உலகெலாம்......பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

 
(சென்றவாரம்)

உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் என்னும் ஓரடிக்குள், உயிர்களின் வகைகளையும்,  அவற்றின் வழிபடு நிலைகளையும் குறிப்பால் உணர்த்திய, சேக்கிழார்தம் புலமை கண்டு திகைத்து நிற்கிறது நம் சிந்தை.

இரண்டாம் அடி தரும் உறுதி

லகெலாம் எனத்தொடங்கும் பாடலின் முதல் அடியுள்,
பொதிந்து கிடந்த நுண்பொருள்கள் பலவற்றைக் கண்டு மகிழ்ந்தோம்.
இனி, பாடலின் இரண்டாம் அடிக்குள் நுழைகிறோம்.
உலகமெல்லாம் சைவமரபின் உட்சென்று உய்வடையவே,
பெரியபுராணத்தைப் பாடுகிறார் சேக்கிழார்.
'அனைவரும் சிவனைத் தொழுமின்'! எனச் சொல்லவந்த சேக்கிழார்,
அவ்விடயத்திற்கு மாறான கருத்தினை,
தம் பாடலின் முதலடியிற் பொருத்தி விடுகிறார்.

✷✷


உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் எனும் பாடலின் முதலடி,
அச்சிவன்தான் உணரவும், ஓதவும் முடியாதவன் எனும் பொருளைத்தர,
அதனைப் படித்ததுமே,
உணரவும், ஓதவும் முடியாத அவ்விறைவனை அடைதல்,
நம்மால் ஆகாதன்றோ? என கற்பார் சிலர் மயங்குவர்.
அங்ஙனம் நினைப்பார்தமை,
பாடலின் இரண்டாம் அடி, தோள்பற்றி இழுத்து நிறுத்துகிறது.
உணரவும், ஓதவும் முடியாத நிலையில் அவ்விறைவன் இருப்பினும்,
எல்லையற்ற தன் பெருங்கருணையினால்,
குற்றமுள்ள ஆன்மாக்களையும் தூய்மைசெய்து,
தன் தலையில் தூக்கி அவன் வைத்திருப்பான்,
என்கிறது அவ்விரண்டாம் அடி.
நிலவுலாவிய நீர்மலி வேணியன்,

✷✷

காமக்குற்றம் கொண்ட நிலவையும்,
ஆணவக்குற்றம் கொண்ட கங்கையையும்,
தலையிற் சூடியவன் எனப் பொருள்தரும் இவ்விரண்டாம் அடி,
ஆகா! தவறிழைப்பினும்,
இவன் நம்மையும் உய்விப்பான் எனும் தெம்பு தந்து,
கற்போரை ஈர்த்து நிற்கிறது.

✷✷

சோதியன்

நிலவும், கங்கையும் தம் தெய்வத்தகுதியால்,
பிழை உணர்ந்து இறைவனின் திருமுடியைச் சார்ந்தன.
நம்மால் அக்காரியம் முடியுமோ? என மீண்டும் ஐயுறுவார்க்கு,
தெம்புதரும் வகையில் அடுத்த தொடரினை அமைக்கிறார் சேக்கிழார்.
இருள் மறைப்பது. -சோதி தெரிவது.
சிறுசோதி சிலரால் உணரப்படும்.
பெரும்சோதி எல்லாராலும் உணரப்படும்.
அலகில் சோதியன் என,
அடுத்து இறைவனைக் குறிப்பதன் மூலம்,
அவன் எல்லாராலும் உணரத்தக்கவன் என்னும் உண்மையை,
மறைமுகமாய்ச் சேக்கிழார் நமக்கு உணர்த்தி விடுகிறார்.
சோதியின் வேலை இருள் அகற்றுவது.
மலவிருளை நீக்கவல்லான் இவன் எனும் மறைபொருளையும்,
பாடலில்  வரும் சோதியன் எனும் சொல்லால் நாம் உணர்ந்து கொள்கிறோம்.

✷✷

அம்பலத்தாடுவான் இருள் நீக்கும் முறைமை

ஆன்மாவை அனாதிமுதல் பற்றிக்கொண்ட ஆணவ இருளை,
இறைவன் எங்ஙனம் நீக்குகிறான்?
ஆன்மாவுக்கு ஆணவத்தால் கன்மம் விளைகிறது.
அக்கன்ம நீக்கத்திற்காக மாயையில் இருந்து,
தனு, கரண, புவன, போகங்கள்,
ஆண்டவனால் ஆன்மாவிற்கு வழங்கப்படுகின்றன.
அந்த தனு, கரண, புவன, போகங்களால் எய்தப்படும்,
இன்ப, துன்ப அனுபவங்களில் முதிர்ச்சி எய்தி,
ஆன்மா இருவினையொப்பு நிலை எய்துகிறது.
இருவினையொப்பு நிலை எய்திய ஆன்மாவை,
குருவாக வந்து இறைவன் ஆட்கொண்டு,
அதற்கு முத்தியளிக்கிறான்.

✷✷

மேற்சொன்ன முக்தி நிலையை ஆன்மாக்கள் அடைவதற்காய்,
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும்
ஐந்தொழில்களை இறைவன் இயற்றுகிறான்.
இறைவனின் இவ் ஐந்தொழில்களையும் குறிப்பதுவே,
அவனது ஆடல்தோற்றமாம்.
இவ்வுண்மையை,
தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றி இடும் அங்கியிலே சங்காரம் -ஊற்றமாம்
ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.

(துடி – உடுக்கு, திதி - காத்தல், அங்கி – நெருப்பு, திரோதம் - மறைப்பு, நான்ற – தொங்கிய.)

எனும், உண்மைவிளக்கக் கடவுள் வாழ்த்தால் நாம் உணரலாம்.
இறைவனின் ஆடல் தோற்றம்,
ஐந்தொழில்களைக் குறிப்பதை உணர,
பாடலில் வரும் அம்பலத்தாடுவான் எனும் அடுத்த தொடர்,
சோதி வடிவினனான இறைவன்,
ஐந்தொழில்களால் ஆன்மாவின் ஆணவ இருள் நீக்கும் வகையினை,
அழகுற வெளிப்படுத்துவது அறிந்து நாம் ஆனந்திக்கிறோம்.

✷✷

முத்திக்காம் வழி

ஆன்மாக்களின் சிற்றறிவால் உணரமுடியாதவன் ஆயினும்,
சோதி வடிவினனாய்த் திகழும் அவ்விறைவன்,
தன் பேரருளால் இரங்கி வந்து,
தன் ஐந்தொழில் ஆடல் நிகழ்ச்சியால்,
ஆன்மாக்களின் ஆணவம் போக்கி,
அவ் ஆன்மாக்களைத் தலைமேற்கொண்டு,
முத்தி தந்து ஆட்கொள்வான் என்னும் உண்மையறிய,
நாமும் அவனை அடையவேண்டும் என்னும் விருப்புண்டாகிறது.
அவ்விறைவனை அடைதற்காம் வழி என்ன? எனும் கேள்வி பிறக்க,
பாடலின் அடுத்த அடி நம் கை பற்றிப் பதில் தருகிறது.

✷✷

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
எனும் பாடலின் இறுதி அடி,
மலர்ந்த சிலம்பினைக்கொண்ட அவன் திருவடியை,
மனம், வாக்கு, காயத்தால் ஒன்றி வழிபட,
பெத்த நிலைநீங்கி முத்திநிலையடையும் அப்பேரின்பப்பேறு,
நமக்கும் கிட்டும் என உரைத்து,
இந்த ஒருபாடலே, திருப்பாடலாய்,
நம்மைத் தெய்வநிலைக்கு உயர்த்த வழிகாட்டுகிறது.

✷✷

பதி நிலைகள்

இனி,
சித்தாந்த தத்துவ அடிப்படையில்,
இப்பாடல் உட்கொண்ட,
பொருள்நுட்பம் சில கண்டு மகிழ்வோம்; நாம்.
நம் சித்தாந்த தத்துவம்,
இறைநிலையை இருகூறாய்ப் பேசும்.
மனமும், வாக்கும் தொடமுடியாத இறைநிலை என்று ஒன்று உண்டு.
சித்தமும் செல்லாச் சேட்சியன்,
நூல் உணர்வறியா நுண்ணியோன், என்றெல்லாம்
இந்நிலையை மணிவாசகம் பேசும்.
கருத்தால் தொடமுடியாத அக்கடவுள் நிலையை,
இறையின் சொரூபநிலை என,
சித்தாந்த நூல்கள் உரைக்கும்.

✷✷

சிந்தையாலும் தொடமுடியாத அந்நிலையில்,
இறைவனை சாதாரண ஆன்மாக்கள் எய்துதல் அரிதாம்.
அதளால், தன் பெரும் கருணையினால்,
இறைவன் சொரூப நிலையினின்று இறங்கி,
சக்திக் கலப்பால்,
ஆன்மாக்கள் உணரத்தக்க தடத்தநிலையை எய்துகிறான்.
இத்தடத்தநிலையிலேயே இறைவன் வடிவம் கொள்வனாம்.
இத்தடத்தநிலையில் இறைவடிவம் மூன்றாகப் பேசப்படும்.
அதில் வடிவமற்ற நிலையான அருவநிலை ஒன்று,
வடிவத்தை வரையறை செய்யமுடியாத அருவுருவநிலை மற்றொன்று,
குறித்த வடிவம் கொண்ட உருவநிலை வேறொன்று.

✷✷

வேறுபட்ட இந்த அருவ, அருவுருவ, உருவ வடிவங்களையே,
இறைவனின் தடத்தநிலை என்கிறோம்.
இத்தடத்த நிலைகளில் ஒன்றான உருவமற்ற அருவநிலையினை,
இறைவனின் சொரூப நிலையாய்க் கருதி மயங்குவார் உளர்.
'உருவமற்ற வடிவு' எனும் கூற்று நம் அறிவால் விளங்கப்படுகிறது.
எனவே, அறிவால் விளங்கமுடியாத சொரூபநிலையும்,
இறைவனின் அருவநிலையும் ஒன்றன்று என்று உணர்தல் அவசியம்.

✷✷

இறைவனின் சொரூப, தடத்த நிலைக் கூறுகளை,
உலகெலாம் எனும் இப்பாடல் தெளிவுபட விளக்குகிறது.
அதனை அடுத்தவாரத்தில் காண்பாம்.

✷✷

                                                                                                       (சேக்கிழார் தொடர்ந்து வருவார்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்