பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 28: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- மகாராஜா நிறுவன அதிபர் இராஜமகேந்திரன் அவர்களின் மறைவு பற்றி? 

பதில்:-

உலகைத் தன் உறவாய் நினைத்த ஒரு பெருமனிதனை நாம் இழந்து நிற்கிறோம். 
தன்னைப் பொருளாதாரத்தால் மட்டுமன்றி, இன்னும் பல வழிகளாலும், 
உயரச் செய்த தன் தலைமகனை இழந்து இலங்கைத்தாய் கண்ணீர் சிந்துகிறாள். 
இலங்கைத் தமிழர்கள் இத்தேசத்தை வளப்படுத்துவதிலும் பங்காற்றுவார்கள் என்பதற்கு, 
சாட்சி பகன்று நின்ற ஒரு மாமேரு சரிந்துவிட்டது. 
கட்சிகளின் செல்வாக்கைத்தாண்டி, நடுநிலை தவறாது, 
அனைத்து இன, மத மக்களின் நலனுக்காகவும் துணிந்து குரல் கொடுத்து வந்த, 
ஒரு மகோன்னதனின் மறைவால் இலங்கை மக்கள் ஒருசேரக் கண்ணீர் வடிக்கின்றனர். 
ஊடக பலத்தைத் தன் நலத்திற்காக அன்றி, 
தேசமக்களின் நலத்திற்காகத் துணிந்து முன்னெடுத்த, அவ் உயர் தலைவனின் மறைவு,
இலங்கை மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. 
எங்கெல்லாம் வறியவர்கள் கண்ணீர் சிந்துகிறார்களோ! 
அங்கெல்லாம் அவர்தம் கண்ணீரைத் துடைக்க, 
அழைக்காமலே நீண்ட கரங்கள் ஓய்ந்துவிட்டன. 
பொருளாதாரத்தால் விண்தொட்டபின்னும் மனிதப் பண்பால் மண்தொட்டு நின்ற, 
அப் பண்பாளனின் அன்பையும் நேசத்தையும் மறக்க முடியாமல் அனைவரும் வாடுகின்றனர்.
தேசநலன் பற்றிய அச்சம் பலரதும் மனதில் படரும் வேளையில்,
அதைக் காப்பதற்காய்த் துணிந்து குரல் கொடுத்துவந்த ஒரு வீரியனின் குரல் அடங்கிவிட்டது.
தினமும் இலங்கை பூராகவும் அவருக்காக நடைபெறும் அஞ்சலிக் கூட்டங்கள்,
அவரின் அகவிரிவைக் காட்டுகின்றன. 
அவர் இழப்பு தேசத்தின் இழப்பா? தமிழர்களின் இழப்பா? மானுடத்தின் இழப்பா? என்று, 
சரியாய்ச் சொல்லமுடியவில்லை.

🙏உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣 'தமிழர்களைத் தலைநிமிர்த்திய தமிழன்'.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:- இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வீர்களோ தெரியவில்லை. ஆனாலும் இது கல்லூரிகளிலே இப்போது ஓர் பிரச்சனையாய்ப் பேசப்படுகிறது. முடிந்தால் இப்பிரச்சனை பற்றி உங்கள் கருத்தறிய விரும்புகிறோம். இராமாயண அயோத்தியா காண்ட குகப்படலத்தில் வரும் ஒரு பாடல் தரம் 11 பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அப்பாடலின் கருத்தில் பலரும் குழம்புகிறார்கள். பாடலைக் கீழே தருகிறேன்.​
சுழித்து நீர் வரு துறை ஆற்றை, சூழ் படை
கழித்து நீங்கியது என, கள்ள ஆசையை
அழித்து, வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை
இழித்து, மேல் ஏறினான் தானும் ஏறினான்.

இப்பாடலில் 'கள்ள ஆசையை அழித்து,' என வரும் தொடரைப் பரதனோடு பொருத்தி,  அவனுக்கு அயோத்தியை ஆளும் ஆசை இருந்தது என்றும், அதனையே கம்பர் மேற் தொடரால் குறிப்பிடுகிறார் என்றும், சில ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். இதுபற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறோம். 

பதில்:-

நான் விளையாடக்கூடிய 'கிறவுண்டில்' கேள்வி கேட்டிருக்கிறீர்கள். 
இதற்குப் பதில் சொல்லாமல் வேறு எந்தக் கேள்விக்குப் பதில் சொல்லப்போகிறேன். 
விடயத்திற்கு வரலாம். 
'எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான். படித்தவன் பாட்டைக் கெடுத்தான்' 
என்று சொல்வது இதைத்தான். 
காவியம் முழுவதையும் படிக்காமல்,
'சிலபஸ்ஸூக்கு' போட்ட பகுதியை மட்டும் படித்துவிட்டு 
விளக்கம் சொல்லப் புறப்படுவதால் வரும் நஷ்டம் இதுதான். 
முதலில் பாட்டின் பொருளைப் பார்க்க வேண்டும். 
குகனைச் சந்தித்து நட்புப் பூண்ட பிறகு, 
குகனின் சேனையின் உதவியுடன் பரதனுடன் வந்தவர்கள் கங்கையைக் கடக்கிறார்கள். 
எல்லோரையும் அனுப்பிய பின்பு பரதனும் படகேறுகிறான். 
மேற்பாடல் அந்தச் செய்தியைத்தான் சொல்கிறது. 
சுழித்து ஓடுகிற நீரைக் கொண்ட கங்கை ஆற்றினை,
பரதனுடன் வந்த படைகள் கடந்து நீங்கின. 
(சுழித்து நீர் வரு துறை ஆற்றை, சூழ் படை கழித்து நீங்கியது.) 
இதுவரைக்கும் உங்கள் ஆசிரியர்களுக்குப் பிரச்சனை இராது என்று நினைக்கிறேன். 
இனி வருகின்ற வரிகளைப் பின்வருமாறு, 
கொண்டு கூட்டித்தான் பொருள் கொள்ள வேண்டும். 
பண்டு அவனி ஆண்ட வேந்தரின் கள்ள ஆசையை அழித்து, 
இழித்து மேல் ஏறினான்தானும்  ஏறினான் 
இதுதான் இப்பாடலுக்குப் பொருள் கொள்ளவேண்டிய முறை.
இதன் பொருள், இதுகால்வரைக்கும் பூமியை ஆண்ட மன்னர்களின், 
மனத்திருக்கும் எப்படியேனும் அரசாள வேண்டும் எனும் கள்ளத்தனமான ஆசை,
தன்னிடம் சேராமல் முற்றாய் அழித்து, அத்தகைய ஆசை உள்ளவர்களை இழிவு செய்து,
மேல் எழுந்தவனான பரதனும் படகில் இறுதியாகச் சென்று ஏறினான் என்பதேயாம்.
சிலர் கள்ள ஆசை எனும் தொடரைப் பரதன் மேல் ஏற்றக்கூடாதா? எனக் கேட்பர். 
நல்லவனைக் கெட்டவானாக்குவதில் எம்மவர்க்கு இருக்கும் ஆசையை என்ன சொல்ல?
இதுவும் அப்படியான ஒன்றுதான். அவர்கள் நினைக்கின்றவகையில்,
கள்ள ஆசை என்பது பரதனின் ஆசையைச் சுட்டுகிறதென்றால், 
அப்பாடலில் வரும் வேந்தரை இழித்து என்ற தொடரும், 
மேல் ஏறினான் எனும் தொடரும் ஏன் இடப்பட்டிருக்கின்றன என்று,
அவர்கள் சொல்ல வேண்டும். 
வேந்தரை இழித்து என்ற தொடருக்கு,
மற்றைய வேந்தர்கள் இழிவடையும்படியாக என்பதே பொருள். 
மேலேறினான் எனும் தொடருக்கு 
மற்றவர்களைத் தாழ்த்தி தான் உயர்ந்தான் என்பதே பொருள்.
இத்தொடர்களைப் பார்த்த பின்பும் கள்ள ஆசை எனும் விடயத்தை,
பரதனோடு பொருத்துவது எவ்வளவு பெரிய தவறு.
இன்னொன்றும் சொல்கிறேன். 
கள்ள ஆசை பரதனதுதான் என்று சொல்லவேண்டுமானால்,
காவியத்தின் எங்கேனும் அதற்கான சான்று இருக்க வேண்டும். 
பரதனைச் சந்திக்கும் முன்பாகத் தவறுதலாக அவனை ஐயுற்ற,
குகனும், கோசலையும் பரதனது தூய்மை கண்டு,
ஆயிரம் இராமர் உனக்கு நிகராவரோ? என்றும்,
கோடி இராமர் உனக்கு நிகராவரோ? என்றும் பேசுகிற இடங்களைப் படித்திருந்தால், 
இத்தகைய சந்தேகம் எழுந்திராது. 
ஆட்சியை உதறியது மட்டுமன்றி, 
இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் தவவாழ்க்கை வாழ்ந்த பரதனுக்கு, ஆள வேண்டும் என்ற கள்ள ஆசை இருந்தது என்று சொன்னால்,
அவர்கள் நரகத்திற்குத்தான் போவார்கள். 
ஆசிரியர்கள் மாணவர்களுக்குச் சரியாகக் கற்பிக்காவிட்டாலும் பரவாயில்லை. 
பிழையாகக் கற்பிக்கக் கூடாது. 
தவறினால் அடுத்தபிறப்பில் அவர்கள் எதுவாய்ப் பிறப்பார்கள் என்று நான் சொல்லமாட்டேன்.

 😉உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'வள்.. வள்.. வள்.. அதுதானே?'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:- இலங்கையின் புகழை நிலை நிறுத்திய மகாராஜா நிறுவன அதிபரின் மறைவுக்கு நம் ஜனாதிபதி அஞ்சலிகூடச் செலுத்தவில்லையே?

பதில்:-

தனது பகைவனான எல்லாளனைக் கொன்ற பின்பு,
அவனுக்கு நடுகல் நட்டு மக்களை அஞ்சலி செலுத்துமாறு செய்தானாம் துட்டகைமுனு. 
அதுதான் சிங்கள நாகரீகம் என்று பெருமை பேசுகிறார்கள். 
பொறுங்கள்! பொறுங்கள்! கேள்வியை மாறிப் படித்துவிட்டு விடை எழுதிவிட்டேன் போல.
நீங்கள் என்ன கேட்டீர்கள்?

👌உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர். ??????

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:- கடலட்டை விவகாரத்தில் ஆரம்பத்தில் வடக்கு மக்களோடு கடுமையாக முரண்பட்ட டக்ளஸ் இப்போது சற்று இறங்கி வருமாப் போல் தெரிகிறதே?

பதில் :-

ஒன்று தானாய்த் தசை ஆடியிருக்க வேண்டும். 
அல்லது யாரோ ஆட்டிவித்திருக்க வேண்டும்.
எதுவானாலும் அவரது தலைமையை 
இப்போதைய செயல்கள் நிச்சயம் பெருமைப்படுத்தும்.

😂 உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   'ஆட்டுவித்தால் யாரொருவன் ஆடாதாரே கண்ணா' ஹி..ஹி..'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 05:- இந்தியாவிற்கு, நீர் மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும் நவீன விமானங்களை அமெரிக்கா அளித்திருப்பது பற்றியும், இந்தியாவிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் வருகை பற்றியும், அமெரிக்கா, யப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளின் கூட்டு ஆலோசனை பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?
பதில் :-
இலங்கையைச் சூழத்தொடங்கியிருக்கும் 'ட்றகனை'
கழுகு கவ்வப் பார்ப்பதன் அடையாளங்கள் தான் இவைபோல.

😊உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'எவர் வென்றாலும் இலங்கை நஷ்டப்படப்போவது உறுதி.'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 06:- இராமேஸ்வரத்திற்கு அருகில் இந்தியா, தனது அதி நவீன நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்தியிருக்கிறதாமே! எதற்காகவாக்கும்?​

பதில் :- யாருக்காவது பிதிர்க்கடன் செய்ய வந்திருக்குமோ? என்னவோ?

😊உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'இந்தக் குசும்புதானே வேணாங்கிறது.'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 07:- கல்கியின் எழுத்துக்கள் பிடிக்குமா? நவீன விமர்சகர்கள் சிலர் அதனைக் கிண்டல் செய்கிறார்களே.

பதில் :-

எழுத்துக்களா அவை? நவீன காலத்துக் காவியங்கள் அல்லவா? 
அது எவர்க்கேனும் பிடிக்காமல் போகுமா? 
வெளி நாட்டார் தந்த விமர்சனச் செருப்புக்கு ஏற்ப, 
எங்கள் காவியங்களின் கால்களை வெட்ட நினைக்கும் சுயமில்லாத விமர்சகர்களை,
தூக்கிக் குப்பையில் போடுங்கள்.
கழுதைகளுக்கு எங்கே கற்பூர வாசனை தெரியப் போகிறது.

😊உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'கழுதைகளிடம் உதை வாங்கப் போகிறார் வாரிதியார்.'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்