உலகெலாம்......பகுதி 6 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

(சென்றவாரம்)
இறைவனின் சொரூப, தடத்த நிலைக் கூறுகளை, உலகெலாம் எனும் இப்பாடல் தெளிவுபட விளக்குகிறது.
அதனை அடுத்தவாரத்தில் காண்பாம். 

பாடலில் சொரூபநிலை

லகெலாம் எனும் இப்பாடலின் முதலடியில்,
இறைவன், உயிர்களால் ஓதி உணர்தற்கரியவன் எனும் கருத்து,
வலியுறுத்தப்படுகிறது.
உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்
இந்த முதலடியின் மூலம்,
வாக்கும் மனமும் கடந்து,
ஓதி உணரமுடியா இறைவனின் சொரூபநிலை,
தெளிவுபட நமக்கு உணர்த்தப்படுகிறது.

💎💎💎💎

பதி நிலைகளும்
நாற்பாதங்களும்

தடத்த நிலையில்,
அருவம், அருஉருவம், உருவம் எனும் மூன்று வடிவ நிலைகளை,
இறைவன் எய்துகிறான் என அறிந்தோம்.
இம்மூன்று நிலைகளில் உருவ நிலையே,
உயிர்கள் தொடக்கூடிய முதல் நிலையாம்.
உருவநிலையில் இறையை வழிபட்டு உயர்வடைந்தார்,
பின் அருவுருவநிலையில் இறைவனை உணர்கின்றனர்.
அருவுருவ வழிபாட்டின் முதிர்ச்சியில்,
அருவநிலையில் இறைவனைத் தரிசிக்கும் உயர்வு கிட்டுகிறது.
உருவநிலை வழிபாடே சரியை.
அருவுருவநிலை வழிபாடே கிரியை.
அருவநிலை வழிபாடே யோகம்.
இம்மூன்று வழிபாடுகளாலும் எய்தப்படும்,
‘அதுவே தானாகும் நிலையே’ ஞானமாம்.
இஞ்ஞானநிலையெய்திய ஞானியர்க்கு மட்டுமே,
இறையின் சொரூபநிலை அனுபவப்படும்.
அங்கும் அனுபவமன்றி அறிதல் இல்லையாம்.

💎💎💎💎

படிகளாய் அமையும் பாதங்கள்

சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும்,
இந்நான்கு வழிபாட்டு நிலைகளும்,
இறைநிலையை அடையும் நான்கு படிகளேயன்றி,
வெவ்வேறு பாதைகள் அன்றாம்.
இப்படிகளில்,
ஒன்றில் நின்று, மற்றதில் ஏறி உயர்வடைதலே உண்மைநிலையாம்.

💎💎💎💎

இறையோடு ஒன்றுதலாகிய ஞானம்,
இறைவழிபாட்டின் பயனன்றோ,
அஃதும் ஓர் வழிபாட்டு நிலையாகுமா?
கேள்வி பிறக்கும்.
ஒரு மாடி வீட்டின் மேற்தளத்தை,
கீழிருந்து படிகள் மூலம் எய்தும் போது,
கடைசிப் படியானது,
படியாகவும் எய்தும் தளமாகவும் அமைவதுபோல,
ஞானமார்க்கம்,
வழிபாட்டு முறையாகவும்,
எய்தப்படும் பேறாகவும் அமைவதை உணர்ந்துகொள்ள,
மேற் கேள்விக்கான விடை தானே அறியப்படும்.

💎💎💎💎

பாடலுள் சொரூபநிலை

இறைவன் கொள்ளும் தடத்தநிலைக்குள்,
சரியை, கிரியை, யோகம் எனும் மூன்று வழிபாட்டு முறைகளும்,
சொரூபநிலைக்குள்,
ஞானம் எனும் வழிபாட்டு முறையும் அடங்குகின்றன.
ஒன்றுதல் அன்றி உணரவும், ஓதவும் முடியா ஞானநிலையினையே,
உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன் என்னும்,
இப்பாடலின் முதல் அடி குறிப்பதை முன்னர் கண்டோம்.
இனி, சரியை, கிரியை, யோகம் எனும் மூன்று வழிபாட்டு நிலைகளையும்,
சேக்கிழார் தன் முதற்பாடலுள் அமைத்த அழகினைக் காண்பாம்.

💎💎💎💎


தோற்ற முறைமையும் எய்தும் முறைமையும்

உருவ, அருவுருவ, அருவ வழிபாட்டு நிலைகளானவை,
தோற்றமுறையில் மேலிருந்து கீழிறங்க,
அருவம், அருவுருவம், உருவம் என வகைப்படுத்தப்படும்.
ஆனால் ஆன்மாக்களால் எய்தப்படும் முறைமை நோக்கி,
உருவம், அருவுருவம், அருவம் என்றே வகைப்படுத்தப்படும்.
கீழ்நின்ற ஆன்மா முதல் நிலையில் உருவமாய் இறையைக் கண்டு,
பின் அவ்வழிபாட்டு நிலையில் முதிர்ச்சி பெற்று மேலேறி,
உருவ நிலைக்கும் அருவ நிலைக்கும் இடைப்பட்ட,
அருவுருவ நிலையில் இறையைத் தரிசிக்கும் தகுதி பெற்று,
நிறைவில் வடிவில்லா அருவநிலையில் இறைவனைக் காணும் நிலையுறுமாம்.
ஆன்மாக்களால் எய்தப்படும் இந்நிலைகள் நோக்கி,
உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் என்னும் இப்பாடலில்,
தொடரும் மூவடிகளும்,
இறைவனின் உருவ, அருவுருவ, அருவ நிலைகளை,
உணர்த்தி நிற்கின்றன.
பாடலுட்புகுந்து அவ்வுண்மை அறிவாம்.

💎💎💎💎

பாடலுள் உருவ, அருவுருவ, அருவநிலைகள்

நிலவுலாவிய நீர்மலி வேனியன் எனும் இரண்டாவது அடி,
நிலவையும், கங்கையையும் தலையில் சூடிய இறைவனது,
உருவ நிலையை உணர்த்துகிறது.
மூன்றாம் அடியில் வரும்,
அலகிற ; சோதியன் என்னும் தொடர்,
வரையறை செய்யப்படாத வடிவுகொண்ட இறைவனின்,
அருவுருவ நிலையை எடுத்துக்காட்டுகிறது.
அம்பலத்தாடுவான் எனும் தொடர்,
இறைவனின் அருவநிலையை உரைக்கிறது.

💎💎💎💎

அம்பலத்தாடுவான் அருவமே!

அம்பலத்தாடுவான் என்பது,
இறைவனின் உருவ வடிவமன்றோ? என ஐயம் எழலாம்.
அத்தொடரின் உட்சென்று ஆராய,
அஃது அருவத்தைக் குறித்து நிற்பதை நாம் அறியலாம்.
அம்பலத்தாடுவான் எனும் தொடரில் வரும்,
அம்பலம் என்னும் சொல்,
அருவ பூதவடிவான ஆகாயத்தினையும்,
ஆடுவான் என்னும் சொல்,
இறைவனின் அருவநிலைச் செயற்பாடான,
பஞ்சகிருத்திய நடனத்தையும் குறித்து,
இறைவனின் அருவநிலையையே உணர்த்தி நிற்கிறது.
ஆகாய பூத தளமாய்ச் சிதம்பரம் உரைக்கப்படுவதன்,
உண்மையும் இதுவேயாம்.

💎💎💎💎

உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன் எனும் முதலடியில்,
இறைவனது சொரூப நிலையினையும்,
நிலவுலாவிய நீர்மலிவேனியன்,
அலகிற்சோதியன்,
அம்பலத்தாடுவான்,
எனும் இரண்டாம், மூன்றாம் அடிகளில்,
உருவ, அருவுருவ, அருவ வடிவங்கள் அமைந்த,
இறைவனது தடத்த நிலையினையும்,
இப்பாடல் மறைமுகமாய் உணர்த்தி நிற்கும் உண்மை உணர்ந்து,
வியக்கிறோம் நாம்.

💎💎💎💎

வாழ்த்தி வணங்குதல்


மிகக் கீழ்ப்பட்ட ஆன்மாக்கள்,
இறைவனின் உருவநிலையை வழிபட்டே,
மேல்நிலைக்கு உயர்கின்றன.
எனவே, உருவநிலை வழிபாடே ஆன்மாக்களின் முதல் வழிபாடாம்.
இவ் உருவநிலையில், இறைவனை வழிபட முயலும் ஆன்மாக்கள்,
கீழிருந்து மெல்ல மெல்ல உயர்ந்து,
மேலிருக்கும் இறைவனைத் தொடமுயல்கின்றன.
அங்ஙனம், கீழிருக்கும் ஆன்மா,
மேலிருக்கும் ஆண்டவனைத் தொடமுயல்கையில்,
அதனால் தொடக்கூடிய இறைவனின் முதல் அவயவம்,
இறைவன் திருவடிகளேயாம்.

💎💎💎💎

ஆதலால், ஆன்மாவிற்கு,
இறைவனின் திருவடிகளே முதலில் அகப்படுகின்றன.
இறைவன் திருவடிகளை மனதால்த் தொட்ட ஆன்மா,
அவ்வெண்ணம் தந்த சிலிர்ப்பினால்,
இறைவனை வாயார வாழ்த்துகிறது.
பின் மெய்யாரக் கையார வணங்கத் தொடங்குகிறது.
மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால்,
இறைவன் திருவடியைப் பற்றி தொடங்கும் வணக்கமே,
இறைவனை அடைவதற்கான பாதையாம்.

💎💎💎💎

இப்பேருண்மையை பாடலின் இறுதி அடி வெளிப்படுத்தி நிற்கிறது.
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் எனும்,
இந்நான்காம் அடியில்,
மேற்சொன்ன பேருண்மைகள்,
பொருந்தியிருக்குமாற்றைக் கண்டு வியந்துநிற்கிறோம்.

💎💎💎💎


திரிகரண வழிபாடு

வாழ்த்துதல் நாவின் செயல்.
வணங்குதல் மெய்யின் செயல்.
நினைத்தலின்றி,
வாழ்த்துதலும் வணங்குதலும் இல்லையாம்.
இங்கு வாழ்த்துதலும் வணங்குதலும் சொல்லப்பட்டு,
நினைதல் குறிப்பால் உணர்த்தப்பட்டது.
ஆகவே, இறைவனை நினைந்து வாழ்த்தி வணங்க,
அவன் திருவடி தொடும் பேறும்,
திருவடி தொடும் பேற்றினால்,
உருவ, அருவுருவ, அருவ வழிபாட்டுநிலைகளை எய்தும் பேறும்,
அவ்வழிபாடுகளால் சொரூபநிலை இறையோடு ஒன்றும்பேறும்,
எய்தப்படும் பேருண்மை,
இம்முதற்பாடலில் பொதிந்து கிடந்து,
நம்மை வியப்படைய வைக்கிறது.

💎💎💎💎


(சேக்கிழார் தொடர்ந்து வருவார்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்