பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 26: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- பாராளுமன்றத்தில் தங்களுக்குப் பேச இடந்தருவதில்லை என்றும் அதனால் மக்கள் தங்களைத் தவறாய் நினைக்கிறார்கள் என்றும் கூட்டமைப்புக்குள் ஒருசிலர் போர்க்குரல் எழுப்புகிறார்களே. கவனித்தீர்களா?

பதில்:-

கவனித்தேன். 
அவர்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று தோன்றுகின்றது.
இதுநாள் வரைக்கும் அங்கு இவர்கள் பேசி,
என்னத்தைக் கிழித்தார்கள் என்பது முதற்கேள்வி. 
பேசாததால் மட்டுமா இவர்களை மக்கள் தவறாக நினைக்கிறார்கள் என்பது, 
இரண்டாவது கேள்வி. 
பாராளுமன்றின் உள்நுழைந்த நம் தமிழ்த் தலைவர்கள் எல்லோரிடமும்,
இக்கேள்விகளைக் கேட்கலாம் போல் தோன்றுகிறது. 
எல்லோரும் பேச நினைக்கிறார்களே தவிர,
செயற்பட நினைப்பதாய்த் தெரியவில்லை. 
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென வருடந்தோறும் ஒதுக்கப்படும் தொகையில், 
அந்தந்த வருடங்களில் தாம் செய்த பணிகளை, 
வருடமுடிவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலாய் வெளியிட்டால்,
மக்கள் மனதில் அவர்கள்பற்றிய மதிப்பு உயரும்.
அதுதவிர, தம் சொந்த முயற்சியில், 
வருடந்தோறும் மக்களுக்காய்ச் செய்துவரும் பணிகளையும்,
இதேபோல அவர்கள் மக்களுக்குத் தெரிவிக்கலாம். 
இங்ஙனமாய் இவர்கள் வருடந்தோறும் வெளியிடும் பட்டியல்களைப் பரிசோதித்து, 
அதி உயர் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே,
அடுத்த தேர்தலில் 'சீற்' கொடுப்பது பற்றி,
அவர்களின் கட்சி முடிவு செய்யலாம். 
இவையெல்லாம் நடந்தால் நம் இனம் உருப்படும். 
ஒரு பேச்சாளனாய்ச் சொல்லுகிறேன். 
செயலோடு ஒப்பிட்டால் பேச்சு இரண்டாம் பட்சம் தான்.

😂உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'சொற்களில் சிறந்தது செயல் என்பதுதான்.' அண்மையில் வந்த சிவகார்த்திகேயனின் சினிமா வசனம்.-எப்பூபூபூடி

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:-
வடக்கில் புகழ்பெற்ற டாக்டர்கள் சிலரும், பத்திரிகையாளர் சிலரும், சில கட்சிகளிலிருந்து ஒதுக்கப்பட்ட தலைவர்கள் சிலரும் ஒன்று சேர்ந்து சில காலத்தின் முன்னர் பறை முழங்கிப் பூட்டிய அறை ஒன்றினுள் தமிழ் மக்கள் நலம் காக்கவென, உருவாக்கிய 'தமிழ் மக்கள் பேரவை'யின் 'அசுமாத்தத்தை' அண்மைக்காலமாகக் காணமுடியவில்லையே. பேரவை இருக்கிறதா? இல்லையா?

பதில்:-

ஆராயவேண்டிய கேள்விதான். 
மக்களோடு ஒன்றுபடாத அந்தக் கூட்டத்தார், 
'இனஎழுச்சி' என்று பேசியதெல்லாம் வெறும் 'பம்மாத்துத்' தான் என்பது,
எனக்கு எப்போதோ தெரியும். 
அந்நேரத்தில் கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்படுத்தத் தொடங்கியிருந்த,
மு.முதலமைச்சரை முன்வைத்துக் கூட்டமைப்பை உடைப்பதுதான்,
அவர்களின் நோக்கமாய் இருந்தது.
மக்கள் நலம் என்ற பேச்செல்லாம் வெறும் 'டூப்பு'த்தான். 
மக்கள் நலம் பற்றிய கூட்டத்தை, 
பூட்டிய அறைக்குள் ஏன் நடத்த வேண்டும்? என்ற கேள்வி அப்போதே எழுந்தது. 
ஏதோ பிழையான இடத்திற்கு வந்து அகப்பட்டு ஒடுபவர்கள் போல, 
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதைத் தவிர்த்து,
மு.முதலமைச்சர் உட்பட எல்லோரும் தலைதெறிக்க ஓடிய வேகம்,
அப்போதே சந்தேகத்தை ஏற்படுத்தியது. 
மக்கள் நலனே நம் நோக்கம், அரசியல் தங்களது நோக்கமில்லை என்றவர்கள், 
பிறகு, தமது கூட்டம் ஒன்றில் வைத்தே,
முதலமைச்சரைப் புதிய கட்சி ஆரம்பிக்க அனுமதித்தனர்.
அப்படிக் கிளர்ந்தெழுந்தவர்களில் இருந்த டாக்;டர்கள், 
மீண்டும் பணத்தைக் குவிக்கும் தங்கள் தொழிலைப் பார்க்கச் சென்றுவிட்டனர். 
மு.முதலமைச்சர் அந்த எழுச்சியைப் பயன்படுத்திப் பாராளுமன்றத்திற்குப் போய்விட்டார். 
பத்திரிகையாளர் மீண்டும் தன் தொழில் வளர்க்கும் முயற்சியைத் தொடர்கிறார். 
இங்கு ஒரு புதிய கட்சி பிறக்கும், 
அதிலாவது தமக்குக் கௌரவமான வாழ்வு கிடைக்கும் என்று நம்பி வந்த,
சில ஒதுக்கப்பட்ட கட்சிக்காரர்கள், 
இரண்டு தோணியில் கால் வைத்தவர்கள்போல 'அந்தரித்து' நிற்கிறார்கள். 
இப்போது அவர்கள் மீண்டும் பிறந்த 'வீடு' தேடிவந்து,
ரோசமாய் உரிமைக்குரல் எழுப்புவதும், 
பின்னர் கொஞ்சமும் ரோசமின்றி அவ் உரிமைக்குரலைக் கைவிடுவதுமாய்,
காலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். 
மொத்தத்தில் ஏமாந்தவர்கள் மக்கள்தான். 

😉உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'பேரவை வெறும் பேர்  அவையாயிற்று. ஹி.. ஹி..'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆


கேள்வி 03:-
கோயிலுக்குப் போகாமல் கடவுளைக் கும்பிட முடியாதா? 

பதில்:-

முடியாதென்று யார் சொன்னது? 
தாராளமாய்க் கும்பிடலாம். 
ஆனால் ஒன்று, கோயிலுக்குப் போய்க் கும்பிடுவதை விட,
போகாமல் கும்பிடுவதற்கு நிறைய மனஉறுதி வேண்டும். 
ஒரு பாடசாலைக்குச் சென்று வகுப்பிலிருந்து ஆசிரியர் வழிகாட்ட, 
படித்துப் பரீட்சை எழுதிப் 'பாஸ்' பண்ணுவதற்கும்,
இவை எவற்றையும் செய்யாமல்,
தானாகப் படித்துப் பரீட்சை எழுதிப் பாஸ் பண்ணுவதற்கும் உள்ள வித்தியாசம்தான்,
மேற் சொன்ன இரண்டுக்குமுள்ள வேறுபாடு. 
உங்களுக்கு எது வசதியோ அதைச் செய்யலாம். 
பாஸ் பண்ணுவது முக்கியம்.

🛕உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'ஷூம்மில' படிக்கிறதப் பற்றிச் சொல்லுறாரோ?

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:-
ஐயா! உங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் அரசியல் கருத்துக்கள் எப்பவும் கூட்டமைப்புக்கு ஆதரவாக இருப்பதன் நோக்கம் என்ன? கருத்துக்கள் அறம் சார்ந்து வருவதில் தயக்கம் ஏன்?

பதில் :-

கூட்டமைப்புத்தான் உயர்ந்தகட்சி! 
அதிலிருக்கும் தலைவர்கள் தான் சிறந்த தலைவர்கள்! 
அவர்களை விட்டால் தமிழர்களுக்கு வேறு கதியில்லை! என்ற எண்ணத்தில், 
நான் அவர்களை ஆதரித்து எழுதவில்லை. 
அவர்கள்பற்றி என் மனதிலும் பல குறைகள் உள்ளன. 
கட்சியை நடத்துவதில் உள்ள ஜனநாயகமின்மை, 
மக்கள் தொடர்பாடலில் காட்டும் அலட்சியம், 
பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்காமல் நழுவும் போக்கு, 
தங்கள் பலத்தைவிட எதிரிகளின் பலவீனத்தை வைத்து,
அரசியல் நடத்த நினைக்கும் கீழ்மை, உட்கட்சிப் பூசல்கள் என,
அக் குறைகள் பலவாய் விரியும். 
இவை தெரிந்தும் நான் அவர்களை ஆதரிப்பதற்கு ஒரேயொரு காரணம்  தான் இருக்கிறது.
போரில் உடைந்த எம் இனத்தின் முதுகெலும்பு இன்னும் நிமிராத நிலையில்,
பேரினத்தாரோடும், உலகநாடுகளோடும் தொடர்பு கொண்டு,
நம் இனத்திற்குத் துணை செய்ய, 
உள்ளதில் வள்ளிசான ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகிறது. 
தமிழ்த் தலைமை என்ற பெயரில் இயங்கிவரும் மற்றைய கட்சிகளோடு ஒப்பிடும்போது, 
இவர்கள் சற்று மேம்பட்டு நிற்பதால்த்தான்,
இவர்களைச் சிலவேளைகளில் ஆதரித்து எழுதுகிறேன். 
இவர்களது குறைகளை எழுத்தாலும் பேச்சாலும்,
பல இடங்களில் சுட்டிக்காட்ட நான் தவறியதில்லை. 
மொத்தமாக நம் தமிழ்த் தலைமைகளுக்கு, 
பாராளுமன்றப் பதவியும், அதனால் வரும் புகழும், 
அங்கு கிடைக்கும் பணமும் தான் முக்கிய நோக்கமாய் இருக்கின்றது. 
தேர்தல் காலத்தில் மட்டும் உண்டாகும்,
இவர்களின் வீரியமான மக்களை நோக்கிய செயற்பாடே,
நான் சொல்லும் இக்கூற்றுக்குச்  சாட்சி.
யதார்த்தம் அறிந்தும், உலக அரசியல் அறிந்தும், 
சூழ்நிலையைக் கணித்தும் இயங்குவதால்,
தமிழர் பிரச்சனையில் கூட்டமைப்பினரைத்தான் உலகநாடுகள் முக்கியப்படுத்துகின்றன. 
அதையும் நீக்கிவிட்டு இனம் எழ முடியாது என்பதால்த்தான்,
அவர்களை நான் ஆதரித்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

🤭 உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'குளிருக்கு, கிழிஞ்ச கம்பளி கிடைச்சாலும் வாங்கிப் போர்க்க வேண்டியதுதான். வேறு வழி?'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 05:-
பிராமணர்களை நாம் கட்டாயம் மதித்துப் போற்றத்தான் வேண்டுமா?

பதில் :-

நிச்சயம் போற்றத்தான் வேண்டும்! 
காரணம் பேரறிவாளிகளான நம் தமிழ்ப்புலவர்கள் பலர்,
அக்கருத்தை வலியுறுத்துகிறார்கள். 
'அந்தணர் என்போர் அறவோர்' என அந்தணரின் பெருமையை,
வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்கிறார். 
'தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்' என்று,
நமது சுந்தரர் சொல்லியிருக்கிறார். 
'கரியமாலினும் கண்ணுதலானினும் பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால்' என்று,
எங்கள் கம்பன் சொல்லியிருக்கிறான். 
இப்புலவர்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். 
இவர்கள் எல்லாம் சொல்லும்போது,
அந்தணரை நாம் மதித்துத்தான் நடக்கவேண்டும்.
ஆனால் ஒன்று. 
'எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுதல்',
'அறுதொழில் செய்தல்',
'பிறப்பொழுக்கம் குன்றாமை',
'எக்காரணம் கொண்டும் ஆசாரங்களைக் கைவிடாமை,'
'உலகுயிர்கள் அனைத்திற்குமாக வழிபாடு செய்தல்',
'தாம் கற்ற வேதமந்திரங்களின் ஆற்றலால் இயற்கையைக் கட்டுப்படுத்துதல்' 
போன்ற பல தகுதிகளும் பிராமணர்களுக்கு இருக்க வேண்டும் என்றும்.
இந்தப் புலவர்கள்தான் சொல்கிறார்கள். 
இத்தகைய தகுதியுடையவர்களைத்தான் போற்றியும் மதித்தும் நடக்க வேண்டும் என்பது,
அவர்களது கருத்தாய் இருக்கிறது. 
அளவுகோலைத் தந்து விட்டேன். 
இனி அதைக்கொண்டு நடந்து, யாரைப் போற்ற வேண்டும்? 
யாரைப் போற்றக் கூடாது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
 

😊உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'தடவிப்போட்டுக் குத்திறதென்கிறது இதைத்தான். வாரிதியார் வடிவாய்த் தடவியும் இருக்கிறார். குத்தியும் இருக்கிறார். ஹி.. ஹி..'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்