'நிலைத்திடுமோ மெஞ்ஞானம் நினை!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகம் வெறுத்துப் பின் உற்றவரைத் தான் துறந்து
விலகித்தான் வாழ்விருந்து விண்ணடைய - உளம் அடக்கி
கண்மூடித் தவமிருந்த கற்றோனும் அசைய மனம் 
பெண்தேடி வீழ்ந்தானாம் பிரண்டு.

ஆறாறு தத்துவத்தை ஆராய்ந்து தெளிந்தவனும்
வீறாக விண்ணடைய விரைந்தானாம் - நேராக
ஐயன் தாள் அது சேர ஆயத்தங்கள் செய்தானாம்
பொய்யதனை புகழென்று நம்பி.

பதி இதுவாம் பசு இதுவாம் பண்டே நமைப்பிடித்து
சதி புரியும் பாசமதைச் சாராமல் - மதியதனால்
தத்துவத்தைக் கற்றேதான் தாள் சேர நினைந்தவனும்
வித்தகத்தால் வீழ்ந்தானாம் விதி.

நிலையாமை தான் உணர்ந்தேன் நேராய்த் துறவடைந்தேன்
உலையாமல் மெய்யுணர்வும் உண்டாச்சு - மலையாமல்
சிவன் தாளைச் சேருவது திண்ணமென நினைந்தவனும்
பவமதனில் வீழ்ந்தானாம் பதைத்து.

சித்தாந்தம், வேதாந்தம் தெளிவுறவே கற்றாலும் 
பத்தாது! இறை அருளைப் பாலித்து - வித்தாகி
உளத்துள்ளே தான் வந்து ஒன்றித்துக் காட்டாதேல்
நிலைத்திடுமோ மெஞ்ஞானம் நினை.

ஆசை துறந்தாலும் அகமடக்கி வென்றாலும் 
பூசை பலபலவாய்ப் புரிந்தாலும் - ஈசனவன்
நெஞ்சத்துள் தான் வந்து நில்லானேல் அத்தனையும்
பஞ்சாகப் போயிடுமாம் பறந்து.

பற்றுவது பாவம் எனப் பதறித் தான் உற்றாரை 
முற்றத் துறக்கின்ற முனிவோரே! - உற்றறியும்
பந்தமது தான் இன்றேல் பாரதனில் வீடிலையாம்
விந்தை இதை உணர்ந்திடுவீர் விரைந்து.

மோனம் துறந்தார் முனிவரவர் தனை மறந்து
ஞானம் தனைத் துறந்தார் - நாணாமல்
போனவழியதனில் மனமதனைப் போகவிட்டு
கானகத்தில் தவமிருந்தார் காண்.

பற்றுதலே துறவென்று பகன்றாராம் அவர் தம்மை
பற்றிப் பல சுகங்கள் கண்டவரும் - பற்றுடனே
எங்கள் குரு நாதர் என எண்ணிப் புகழ்ந்தாராம்  
தங்கள் பசியனைத்தும் தணிக்க. 

பொய்யாய்த் துறவுதனை கூட்டித் தமை வளர்ப்போர்
மெய்யாய் ஒருக்காலும் வீடெய்தார் - உய்யாமல்
தானும் மெலச் சிதைந்து சார்ந்தோரையும் அழித்து
வீணாக வாழ்விழப்பார் விரைந்து

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்