பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 34: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- உமக்குக் கரி நாக்கையா! சென்ற முறை வந்த கேள்வி பதிலில் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேருமா? என்று ஐயம் தெரிவித்திருந்தீர். அதே போல் நடந்துவிட்டதே?
பதில்:-

நடந்த ஒன்றை வைத்து நடக்கப் போகும் ஒன்றை ஊகிப்பதற்கு அனுமானப் பிரமாணம் என்று பெயர். அந்த அனுமானப் பிரமாணத்தை வைத்துத்தான் சென்ற முறை பதில் எழுதியிருந்தேன். நம் தமிழ்க் கட்சிகளுக்குத் தமிழ் மக்களின் பிரச்சனையைவிட தம் கட்சிகளின் பிரச்சனைதான் பெரிதாகப் போய்விட்டது. பாராளுமன்றத்திற்குள் தொடர்ந்து தாம் இருப்பதற்குத் தேவையான மக்களின் அங்கீகாரம், இலாபந்தரக்கூடிய பதவிகளுக்கான போட்டி போன்றவைதான் நம் தமிழ்க் கட்சிகளுடைய இன்றைய பிரச்சனைகள். அதனால் முக்கிய பிரச்சனைகளில் தம்மைத் தனித்து இனங்காட்டத்தான் அவர்கள் விரும்புவார்கள் என்பதை, என்னால் அல்ல ஒரு குழந்தையால் கூடக் கணித்துச் சொல்ல முடியும். அந்தக் கணிப்பைத்தான் முன்பு சொல்லியிருந்தேன். தம் சிறுமையால் நம் தலைவர்கள் என்னைத் தீர்க்கதரிசியாக்கியிருக்கிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால். 'கரி' என் நாக்கில் இல்லை. நம் தலைவர்களின் மனதில் தான் இருக்கிறது.
😩உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣  'ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:- சித்தார்த்தனும், அடைக்கலநாதனும் ஐ. நா. மனித உரிமைப் பேரவைக்கான கடிதத்தில் மாற்று அணியினருடன் இணைந்து நின்றிருப்பது பற்றி?
பதில்:-'கற்பு' என்று ஒரு சொல் தமிழில் இருக்கிறது. அந்தக் கற்பு என்றால் என்ன என்ற கேள்விக்கு நம் ஒளவைப்பாட்டி இலக்கியமாய்ப் பதில் சொல்லியிருக்கிறாள். 'ஒருவனைப் பற்றி ஓரகத்திரு' என்பது கற்பிற்கு ஒளவை தந்த  வரைவிலக்கணம். யாரோடு வாழப் போகிறேன் என்பதை ஆராய்ந்து முடிவு செய்து ஒருவனது கரங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் சரியோ, பிழையோ வரும் பிரச்சனைகளை வீட்டுக்குள் இருந்து தீர்த்துக் கொள்ள வேண்டும். இது தான் கற்புள்ளவர் செய்யும் செயலாம். அடைக்கலநாதனும், சித்தார்த்தனும் ஆராய்ந்து முடிவு செய்யாமல் கரம்பற்றி விட்டார்கள்.  கரம்பற்றிய கணவன்மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் கணவனுக்கும் அவர்கள்மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. நடந்த முதல் தவறு இது! இத்தவறால் எழும் பிரச்சனைகளை அவர்கள் 'வீட்டுக்குள்'  இருந்து தீர்க்க நினைக்காமல் அடிக்கடி வெளியே வந்து தீர்க்க நினைக்கிறார்கள். இது இரண்டாவது தவறு! சுருங்கச் சொன்னால் தமிழர் இலக்கணப்படி இவ் இருவர்க்கும் 'கற்பு' இல்லை என்பது தெளிவாகிறது. கற்பில்லாத பெண்ணை, கணவன் மட்டுமன்றி ஊரும் மதிக்காது என்பதுதான் உண்மை. 

 😒உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'ஐவருக்கு நெஞ்சும்! எங்கள் அரண்மனைக்கு வயிறும்!'  ஹீ...ஹீ.... ஹீ...எப்பூபூபூடீ 
 '

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:- யாழ் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையை இவ்வளவு கடுமையாக விமர்சித்திருக்கிறீர்களே! உங்களுக்கும் அவர்களுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை?  கௌரவ கலாநிதிப் பட்டத்திற்கு உங்களை அவர்கள் சிபாரிசு செய்யவில்லை என்ற கோபமா?
பதில்:-உங்களைப் போன்றவர்களால்த்தான் நம் தமிழினத்தில் தீமைகள் வளர்கின்றன. உங்களுக்கு நான் சொல்வதிலும் பிரச்சனை இல்லை. அவர்கள் செய்வதிலும் பிரச்சனை இல்லை. உண்மைகளைப் பிரச்சனையாக்கிப் பொழுது போக்க வேண்டும் என்பது தான் உங்கள் நோக்கம். நான் தமிழ்த்துறைகள் பற்றிச் செய்த விமர்சனங்கள் அத்தனையும் நிஜம்! நான் சொன்னவற்றில் ஏதாவது ஒன்றை பிழை என்று உங்களால் சொல்ல முடியமா? உங்களால் மட்டுமில்லை, அங்குள்ளவர்களாலும் அவற்றைப் பிழை என்று சொல்ல முடியாது. அதனாற்தான் நான் இவ்வளவு வெளிப்படையாய்ச் சொன்னபிறகும் 'எருமை மாட்டில் மழை பெய்தது' போல அத்தனை பேரும் 'அமசடக்கமாய்' பேசாமல் இருக்கிறார்கள். இனி எனக்கோ, என்னைச் சார்ந்தவர்களுக்கோ பின்னால் குழி வெட்டிப் பழி தீர்க்க முயல்வார்கள். முன்பும் அப்படித்தான் நடந்தது. அவர்களால் முடிந்தது அவ்வளவுதான். உங்களைப் போன்றவர்கள் என்னிடம் இத்தகைய 'விழல்' கேள்விகள் கேட்பதை விட்டுவிட்டு அவர்களிடம் அவர் இப்படிப் பகிரங்கமாய்ச் சொல்லுகிறாரே, அதற்கு உங்கள் பதில் என்ன என்று கேளுங்கள். இனம் உயரும். 
எனக்கான கௌரவ பட்டத்திற்குச் சிபாரிசு செய்யாத கோபமா? என்று கேட்டிருக்கிறீர்கள். குறை விளங்கா விட்டால் ஒன்று சொல்வேன். எனது குளியலறையில் நாக்கு வழிக்கப் பல கருவிகள் இருக்கின்றன. அதற்கு மேலாக எதற்கு இந்தப்பட்டம்?

😜உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'வாரிதியாரின் பதில்  சரியாய்த்தான் இருக்கிறது. ஆனாலும் திமிர் ரொம்பத்தான் திமிறுகிறது!' ஹீ...ஹீ.... ஹீ....  

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:- கொரோனா பிரச்சினையைக் கையாள நியமிக்கப்பட்ட கொவிட் ஒழிப்புச் செயலணியில் இருந்து மருத்துவ நிபுணர்கள் பலர் அடுத்தடுத்து  இராஜினாமா செய்கிறார்களே?  
பதில்:- மானமுள்ள அதிகாரிகள்! பதவி, பணம், இவற்றுக்கப்பால் தம் தொழிலுக்கு நேர்மை செய்ய விரும்புகிறார்கள் போல. 'நிற்;க அதற்குத் தக' என்ற வள்ளுவனின் வாக்கினையும் 'உம்மை அறிந்தோ நாம் தமிழை ஓதினோம்'  என்ற கம்பனது வாக்கினையும் நினைக்கச் செய்கிறார்கள். நம் இனத்தார் படிக்க வேண்டிய ஆளுமை அடையாளம் இது. திசை நோக்கி வணங்கத் தோன்றுகிறது.

👌உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  நல்லார் ஒருவர் உளரேல்?

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:- நல்லூர்த் திருவிழாவை நல்லபடி நடத்தி முடித்துவிட்டார்களே?  
பதில்:-
பாராட்ட வேண்டிய விடயம்தான்! நல்லூர் எஜமானர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றில் தமக்கென ஓர் தனி இடம் பிடித்தவர்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? அடாது மழை பெய்தாலும் விடாது குடைபிடித்துத் தம் கடமையைச் செய்து முடித்திருக்கிறார்கள். பக்தர் கூட்டம் இல்லை என்பதைத் தவிர, மற்ற அனைத்தும் வழமை போல் சிறப்பாக நடந்திருக்கிறது. இது அவர்களின் பரம்பரை நிர்வாகத் திறமையின் அடையாளம்.  ஆனாலும் நல்லூரானை வழி வழி வணங்கும் ஓர் அடியானாய், என் மனதில் நிறைவிற்குப் பதிலாய் ஏக்கமே எஞ்சி நிற்கிறது. என்னைப் பொறுத்தவரை மக்களில்லாத திருவிழா என்பது, தாலி இல்லாத கல்யாணம், உப்பில்லாத விருந்து, சுருதி இல்லாத கச்சேரி என்பவை போலத்தான் இருக்கிறது. அடுத்த வருடமேனும் முருகன் இரங்குவானா?  

🙏உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  வேல் உண்டு வினை தீர்க்கும்!

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 06:-  ஊரடங்குச் சட்டம் இம்முறை வெறும் பெயருக்குத்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறதா?  
பதில்:-
இது அரசாங்கத்தை எதிர்ப்போர் சொல்லும் குற்றச்சாட்டு. இதனை முழுமையாய் நான் ஏற்கமாட்டேன். வெளியில் நின்று எவரும் சுலபமாய் விமர்சிக்கலாம். நிர்வாகத்தை நடத்துபவர்களுக்குத்தான் அதன் சங்கடங்கள் தெரியும். இராணுவத்தை ஏவி, ஒரே நாளில் ஒருவர் கூட வீதியில் இறங்காதபடி செய்வது, நம் அரசுக்கு ஒன்றும் பெரிய காரியம் இல்லை. அப்படிச் செய்தாலும் விமர்சிக்கிறவர்கள் இது இராணுவ ஆட்சி என் விமர்சிக்கத்தான் போகிறார்கள். வசதியானவர்களுக்கு முழுமையான ஊரடங்கு ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் அவர்கள் மட்டும் சமூகமாக மாட்டார்கள். அன்றாடம் உழைத்து உண்ணுகிறவர்கள் தொகைதான் நாட்டில் அதிகமாய் இருக்கிறது. முழுமையான ஊரடங்கு அவர்களைப் பட்டினிச்சா வரை கொண்டு சென்றுவிடும். ஊரடங்கால் கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் வேண்டும். அதே நேரத்தில் 'அன்றாடம்காய்ச்சிகளின்' வாழ்வையும் உறுதி செய்ய வேண்டும். ஒன்றுக்கொன்று முரணான இந்தச் சமன்பாட்டைத் தீர்ப்பது கடினமான விடயம் என்பதை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.  

🎺உலகநாதரின் ஒப்பீனியன்: 📣   'பீப் பீப் பீப் ....... யாரோ ஒத்தூதுமாப் போல் கேட்கிறதே?'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 07:- பாராளுமன்ற வாக்களிப்புகளில் தலைவர் ஒருபக்கமும் உறுப்பினர்கள் ஒருபக்கமுமாக வாக்களிப்பதும், கேட்டால் மனச்சாட்சிப்படி வாக்களிக்க அனுமதித்ததாகச் சொல்வதும் சிறுபிள்ளைத்தனமாக இல்லையா? முஸ்லீம் காங்கிரஸ் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? 
பதில்:-

சிதறிக்கிடந்த முஸ்லீம் மக்களை, தனது ஆளுமையாலும், நிர்வாகத்திறனாலும், தீர்க்கதரிசனச் செயற்பாடுகளாலும் ஒன்று திரட்டி, பேரின அரசுகளோடு சரிக்குச் சமமாய் நின்று முஸ்லீம் மக்களின் உரிமைகளை வென்றெடுத்த மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களை நினைத்துப் பார்க்கிறேன் அவரது அகால மரணம், முஸ்லீம் மக்களின் எழுச்சிக்கு எதிராக நடந்த விதியின் செயலேயாம்.
அத்தகைய ஒரு பெரும் தலைவன் திடீரென மறைந்தால் அந்த இடத்தில் குழப்பங்கள் விளைவது  சகஜம்தான். 
இராமாயணத்தில் 'வாலி' என்கின்ற ஆற்றல் நிறைந்த வானர அரசன் இறந்த பின்பு, நான் உன்னோடு உடன் வந்து அடிமை செய்யப் போகிறேன் என்கிறான் அறிவாளியாகிய அனுமன். அதற்கு இராமன், ஆற்றல் மிக்க ஓர் தலைவன் இருந்து ஆண்ட மண்ணில் திடீர் என அத்தலைவன் மறைந்தால் அவ்விடத்தில் பல குழப்பங்கள் விளையும்.  ஆகவே அறிவாளியாகிய நீ இங்கே தான் இருக்க வேண்டும் என்கிறான். 

மு.கா.வின் தற்போதைய நடவடிக்கைகள் இராமன் சொன்ன கூற்றை நிஜமாக்குமாப்போல் தெரிகின்றன. தலைவர் ஒரு பக்கமும், உறுப்பினர்கள் ஒருபக்கமுமாக வாக்களிப்பது விளையாட்டு வேலை.  மனச்சாட்சியின் படி வாக்களிப்பு என்று சொல்லி வாக்காளர்களின் காதில் பூசு சுற்றுகிறார்கள். அரசு, மக்கள் என எல்லோரையும் திருப்திப்படுத்தும் முயற்சி இது. எல்லோரையும் திருப்திப்படுத்த நினைக்கிறவன் ஒருவரையும் திருப்திப்படுத்தமாட்டான் என்பது அனுபவச் செய்தி.
 இவர்களின் நடவடிக்கையால் இரண்டு ஐயங்கள் உண்டாகின்றன. ஒன்று, எல்லோருமாகச் சேர்ந்து நாடகம் போடுகிறார்களோ என்பது. மற்றது தலைவர் 'ரவூப் ஹக்கீமின்' கையை விட்டு 'வண்டில் மாடுகளின் மூக்கணாம் கயிறு' நழுவத் தொடங்கிவிட்டதோ. என்பது இதில் எது உண்மை என்பதைக் காலம் விரைவில் வெளிப்படுத்தும்.

😇உலகநாதரின் ஒப்பீனியன்: 📣    'நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா'

 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்