புகையும் புருடார்த்தமும் -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகின் நிலைப்பிற்குக் காரணமானது அறமேயாம்.
இவ் அறம் என்பது யாது? 
இதனை முனிவர்தம் நூல்கள் ஓரளவு விளக்கம் செய்யினும்
இன்றுவரை முற்றாய் விளக்கப்படாத பொருளே அறமாம்.
இதனை,
அமரராலும் அறியொணாதது எனக் கச்சியப்பர் பேசுவார். 
இறைவனின் அங்கங்கள் என, 
பரிமேலழகர் இவ் அறம் பற்றி உரைப்பார்.

💨 💨 🌫

நூல்களால் விளங்கிய வகையில் அறம் என்பது இயற்கையேயாம்.
இயற்கையோடு ஒத்திருத்தலும் இயற்கை முரண்களை விலக்குதலுமே,
அறம் என நூல்கள் பேசும்.
அறமாவது,
'விதித்தன செய்தலும் விலக்கியன ஒழித்தலுமாம்' என்பார் பரிமேலழகர்.
இயற்கையே அறம் என்பதால் அதனோடு ஒத்தவர்கள் உயர்ச்சி பெற்றனர்.
முரண்பட்டவர் எத்துணை சிறப்பமையினும் தாழ்ச்சியுற்றனர்.

💨 💨 🌫

இயற்கையே இறைவன் என்றுணர்ந்தார்க்கு அவ்வியற்கை அமைப்பிலேயே,
நல்லாரைக் காத்தலும் அல்லாரை அழித்தலும் நடப்பது தெற்றென விளங்கும்.
இயற்கையில் மாற்றங்கள் அமைத்துப் பாண்டவர் வெற்றியுறவும்,
கௌரவர் தோல்வியுறவும் பரந்தாமன் செய்தமையைப் பாரதம் பேசும்.
இயற்கையே வடிவான இவ்வறத்தினைப் பாடுதலே கம்பனின் நோக்கமுமாம்.

💨 💨 🌫

தன் காவியத்தில் அறத்தின் நிலைக்களமாய் அயோத்தியையும்,
மறத்தின் நிலைக்களமாய் இலங்கையையும் அமைக்கிறான் அவன்.
இவ்விரு நாடுகளின் அற, மற நிலைகளை இயற்கை வர்ணிப்பூடே,
கம்பன் காட்டும் திறன் இரசிக்கத்தக்கது.
அத்திறம் காண்பாம்.

💨 💨 🌫

அயோத்தி.
இது தசரதனால் அறநெறிப்படி நிறுத்தப்பட்ட நாடு.

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண்ணில் கேள்வி
ஆகம் முதல் திண் பணை போக்கி அருந் தவத்தின்
சாகம் தழைத்து அன்பு அரும்பித் தருமம் மலர்ந்து
போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.


என அயோத்தியின் அறநிலையைப் பேசிய கம்பன்,
அதற்கு நேரெதிராய் அறம் புகாத நாடு என,
இலங்கையைச் சுட்டுவான்.

கறங்கு கால் புகர் கதிரவன் ஒளி புகர்மறலி
மறம் புகாது இனி வானவர் புகார் என்கை வம்பே!
திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும், சிதையா
அறம் புகாது இந்த அணிமதிள் கிடக்கை நின்று அகத்தின்!
     
           
அறம், மறம் என ஒன்றுக்கொன்று முரண்நிலை கொண்டு,
இவ்விரு நாடுகள் இருப்பினும் அந்நாடுகளை வர்ணணை செய்கையில்,
இவ்விரு நாடுகளினதும் செழிப்பைக் காட்ட வேண்டிய அவசியம்,
கம்பனுக்கு உண்டாகிறது.
அறத்தால் செழிப்புற்ற நாடு ஒன்று.
இராவணன் மறத்தால் செழிப்புற்ற நாடு மற்றொன்று.
தசரதனின் செங்கோலாட்சியால்,
இல்லாரும் இல்லை, உடையாரும் இல்லை என
எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்த செழித்துக் கிடக்கிறது அயோத்தி.
இராவணன் தன் மறத்துக்கஞ்சி தேவர் தந்த வரத்தாலும்,
இராவணன் அபகரித்த  குபேரனின் செல்வத்தாலும்
களிக்கின்றார் அலால் கவல்கின்றார் 
ஒருவரும் இன்றி மகிழ்ந்து கிடக்கிறது இலங்கை.

💨 💨 🌫

இவ்விரு நாடுகளிலும்,
செல்வத்திற்கோ, மகிழ்ச்சிக்கோ பஞ்சமில்லை.
இவற்றின் செழிப்பினை தன் வர்ணனைப் பாடல்களால்,
நம் கண் முன் கொணர்கிறான் கம்பன்,
இவ்விரு நாடுகளும் ஒத்து உயர்ந்து நிற்பினும்,
காவிய முடிவில் இலங்கை சிதைவுற்று அழிய,
அயோத்தி செழிப்புற்று நிலைக்கிறது.
காரணம்,
இலங்கையில் நின்ற மறமும் அயோத்தியில் நின்ற அறமுமேயாம்,
என்பான் கம்பன்.

💨 💨 🌫

முதல் நாட் போரில் தோற்று நிற்கும் இராவணனைக் கண்டு,
அறங் கடந்தவர் செயலிது என,
உலகம் ஆர்த்ததாய்ச் சுட்டும் கம்பன்,
இலங்கையின் தோல்விக்கு அறமீறலையே காரணமாய்க் காட்டுவான்.
அவ்விடத்தில், இராவணனை நோக்கிப் பேசும் இராமன்,
அறத்தினாலன்றி அமரர்க்கும் அருஞ்சமர் கடத்தல்
மறத்தினால் அரிது
எனப் பேசுவதாய்க் காட்டி,
இராமனின் வெற்றிக்கு அறமே காரணமாயிற்று என்பதையும் வலியுறுத்;துவான்.

💨 💨 🌫

இங்ஙனம் இராவணனால் மறம் நிலைத்த இலங்கையினதும்,
தசரதன், இராமன் போன்றோரால் அறம் நிலைத்த அயோத்தியினதும்,
செழிப்பைப் பலவாற்றானும் பாடிய கம்பன் அச்செழிப்பின் வர்ணணையினூடே,
அயோத்தியின் அறத்தையும், இலங்கையின் மறத்தையும் காட்ட நினைக்கிறான்.

💨 💨 🌫

குறித்த ஒரே விடயத்தை இரு நாடுகளிலும் வர்ணித்துப் பாடி,
அவ்வர்ணனை வேறுபாட்டின் மூலம் அந்நாடுகளின் அற, மற வேறுபாடுகளை,
எடுத்துக் காட்டுகிறான் அவன்.
ஒரே வர்ணனையூடு இரு நாடுகளினதும் அறத் தன்மையை,
கம்பன் வேறுபடுத்துவது நுட்பமாய் எண்ணி இரகசிக்கத்தக்கதாம்.

💨 💨 🌫

மக்களின் பாவனையால் நாட்டில் எழும் புகைகள் முகில்களோடு கலந்து,
எது புகை? எது முகில்? எனத் தெரியாதவாறு மயங்கச் செய்தலையே,
இருநாடுகளிலும் பாடும் ஒரே வர்ணனையாய்க் கம்பன் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.
முதலில் அயோத்தியில் அவன் காட்டும் அவ்வர்ணனையைக் காண்பாம்.

💨 💨 🌫

அயோத்தியில் தங்களை அழகு செய்யும் பெண்கள்,
தம் கூந்தலை வாசனை செய்வதற்காய் இடும் அகிற்புகை ஒருபுறமும்,
விருந்தினர்களை உபசரிப்பதற்காய் அறுசுவை உண்டி சமைக்கக் கிளம்பும் 
அட்டிற் புகை மறுபுறமும் கரும்பிற் சாறெடுத்துக் காய்ச்சும்,
ஆலைகளிலிருந்து பரவும் நறும்புகை இன்னொரு புறமும்.
அந்தணரின் யாகசாலைகளிலிருந்து கிளம்பும் வேள்விப்புகை வேறொரு புறமுமாக,
இந்நாற்புகையும் ஒன்று திரண்டு எது புகை? எது முகில்? எனத் தெரியாத வண்ணம்,
அயோத்தியில் கிடந்ததெனத் தன் கவியைப் படைக்கிறான் கம்பன்.

அகில் இடும் புகை, அட்டில் இடும் புகை,
நகல் இன் ஆலை நறும் புகை, நான் மறை
புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய்
முகிலின் விம்மி, முயங்கின எங்கணும்.


இது அயோத்தியில் அவன் காட்டும் புகை வர்ணனை.

💨 💨 🌫

இலங்கையில் இந்தப் புகை, முகில் மயக்கத்தை,
வேறுவிதமாய்க் காட்டுகிறான் கம்பன்.
இலங்கையில் வானுயர நிற்கும் மாடங்களில் மகிழ்வுற்றிருக்கும் அரக்கியர், 
மகிழ்ந்து இசைக்கும் வீணை ஒலியில் கடலொலி மறைந்து போகிறதாம்.
அம் மகிழ் நிலையில் இருக்கும் அரக்க மகளிர்,
தம் கூந்தலை வாசனையூட்டுவதற்காய் இடும் அகிற்புகை மாடங்களின் வழி வெளியேறி,
எது புகை? எது முகில்? எனத் தெரியாதபடி மயக்குவதாய் காட்டுகிறான். 
இதோ கம்பன் கவிதை.

மகர வீணையின் மந்திர கீதத்து மறைந்த,
சகர வேலையின் ஆர்கலி, திசைமுகம் தடவும்
சிகர மாளிகைத் தலம்தொறும் தெரிவையர் தீற்றும்
அகரு தூமத்தின் அழுந்தின, முகிற்குலம் அனைத்தும்.


புகையும் முகிலும் மயங்குவதான இவ்விரு பாடல்களினூடு,
அந்நாடுகளின் அற, மற வேறுபாடுகள் தெரிவது எங்ஙனம்?
குறிப்பால், 
கம்பன் அதனை உணர்த்துவதைக் காண்பாம்.

💨 💨 🌫

அயோத்தியில் எழுந்தவை நால் வகை புகைகள்.
அவை,
அட்டிற் புகை,
ஆலைப் புகை,
அகிற் புகை,
வேள்விப் புகை என்பன.
இந்த நாற்புகையும் புருடார்த்தங்களான, 
அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கினையும் சுட்டி நிற்கின்றன.
விருந்தோம்புதலால் வெளிப்படும் அட்டிற்புகை அறத்தினையும்,
தொழிற்றிறத்தை உணர்த்தும் ஆலைப்புகை பொருளினையும்,
பெண்களிடும் அகிற்புகை இன்பத்தினையும்,
வேள்விப்புகை வீடு நோக்கிய முயற்சியையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.
அறத்தின் வழி பொருளும் அப்பொருள் வழி இன்பமும்,
அதன் பயனாய் வீடும் விளைந்து நிற்கும் அயோத்தியில்,
இவ் வர்ணனையால் அறமுறைமையைக் காண்கிறோம்.

💨 💨 🌫

இலங்கையிலோ எழுந்தது ஒரே புகையாம்.
அஃது, அங்கு பெண்கள் தம் கூந்தலுக்கிடும் அகிற்புகையே.
அப்புகை இன்பத்தை மட்டுமே காட்டுகிறது.
இதனால், 
அந்நாட்டில் அறம், பொருள், வீடு பற்றிய சிந்தனைகளின்றி,
இன்பம் மாத்திரமே நிலைத்ததை குறிப்பால் நமக்கு உணர்த்துகிறான் கம்பன்.

💨 💨 🌫

இலங்கையில் அறம் இல்லை.
அறத்தால் விளைந்த பொருளும் இல்லை.
வீடு பற்றிய எண்ணமுமில்லை.
அங்கு இருந்ததோ இன்பம் மட்டுமேயாம்.
அறத்தின் வழி பொருளும் பொருளின் வழி இன்பமும்,
அவற்றின் வழி வீடும் அமைதலே ஆன்றோர் காட்டும் வாழ்க்கை நெறி.
மேற்சொன்ன நெறியினின்றும் தவறி அடிப்படைகள் ஏதுமற்று,
இன்பத்தை மாத்திரம் இலங்கை பெற்றிருந்தமையையே, 
இலங்கையின் புகை, முகில் வர்ணனையூடு கம்பன் காட்டும் கருத்தாம். 

💨 💨 🌫

இரு நாடுகளிலும் முகிலும் புகையும் கலக்கும் வர்ணனையைப் பாடினும்,
அப்புகையின் வழியே அயோத்தியில் அறம் நிலைத்தமையையும்,
இலங்கையில் மறம் நிலைத்தமையையும் குறிப்பாய்க் கம்பன் காட்டிவிட,
அயோத்தியின் வாழ்வினதும், இலங்கையின் தாழ்வினதும்
காரணங்கள் நமக்குச் சொல்லாமற் புரிகின்றன.
கம்பனின் ஆற்றல் கண்டு வியந்து நிக்கிறோம் நாம்.

💨 💨 🌫 💨 💨 🌫

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்