தரமிகுந்த மாமனிதன் தரணி நீத்தான்! - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகமெலாம் புகழ்க் கொடியை நாட்டி வென்ற
    ஒப்பற்ற நகரத்தார் மரபில் வந்தோன் 
திலகமென ஈழமதில் திகழ்ந்து நின்று 
   திக்கெட்டும் தன்பெருமை அறத்தால் சேர்த்தோன்
நலமுடனே மக்களெலாம் நலிவு நீங்கி 
  நயம்பெறவே வாழ்வதற்கு வழிகள் செய்தோன்
விலையதிலாப் பெருமனிதன் விண்ணைச் சார்ந்தான்
  விம்மித்தான் தமிழரினம் கலங்கிற்றம்மா!

அறப் பணிகள் பல செய்தான் அன்பால் நல்ல
  ஆலயங்கள் பல அமைத்து ஆண்டு நின்றான்
திறமுறவே கற்றோர்கள் கூடும் நல்ல 
  தேற்றமுறும் சபைகளிலே திகழ்ந்து நின்றான்
வருநிதியம் பிறர்க்காற்றி வளங்கள் சேர்த்து
  வாழ்க! எனப் பல்லோரும் வாழ்த்த நின்றான்
தரமிகுந்த மாமனிதன் தரணி நீங்க 
  தனித்தேதான் போயிற்றாம் தருமம் அம்மா

அப்பிரமன் படைப்பினிலே ஆற்றல் சேர்த்து
  அகிலமெலாம் ஆண்டிருந்த அரிய செல்வர்
சுப்பிரமணியச் செட்டி ஐயன் எங்கள் 
  சோர்வகற்றும் பெருமனிதன் கழகம் தன்னை 
எப்பொழுதும் தன் வீடாய்க் கருதி எங்கள் 
   ஏற்றத்தில் மனமகிழும் ஏந்தல் கம்பன்
தப்பதிலாக் கவி சுவைத்துத் தமிழை மாந்தி
   தரமாகச் சபை நிறைக்கும் பெரிய வள்ளல்

கம்பனடிப் பொடியவரின் மரபில் வந்த 
  காரணத்தால் கம்பனைத்தன் உயிராய் போற்றும்
நம் பெரிய தூண் சரிய நலிந்து நின்றோம்
  நல் உலகில் இவர்போல எவர்தான் வாய்ப்பார்?
எம்கழக முயற்சிகளை இணைந்து நின்று
   ஏற்றமுறச் செய்தமகன் எம்மைத் தாங்கித்
தம்முடைய  பிள்ளைகளாய்த் தயவு செய்த 
  தரமிகுந்த பெரியவனை இழந்து போனோம்

வெல்முருகன் வேலெடுத்து விழவு கண்டு 
  வெற்றிகளைக் கூட்டித்தான் ஆடி தன்னில்
நல்லபெரும் பவனியதால் உலகை ஈர்த்து
  நற்தலைவர் பலர் வந்து வணங்க நின்றோன்
தெள்ளுதமிழ்க் காதலனாய்த் திகழும் ஐயன்
  தேற்றமுறும் சிரிப்பாலே தெளிவு செய்வோன்
வள்ளலவன் உலகதனைக் கடந்தான் ஈழம்
   வாய்திறந்து அரற்றித்தான் வாடிற்றம்மா!

கம்பனது பெருமையுமே ஈழந்தன்னில் 
  கால்கொள்ளும்வரை உந்தன் புகழும் நிற்கும்
எம்கழக இளையோர்தம் இதயம் தன்னில்
  எப்போதும் உன் வடிவம் இணைந்து நிற்கும்
நம் பெரிய கம்பனது விழவிலெல்லாம்
  நயத்தோடு உன் நினைவு பதிந்து நிற்கும்
தம்முடைய திருவடிகள் போற்றித்தானே
  தயவுடனே கம்பனது கழகம் நிற்கும்

                    🔔 🔔 🔔 🔔

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்