'விட்டார், வீடுற்றார்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

யர் மனிதப் பிறவியின் நோக்கம்,
ஆன்ம ஈடேற்றமேயாம்.
அறிவுப் பொருளாகிய ஆன்மா,
ஆணவமலத்தின் வயப்பட்டு சடம்போற் கிடக்குமோர் நிலையுண்டு.
ஆன்மாவின் இந்நிலையை, சித்தாந்தம் 'கேவலநிலை' எனக் குறிக்கும்;.

💧 💧 💧

அறிவிருந்தும் சடம் போலக்கிடக்கும் ஆன்மாவை உய்விப்பதற்காக,
அதன், விருப்பு, அறிவு, செயல் ஆகியவற்றை ஓரளவு தூண்டி,
ஆணவத்தால் விளைந்த கன்ம அனுபவங்களை அவை பெற,
தனு, கரண, புவன, போகங்களை மாயையினின்றும் உபகரிக்கிறான் இறைவன்.
அறிவற்ற நிலையிருந்து விடுபட்டு இச்சிற்றறிவு தூண்டப்பட்ட நிலையை,
ஆன்மாவின் 'சகலநிலை' எனச் சித்தாந்தம் சுட்டும். 

💧 💧 💧

தனு, கரண, புவன, போகங்களுக்கு உட்பட்ட ஆன்மா,
நான், எனது என்னும் அகங்கார மமகாரங்களுக்கு உட்பட்டு,
பல பிறவிகளிலும் இன்ப, துன்ப அனுபவங்களைப் பெற்று,
அவ்வனுபவங்களால் மெல்ல மெல்ல அறிவு வயப்படுகிறது.
குறித்த ஓர் நிலையில் முழுமையாய் மலங்களினின்றும் விடுபடும் ஆன்மா,
தன்னை உணர்ந்து பின் இறைவயப்படுகிறது.
இதனையே முத்தி நிலை என்பர்.
இம் முத்தி நிலையை ஆன்மாவின் 'சுத்த நிலை' எனப் பேசும் சித்தாந்தம்.

💧 💧 💧

அகங்கார, மமகாரங்கள் முற்றாய் நீங்குதலே,
முத்தி நிலைக்கான ஆன்மாவின் தகுதியாய்க் கருதிப்படுகின்றது.
மாயைக்கு உட்பட்ட சகல நிலையில்,
தனு, கரண, புவன, போகங்களோடு கூடிய ஆன்மாவிடம்,
முதலில் நான் எனும் அகங்காரம் பிறக்கிறது.
அதன் தொடர்பாய் எனது எனும் மமகாரம் பிறக்க,
அதனால் ஆன்மா பந்தப்படுகிறது.

💧 💧 💧

பின்னர் ஆன்ம பக்குவம் ஏற்பட,
அகங்கார, மமகாரங்கள், தாம் தோன்றிய நிலைக்கு மறுதலையாய்,
முதலில மமகாரமும் பின்னர் அகங்காரமுமாய் நீக்கமுறுகின்றன.
தோற்றத்தின்போது மரமாகிப் பின் கிளைவிடுதலும்,
அழிப்பின்போது கிளைகள் துண்டிக்கப்பட்டு பின் மரம் வீழ்த்தப்படுவதும்,
மேற்கூறிய அகங்கார மமகாரங்களின் தோற்றம், மறைதலுக்கான தக்க உவமையாம்.
இங்ஙனம் மலங்களின் வயப்பட்ட ஓர் ஆன்மா,
மமகார அகங்கார, நீக்கம் பெற்று, 
பரம்பொருளோடு கலப்பதாய சித்தாந்தக் கருத்தை,
நேரடியாய் அன்றி குறிப்புப் பொருளால்,
கம்பன் ஓர் காட்சியில் விளக்கம் செய்கிறான்.
கம்பனின் அவ் அற்புத விளக்கத்தைக் காண்பாம்.

💧 💧 💧

கங்கைக் கரையில் இராமனும் குகனும் சந்திக்கின்றனர்.
அன்போடு வந்த குகனை இராமன் தன் சகோதரனாய் ஏற்கிறான்.
இது, கம்பனால் அமைக்கப்பட்ட வெளிப்படையான காட்சி.
இக்காட்சியில் இராமனைத் தெய்வமாகவும்,
குகனை மலவயப்பட்ட ஆன்மாவாகவும்,
இராமன், குகனை அங்கீகரிப்பதை ஆன்ம விடுதலையாகவும் கொண்டு,
மறைபொருளை இக்காட்சியின் உட்பொருளாய்ச் சுட்டுகிறான் கம்பன்.

💧 💧 💧

அயோத்தியா காண்டம், குகப்படலம்.
இராமனைச் சந்திக்கவென,
கையிலும் இடையிலும் வில்லும் வாளும் கிடக்க,
சுற்றத்தார் சூழ வருகிறான் குகன்.
சீறும் கண்கள், கடுமையான தோற்றம்,
இது கம்பன் குகனைக் காட்டும் முறைமை.

💧 💧 💧

முனிவர்கள் சூழ ஆச்சிரமத்திற்குள் வீற்றிருக்கிறான் இராமன்.
இராமனைக் காணும் ஆர்வத்தால் வந்தவனாகிய குகன்,
ஆச்சிரமம் அண்மித்து விட்டதை உணர்ந்து மரியாதை கருதி,
குறித்தவோர் எல்லையில் உறவினர்களை நிறுத்தி விடுகிறான்.
பின்னர் இராமனைக் காணும் எண்ணம் மேலும் உந்த,
கையிலும் இடையிலுமிருந்த வில்லையும் வாளையும் உதறுகிறான்.
குற்றமில்லாத மனங்கொண்ட குகனிடம் இப்போது அன்பு மட்டுமே அமைந்து கிடக்க,
அவ்வன்போடு ஆச்சிரமத்தை அணுகுகிறான் அவன்.
தன் அன்பு நிலையால் இலக்குவனின் கருணைக்கு ஆளாகி,
அவன் துணையால் இராம தரிசனமும்,  அனுகிரகமும், அங்கீகரிப்பும் கிட்ட,
சகோதரனாய் இராமனுடம் ஒன்றாகிறான் குகன்.

💧 💧 💧

குகன், இராமனைக் காண வந்ததாய அந்நிலையை,
கீழ் காணும் கம்பனின்கவி வெளிப்படுத்துகின்றது.

சுற்றம் அப்புறம் நிற்க, சுடு கணை
விற்றுறந்து, அரை வீக்கிய வாளொழித்து
அற்றம் நீத்த மனத்தினன், அன்பினன்
நற்றவப் பள்ளி வாயிலை நண்ணினான்.

இது வெளிப்படையான கம்பனின் காட்சியமைப்பு.
இக்காட்சியமைப்புக்குள்,
கம்பன் காட்டும் சித்தாந்த உட்பொருளை இனிக் காண்பாம்.

💧 💧 💧

இராமனின் நிலையோடு ஒப்பிடும்போது,
குகன் சாதியால் வேறுபட்டவன், தாழ்ந்தவன், வேட்டையாடித் திரிபவன்.
வியாபக அறிவு கொண்ட இறைவனோடு ஒப்பிடும்போது,
எல்லைப்பட்ட அறிவுடைய ஆன்மா,
சாதியால் வேறுபட்டது, தாழ்ந்தது.
புலன் நுகர்விற்காய் உலக இன்பங்களை வேட்டையாடித் திரிவது.
இம் முதலொப்புமையால் இராமனைப் பரம் பொருளாயும்,
குகனை மலவயப்பட்ட ஆன்மாவாகவும் உணர்த்துகிறான் கம்பன்.

💧 💧 💧

இறைநாட்டம் ஏற்பட,  பரம்பொருளை நோக்கிய ஆன்மாவின் பயணம் தொடங்கும்.
இராமன்மேல்கொண்ட அன்பால் குகன் அவனை நாடுதல் இதற்கு ஒப்புமையாம்.
பக்குவப்பட்ட ஆன்மா, உலகியல் வயப்பட்ட ஆன்மாக்களினின்றும் நீங்கி,
தனித்து ஆண்டவனை நாடும்.
'அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்'
அகன்றாள், அகலிடத்தார் ஆசாரத்தை' எனும் நாவுக்கரசர் தேவாரமும்,
'உற்றாரை நான் வேண்டேன்' எனும் மணிவாசகர் திருவாசகமும்,
இந்நிலையை விளக்கம் செய்யும் தக்க மேற்கோள்கள்.

💧 💧 💧

குகனும் குறித்த ஓர் நிலையில்,
சுற்றத்தாரை நிறுத்தி இராமனை நோக்கிச் செல்கிறான்.
உலகியலினின்றும் நீங்கிய ஆன்மா,
முதனிலையில் மமகார நீக்கம் பெறும்.
எனது என்னும் மமகாரத்தின் உச்சநிலை வெளிப்பாடே உறவுகள்.
இராமனைக் காண வரும் குகன் உறவினரை விட்டுத் தனித்து முன்னேறுதல்,
மமகார நீக்கத்தின் விளக்கமுமாம்.
'சுற்றம் அப்புறத்தே நிற்க'.

💧 💧 💧

உறவினரைத் துறந்த குகன்,
தொடர்ந்து வில்லையும், வாளையும் துறக்கிறான்.
வில்லும், வாளும் தற்காப்புக் கருவிகள்.
அவை நான் எனும் எண்ணத்தின் குறியீடுகள்.
மமகாரம் நீங்க, தொடர்ந்து அகங்காரம் நீங்குதல் போல்,
உறவினரை நீக்கிய குகன் பின் ஆயுதங்களையும் நீக்குதல்,
அகங்கார நீக்கத்தின் அடையாளமாய்க் குறிக்கப்படுகிறது.
'சுடு கணை விற்றுறந்து, அரை வீக்கிய வாள் ஒழிந்து'

💧 💧 💧

நான், எனது என்பவை நீங்க,
மாசு நீங்கி ஆன்மா தூய்மைப்படுகின்றது.
இதனைக் குறிக்கவே, 
'அற்றம் நீக்கிய மனத்தினன்' எனும் தொடரை இடுகிறான் கம்பன். 
(அற்றம்-குற்றம்)
ஆன்மா, மாசு இருந்து நீங்கப் பெற்றதென்பதைச் சுட்ட நினைக்கும் கம்பன்,
குகனைத் தூய மனத்தினன் என்று சொல்ல வழியிருக்கவும், அவ்வாறு சொல்லாது,
'அற்றம் நீக்கிய மனத்தினன்' என்று தத்துவ நோக்கம் கருதிப் பேசுகிறான்.
ஆன்மாவில் பொருந்திக் கிடந்த இம்மாசுகள் நீங்கியதும் தூய அன்பு சுரக்கும்.
'காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி' எனும் சம்பந்தர் தேவார அடி, 
இவ் அன்பு நிலையைச் சுட்டும்.
நான், எனது எனும் குற்றங்கள் நீங்கிய குகனும்,
இவ் அன்பு நிலையை எய்தியமையைக் காட்ட,
அடுத்த சொல்லை இடுகிறான் கம்பன்.
'அன்பினன்'

💧 💧 💧

மேற் கூறியவாறு தூய்மையுற்று,
அன்பினால் இறை சந்நிதி வயப்பட்ட ஆன்மாவுக்கு,
குருவருள் கிட்ட அக்குருவின் துணையால் இறையருள் கிட்டுதலும்,
பேதம் நீங்கி அவ் ஆன்மா இறையோடு ஒன்றாதலும் நிச்சயமன்றோ.
இங்கும் குருவின் நிலையில் இலக்குவன் காட்டப்படுகிறான்.
குகனின் அன்பு நிலைகண்டு தக்கவாறு இராமனிடம் முன்மொழிந்து,
அவனை இராமனின் அன்புக்கு ஆளாக்குகிறான் என்பதன் மூலம்,
குருவருள் ஆன்மாவைத் திருவருளிடம் சமர்ப்பிக்கும் நிலை உணர்த்தப்படுகிறது.

💧 💧 💧

அன்புருவாய் பூரண நிலைப்பட்ட ஆன்மா,
குருவின் துணையால் இறை சந்நிதி வயப்படும்.
குகனும் இலக்குவனின் துணையால் இராம சந்நிதி வயப்படுகிறான்.
'நற்றவப் பள்ளி வாயிலை நண்ணினான்.'

💧 💧 💧

குகனின் அன்பினால் அரசன், வேடன் எனும் பேதங்கள் நீங்கப் பெற,
சகோதரனாய் அவன் இராமனுடன் ஒன்றாகும் நிலை கிட்டுகிறது.
முக்தி நிலை பெற்ற பின்பும் சில ஆன்மாக்கள் உடலோடு கூடி நிற்கும்.
இந்நிலையை 'சீவன் முத்த நிலை' எனச் சித்தாந்தம் பேசும்.
கன்மம் முடிவுறாததால் உடல் சுமந்து வாழும் அச் சீவன் முத்தர்கள்,
உலகியல் துறந்து நின்று தாம் பெற்ற இறையருளை,
மற்றையோர்க்கும் ஆக்கி அருள்வர்.
சீவன் முத்த ஆன்மாக்கள், மற்றோரையும் இறை வயப்படுத்துதல் போல,
குகனும் தன் உற்றாரையும் இராமனின் அன்பிற்கு உட்படுத்துகிறான்.
'உன் கிளை எனதன்றோ உறுதுயர் உறலாமோ
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான்'
என,
பின்னர் வரும் இராமனின் கூற்று,
குகனால் மற்றைய வேடர்களும் இராமன் கருணையைப் பெற்றமையை
வெளிப்படுத்தி நிற்கிறது.

💧 💧 💧

இவ்வாறு குகன், இராமன் சந்திப்புக் காட்சியில்,
உட்பொருளாய்க் கம்பன் செய்யும் சித்தாந்த விளக்கம்,
அவன்தன் கவியாற்றலோடு தத்துவ ஆற்றலையும் விளக்கி நின்று,
கற்றோர் நெஞ்சைக் களிக்கச் செய்கிறது.

💧 💧 💧

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்