிறது.
அவ்வோசையே, உயிர்களை உய்விக்கும் முதல்த் தத்துவமாம்.
நாத தத்துவத்தால் உயிர்களை உய்விக்கும்,
இறைவனின் பெருங்கருணையை,
சிலம்படி என்னும் இத்தொடர் குறிப்பால் உணர்த்தி நிற்கிறது.

   ♦

சக்தியின் திருவடியே சிலம்படியாம்

ஆடும் சிவனின் திருவடிகளில் ஒன்று ஊன்றி நிற்பது.
மற்றையது உயர்ந்து நிற்பது.
ஊன்றப்படுவது அன்பர்தம் உள்ளக்கமலத்தின் கண் ஆதலால்,
ஊன்றிய திருவடி மலரடியாம்.
ஊன்றிய பாதம் அசையாது,
எனவே, சிலம்பொலி அதனின்றும் எழாது.
ஆடியபாதம் அசையும்,
எனவே, சிலம்பொலி அதனின்று எழும். 
எனவே,
உயர்ந்த திருவடியே சிலம்படியாம்.

   ♦

இறைவன் சக்தியைத் தன் இடப்பாகத்தில் கொண்டவன்.
இறைவனின், வலப்பாதம் ஊன்றியபாதம்.
இடப்பாதம் ஆடியபாதம்.
இறைரூபத்தின், வலப்பாகம் சிவனது. 
இடப்பாகம் சக்தியினது.
தத்துவம் கடந்த பரம்பொருள்,
சக்திக் கலப்பினால் சுத்தமாயைக்குட்பட, 
சிவதத்துவங்கள் விரிகின்றன.
சிவம் அசையாது நிற்க, 
சிவத்தின் சந்நிதி மாத்திரையால்,
சக்தி அனைத்து இயக்கங்களையும் நடத்துகிறாள் என்பது தத்துவம்.
இடப்பாகமான சக்தித் திருவடியில் சிலம்போசை எழுவதால்,
சக்திக்கலப்பால்த்தான்,
நாத தத்துவம் விரிகிறது எனும் பேருண்மையையும்,
சேக்கிழார் நமக்கு உணர்த்துகிறார்.

   ♦

ஊன்றிய திருவடி மறைத்தல் தொழிலால் உயிர்களை மலர்விக்க,
உயர்ந்த திருவடி தன் சிலம்போசையால் நாத தத்துவத்தை விரித்து,
உயிர்களைத் தூய்மைசெய்து முத்தி கொடுத்தருள்கிறது.  
சக்திக் கலப்பினாலேயே தடத்த வடிவங்கள் கொள்ளப்படுகின்றன.
தடத்த வடிவங்களுக்கே வழிபாடு இயற்றப்படுகின்றது.
அதுநோக்கியே, 
சக்திக் கலப்பான சிலம்படியினை,
வாழ்த்தி வணங்க வலியுறுத்துகிறார் சேக்கிழார்.

   ♦

சிவத்துட் பொதியும் சக்தி

அங்ஙனம் வணங்கி உயர்வடைய,
சிவசொரூபம் நம் உள்ளக் கமலத்துள் பதியுமாம்.
சிவமும் சக்தியும் இரண்டாய் உரைக்கப்படினும்,
சிவத்துள் சக்தி அடங்கும் என்பதே உண்மை.
இவ் உண்மையையும்,
சேக்கிழார் மறைமுகமாய் நமக்கு உணர்த்துகிறார். 
வலக்காலின் ஊன்றுதலிலேயே இடக்கால் ஆடுகிறது.
அவ் ஊன்றுதல் இல்லையேல் ஆடுதல் இல்லையாம். 
இடக்காலையும் தாங்கி நிற்பதால்,
வலக்கால் அதனையும் தன்னுள்ப் பொதிக்கிறது. 
சிவனின் நிலைத்தலிலேயே சக்தியின் இயக்கம் நிகழுமாம். 
மேற்சொன்ன உண்மைகளை,
சிலம்படி எனும் தொடருள் அடக்கிய,
சேக்கிழார்தம் செறிந்த அறிவு நம் சிந்தையைச் சிலிர்ப்பிக்கிறது.

   ♦

அடியார் தொகையும் பாடல் அட்சரங்களும்

இம்முதற்பாடலில் வரும் எழுத்துக்கள் அறுபத்து மூன்று.
மெய்யெழுத்தையும் சேர்த்து எண்ணினால்,
அவை எழுபத்திரண்டு ஆகும்.
முதற்சொன்ன அறுபத்து மூன்று எழுத்துக்களும்,
காவியத்துள் வரும் அறுபத்து மூன்று முதல் அடியார்களையும்,
விரிக்க வரும் ஒன்பது மெய்யெழுத்துகள்,
தொகையடியார் ஒன்பது பேரினையும் குறிக்கும்.
தம் கதை மாந்தரை அட்சரங்களுள்ளும் அடக்கிய,
சேக்கிழார் தம் ஆற்றலை என்னென்பது?

   ♦

சேக்கிழாரின் கருணைத்திறம் 

இப்பாடலின் நிறைவு வரியில்,
வாழ்த்தி வணங்குவேன் எனத் தன் முனைப்பாய் உரைக்காது,
வணங்குவாம் என அனைவரையும் உட்படுத்தி உரைக்கும்,
சேக்கிழாரின் கருணைத்திறம்,
நினைந்து நினைந்து உருகத்தக்கது. 
உலகியலில் மூழ்கி, அருளியலை மறந்த நம்போன்றோரையும்,
தன் பெருங்கருணையினால்,
சிவ அனுக்கிரகத்துக்கு ஆட்படுத்த,
தெய்வச்சேக்கிழார்தம் சிந்தை விரும்புகிறது.
என்னே அவரது கருணைத்திறம்!

   ♦

தெய்வச்சேக்கிழார்தம் நெறிநின்று,
ஓதற்கரிய அவ்விறையை,
நிலாவுலாவிய நீர்மலி வேணியனாய் உருவ நிலையிலும்,
அலகில் சோதியனாய் அருவுருவ வடிவிலும் தரிசித்து,
அம்பலத்தாடும் அருவ நிலையுற்ற அவ்வாடல் வல்லானின்,
மலரடியை வாழ்த்தி,
சிலம்படியை வணங்கி,
முத்திக்கு வித்திட,
முயலட்டும் உலகெலாம்.

   ♦
(உலகெலாம் நிறைவுற்றது)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்