‘வலம்புரி’ புருஷோத்தமனுக்கு கம்பவாரிதியின் நிறைவுப் பதில் !

 
அன்பு நண்ப!
வணக்கம்.
தமிழ்நாடு சேலத்தில் நடைபெற்ற மார்கழிப் பெருவிழாவில்,
மகாபாரதத் தொடர் விரிவுரையாற்றிவிட்டு,
நேற்றுத்தான் நாடு திரும்பினேன்.
அதனால் மீண்டும் தாங்கள் எனக்கு எழுதிய பதில் மடலை,
இன்றுதான் வாசிக்க முடிந்தது.
உங்கள் கடிதத்திற்குப் பதில் எழுதுவதா? இல்லையா? என்று,
நீண்டநேரம் சிந்தித்து,
சுருக்கமாய் பதில் எழுதலாம் என்று முடிவுசெய்தேன்.
இப்பிரச்சினை பற்றி தங்களுக்கு நான் எழுதும்,
நிறைவுக்கடிதமாய் இது அமையும் என்பது திண்ணம்.உங்கள் கடிதத்தால் மனதில் உதித்த சில எண்ணங்களைப் பதிவு செய்வதும்,
சில எதிர்வுகூறுதல்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதுமே,
இக்கடிதத்தின் நோக்கங்கள்.
இதுவே இப்பிரச்சினை பற்றிய எனது நிறைவுக் கடிதம் என்பதை,
மீண்டும் ஒருதரம் உறுதிசெய்ய விரும்புகிறேன்.
 


 
மனதில் வரும் சில எண்ணங்களை முதலில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
உங்கள் கடிதத்தில் பெரும்பகுதியை நிரப்பியிருந்த என் பற்றியதான பாராட்டுக்களும் புகழுரைகளும், சற்று நாணத்தையும், நிறைய மகிழ்வையும் தந்தன. நாணத்தின் காரணம் நீங்கள் அறிவீர்;கள். மகிழ்வுக்குக் காரணம் என்னையும் பாராட்டி உரைக்க எம் இனத்தில் ஒருவராவது இருக்கிறீர்களே என்ற திருப்தி. தங்கள் அன்புக்கு நன்றிகள்.

உங்களைக் கழகம் மதித்துப் போற்றியதாக எழுதியதைப் படித்தேன். அது எம் கடமை. அந்த மதிப்பும் போற்றுதலும் உங்களின் ஆற்றலுக்கானதே தவிர, உங்களின்மீதான எங்களின் அன்புக்கானதல்ல. அன்புக்காக கழக மேடைகளில் நாம் யாருக்கும் என்றும் இடமளித்ததில்லை.  அங்ஙனம் இடமளித்திருந்தால் எத்தனையோ பேரிடம் எத்தனையோ பயன்களை நாம் பெற்றிருக்க முடியும். உங்களது ஆற்றல் பற்றி இவ்விடத்தில் நான் எழுதினால். நாம் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்வதாய் அது அமைந்துவிடும் என்பதால் அதனைத் தவிர்க்கிறேன்.

நடுவுநிலைமையோடு வலம்புரி செயற்படும் என்ற தங்கள் வாக்குறுதிக்கும், நடுநிலையோடு ‘உகரம்’ நடப்பதாய் எழுதிய தங்களின் பாராட்டுக்கும் எனதும், என் மாணவர்களதும் தனிப்பட்ட நன்றிகள்.

மேற்படி பிரச்சினை பற்றி அப்பிரச்சினையோடு சம்பந்தப்பட்டவர்கள் மௌனித்திருக்கிறார்கள். நீங்களும் நானும் தான் இதுபற்றி அதிகம் அக்கறைப்பட்டு அலட்டிக்கொள்கிறோம் போலத் தெரிகிறது. இதுவே சற்று மிகையாய்ப் படவில்லையா? மக்களுக்குப் பதில் உரைக்க வேண்டியவர்கள் மௌனித்திருக்க நாம்  தர்க்கிப்பதால் பயன் ஏது?

உங்களது இரண்டாவது கடிதத்தின் முதற்பகுதியில் என்னை கௌரவர் சேனையில் நின்று போராடிய வீஷ்மரோடு ஒப்பிட்டிருந்தீர்கள். அவ் உவமை தவறென்றே கருதுகிறேன். நான் எந்த அணியைச் சார்ந்தவனும் அல்லன். என்னுடைய பிரச்சினை வேறு! இனம் ஒன்றுபட்டு  இருக்கவேண்டிய முக்கியமான இத்தருணத்தில், தலைமைகள் பகையோடு இரண்டாய் உடைவது பற்றியே நான் கவலைப்படுகிறேன். அதனையே எனது விமர்சனங்களில் சுட்டிக்காட்டினேன். யாரையும் காப்பாற்றவேண்டிய தேவை எனக்கில்லை. இனம் காப்பற்றப்பட்டால் போதும் என்பதே என் எண்ணம். நீங்கள் ஓர் அணியைச் சார்ந்து இருப்பதால் ஐயத்திற்கு இடமாகியிருக்கும் அவ் அணியின் நியாயத்தை தொடர்ந்து எழுத நினைக்கிறீர்;கள். அப்படி எந்தத்தேவையும் எனக்கில்லை.   அதனால்;தான் இக்கடிதத்துடன் எனது பதிலை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

நடுவர் அற்ற பட்டிமண்டப வாதமாய் எங்கள் வாதங்கள் நீள்வதாய்க் குறிப்பிட்டிருந்தீர்கள். அஃது உண்மையே. குறிப்பிட்ட பிரச்சினையில் நடுவராய் இருந்து தீர்ப்பளிக்கும்படியும் என்னை வேண்டியிருந்தீர்கள். வாதத்தில் நானும் பங்குபற்றியதால் அதற்கு நான் உடன்படமாட்டேன். இவ் விவாதத்தில் காலமே நடுவர் பதவி வகிக்கவேண்டும் என்பதே என் கருத்து. அது அளிக்கப் போகும் தீர்ப்பே உண்மையாகவும், நிரந்தரமாகவும் இருக்கப்போகிறது.

பகுதிபகுதியாய் வெளிவந்த தங்களின் முன்னைய கடிதத்திலும், தற்போதைய கடிதத்திலும் பொதிந்திருந்த ஒருவிடயம் என்னைச் சங்கடப்படுத்தியது. முதலமைச்சரின் பல செயல்களுக்கான பதில்களை நீங்களாக உய்த்து உரைத்திருந்தீர்கள். அது அவரது வேலை. நீதியரசரின் அரசியல் செயற்பாடுகள் பற்றி அவர் உரைக்கவேண்டிய பதில்களை நீங்கள் உரைப்பது பொருத்தமாய்ப் படவில்லை. பேராசிரியர் சிற்றம்பலம் பற்றி நீங்கள் எழுதியதும் அது போன்றதொன்றே.

நடுநிலையான ஒரு பத்திரிகையாளரான தாங்கள் மற்றவர்களைக் கேள்வி கேட்கலாமேயன்றி மற்றவர்களுக்காக பதில் உரைக்க முனையலாகாது. அப்பதில்களை உரியவர்கள் உரைப்பதுதான் பொருத்தம்! கால ஓட்டத்தில் யாரும் எப்படியும் மாறலாம். அப்போது வீணாய் நீங்கள் அவமானப்படவேண்டி வரும்.

ஸ்தாபித உறுப்பினர்களில் ஒருவர் என்பதால் பேரவை பற்றிய கேள்விகளுக்கு நீங்கள் பதில் உரைத்தது சரியே.

நீங்கள் பல இடங்களில் பேரவை ஒரு அரசியல் கட்சியோ மாற்றுத்தலைமையோ அல்ல என்றும் அது ஓர் மக்கள் இயக்கம் என்றும் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டு குறித்த ஒரு அமைப்பையும் குறித்த ஒருசில தலைவர்களையும் மட்டுமே விமர்சிப்பதும், விமர்சனத்துக்குள்ளான பலரை காக்க நினைப்பதும் பொருத்தமாய் இல்லை. இதில் முரண்பாடு இருப்பதாய்ப்படுகிறது. தங்களின் பேரவை பற்றிய என் ஐயப்பாடுகளுக்கு தங்களின் இச்செயற்பாடுகளும் காரணமாயின.

‘நீங்கள் யாரை மாற்றணியெனப் பார்க்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்டு ‘பேரவையில் இடம்பெற்றுள்ள கஜேந்திரகுமாரைத் தவிர மற்றையோர் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியினர் தான்’ என்று பதிலும் உரைத்திருக்கிறீர்கள். உங்களது அந்தக் கருத்திலும் முரண்பாடு இருக்கிறது. நீங்கள் சொல்வது உண்மை என்றால் பேரவையில் சேரும்படி கூட்டமைப்பினருக்கு முறைப்படி அழைப்பு விடுக்காதது ஏன்? உண்மையில் உங்கள் பேரவை, மக்கள்இயக்கம் தான் என்றால், கஜேந்திரகுமாரைப் போன்று வெளியில் இருந்த மற்றைய கட்சியினரையும் உள்வாங்காதது ஏன்? கேள்விகள் குழப்புகின்றன.

“தமிழினத்தின் மீது குமார் பொன்னம்பலம் கொண்ட பற்றை  எவரும் குறைத்து மதிப்பிடமுடியாது.” என்ற தங்களது கருத்திலும் பிரச்சினை இருக்கிறது. குமார் பொன்னம்பலத்தை புலிகள் தமது எதிரியாய்க் கருதிய காலமும் இருந்ததென்பதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். அந்நேரம் அவரின் கட்சிசார்ந்த பத்திரிகையை விற்றதால் இன்று கொழும்பில் வேறொரு கட்சி சார்ந்திருக்கும் எனது நண்பர் குமரகுருபரனைப் புலிகள் கைது செய்து அடைத்து வைத்திருந்தனர். அப்போது அவருக்காக புலிகளுடன் நான் பேசியிருக்கிறேன். இது எனக்குத் தேவையில்லாத விடயம். காலமாற்றத்தில் கருத்துமாற்றம் நிகழலாம் என்பதை உறுதிப்படுத்தவே இதனைப் பதிவுசெய்கிறேன்.

சம்பந்தன் சொன்ன சிங்கக் கொடி பிடித்ததற்கான காரணமும் தமிழ்க்கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்படவில்லை என்ற பதிலும், குழந்தைத் தனமானவை. இவற்றை யாரும் ஏற்;கத் துணியார்கள். நானும் ஏற்கத் துணியேன். புத்திசாலித்தனம் செய்வதாய் நினைத்து மடத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் அவர்.

தங்களின் மற்றொரு கருத்துப்பற்றிய என் அதிருப்தியையும் பதிவு செய்ய விரும்புகிறேன். வன்னி இழப்புக்கள் கொடூரமானவை, தாங்கமுடியாதவை இக்கருத்தில் எவரும் மாறுபடார். ஆனால் அணி பிரிந்து நிற்கையில் மட்டும் அவ் இழப்புக்களை மிகைப்படுத்திச் சொல்லி தம் அணிசார்ந்து தமிழ்மக்களிடம் ஆதரவு தேட நினைப்பதும், அவர்தம் உணர்ச்சிகளைக் கிளறச் செய்வதும் மிகப்பெரும் தவறென்றே படுகிறது. அதனைத் தங்களைப் போன்ற ஒரு அறிவாளியும் செய்ய நினைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

திரு விக்னேஸ்வரன் ஓர் அரசியல்வாதி அல்லர். அவர் ஒரு நீதியரசர், என்ற உங்களது கூற்று நிஜமாய் இருந்திருந்தால் நானும் மகிழ்ந்திருப்பேன். ஆனால் முதலமைச்சரான பின்பு அவரது நடவடிக்கைகள் அங்ஙனம் அமையவில்லை என்பது என் கருத்து. இவ்வுண்மையை வருத்தத்தோடு இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அனுமன் முதுகின் மீது ஏற மறுத்த சீதை நிச்சயம் முதலசை;சருக்கு உவமையாக மாட்டாள் என்றே கருதுகிறேன்.

சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர் பேரவைக்குத் தரும் ஆதரவு என்பது தமிழரசுக்கட்சிக்குக் காட்டும் எதிர்ப்பு என்பதை ஒரு குழந்தையும் அறியும். அதனை உங்கள் பேரவையின் பலமாய் உரைப்பதில் நியாயம் இருப்பதாய்ப் படவில்லை.

கூட்டமைப்பின் செயற்பாடுகளில் பலதவறுகள் உண்டு என்பதில் எனக்கு எந்தக் கருத்து மாறுபாடும் இல்லை. அவை பற்றி பல இடங்களில் நான் ஏலவே எழுதியும் உள்ளேன். அவர்கள் தம்மை மாற்றிக்கொள்ளத் தவறுவார்களேயானால் என்றோ ஒருநாள் மக்கள் ஆதரவை இழப்பார்கள் என்பது நிச்சயம்.
மேற்குறிப்பிட்டவற்றை,
தங்களோடு வாதிடும் நோக்கத்தில் நான் எழுதவில்லை.
தங்கள் கருத்துக்களை முழுமையாய் என்மனம் ஒப்பமறுப்பதற்கான,
காரணங்களை உரைக்கும் நோக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளேன்.

 
இனி என் அறிவு செய்யும் சில எதிர்வுகூறுகளைக் கீழே குறிப்பிடுகிறேன்.
➧➧ தேர்தல்கள் நெருங்க நெருங்க வருங்காலத்தில் தமிழ்மக்கள் பேரவை  ஓர் அரசியல் கட்சியாக மாறுபாடடையலாம்.
➧➧ அக்கட்சி தமிழரசுக்கட்சியைத் தனிமைப்படுத்தி மாற்றணியினரை ஒன்றுசேர்த்து முதலமைச்சரின் தலைமையின் கீழ் வலிமை பெறலாம்.
➧➧ தமிழரசுக்கட்சி ஒதுக்கப்பட்டால் அதன் பின்னர், பேரவையில் ஒன்றுசேர்ந்த மாற்றணிகளுக்குள் இப்போது போலவே பதவிகள் பற்றி பகை வெடிக்கலாம்.
➧➧ பேரவை, கட்சியாகி தமிழ்மக்களின் ஆதரவோடு தலைமை பெற்றால் அதன் பின்னர் இனப்பிரச்சனையில் இன்று கூட்டமைப்பினரின் பாதையையே அக்கட்சியும் கடைப்பிடிக்க வேண்டிவரலாம்.
➧➧ இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடும் வல்லரசுகளின் வசதி பற்றியே நம் இனத்தலைமை எதுவானாலும் இயங்கவேண்டிவரும்.
➧➧ மீறும் பட்சத்தில் அழிவும், இழப்புக்களும் மீண்டும் எம் இனத்துக்காவது நிச்சயம்.
➧➧ தற்போதுகூட உலகநாடுகளின் நெருக்கடிக்குப் பணிந்து முதலமைச்சர் தடுமாறவேண்டி வரலாம்.
➧➧ அன்றேல் அரசியலில் இருந்து ஒருவேளை ஒதுங்கவேண்டிக்கூட இருக்கலாம்.
➧➧ அதுவுமன்றி அவரே தமிழ்மக்களின் தலைவராகும் பட்சத்தில் கூட்டமைப்பினர் இன்று செய்வதையே அவரும் நாளை செய்யவேண்டி வரலாம்.
➧➧ தமிழ்மக்கள் பேரவை உலகநாடுகளின் நெருக்கடியால் மெல்ல மெல்ல சென்று தேய்ந்து  இறலாம்.
➧➧ உலகநாடுகளின் நெருக்கடிகளால் பேரவைபக்கம் சாய்ந்த சில தலைவர்கள் பேரவையைக் கைவிட்டு மீணடும் கூட்டமைப்பைச் சேரும் நிலையும் ஏற்படலாம்.

இவை அரசியல் பற்றிய எனது அவதானிப்பால் விளைந்த எதிர்வுகூர்வுகள்.
நான் ஒன்றும் பெரிய தீர்க்கதரிசி என்று என்னைச் சொல்ல வரவில்லை.
ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று சொல்வதற்கு,
தீர்க்கதரிசியாய் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
மேற்சொன்ன எனது ஊகங்கள் நடக்காதிருந்து,
உங்களின் தமிழ்மக்கள் பேரவையால்,
எம் இனத்திற்கான உயர்வு நிகழும் பட்சத்தில்,
நிச்சயம் நானும் மகிழ்வேன்.
உங்கள் முயற்சிகளுக்கு அப்போது வெளிப்படையாக,
என் ஆதரவைத் தெரிவிப்பேன்.
தனிப்பட்ட ரீதியில் உங்கள் முயற்சி பற்றிய,
ஐயப்பாடுகள் ஏதும் எனக்குக் கிடையாது.
உங்கள் வெற்றி நோக்கியும் நிச்சயம் நான் பிரார்த்திப்பேன்.
ஆற்றல் மிகுந்த உங்களின் நட்பையும்,
நான் எனக்குக் கிடைத்த வரமாகவே போற்றுகின்றேன்.
காலம் தீர்ப்புரைக்கும் வரை நாம் காத்திருப்போம்.


ஒரு சிறிய விருப்பம்,
தேர்தல் காலத்தில் ‘உகரத்தில்’ முன்பு நான் எழுதிய,
"கட்சியைச் சீர்திருந்த கூட்டமைப்புக்குச்  சில ஆலோசனைகள்" (17 Aug 2015) எனும் கட்டுரையையும்,
"கூட்டமைப்பினருக்கு ஒரு வேண்டுகோள்:| விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகுங்கள்" (13 July 2015) எனும் கட்டுரையையும்
இந்நேரத்தில் நீங்கள் ‘வலம்புரியில்’ மீள் பிரசுரம் செய்தால்,
அது எனது ஊகங்கள் எவ்வளவு சரியானவை என்பதை மக்களுக்கு உரைக்கும்.
அத்தோடு அந்தநேரத்தில் எனது கருத்துப்பற்றி எவ்வித கவலையும்படாத கூட்டமைப்பினர்,
இன்று தம்மை மீளாய்வு செய்து கொள்ளவும் ஒருவேளை அக்கட்டுரைகள் உதவலாம்.
அது நோக்கியே இவ் வேண்டுகோள்.
முடிந்தால் முயலுங்கள்.

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்