பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 33: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- முன்பொருமுறை யாழ் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைபற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு 'பாவம் தமிழ்!' எனப் பதில் அளித்து அவர்களோடு பிரச்சனைப் பட்டீர்கள். இப்போது அதே கேள்வியை உங்களிடம் கேட்டால் உங்கள் பதில்  என்னவாக இருக்கும்?
பதில்:-

'யாழ் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை என்ற ஒன்றும் இருக்கிறதா?' 
என்பதாகத்தான்    இருக்கும். அதுபற்றிக் கொஞ்சம் விரித்துரைக்கிறேன். 
முன்பு நான் அப்பதிலை எழுதியபோது பேராசிரியர்களான  சண்முகதாஸ், சுப்பிரமணியஐயர், சிவலிங்கராஜா போன்ற ஒருசிலராவது சமூகத்திற்குள் துறைசார்பாகத் தம்மை அடையாளப்படுத்தி நின்றார்கள். இன்று அத்துறைக்கும் சமூகத்திற்குமான தொடர்பு முற்றாக அறுந்துவிட்டது. அங்கு தமிழ்த்துறை என்ற ஒன்று இயங்குவதற்கான அடையாளத்தையே காண முடியவில்லை.சமூக அரங்கில் தமிழ் சார்ந்த விடயங்கள்பற்றி எழுதுகிற, பேசுகிற ஒருவரும் அங்கு இப்போது இருப்பதாய்த்தெரியவில்லை. 

முன்பெல்லாம் பேராசிரியர்களான சு. வித்தியானந்தன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்கள்  தமிழ்த்துறையை மட்டுமல்லாமல், யாழ் பல்கலைக்கழகத்தையே அடையாளப்படுத்துகிறவர்களாக இருந்தார்கள். இன்று, அத்தகுதியை தமிழ்த்துறை இழந்துவிட்டது. சமூகத்தின் மற்றைய நிகழ்வுகளுக்கு என்று இல்லாமல், தமிழ்மொழி சார்ந்த நிகழ்வுகளிலும் கூடத் தமிழ்த்துறை சார்ந்த ஒருவரினதும் 'தலைக்கறுப்பைக்' கூடக் காண முடிவதில்லை. 
மற்றவர்கள் அழைத்து இவர்கள் போவதில்லையா ? அல்லது இவர்களை யாருமே அழைப்பதில்லையா ? என்பது பெரிய கேள்வியாக எழுந்திருக்;கிறது. கூப்பிட்டு இவர்கள் போகவில்லை என்றால் அதற்கு  மக்கள்முன் கருத்துரைக்கும் ஆற்றல் இவர்களுக்கு இல்லை என்பது அர்த்தம் ஆகும். இவர்களை யாரும் கூப்பிடவே இல்லை என்றால், அதற்கு இவர்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதே அர்த்தமாகும். இவர்கள் வெளியே வராததற்கு இவற்றுள் எது காரணமாக இருந்தாலும் அது தமிழ்த் துறைக்கு அவமானம்தான்.
பல்கலைக்கழக வளர்ச்சியைப் பேண வேண்டிய மூதவை கூட வானளவாய் விரிந்து கொண்டிருக்கும் தமிழ்த்துறையின் இந்தப் பெரிய வீழ்ச்சியைக் கூடக் கண்டு கொள்ளாதது பெரிய ஆச்சரியமே. 

யாழ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை என்று மட்டுமில்லை, இலங்கையின் எல்லாப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளும் முன்னைய பல்கலைக்கழக  அறிஞர்களோடு ஒப்பிடுகையில் மிகமிகத் தரம் தாழ்ந்துதான் இருக்கின்றன. 
தம்மில் தம் மக்கள் அறிவிலாமையை ஆக்கி, மாநிலத்து மன்னுயிர்க்கெலாம் துன்பம் விழைவித்த இத்துறை சார் அறிஞர்களின் மர்மச் செயல்பற்றி, 'ஆய்வு ஆய்வு' என்று கதறுகிறவர்கள் ஓர் ஆய்வினைச் செய்தால் நன்றாக இருக்கும். பிழைகளை இனங்கண்டு கொண்டால்ற்தான் பிழைதிருத்தம் சாத்திமாகும்.
வால் பிடிப்பவர்களுக்கும், உறவுக்காரர்களுக்கும், ஊரவர்களுக்கும் எனத் தகுதி பாராது 'பெஸ்ட் கிளாஸ்' சித்திகளை வழங்கிப் பின்  பதவிகளையும் அள்ளிக் கொடுத்ததன் விளைவே இந்த வீழ்ச்சிக்கான காரணமாம் என்று சமூகத்திற்குள் பரவலாய்ப் பேசப்படுகிறது.  

எனது இந்தப் பதில் யாரையும் பழி தீர்க்கும் முயற்சியன்று. நம் தமிழ்த்துறை இங்ஙனமாய் இறங்கிக் கொண்டிருக்கும் இழிவு கண்ட மனக் கொதிப்பிலேயே இதனை எழுதுகிறேன். இப்பதிலால் என்னோடு பலர் கோபிப்பார்கள்.  முன்பும் அப்படித்தான் கோபித்தார்கள். ஆனால் பின்னர் துறையைவிட்டு வெளியே வந்தபிறகு முழுமனதோடு என்கருத்தை அவர்களே வழி மொழிந்தார்கள். 

அப்போது 'பாவம் தமிழ்' என்றால், இப்போதைய நிலையில் 'பரிதாபம் தமிழ்' என்பது தான் பொருத்தமான பதிலாய் இருக்கும்.

😩உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣   'எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்' என்ற கதை தான். ஹீ.... ஹீ ....ஹீ....

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:- ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்படுமா?
பதில்:-
நம் மக்களின் ஆயுள் நீட்டிப்பிற்கான விதியிருந்தால் மட்டும்.........

 😒உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'அது எப்ப இருந்தது,  இப்ப இருக்க?'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:- மீண்டும் அவசரகாலச் சட்டம் வந்து விட்டதே?
பதில்:-
பேரினமக்களும் உண்மை ஜனநாயகத்தின் பெருமையை உணர வேண்டாமா?

😜உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'முற்பகல் செய்யின்.....!' 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:- தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப் போகின்றனவாமே? 
பதில்:- 
நடந்தால் நல்லதுதான்! நடக்க விடுவார்களா? 

😉உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'நவக்கிரகங்கள் எங்கேனும் ஒன்றுசேருமா?' ஹீ....ஹீ... ஹீ....

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:- திருவாசக நூல் நமக்கு முழுமையாய்க் கிடைத்தும், மணிவாசகரின் காலத்தை நிச்சயிக்க முடியாமல் நமது ஆய்வாளர்கள் தடுமாறுகிறார்களே? 
பதில்:-
நிச்சயித்தால் மட்டும், என்ன செய்துவிடப் போகிறார்களாம்? திருவாசகம் ஆய்வுக்குரிய நூல் அல்ல, அனுபவத்திற்குரிய நூல்! அதனை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.   

🙏உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'வாரிதியார்ஸ் ஒப்பீனியன் இஸ் கரெக்ற்' (திருவாசகம் என்னும்) தேனை ஆய்வு செய்து என்ன பயன்? அனுபவிக்க வேண்டியது தான்.

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 06:-  பாண் விலை ஏற்றம், சீனி விலை ஏற்றம், எரிபொருள் விலை ஏற்றம் என எல்லாம் ஏறிக் கொண்டே போனால் மக்களின் வாழ்வு என்னாகும்? 
பதில்:-
இறங்கிக் கொண்டே போகும்! 

😟உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   எது வரைக்குமாம்???

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 07:- நல்லூரானிடம் போகவில்லையா? 
பதில்:-
அந்த வருத்தத்தை ஏன் கேட்கிறீர்கள்? அவன் தந்த நிலத்தில் அவனுக்கு அருகிலிருந்தே அவனைத் தரிசித்தவர்கள் நாங்கள். எவருக்கும் தராத அங்கீகாரத்தை எமக்குத் தந்து தன் வீதியில் சொக்கட்டான் பந்தல் அமைத்துக் கம்பன் விழா செய்ய முருகன்  தந்த அனுமதியை மறக்கத்தான் முடியுமா? போரால் சோர்ந்திருந்த யாழ் மக்கள் நிமிர்ந்து நின்ற நாட்கள் அல்லவா அவை? தமிழ்க்கடவுளின் காலடியிலிருந்து இரவிரவாகத் தமிழ் கேட்ட அந்த அனுபவத்தை அக்காலத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் எக்காலத்திலும் மறக்கமாட்டார்கள். 

கந்தனின் காட்சி காணவென எங்கெங்கோ இருந்தெல்லாம் அவனைத்தேடி மக்கள வர, முருகனோ கம்பன் கோட்ட வாயிலில்  நிற்கும் எங்களுக்குக் காட்சி கொடுக்க எங்களைத் தேடி வருவான். வேறு எவருக்குக் கிடைக்கும் இந்தப் பேறு? இத்தனை இடர் தாண்டிய பின்பும், எம்மவரை ஏன் முருகன் நிம்மதியாய் தன்னைக் கும்பிட விடுகிறான் இல்லை எனும் கேள்வி மனதை வாட்டியபடி இருக்கிறது. எந்தக் குறையும் இல்லாமல் அவனுக்குத் திருவிழா நடந்தாலும் தன் மக்கள் தன்னோடு இல்லையே என்ற கவலையோடு முருகனும் இருப்பான் என்றுதான் நினைக்கிறேன்.

😇உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   'காக்கக் கடவிய நீ காவா திருந்தக்கால் யார்க்குப் பரமாம் அறுமுகவா?' நம்ம தமிழறிவு எப்பூபூபூடிடிடி'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்