அதிர்வுகள் 28 | " நொட்டை வாசிப்பு "

 
 
“உலகம் என் தலையில்தான்.
கடந்த இரண்டு மாதங்களாய் எனக்குள் இருந்த
அந்தப் பார உணர்வு இறங்கினாற் போல ஒரு நிம்மதி.
கடைசி நாள் பரீட்சை எழுதி,
வெளியில் வரும் மாணவனின் மனநிலை.
பிரசவ அறையால் குழந்தையோடு வெளிவரும்,
தாயின் நிம்மதி.
யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட விமானம் தரை தொட்டதும்,
பயணியிடம் எழும் ஆறுதற் பெரு மூச்சு.
இவையெல்லாம்,
அன்றைய என் மனநிலைக்காம் உவமானங்கள்.
 

 

விஷயத்தைச் சொல்லாமல் இது என்ன பீடிகை?
உங்கள் சலிப்புப் புரிகின்றது.
வேறொன்றுமில்லை,
கம்பன் விழா முடிந்த அன்று,
இராமகிருஷ்ண மிஷன் மண்டப வாசலில் நான் நிற்கிறேன்.
அப்போதய என் மனநிலை பற்றிய வர்ணிப்புத்தான்,
மேற்சொன்னவை.
ஆட்சி உனக்கில்லை, காட்டுக்குப் போ” என்ற,
கைகேயியின் உத்தரவு கேட்டதும்,
வண்டியால் கழற்றி விடப்பட்ட எருது போல்,
இராமன் சென்றானாம்.
இராமனின் பற்றற்ற மனநிலையை,
கம்பன் வர்ணிப்பதாய்த்தான் முன்பு நினைத்திருந்தேன்.
நிர்வாகப் பொறுப்பின் வேதனையைத்தான்,
கம்பன் விளங்கப்படுத்தியிருக்கிறான்.
அனுபவம்,
கம்பனுக்குப் புது விளக்கம் காட்டியது.
பாரம் சுமந்த எருது, வண்டிலால் கழற்றி விடப்பட்டதும்,
அப்பாடா, இனி விடுதலை” எனும் உணர்வில் சிலிர்க்கும்
சிலிர்ப்பு,
என் மனதுட் படமாய்ப் படர்ந்தது.
எத்தனை பொருத்தமான உவமை.
கம்பா! நீ பெரிய ஆள்த்தான்”.
மீண்டும் எங்கோ போகிறேன் என,
நீங்கள் கோவிப்பது புரிகிறது.விஷயத்துக்கு வருகின்றேன்.
வேறொன்றுமில்லை.
கம்பன் விழா நிறைவாய் முடிந்தது.
இனி நிம்மதி” என்று,
மேற்சொன்ன சிந்தனைகளோடு நின்றிருந்தேன்.
என் முதுகில் யாரோ தட்டினார்கள்.
திரும்புவதற்குள்,
ஹலோ ! எல்லாம் திறமாய் முடிஞ்சுது. பிரமாதம்.”
பெரிய சத்தத்துடன் பாராட்டு.
திரும்பினால்,
முகம் நிறையச் சிரிப்புடன் 'மல்லிகை' ஆசிரியர் நண்பர் ஜீவா.
மற்றவர் வெற்றியில் மகிழும் அவர் மனநிலை கண்டு,
மகிழ்ந்தேன்.
பாரம் சுமந்து களைத்த மனதுக்கு,
பாராட்டுகள், வருடல்களாக இதந்தந்தன.
மனதுள் பாராட்டுப் பசி.
இன்னும் ஓரிரு வார்த்தைகள் எதிர்பார்த்து நிற்கின்றேன்.
ஹலோ !,
இப்படியே வார்த்தைகளைக் காத்திலை நெடுக விட்டுப் 
பிரயோசனமில்ல,
எழுத வேணும்.
இந்த ஆண்டு மல்லிகை மலருக்குக் கட்டுரை தர்றீங்கள்
தன் வழக்கமான பாணியில்,
வேண்டுகோளைக் கட்டளையாக இட்டு விட்டு,
மனுஷன் அடுத்தவரிடம் நகர்ந்தார்.
ஆபத்துணராமல் சிரித்துக் கொண்டு ஜீவாவை வரவேற்ற,
மற்றொரு இலக்கிய வாதியைப் பரிதாபமாகப் பார்த்தேன்.
மீண்டும் என் கழுத்தில் வண்டி ஏற்றப்பட்ட உணர்வு.மல்லிகை மலருக்குக் கட்டுரை தர வேணும்,
எதை எழுதுவது?
மீண்டும் மனதுள் எண்ணச் சுமை.
கம்பனைப் பற்றி எழுதினால் என்ன?
சீ ... பழம் பண்டிதர்’ எனப் பரிகசிக்கும்,
புதுப் பண்டிதர்களின் சத்தம்,
இப்போதே என் காதில் விழுவதாகப் பிரமை.
வேண்டாம்’ - முடிவு செய்தேன்.
கம்பன் விழாப் பற்றி எழுதினால் என்ன?
மல்லிகை என்ன கம்பன் கழகத்தின் விளம்பரப் பலகையா?
ஒரு வாசகர்,
மல்லிகைக்கு நேயர் கடிதம் எழுதத் தொடங்குவதாய்,
மனதுள் கற்பனைக் காட்சி.
பின் எதைத்தான் எழுதுவது?
என் இலக்கிய அனுபவம் பற்றி எழுதினால் .....
இவர் பெரிய இலக்கிய வாதி அனுபவம் பேச வந்து விட்டார். 
கோயிற் பிரசங்கிக்கு வேண்டாத ஆசை.
மேற் சொன்ன நையாண்டிகளுக்குச் ‘சரிநிகராய்’,
எங்கிருந்தோ ஒரு குரல்.
கண்டனங்களைக் கேட்டுக் கேட்டு,
கல் தூக்குமுன் கால் தூக்கும் நாயாய்,
மனம் சுருளப் பார்க்கின்றது.கம்பன் விழாச் சுமை, கட்டுரைச் சுமை முன் சுகமாய்ப் போனது.
எதை எழுதுவது? எதை எழுதுவது? எதை எழுதுவது?
மனதுள் அறிவுக் குடைச்சல்.
எதை எழுதினாலும்,
ப்பூ, இதென்ன கட்டுரையா ? 
இவருக்கு வேண்டாத வேலை.” என
நொட்டை வாசிப்பு நிச்சயம்.
கொஞ்சம் பொறுங்கள், என்ன சொன்னேன்?
நொட்டை வாசிப்பு! நொட்டை வாசிப்பு! நொட்டை வாசிப்பு!
முனிவனின் சாபம் திரும்பத் திரும்ப ஒலித்து,
வேடன் மனதுள் காவியமானாற்போல்,
இந்த வார்த்தையின் எதிரொலிப்பில் திடீரென ஒரு ஞானம்.
கட்டுரைத் தலைப்பு தயாராயிற்று.
“நொட்டை வாசிப்பு.”தலைப்புக் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் நான்.
ஆகா! அறிவுலகத்துக்கு எவ்வளவு தேவையான
அற்புதத் தலைப்பு!
திடீரென, மீண்டும் மனதுள் ஒரு கேள்வி.
இங்ஙனமாய்க் கட்டுரைக்கு ஒற்றைத் தலைப்பிட்டால்,
நம் அறிவுலகம் மதிக்குமா?
ஒரு கட்டுரைக்கு இரண்டு தலைப்பிடுவதுதானே,
இன்றைய ‘ஸ்ரைல்.’
தன் கட்டுரைக்கு ஒரு தனித் தலைப்பைக் கூடத்
தீர்மானிக்க முடியாதவர்,
அறிவுள்ள கட்டுரையாசிரியர் ஆவாரா?
தப்பித் தவறி நீங்கள் இவ்வாறு கேட்டால்,
இன்றைய அறிவுலகப் பார்வையில்,
நீங்கள் ஒரு முட்டாள்!
அல்லது பழமை வாதி!
அல்லது பிற்போக்கு வாதி!
நிச்சயமாய் முத்திரை குத்தப்படுவீர்கள்.
ஐயா! நீங்கள் எப்படியும் இருந்து விட்டுப் போங்கள்.
எனக்குக் கவலையில்லை.
உலகத்தோடு ஒத்து வாழச் சொல்லி வள்ளுவரே சொல்லி
இருக்கிறார்.
அவர் சொன்ன உலகம் எது என்கிறீர்களாக்கும்?
விட்டால் நீங்கள் ஆயிரம் கேள்விகள் கேட்பீர்கள்?
சிறுபான்மையினரான உங்களைப் பற்றி,
எனக்குக் கவலையில்லை.
இன்று அறிவுலகைக் கைப்பற்றி இருக்கும்,
மகா .... மகா .... மகா ....
புத்திசாலிகள் அல்லது புத்திசாலிகள்போல் நடிக்கும்,
(சீ ... இரட்டைத் தலைப்பு இங்கேயும் வந்து விட்டது)
இரட்டைத் தலைப்பு ஏந்தல்களைப் பின்பற்றி,
நானும் என் கட்டுரைக்கு இரட்டைத் தலைப்பிட்டு,
இன்றைய அறிவுலகம் ஏற்கும்,
அறிவாளியாகத் தயாராகிவிட்டேன்.
இதோ என் கட்டுரைத் தலைப்பு!
நொட்டை வாசிப்பு அல்லது ஞானம்தேசியச் சஞ்சிகையொன்றில்,
பிராந்தியத் தமிழில் தலைப்பிட்டால் யாருக்குப் புரியும்?
அது என்ன நொட்டை வாசிப்பு?
உங்கள் கேள்வி புரிகின்றது.
ஆனால், அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.
பாடப் புத்தகங்களையே பிராந்தியத் தமிழில் எழுதுமாறு,
அண்மையில் ஒரு பேராசிரியர் பிரேரித்திருக்கிறார்.
அப்படியிருக்க,
கட்டுரைத் தலைப்பை மட்டும்,
நான் பிராந்தியத் தமிழில் இடக் கூடாதாக்கும்!
ஐயா! பழைய பண்டிதரே,
உமக்கு விருப்பமில்லாவிட்டால்,
இக்கட்டுரையைப் படிக்காமல் விடும்.
அடிக்கடி கேள்வி கேட்டு,
தயவுசெய்து என் சிந்தனையைக் குழப்பாதீர்!நான் சொல்ல வரும் விடயத்திற்கு,
மேற்சொன்ன பிராந்தியத் தொடர் தவிர,
செந்தமிழில் வார்த்தைகள் ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை.
சரி உன் வியாக்கியானங்களை விட்டுத் தொலை.
நொட்டை வாசிப்பு என்றால் என்ன?
விரைவில் விளக்கம் சொல்” என்கிறீர்களா?
ஏதோ முடிந்தளவில் விளங்கப்படுத்துகின்றேன்.
நையாண்டி, நக்கல், புறங்கூறல், கிண்டல்...
என்னென்று சொல்லுவது?
நொட்டை வாசித்தலுக்கு,
இவை ஒத்த கருத்துள்ள சொற்களாகத் தெரியவில்லையே.
ஊர் வழக்குச் சொற்களின் பெருமை புரிகின்றது.
அவசியமாய் இத்தலைப்பை விளங்க வேண்டியவர்கள்,
ஒன்று, யாழ்ப்பாணத்து நண்பர் யாரிடமாவது கேளுங்கள்,
அல்லது, இக் கட்டுரை முன்னுரையின் இறுதிப் பகுதியை,
மீண்டும் வாசியுங்கள் ஓரளவு புரியும்.
தலைப்பையே விளங்கப்படுத்த முடியாத ஒரு
கட்டுரையாசிரியனா?
உங்கள் நையாண்டி புரிகிறது.
சொல்லுக்குப் பொருள் சொல்வதல்ல என் வேலை.
அச்சொல்லினால் விளையும்,
பயன் பற்றி க் கூறுவதே என்  நோக்கம்.
இன்னும் தெளிவாக நொட்டை வாசித்தலுக்குப் பொருள்
சொல்வதானால்,
இதோ ஒரு வரியில் ....,
“நம் எதிரிகளைத் தானாக விழச் செய்யும் ஓர் அஸ்திரம்.”
இது தான் ஆகக் கூடியளவில் என்னால் செய்யக் கூடிய
வரைவிலக்கணம்.நொட்டை வாசிப்பு எனும் அக் கருவியைப் பயன்படுத்த மட்டும்
உங்களுக்குத் தெரிந்து விட்டால்,
இருந்த இடத்தில் இருந்தபடி,
எவரையும் நீங்கள் விழுத்தி விடலாம்.
கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டு காலம்,
ஒரு விடயத்தில் பாடுபட்டவனின் புகழை,
ஒரு நொடியில் உங்களதாய் ஆக்கிக் கொள்ளலாம்.
இந்த நொட்டை அஸ்திரத்தை,
சரியாக விட்டால் போதும்.
எதிரி தானாகத் தனது முயற்சியைக் கைவிட்டு,
விழுந்து படுத்து விடுவான்.
அவன் பாடுபட்டுச் சேர்த்த ஒரு கூட்டமே,
விட்டான் பார் ஒரு நொட்டை” என,
கை தட்டி உங்களை ஆதரித்து ஆர்ப்பரிக்கும்.
ஒரே நாளில் நீங்கள் பெரிய ஆளாகி விடுவீர்கள்.இந்த அஸ்திரப் பிரயோகத்தில்,
தேர்ச்சி பெற்றவர்கள் நம்மில் பலர்.
அந்த அஸ்திரத்தால் வீழ்ந்தோர் அதிலும் பலர்.
உதாரணம் வேண்டுவோர்,
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு விரிவுரையாளராய்ச்
சென்ற,
பொன்.முத்துக்குமாரன் என்னும் ஆற்றலுள்ள பண்டிதரை,
ஏற்கனவே விரிவுரையாளராய் அங்கிருந்த ஒரு சில
அரைகுறைகள்,
யுனிவெர்சிற்றிக்கு ஐயர் வந்திட்டார்.
இனி இங்க பூசை தொடங்க வேண்டியதுதான்
என்றெல்லாம் நொட்டை வாசித்தே
வேலையை விட்டு ஓடச் செய்த
பழைய கதையை,
யாழ்ப்பாணத்துப் பண்டிதர்களிடம் கேட்டறிவார்களாக!
இந்த அஸ்திரத்தால்,
கலியாணம் முறிந்த கன்னியர் தொகை ஏராளம்.
இன்னும் சொல்லப் போனால் ....
ம் .... போதும் போதும் ஓரளவு உன் தலைப்பு புரிகின்றது
மேலே போ!
உங்கள் உத்தரவு கேட்கின்றது.
அப்பாடா .... இப்போதாவது புரிந்ததே.
நிரம்பச் சந்தோசம்!இனி, விடயத்துக்கு வருவோம்.
வோறென்றும் இல்லை.
இந்த நொட்டை வாசிப்பு என்னும் அஸ்திரம்,
எப்படி எல்லாம் என் மேல் பிரயோகிக்கப்பட்டது என்பதைச்
சொல்வதே,
இக் கட்டுரையின் நோக்கம்.
இந்த நொட்டை அஸ்திரத்துடனான என் அனுபவத்தை,
வீழ்ச்சிப் படலம்,
மருட்சிப் படலம்,
உபதேசப் படலம்,
ஞானப் படலம் என,
நான்காய்ப் பிரித்துச் சொல்லப் போகின்றேன்.
கேட்கத் தயாராகி விட்டீர்களா?அதாகப்பட்டது, விருத்தாந்தத்திலே ...
நிறுத்து உன் புராணத்தை
என்னைய்யா மனிதர் நீர்,
எடுத்த எடுப்பிலேயே தடுக்கிறீரே?
உன் பிரசங்கம் கேட்க எங்களுக்கு நேரமில்லை.
சுருக்கமாய் முதலில் வீழ்ச்சிப் படலத்தைச் சொல்.
பிடித்தால் மிகுதியையும் கேட்போம்” என்கிறீர்களா?
ஐயா! நீங்கள் ரொம்பவும் அவசரக்காரர்.
இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கே  இவ்வளவு அவசரமா?
நீங்கள் எல்லாம் எங்கே காவியம் படிக்கப் போகிறீர்கள்?
என் தலைவிதி,
உங்களுக்குச் சொல்லத் தொடங்கி விட்டேன்,
என்ன செய்ய?,
உங்கள் அவசரத்துக்கேற்ப சொல்லப் பார்க்கின்றேன்.
“ஃபிளாஸ் பாக்கில்” (Flash back) என் மனம் செல்கிறது.
அப்பாடா! ஓர் ஆங்கில வார்த்தை வந்துவிட்டது,
இனி என்ன,
என் கட்டுரை அறிவியற் கட்டுரைதான் போங்கள்!25 வருடங்களின் முன் ...
சண்டிலிப்பாய்,
என் தாய்க் கிராமம்.
என்னுள் இலக்கிய விருப்பங்கள் மொட்டவிழ்ந்த வேளையது.
விழா எடுக்கும் ஆசை அப்போதே எனக்குள் இருந்திருக்கும்போல.
அது என் உயிரினுள் கலந்திருந்த உணர்வு போலும்.
உறவு சூழ்ந்த ஊரது.
அண்ணனும், தம்பியும், மச்சானும் துணை சேர,
என் முதல் இலக்கிய விழா அரங்கேறிற்று.ஆசையின் ஆழத்தால் விழா பெரு வெற்றி அடைந்தது.
வெற்றி தந்த விருப்பால் விழாக்கள் தொடர்ந்தன.
அப்போது தான் இந்த “நொட்டை அஸ்திரத்தை”
முதன் முதலில் சந்தித்தேன்.
முதல் விழாவில் ஊக்குவிப்பு.
அடுத்த விழாவில் பாராட்டு.
அதற்கடுத்த விழாவில் புகழ்.
அதற்கடுத்த விழாவில் பகை தேடி வந்தது.
காரணம் வேறொன்றும் இல்லை.
நல்ல தமிழில் சொன்னால் அழுக்காறு,
இன்றைய தமிழில் சொன்னால் “எரிச்சல்.”
எங்கட பிள்ளைகள் இருக்க, அவனுக்குப் புகழா?
உறவு புகைக்க ஆரம்பித்தது.
மந்திராலோசனைக் கூட்டங்கள்,
உடன்படிக்கைகள்,
வியூகங்கள்,
எல்லாம் விறுவிறுப்பாய் நடந்தேறின.
என்னை விழுத்த, அவர்கள் எடுத்த கருவி,
நொட்டை வாசிப்பு.இலங்கைராசற்ற மேன் ஊரெல்லாம் தண்டுறானாம்.
பாவம் வீட்டிலை கஸ்டம் போல, இப்படியாவது சீவிக்கட்டும்.
படிப்போடாத உவனுக்கு உது தான் சரி.
இப்ப புதுச் சேட்டெல்லாம் போடத் தொடங்கிட்டானெல்லே.
தாய்க்காரிட கழுத்திலையும் ஒரு புதுச் சங்கிலி மின்னுது.”
அடுத்த விழாவோட எக்கணம் புது வீடும் கட்டிப்போடுவாங்கள்.
இப்படியாய் அவர்களது அஸ்திரப் பிரயோகம் ஆரம்பமாக,
அனுபவம் இல்லாத என் வீடு மிரண்டது.
வீட்டுக்குள் பூகம்பம்.
தேவையில்லாத வேலைகளை விட்டுட்டுப் படிப்பைப் பார்!
வீடு முழுவதும் எனக்கு எதிர்க்கட்சியாக,
நொட்டை வாசிப்பு எனும் அஸ்திரத்தால்,
என் ஆரம்ப இலக்கிய முயற்சிகள் வீழ்த்தப்பட்டன.
இத்தோடு வீழ்ச்சிப் படலம் முற்றிற்று.ம் .... சுமாராய் இருக்குது  மேலே போ
உங்கள் அங்கீகாரத்துக்கு என் ‘சலாம்’.
அது என்ன மருட்சிப் படலம்?
நீங்கள் கேட்கும் முன் சொல்லத் தொடங்குகின்றேன்.
ஊரில் என் முயற்சிகள் தோற்றதும்,
கல்லூரி நண்பர்களின் துணையோடு,
நல்லூரில்,
அகில இலங்கைக் கம்பன் கழகம்” ஆரம்பமாயிற்று.
மீண்டும் விழா எடுக்கும் வேலை தொடர்ந்தது.
இப்போது ஊரளவில் இல்லாமல் நகரளவில்.
என்ன ஆச்சரியம்?
அங்கும் அதே அனுபவம்.
முதல் விழாவில் ஊக்கப்படுத்தல்.
இரண்டாம் விழாவில் பாராட்டு.
மூன்றாம் விழாவில் புகழ்.
நாலாம் விழாவில் பகை.
பழையபடி நொட்டை வாசிப்பு அஸ்திரப் பிரயோகம்.இம்முறை ஒரு சிறு வித்தியாசம்.
கிராமத்தளவிலான பிரயோகம்,
சற்று வீச்சுடன் இப்போது நகரத்தளவில்.
பின்னர் கொழும்பில் கம்பன் விழா ஆரம்பிக்க,
அதுவே இன்னும் வலிமையுடன் நாடளவில் ஆயிற்று.
மற்றும்படி படிமுறைகள் ஒன்றேதான்.
இவர் வாங்கிய கடனெல்லாம் கம்பன் கழகத்திற்குத் தான்
வாங்கினார் என்று என்ன நிச்சயம்?
ஐயம் எழுப்பியது ஒரு கவிஞனின் கடிதம்.
அது சின்ன மேளத்துக்கு வரும் கூட்டம்.
இது கம்பன்விழாச் சபை பற்றி ஓர் அறிஞரின் அபிப்பிராயம்.
திண்டிட்டு எடுத்த சத்தியைத் திரும்பத் தின்னுறது தான்
இவங்களின்ட இரசனை.
இது ஒரு பேராசிரியரின் பேச்சு.
போர்ச் சூழலை மறக்கப் பண்ண,
சொக்கட்டான் பந்தல் போட்டு,
சோழர் காலத்துக்கெல்லே கூட்டிக் கொண்டு போகினம்”.
விழாவில் விருந்துண்டு சென்ற ஒரு விழலின் விமர்சனம்.
அவையள இனிப் பேசக் கூடாது எண்டு,
பெடியள் நிப்பாட்டிப் போட்டாங்களாம்.
கற்பனையாய் ஒரு கட்டுக் கதை.
யாழ்ப்பாணத்தாலை கலைச்சுத்தான் கொழும்புக்கு
வந்தவங்களாம்.
என்னைக் கண்டு வணங்கி,
நான் அப்புறம் போனதும், ஒரு வஞ்சகரின் வர்ணனை.
கட்டிடத்தைக் கட்டிப் போட்டு,
கொழும்பிலை போய் நிற்கிறாங்கள்,
கட்டிடம் இங்கை இருண்டு சும்மா கிடக்குது.
ஒரு பொய்யரின் முதலைக் கண்ணீர்.
அவர் தானாம் இப்ப அமைச்சர் அஷ்ரப்பிட ஆலோசகர்.
முன்னவர்க்குச் ‘சரிநிகராய்’ ஒரு பத்திரிகையின் பார்வை.
யாழ் கம்பன் கோட்டத்தில் பழைய படி நிகழ்ச்சிகளாம்,
கொழும்பில பருப்பு அவியேலையாக்கும்,
திரும்பி வர ஆயத்தம் நடக்குது போல.
இப்படி என் மேல் எய்யப்பட்ட,
நொட்டை அஸ்திரங்களுக்கு அளவில்லை.
நான் உயிர் கொடுத்துச் செய்த முயற்சிகளெல்லாம்,
துரோகத் தனமாய் விமர்சிக்கப் பட,
மீண்டும் மருண்டு போனேன்.சரி சரி, உன் மருட்சிப் படலம் முடிந்தது தெரிகின்றது.
மேலே போ
உங்கள் குரல் கேட்கிறது.
பொல்லாத அவசரம் ஐயா! உங்களுக்கு.
என்னை ஊக்குவிக்கக் கூடாது என்பதற்காகவே,
அவசரப்படுமாற்போல் நடிக்கிறீர்கள்.
எனக்கென்ன? உங்களை மினக்கெடுத்தாமல்,
உபதேசப்படலத்தையும், ஞானப்படலத்தையும்,
ஒன்றாகவே சொல்லி விடுகின்றேன்.
இப்போது திருப்தி தானே!ஒரு நாள்,
இந்த நொட்டை அஸ்த்திரங்களின் வேதனை தாங்காமல்,
இன்றே கம்பன் கழகத்தை மூடி விடுவது என்ற முடிவோடு ....
என் ஆசிரியர் சிவராமலிங்கம் மாஸ்ரர் முன்பு ஆஜரானேன்.
அவர் என் சுமை தாங்கி.
உரையாடத் தொடங்கினோம்.
என்ன, முகத்தில சந்தோசத்தைக் காணேல” - அவர்.
ஒரு முடிவோட வந்திருக்கிறன் சேர்’ - நான்.
அதென்ன இருந்தாப்போல முடிவு?
இண்டையோட கம்பன் கழகத்த மூடப் போறன் சேர்.
ஏன்டாப்பா?
நான் எவ்வளவு கஸ்டப்பட்டு நல்லது செஞ்சாலும்,
நொட்டை வாசிக்கிறாங்கள்.
அது ஆராக்கள்?
வேறு யார் இந்தப் படிச்சவங்கள் தான்.
"ஹா .....  ஹா .....  ஹா ....."
வாய் விட்டுச் சிரிக்கிறார் அவர்.அவர் சிரிப்பு எரிச்சலூட்டுகிறது.
உங்களுக்குச் சிரிப்பாக் கிடக்கு.
என்ர வேதனை எனக்குத் தான் தெரியும்.
கொஞ்சம் பொறு ..... கொஞ்சம் பொறு ...,
முதலில நான் கேக்கிறதுக்குப் பதில் சொல்லு.
என்ன?
உன்ரை கம்பன் விழாவிற்கு எவ்வளவு சனம் வருகுது?
அது ஆயிரக்கணக்கில இருக்கும், அதுக்கென்ன இப்ப?
உன்ன நொட்டை சொல்லுறவங்கள் எத்தனை பேர்?
அது ...... அது .....
பதினைந்து இருபது பேர் இருக்குமே?
ஓ....... அப்பிடித்தான்.
எட விசரா! ஆயிரம் பேரில இந்தப் பதினைஞ்சு பேர் போனால்,
மிச்சப் பேரெல்லாம் உன்ன வாழ்த்துதுகள் எண்டு,
உனக்கு ஏன் விளங்கேல?
உன்ர முயற்சிகள் அந்தப் பதினைஞ்சு பேருக்கோ?
மற்ற ஆயிரம் பேருக்கோ?
ஒண்டை விளங்கு,
இவங்கள் பதினைஞ்சு பேருக்கும்,
ஒண்டைப் பற்றியும் கவலையில்ல.
உனக்கு நொட்டை வாசிச்சு,
தாங்கள் பெரியாட்களாகப் பாக்கிறாங்கள்.
இப்பிடி எத்தனை பேரை இவங்கள் விழுத்தினவங்கள்
தெரியுமே?
அவங்கள் நொட்டை வாசிக்கத் தொடங்கிறாங்களெண்டா,
உன்னைப் பாத்து,
பயப்பிடத் தொடங்கிட்டான்கள் எண்டுதான் அர்த்தம்.
அது உனக்கு விளங்கேலையே?
அவங்களத் தூக்கி எறிஞ்சு போட்டு நீ உன்ர பாதையில நட.
கொஞ்ச நாள் குலைச்சுப் பாத்திட்டு,
பிறகு வாலாட்டிக் கொண்டு பின்னால வருவாங்கள்.
அவங்கட விசர்க் கதையை விட்டிட்டு,
நீ உன்ர வேலையைப் பார்.
ஓர் அசைவுமின்றி உபதேசித்தார் அவர்.ஆசிரியர் பேசவில்லை. அவர் அனுபவம் பேசியது.
போதி மரத்துப் புத்தனாக எனக்குள் ஞான ஒளி.
அன்றிலிருந்து அசையாமல் நடக்கத் தொடங்கினேன்.
என் மௌனம் கண்டு,
வந்த அஸ்திரங்கள்,
என்னை வலம் வந்து வணங்கிப் போயின.
வென்றேன்.உபதேசப்படலமும், ஞானப்படலமும் முற்றிற்று.
நீங்கள் எழுந்து புறப்படுவது தெரிகின்றது.
கொஞ்சம் பொறுங்கள்.
இதையெல்லாம் ஏன் சொன்னேன் என்று கேட்க வேண்டாமா?
நூல் முடிந்து பயன் உரைக்கும் முன் புறப்பட்டால் எப்படியாம்?
பொறுத்தது பொறுத்து விட்டீர்கள்.
கொஞ்சம் இருங்கள்.
பயனையும் சொல்லி முடித்துவிடுகிறேன்.யார் கண்டது?
நாளை உங்கள் வீட்டிலும்,
நீங்களோ, உங்கள் பிள்ளைகளோ,
ஓர் இளங்கோ கழகத்தையோ,
ஒரு முல்லைப் பத்திரிகையையோ,
ஆரம்பிக்கமாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?
ஒரு வேளை அப்படி நடந்தால்,
தட்டிக்கொடுப்பு,
பாராட்டு,
புகழ்,
பகை,
நொட்டைவாசிப்பு .... என,
உங்களுக்கும் என் அனுபவம் நிகழப் போவது நிச்சயம்.
இதோ! நொட்டை அஸ்த்திரத்தை,
எதிர் கொள்ளும் வகையைச் சொல்லித் தந்து விட்டேன்.
இனியென்ன?
உங்கள் முயற்சியில் நீங்கள் இனி ராஜநடை போடலாம்.
இது பயனில்லையா?ப்பூ .... இதைச் சொல்லத்தான்,
இவ்வளவு நேரத்தையும் மினக்கெடுத்தினனியா?
இரசித்ததை வெளிக் காட்டாமல் நீங்கள் விடும்,
நொட்டை வாசிப்பு விளங்குகிறது.
அட உங்களுக்கும் நொட்டை வாசிக்கத் தெரிந்து விட்டதே
அப்படியென்றால்,
என் கட்டுரை முயற்சி வெற்றிதான்.
பிறகென்ன?
கட்டுரை முடிந்தது.
ஆளை விடுங்கள்.கட்டுரைச் சுமை முடிய,
மீண்டும் வண்டிலால் கழற்றி விடப்பட்ட மாடாய்,
மனம் மகிழ்கிறது.
ட்ரிங் .... ட்ரிங் .... ட்ரிங் ....,
தொலைபேசி அலற, கையில் எடுக்கிறேன்.
ஹலோ ஜீவா பேசுறன், கட்டுரை பிரமாதம் ....
போனில் மீண்டும் ஜீவா.
மீண்டும் கட்டுரை கேட்கப் போகிறாரோ?
எண்ணம் பயமுறுத்த,
அவர் அடுத்த வார்த்தை பேச முன்,
சொறி றோங் நம்பர்.
டக்கெனப் போனை வைக்கிறேன்.

'மல்லிகை' ஜனவரி 1999

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்