கன்னியாசுல்க்கம்: பகுதி 4 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

(சென்ற வாரம்)
இக்கருத்தும் உறுதிப்பொருள் தரும் கருத்தன்றாம். உளத்தே வஞ்சனையும், வன்மமுங் கொண்டு, புறத்தே சோகமும், துன்பமும் உற்றாற்போல் கிடக்கும் அவள்தன்னின் நிலைமையையும், நாடக மயில் எனும் தொடர் குறிக்குமன்றோ? இங்கும் பின்னுரைத்த பொருளே பெரிதும் பொருத்தம் கொள்கிறது. கைகேயியை உயர்நோக்கங் கொண்டவளாய்க் கருதி, மேற்பெரியோர்கள் முன்னுரைத்த பொருள் நிஜமாயின், அதே பாடலில், அவ்வுயர் நோக்கங்கொண்ட கைகேயியை, கம்பன் இலட்சுமியின் தமக்கையான மூதேவியாய்க் குறிப்பனோ? (தவ்வை-தமக்கை-மூதேவி) இக்கேள்விக்கு விடை காணின், உண்மை தானே புலனாகும்.

🍁🍁🍁🍁
யர் கம்பனின் ஆழ்ந்திருக்கும் உளம் அறியாது,
'கன்னியாசுல்க்கக்' கருத்தைத் தம் விருப்பப்படி,
விரித்துரைத்த அப்பெரியோர்கள்,
கம்பனுள் 'கன்னியாசுல்க்கக்' கருத்தைக் காணமுயன்று,
முன்வைத்த வாதங்களின் பொருத்தப்பாடின்மையை அறிந்தோம்.
அவர்தம் வாதங்களுக்குப் பதிலாய் அமைந்த,
மேலுரைக்கப்பட்ட எனது வாதங்கள்,
ஊக அடிப்படையால் உரைக்கப்பட்டவை.
உரைக்கப்பட்ட அவ் ஊகங்களை உண்மைகளாக்கும் நிரூபணங்களை,
இனிக் காண்பாம். 

🍁🍁🍁🍁

அனுமானப் பிரமாணமாகவும்,
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கருத்துப் பிரமாணமாகவும் அமையும்,
அவ்வுண்மைகள் பின்வருமாறு:

✶✶✶

மேற்பெரியோர்கள்,
'கன்னியாசுல்க்க' வாக்களித்து,
அவ்வாக்கை மீற நினைக்கும் தசரதனை பழியினின்றும் காக்கவே,
வரம் வேண்டி நலம் செய்தாள் கைகேயி என வாதிடுவர்.
அவ்வாதம் உண்மையாயின்,
இராமன் முடிசூட்டுகிறான் எனச் செய்தி கேட்டதும்,
கைகேயி மகிழ்ந்தாள் எனக் கம்பன் பாடும் கருத்துக்கு,
அவர் என்ன பதிலுரைப்பர்?

'மாற்றம் அஃது உரைசெய, மங்கை உள்ளமும்
ஆற்றல் சால் கோசலை அறிவும் ஒத்தவால்'

'ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ
தேய்வுஇலா முக மதி விளங்கித் தேசுற
தூயவள் உவகை போய்மிகச் சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள்.'

ஒருவேளை இராமன்மேலே கொண்ட இயல்பான அன்பால்,
கைகேயி மனம் உடன் மகிழ்ந்து பின் மாறிற்று என,
இக்கருத்துக்கு அவர்கள் மாற்றம் உரைக்கினும்,
அஃதும் பொருந்தாதாம்.

🍁🍁🍁🍁

இராமன் முடிசூட்டுதல் ஆகாது, பரதனே முடிசூட்ட வேண்டும்,
எனும் கருத்தை முன்வைத்து,
கூனி நீண்ட நேர
அக்கருத்துக்கு உடன்படுத்துகிறாள்.
ஆதலால், கைகேயி தசரதன் நலங்காக்க நினைந்து,ம் வாதிட்டே கைகேயியை,
வரம் வேண்டியதாய் உரைப்பது,
கூனி கைகேயி உரையாடல் தரும் அனுமானத்தால் தவறாகிறது.
தசரதனின் நலம் காக்கக் கைகேயி வரம் வேண்டியதாய்க் கூறும் மேற்பெரியோர்கள்,
கம்பகாவியத்தின் இப்பகுதியை தம் வசதிகருதி மறந்தனர் போலும்.

🍁🍁🍁🍁

இவர்தம் கருத்து, தவறானது என்பதற்கு,
அனுமானப் பிரமாணமாக அமைந்த, 
மிக வலிமையான ஒரு வாதம் உண்டு.
கைகேயியின் நலங்களைப் பேணவென,
கேகயத்திலிருந்து வந்தவள் கூனி.
அவள், இராமன் முடிசூட்டுவதைத் தடுக்க நினைக்கிறாள்.
அதுநோக்கிக் கைகேயியை மனமாற்ற முனைகிறாள்.
தூயளான கைகேயி விதியுந்தத் தீயளாகி,
அக்கூனியிடமே,
இராமனின் முடிசூட்டுவிழாவைத் தடுப்பதற்காம் உபாயம் கேட்கிறாள்.
இவ்விடத்திற் கூனி,
சம்பர யுத்தத்தில் தசரதன் தந்த இருவரங்களை இப்போது கேள்! என,
ஆலோசனை சொல்கிறாள்.
இது கம்பகாதையுள் காணப்படும் செய்தி.

🍁🍁🍁🍁

மேற்பெரியோரின் 'கன்னியாசுல்க்கக்' கருத்து நிஜமாயின்,
கூனி அங்ஙனம் சொல்ல வேண்டிய காரணம் யாது?
'கன்னியாசுல்க்க'மாய் அளிக்கப்பட்ட வாக்கு இருந்திருப்பின்,
அதனையே கேள்! என கூனி சொல்லியிருக்கலாம் அன்றோ!
'கன்னியாசுல்க்கம்' பலரும் அறியச் செய்யப்படுவது.
அதனால் அச்செய்தி கூனிக்குத் தெரியாமற் போயிற்று என்று,
உரைத்தற்கும் வாய்ப்பில்லை.
அங்ஙனம் கூனி அச்செய்தியை அறிந்திலளேனும்,
கைகேயிதானும் அக்கருத்தை உரையாதது ஏன்? 
விடைகாண வழியின்றி கேள்விகள் விஸ்வரூபம் எடுக்கின்றன.

🍁🍁🍁🍁

எனவே கூனி, சம்பரயுத்த கால வரம் கேள் எனக் கூறியதும்,
கைகேயி அதனை ஏற்றதுமான விடயங்களே,
'கன்னியாசுல்க்கக்' கருத்தை மறுப்பதற்கு,
போதிய சான்றுகளாய் அமைந்த அனுமானப் பிரமாணங்களாம். 

🍁🍁🍁🍁

வான்மீகத்தில் கைகேயி,
தசரதனின் மூன்றாம் பட்டத்தரசியாய்ச் சொல்லப்படுகிறாள்.
மூலநூலின் 'கன்னியாசுல்க்கக்' கருத்தை ஏற்க விரும்பாத கம்பன்,
மூலநூற் கருத்துடன் மாறுபட்டு,
கைகேயியைத் தசரதனின் இரண்டாம் மனைவியாக்குகிறான்.
கம்பனின் இம்மாற்றம்,
'கன்னியாசுல்க்கக்' கருத்தை மறுப்பதற்காம்,
வேறோர் வாய்ப்பையும் தருகிறது. 

🍁🍁🍁🍁

வான்மீகத்தில்,
கோசலைக்கும் சுமித்திரைக்கும் மகப்பேறு இல்லாத காரணத்தாலேயே,
கைகேயியைத் தசரதன் திருமணம் செய்கிறான்.
அந்நிலையில் கைகேயி வயிற்றிற் பிறக்கும் குழந்தைக்கு,
இராஜ்ஜியபாரத்தைத் தருவதாய்த், தசரதன் அளித்த வாக்கு,
தொடர்ந்து நிலைப்பதில் தவறில்லை.
கம்பனிலோ கைகேயி பட்டத்தரசிகளில் நடுவளாகிறாள்.
கோசலைக்கு மகப்பேறு இல்லாத காரணத்தால்,
மகப்பேறு வேண்டி, நடுவளான கைகேயியைத் திருமணம் செய்யும்போது,
தசரதன் 'கன்னியாசுல்க்கமாய்' அவள் சந்ததிக்கு,
இராஜ்ஜியபாரத்தைக் கொடுத்து,
பின் அவளுக்கும் மகப்பேறு இல்லாது போக,
மீண்டும் மகப்பேறுக்காய், 
மூன்றாம் பட்டமகிஷியான சுமித்திரையைத் திருமணம் செய்திருப்பின்,
கைகேயிக்கு அவன் அளித்த 'கன்னியாசுல்க்க' வரம் 
தொடர்ந்து நிலைக்கும் தகுதியை இழக்கிறது.
அக்கருத்தைக் கொணரத்தான் கம்பன்,
கைகேயியை வான்மீகத்தினின்றும் மாறுபட்டு,
இரண்டாம் பட்டமகிஷியாக்கினான் போலும்.

🍁🍁🍁🍁

இனி, பிரமாணங்களில் உயர்ந்ததாய்க் கருதப்படும்,
ஆகமப் பிரமாண அடிப்படையில் இவ் வாதத்தை ஆராயலாம்.
ஒரு காவியத்தின் பாத்திரங்களை உணர்ந்து அமைப்பவன்,
அந்தக் காவியப் புலவனேயாவான்.
ஆதலால், அவன் படைத்த பாத்திரங்கள் பற்றி,
அக் காவியப் புலவன் தரும் கருத்தாய் அமையும் கவிக்கூற்றுகளே,
அப் பாத்திரங்களின் உண்மைநிலையை உணர்த்தும் ஆகமப் பிரமாணங்களாம்.
அதனடிப்படையில் ஆராய,
'கன்னியாசுல்க்கம்' பற்றிய மேற்பெரியாரின் கருத்து,
கானல்நீராய்க் கலைவதைக் காணமுடிகிறது.

🍁🍁🍁🍁

கைகேயியின் உயர்வுணர்த்த,
தசரதனைக் கீழ்மை செய்யும் இப் பெரியோர்கள்,
தசரதன் பற்றிய கவிக்கூற்றுகளை நினைந்தாரல்லர்.
'வாய்மை மன்னன்,'
'பொய்ச்சொல் கேளா வாய்மொழி மன்னன்,'
'மனித வடிவங்கொண்ட மனு' என, 
பலவிடங்களில் தன் கூற்றாகவும், 
'பெருந்தகைமைத் தசரதன்'
'நிறைகுணத்துத் தசரதன்'
'மெய்யின் மெய்'
'தருமத்திற்கு உறுதி பார்ப்பான்'
'தனி அறத்தின் நாயகன்'
'மானமும் குலமும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்'

என்றெல்லாம் 
பாத்திரங்களின் கூற்றுகளாகவும்,
பலவாறாய்த் தசரதன் பெருமை கம்பனால் எடுத்துரைக்கப்படுகிறது.

🍁🍁🍁🍁

தசரதனின் அறநிலைப்பட்ட உயர்வை,
இவ்வாறெல்லாம் காவியப் புலவனே எடுத்துரைக்க,
அவ்வுண்மையை மறுத்து,
வலிந்து தம் 'கன்னியாசுல்க்கக்' கருத்துரைத்து,
வஞ்சகனாய்த் தசரதனைக் காணவிழையும்,
அக்கற்றார்தம் மனக்கருத்து,
திரிபன்றித் தெளிவாமோ?

🍁🍁🍁🍁

அதுபோலவே,
தசரதன்தன் குலகுருவாம் வசிட்டமாமுனி,
புலன் கடந்த புண்ணியன்
முன்னே முடிவெலாம் உணர்ந்தான்
முற்றுணர் முனிவன் 

என்றெல்லாம் கம்பனால் புகழப்படுகிறான்.
அத்தகைய வசிட்டர் தலைமையேற்ற அவையில்,
இராமனுக்கு முடிசூட்டும் கருத்தை முன்வைத்து,
அது பற்றி ஆலோசனை கேட்கிறான் தசரதன்.
அப்போது வசிட்டமாமுனி,
கருமமும் இது கற்று உணர்ந்தோய்க்கு இனிக் கடவ
தர்மமும் இது தக்கவே உரைத்தனை தகவோய்
என்கின்றார்.

🍁🍁🍁🍁

இப்பாடலில்,
தசரதனை விளிக்கையில் வசிட்டர் கையாளும்,
கற்று உணர்ந்தோய்க்கு எனும்,
தொடர் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது.
கற்றதோடு மட்டுமல்லாமல் கற்றவற்றை உணர்ந்தவனாகவும்,
தசரதன், வசிட்டரால் குறிப்பிடப்படுகிறான்.
இங்கும் வசிட்டரின் வாக்குமூலத்தால் தசரதன் உயர்வு பதிவாகிறது. 

🍁🍁🍁🍁

இப்பாடல் மூலம்,
ஞானமுனியாகிய வசிட்டரும்,
இராமனுக்கு ஆட்சி நல்கும் விடயத்தில்,
முழு ஒருமைப்பாடு கொண்டமை வெளிப்படுகிறது. 
'கன்னியாசுல்க்க' வரம் வழங்கப்பட்டிருக்குமேல்,
குலகுருவான வசிட்ட முனிவர்,
தசரதன் தவறுணர்த்தித் தடுத்திருப்பார் அன்றோ?
ஆனால், வசிட்டரோ தசரதன் கருத்தேற்று,
உனக்குரிய கருமமும், தருமமும் இதுவே என்கிறார்.
ஆதலால், ஆகமப் பிரமாணமாகக் கொள்ளக்கூடிய 
வசிட்டரின் வாக்கினாலும்,
இராம பட்டாபிஷேகக் கருத்து அங்கீகரிக்கப்படுதலால்,
'கன்னியாசுல்க்கக்' கருத்து நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று என்பது,
வெட்ட வெளிச்சமாகிறது.

🍁🍁🍁🍁

இவ்வடிப்படைகள் கொண்டுநோக்க,
'கன்னியாசுல்க்கக்' கருத்தைக் கம்பனில் பதிக்க நினைக்கும்,
அக்கற்றோர்தம் கருத்து முற்றும் நிராகரிக்கப்பட வேண்டியதன் ,
உண்மை புலனாகிறது.
கைகேயியை உயர்த்த நினைந்து,
புதுமை காணமுயன்ற இப்பெரியோர்கள்,
கவிஞன் மனநோக்கிற்கெதிராய்,
அவளை உயர்த்த முனைந்ததோடல்லாமல்,
அவள் உயர்ச்சிக்காய், தசரதனைத் தாழ்த்தவும் தலைப்பட்டனர்.

🍁🍁🍁🍁

ஆழ்ந்து ஆராய,
அவர் முன்வைத்த ஆதாரக் கருத்துகள், ஐயக்கருத்துக்களாகி,
பின் திரிபாய் முற்றுப் பெறுவது தெளிவாகின்றது.
அதுமட்டுமன்றி இக்கட்டுரையின் முடிவில் வைக்கப்பட்ட கேள்விகள்,
அவர்தம் கருத்தை நிராகரிக்கவும் வழி சமைக்கின்றன. 
கைகேயியை நல்லவளாகவும், தசரதனைத் தீயனாகவும் காட்ட நினையும்,
கவிஞன்தன் கருத்துக்கு முரணான இவர்தம் இவ்வீண் முயற்சி,
காவியம் முழுமையுணர்ந்த கற்றோர்க்கு,
வேம்பாய்க் கசப்பதில் வியப்பென்ன?

🍁🍁🍁🍁
(கன்னியாசுல்க்கம் முற்றுப்பெற்றது)
இக்கட்டுரை பேரறிஞர் அமரர் பேராசிரியர் த.சோமசுந்தர பாரதியாரால் எழுதப்பட்ட கைகேயியின் நிறையும் தசரதனின் குறையும் எனும் நூற்கருத்தை மறுத்து எழுதப்பட்ட கட்டுரையாகும்

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்