உள்ளமதில் ஒளிவடிவாய் ஓங்கும் கந்தன்
உயர்நல்லைப் பதியதனில் உவந்து நின்றான்
வெள்ளமெனப் பக்தர்களும் விரும்பிச் சூழ
வேல்வடிவாய் நின்றவனும் வினைகள் தீர்த்தான்
தள்ளரிய பெரு நீதி வடிவாய் நின்று
தரணியெலாம் தன்குடைக்கீழ் காத்து நின்றான்
வெள்ளி மயில் தனில் ஏறி அன்பர் எல்லாம்
'வேல்முருகா!' என அழைக்க விரும்பி வந்தான்
வல்லார்கள் தம் வினையால் உலகம் வாட
வற்றாத பூதங்கள் நலிவே கொள்ள
பொல்லாத நோய் வந்து புவியை யெல்லாம்
புரட்டியதாம் இந்நிலையில் கூடக் கந்தன்
நல்லோர்கள் தமைக் காக்க நலிவை நீக்க
நங்கையர்கள் இருபுறமும் துணையாய் நிற்க
எல்லோரும் கண்குளிர எழிலே பொங்க
ஏறினனாம் மயில்மீது இகத்தைக் காக்க!
கூட்டமது குவிகின்ற கந்தன் கோயில்
'கொரொனாவால்' அச்சமது குவியக்கண்டும்
நாட்டமதைச் சிறிதேனும் நீக்கா அன்பர்
நல்லையிலே கூடுவதை என்னே சொல்ல?
வீட்டு வரம் தருகின்ற கந்தன் தாள்கள்
விரும்புகிற வரமதுவும் சேர்த்து நல்கும்.
ஆட்டுகிற துயர் நீக்கி அருளக் கண்டு
யார் விடுவார் கந்தனது தாள்கள் தன்னை
மலை பிளந்து அருள் பொழிந்த கந்தன் வேலும்
மாண்பாக மரம் பிளந்து சூரன் தன்னை
நலம் பெறவே சேவலொடு மயிலாய் மாற்றி
நானிலமும் அதிசயித்து வணங்கச்செய்யும்
குலம் செழிக்க வேலோடு குமரன் தானும்
குறுநகையே செய்தெம்மை ஈர்த்து நிற்பான்
நலம் மிகுந்த நல்லூரை அன்பரெல்லாம்
நாடுவது அதிசயமா? நயமே கண்டீர்!
எழுகுதிரை இனிய பெரும் வெள்ளி ஆடு
இவற்றோடு சப்பறமும் மஞ்சந் தானும்
பழுததிலா கயிலாய ரதமும் கண்டு
பரவசத்தில் அன்பரெலாம் மூழ்கி நிற்பர்
பளபளக்கக் கந்தனது தேர்தான் வந்தால்
பக்தி அதன் எல்லைதனைத் தொடுவார் அன்பர்
நிலையதிலா வாழ்வுதனை உணர்த்தும் அந்த
நிமிர் வேலின் பெருமைதனை என்ன சொல்ல?
மாம்பழத்துப் போட்டியிலே மயிலிலேறி
மனம் மகிழக் கந்தனவன் விண்ணில் செல்ல
ஓம்வடிவாய் நின்ற கண பதியார் தானும்
உயர் தந்தை தாயரையே சுற்றி வந்து
தாம் பழத்தைப் பெற்றதனால் தனித்தே சென்று
தண்டோடு பழனியிலே நின்ற கோலம்
மாம்பழத்து விழவதனில் கண்டு அன்பர்
மகிழுகிற காட்சியதும் மனதை ஈர்க்கும்.
ஓங்காரப் பொருள் கேட்டு உலகை ஆக்கும்
உயர் பிரமன் தனைச் சிறையில் வைத்த ஐயன்
பாங்காக பொருள் கேட்ட சிவனார்தம்மை
பணிவித்துப் பொருளுரைத்து புகழும் கொண்டோன்
நீங்காது அன்பர்களின் நெஞ்சில் தானாய்
நின்றருளைப் பொழிகின்ற நிமிர்;ந்த வேலோன்
தாங்காதல் கொள்வார்க்குத் தரணி தன்னில்
தள்ளரிய பெரு வாழ்வைத் தந்து நிற்பான்.
பச்சைதனைச் சாத்தி அவன் தேரில் நின்றும்
பளபளக்க இறங்குகையில் பார்த்தார் கண்ணில்
நிச்சயமாய் அருவியெனக் கண்ணீர் பொங்கும்
நெஞ்சமெலாம் பக்தியது நிரம்பித் தங்கும்
விச்சையதை தன் வேலில் விளக்கிக் காட்டும்
வேலனவனின் திருநாமம் மனத்தில் வைத்து
உச்சரித்து ஓம் முருகா என்று சொல்ல
ஓடி வரும் நல்லூரான் கருணை என்னே?
தலைமுறையாய்க் கந்தனவன் கோயில் தன்னை
தக்கபடி நிருவகித்து புகழே கொண்டோர்
மலையளவாய்ப் புகழ் வளர்த்தும் மனத்துள் என்றும்
மமதையினைக் கொள்ளாத அரிய அன்பர்
விலையதிலாப் பெருமைதனை கோயில்க்காக்கி
விலகி அதில் ஒட்டாது விளங்கி நிற்கும்
பலர் புகழும் எஜமானர் புகழாம் தன்னை
பாரெல்லம் மனமுருகிப் போற்றி நிற்கும்.
