சிவராமலிங்கம் என்றொரு மானுடன்: பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

 
(சென்றவாரம்)
மாலையில் நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. காலையில் மாஸ்டர் எனக்குச் சொன்ன, 'முன்னுக்கு இருக்கிறவர்களையெல்லாம் முட்டாளாய் நினைத்துக்கொண்டு பேசு' என்ற ஆலோசனையை மனத்துள் உருப்போட்டுக்கொண்டு, கண்மூடிக் கடவுளைப் பிரார்த்தித்து கண்களைத் திறக்கிறேன். முன்வரிசையில் சிவராமலிங்கம் மாஸ்டரே உட்கார்ந்திருக்கிறார். என் அறிவு கலங்கிப்போயிற்று.அன்று எனது பேச்சைக் கேட்டு அவருக்கு அவ்வளவு ஆனந்தம்.
'இவன் ஆரடா ஒருத்தன்? 'ஹிண்டுக் கொலிஜுக்கு' வந்து அம்பிட்டிருக்கிறான்' என்று,
மற்றவர்களிடம் சொல்லி அவர் ஆனந்தப்பட்டதாய் அறிந்து மகிழ்ந்தேன்.
அதற்குப் பிறகும் கண்டால், முகம் தெரிந்து சிரிக்குமளவிலேயே,
அவருக்கும் எனக்குமான தொடர்பு நீண்டது.
அந்த ஆண்டு, மாகாண அளவில் நடந்த பேச்சுப் போட்டிக்காக,
நான் பேசப்போனபோது மாஸ்டருடனான அடுத்த சந்திப்பு நடந்தது.

   


மாஸ்டர்தான் நடுவராக இருந்தார்.
உடன் தரப்படும் தலைப்பில் பேச வேண்டும்.
ஆலயங்களில் பேசிவந்த முன்னனுபவத்தாலும்,
உயர்ந்தோர்களது நூல்கள் பலவற்றை வாசித்த அனுபவத்தாலும்,
அக்காலப் பெரும் பேச்சாளர்களின் பேச்சுக்களைக் கேட்ட அனுபவத்தாலும்,
எனக்குத் தரப்பட்ட இலக்கியத் தலைப்பில்,
அன்று நல்லபடி பேசினேன்.
நான் பேசத் தொடங்கியதும் கண்களை மூடிக்கொண்ட மாஸ்டர்,
பேசி முடிந்ததுந்தான் கண்களைத் திறந்தார்.
அவர் கண்கள் கலங்கியிருந்தன.
என்னைப் பாராட்டுவார் என எதிர்பார்த்தேன்.
ஒன்றும் பேசவில்லை.
நான் சென்றபிறகு மற்றவர்களிடம்,
'கண்ணை மூடிக்கொண்டு கேட்க, கி.வா.ஜ. பேசியதுபோல் இருந்தது.
இவன், கல்லூரிக்குப் பேர் தேடித் தருவான்' என்று,
மகிழ்ந்து சொன்னாராம்.
இவற்றை என்பெருமைக்காக நான் சொல்லவில்லை.
அந்த நல்லவரின் வாக்கின் வலிமையை உணர்த்துவதற்காகவே சொல்கிறேன்.
அதற்குப் பிறகுதான் மாஸ்டரோடு நான் நெருங்க முடிந்தது.

   

தமிழ் படித்தவர்கள் பெரும்பாலும்,
கற்பனையிலேயே தம் காலத்தைத் தள்ளுவார்கள்.
யதார்த்தத்தை என்றைக்குமே தொடமாட்டார்கள்.
ஆனால், மாஸ்டர் அந்த வரைவிலக்கணத்துக்கு உட்படாமல் இருந்தார்.
தமிழிலும், சைவத்திலும் அவர் வைத்திருந்த பற்றுதலுக்கு அளவேயில்லை.
ஆனால், என்றைக்குமே அதை மிகைப்படுத்தி அவர் காட்டமாட்டார்.
சைவத்தைத் தான்தான் காப்பாற்றுவதாய் நினைக்கமாட்டார்.
அவரின் அந்த இயல்புணர்த்த சுவாரஸ்சியமான ஒரு சம்பவம் சொல்கிறேன்.

   

நாங்கள் உயர்தர வகுப்பு படித்தபோது,
விஞ்ஞான மாணவர் ஒன்றியம் என்ற ஒன்று இயங்கி வந்தது.
ஒருநாள், அந்த ஒன்றியத்தினர்,
எங்களுடைய பிரார்த்தனை மண்டபத்தில்,
ஓர் ஆங்கிலச் சினிமாப்படத்தைக் காட்ட ஒழுங்கு செய்திருந்தனர்.
பிரார்த்தனை மண்டபத்தில் சுவாமி வைத்திருந்த பெரிய பீடத்தின் முகப்பில்,
ஓர் திரையைக்கட்டி (அப்போதெல்லாம் ரீ.வீ. வந்திருக்கவில்லை),
அதிற்தான், அவர்கள் படம் காட்டினர்.
அந்த ஆங்கிலப்படத்தில்,
ஒரு படுக்கையறைக் காட்சியும் வந்தது.
தமிழ், சமயம் என்று திரிந்த எங்களில் சிலபேருக்குக் கடுங்கோபம்.
எங்களின் சமயப்பற்றைக் காட்ட,
நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததாய் நினைந்தோம்.
'சாமிப்பீடத்தின் முன் திரை கட்டி,
படுக்கையறைக் காட்சிகளை எப்படிப்போடலாம்?' என,
அந்த ஒன்றிய மாணவர்களுடன் கடுமையாய்ச் சண்டை பிடித்தோம்.
சண்டை முற்றியதும்,
பிரச்சினையை மாஸ்டரிடம் கொண்டு சென்றோம்.

   

விசயம் தெரிந்ததும், மாஸ்டர், கடுமையாகக் கோபிப்பார்,
அந்த ஒன்றியத்தினரைத் திட்டுவார் என்று,
எதிர்பார்த்துப் போன எங்களுக்குப் பெருத்த ஏமாற்றம்.
விசயத்தைக் கேட்டபிறகு, மாஸ்டர் வாய்விட்டுச் சிரித்தார்.
பிறகு, அந்த ஒன்றிய மாணவர்களை,
'சரி சரி, நீங்கள் போங்கடாப்பா!' என்று சாதாரணமாக அனுப்பி வைத்தார்.
எங்களுக்கோ கோபமான கோபம்.
அந்த மாணவர்கள் போனபிறகு,
'எப்படி அவர்களை நீங்கள் ஒன்றும் சொல்லாமல் விடலாம்?
அவர்கள் செய்தது சரியான வேலையா?
சாமிக்கு முன்னால் திரைகட்டி,
இப்படிப்பட்ட படங்களைப் போடலாமா?' என்று,
உரத்துப்பேசி எங்கள் கோபத்தை வெளிப்படுத்தினோம்.
மாஸ்டரின் முகத்தில் சிரிப்பு மாறவேயில்லை.

   

'டேய்! டேய்! இதையெல்லாம் பெரிசு படுத்தாதீங்கடாப்பா!
இந்த வயசில இப்பிடிப் படம் பாக்க பொடியளுக்கு விருப்பமாத்தான் இருக்கும்.
ஒன்றை வடிவா விளங்குங்கோ!
கடவுளை யாராலயும் மாசுபடுத்த முடியாது.
இப்பிடிச் சின்ன விசயங்களப் பெரிசுபடுத்தினால்,
பெடியளுக்கு சமயத்திலதான் வெறுப்பு வரும்' என்று சொல்லிவிட்டு,
'சரி சரி, அந்தப் படம் ஓடேக்க, நீங்களும் எல்லாம் பாத்துக்கொண்டு இருந்தனீங்கள்தானே!
அப்ப ஏன் அந்தப் படத்த நிப்பாட்டேல?' என்று கேட்டுப் பெரிதாய்ச் சிரித்தார்.
மற்றவர்கள் என்ன நினைத்தார்களோ,
என்னைப் பொறுத்தவரை,
அன்று, எனது அறிவை மூடிப் போர்த்திருந்த,
பொய்ச்சட்டை ஒன்று கழன்றுபோனதுமட்டும் சத்தியமான உண்மை.

   

மேற்சம்பவத்தைப் படித்ததும்,
'மாஸ்டர், பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்காமல்,
எல்லாவற்றையும் சமாளிப்பவர்' என்று ஒருவேளை நீங்கள் நினைத்திருப்பீர்கள்.
ஆனால், அது தவறு.
பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதில் அவரது ஆளுமை ஆச்சரியமானது.
ஒருமுறை யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும்,
அப் பல்கலைக்கழகம் அமைந்திருந்த,
திருநெல்வேலி ஊராருக்கும் இடையே பெரும்மோதல் வெடித்தது.
ஒரு மாணவன் கத்திக்குத்துக்கு ஆளாகும் அளவிற்கு அம்மோதல் வளர்ந்தது.
மாணவர்களைப் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேவராதவாறு,
ஊரார் சிறைவைத்தனர்.
மிகப் பதற்றமான அச்சூழ்நிலையைத் தணிப்பதற்காக,
பொலிசார் பல்கலைக்கழக அறிஞர்களையும் சமூக அறிஞர்களையும் ஒன்றுகூட்டி,
சமரசம் செய்ய முயற்சித்தனர்.
பல்கலைக்கழகத்தின் சார்பாக அப்போதைய துணைவேந்தர் சு. வித்தியானந்தன் அவர்களும்,
சில பேராசிரியர்களும் வருகைதர,
ஊரார் சிவராமலிங்கம் மாஸ்டர் தலைமையில் வந்தனர்.
அன்று, மாஸ்டர் கோபத்தின் உச்சத்தில் நின்று,
துணைவேந்தரையும் மற்றைய பேராசிரியர்களையும் கடுமையாகக் கண்டித்தார்.
மாஸ்டருக்குக் கோபம் வந்துவிட்டால்,
ஆங்கிலம் கொட்டத் தொடங்கிவிடும்.
அன்று, மாஸ்டரது ஆங்கிலத் திறமையையும் ஆளுமையையும்,
தர்க்க ஆற்றலையும் சமூகப் பொறுப்புணர்வினையும் கண்டு,
வந்திருந்த சிங்களப்பொலிஸ் அதிகாரிகள் எல்லாரும் கூட நடுநடுங்கிப் போயினர்.
அதுதான் சிவராமலிங்கம் மாஸ்டர்.
தணிகிற இடத்தில் தணிந்தும் போவார்,
கொதிக்கிற இடத்தில் யாருக்கும் அஞ்சாமல் கொதிக்கவும் செய்வார்.

   

மாஸ்டருக்கும் எனக்குமிடையில் ஒருமுறை சின்னதோர் மனக்கசப்பு ஏற்பட்டது.
குமாரதாசன் எனது தங்கையைக் காதலிப்பதை அறிந்து,
குமாரதாசனின் தந்தையார் மாஸ்டரோடு போய் முறுகியிருக்கிறார்.
'அவையள் ஆர் ஆக்கள்? எப்படிப்பட்டவயள்?' என்றெல்லாம்,
மறைமுகமாய் எங்கள் ஜாதியையும் விசாரித்திருக்கிறார்.
என்றைக்கும் இல்லாமல் மாஸ்டரும், 'எனக்கும் சரியாத் தெரியேல,
நாங்கள் செம்பெடுக்கிற ஆக்கள் இல்ல என்று சிலபேர் சொல்லுறவயள்' என்று
வீணாகக் கதை வளர்த்திருக்கிறார்.
அதைக் குமாரதாசனின் தந்தை வீட்டில் சொல்ல,
குமாரதாசன் என்னிடம் வந்து சொல்ல,
எனக்குக் கடுமையான கோபம் வந்துவிட்டது.

   

அவர்கள் எல்லோரும் தீவுப்பகுதியைச் சார்ந்தவர்கள்.
ஒரு காலத்தில் தீவுப்பகுதியில் திருமணம் செய்வதை,
யாழ்ப்பாணத்தவர்கள் விரும்பமாட்டார்கள்.
நிலைமை அப்படியிருக்க,
மாஸ்டர் எங்களைக் குறைவாய்ப் பேசியது மனதை வருத்தியது.
நான் சாதி பார்க்கிறவன் இல்லை.
ஆனாலும், எனக்குள் இருந்த ஆணவ முனைப்பு,
எப்படி என்னை இவர் இப்படிச் சொல்லலாமெனக் கோபங்கிளப்பியது.
நேராக மாஸ்டரிடம் போனேன்.

   

தான் பேசியது என் காதுக்கு வந்துவிட்ட செய்தி மாஸ்டருக்குத் தெரியவில்லை.
'வாடாப்பா வாடாப்பா' என்று வழக்கம்போல என்னை வரவேற்றார்.
'என்ன? முகம் சரியில்லை!' என்று அன்போடு விசாரித்தார்.
நான் சற்றுக் கோபத்தோடு,
'என்னுடைய பண்பில் எதாவது பிழை தெரிஞ்சதோ' என்று கேட்டேன்.
மாஸ்டருக்கு ஒன்றும் விளங்கவில்லை.
'ஏண்டாப்பா, என்ன பிரச்சினை? என்று பதறினார்.
இல்ல, நீங்கள் என்ட குலம்பற்றி ஐயப்பட்டதாய் கேள்விப்பட்டன்.
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப்படும் என்று,
திருவள்ளுவர் சொல்லியிருக்கிறாரல்லவா?
அப்ப, எண்ட பண்பில ஏதோ குறை தெரிஞ்சபடியா தானே,
நீங்கள் அப்படி நினைச்சிருக்கிறீங்கள்.
அதுதான் கேட்டனான் என்றேன்.

   

மாஸ்டர் வெலவெலத்துப் போனார்.
என்னுடைய நேர்த்தாக்குதலை அவர் எதிர்பார்க்கவில்லை.
அவரது கண்களிலிருந்து நீர் வழியத் தொடங்கியது.
'மன்னிச்சிடுறாப்பா, ஆற்றயோ கதையக் கேட்டு,
நானும் தெரியாமக் கதைச்சிட்டன்' என்று கையெடுத்துக் கும்பிட்டார்.
அவர் அப்படி செய்திருக்க வேண்டிய தேவையேயில்லை.
அவருடைய பெருந்தன்மை அப்படிச் செய்ய வைத்தது.
சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி,
துலையல்லார் கண்ணும் கொளல் என்ற,
குறளுக்கு இலக்கணமாய் மாஸ்டரைப் பார்த்ததும்,
என் மனம் நிறைந்து மகிழ்ந்தது.

   
                                                                       (சிவராமலிங்கம் மாஸ்ரர் அடுத்தவாரமும் வருவார்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்