கோரோனா வந்த கதைகூறு! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகம் அழிக்கவென ஒரு கிருமி வந்ததனால்
நிலமுழுதும் பதறிற்றாம் நெளிந்து!

வாரானா என ஏங்கி வரவேற்ற சீனர்களால்
கோரோனா வந்த கதைகூறு!

விஞ்ஞானம் இருக்கையிலே வேறென்ன பயமென்றோர்
மெஞ்ஞானம் தேடுகிறார் மெலிந்து!

ஆகாயம் தொட்டு அதற்கப்பால் சென்றவர்கள்
சாகாத வழிதேடிச் சரிந்தார்!

பொல்லாத நோய்க்கிருமி பொங்கிவர உலகதனில்
எல்லோரும் நடுங்குகிறார் ஏங்கி!

போரென்று உலகழிக்கப் புறப்பட்டோர் தமையெல்லாம்
வேரறுக்க வந்ததுவாம் வினை!

இயற்கையதை வென்றதுவாய் எக்காளம் போட்டவர்கள்
மயங்குகிறார் வைரஸால் மருண்டு!

விதியென்ன விதியென்று வீறுரைத்த அறிஞரெலாம்
மதி கலங்க மருளுகிறார் மயங்கி!

வல்லரசுத் திமிராலே வாழும் உலகழித்தோர்
துள்ளுகிற கிருமியதால் தொலைந்தார்!

பாம்பா, வெளவாலா பாழ்க்கிருமி தந்ததென
நாள்தோறும் ஆய்கின்றார் நலிந்து!

கைநீட்டிக் குலுக்குதலே கச்சிதமாம் என்றுரைத்தார்
கைகூப்பி வணங்குகிறார் கலங்கி!

சாகவழி திறக்கையிலே சற்றேனும் அறிவின்றி
மா வாங்கி ஒளிக்கின்றார் மடையர்!

தாய் மண்ணில் மரணமெனத் தலைதெறிக்க ஓடியவர்
நோய் பிடிக்க வருவாரோ நுழைந்து!

சத்தான தாய்மண்ணை சபித்தேதான் ஓடியவர்
இத்தாலி வீட்டுக்குள் இருந்தார்!

ஊரடங்குச் சட்டமது உதவாதென்றோடியவர்
நாரெனவே வீட்டிருந்து நலிந்தார்!

சிங்களவர், தமிழரெனச் சீறிப் பகை வளர்த்தோர்
மங்குகிற கிருமியதால் மருண்டார்!

மக்கள், உயிர்க்கு மரணமெனப் பதறுகையில்
இக்கணமும் தேர்தல்தான்  இவர்க்கு!

மாளப்பயந்து மக்களெலாம் மருளுகையில்
ஆளத்துடிக்கின்றார் அசடர்!

வீடா, சைக்கிள்ளா வெற்றிபெறும்? உலகழிய
ஆடுகிறார் நம் தலைவர் அலைந்து!

மாறாத நோயதுஎம் மண்ணைத் துளைத்திடுமோ?
ஆரறிவார் ஆண்டவனே காப்பு!

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்