பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 36: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- அனுராதபுரச் சிறைச்சாலைப் பிரச்சனைபற்றி ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் விசாரணைக்குழு அமைத்திருக்கிறார்களாமே?
பதில்:-
கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேடும் வேலை. காலத்தை இழுத்தடிக்கச் செய்திருக்கும் உத்தி. ஓய்வுபெற்ற  நீதிபதிக்குக் கிடைத்திருக்கும் 'மறுவாழ்வு' என்பதைத்தவிர வேறு எந்தப் பயனும் இதனால் இருக்கப் போவதில்லை.

😏உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣  'மக்களை மடையராக்கலாம். வாத்து மடையராக்கக் கூடாது பாருங்கோ.' ஹீ....ஹீ... ஹீ....
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:- உங்களது கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தனை இவ்வளவு வெளிப்படையாய் விமர்சித்திருக்கிறீர்களே? அது அவரது மனதைப் பாதிக்காதா? அவரின் எதிர்வினை எதுவாக இருந்தது?
பதில்:-

பாதிக்காமல் எப்படி இருக்கும்? பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தானே எழுதினேன். அந்த எழுத்துக்குள் இருக்கும் என் அன்பை அவன் புரிந்து கொள்வான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. என் எண்ணத்தை அவன் உடனேயே நிரூபித்தும் விட்டான். தனது முகநூலில் அந்தக் கேள்வி-பதிலை அப்படியே பதிவிட்டு அதற்கு 'என்னைச் செதுக்கும் சிற்பி' எனத் தலைப்பும் இட்டிருக்கிறான். அதுதான் கம்பன் கழகம். எமது கழகம் ஒரு அமைப்பல்ல, ஒரு குடும்பம் என்று அடிக்கடி நான் சொல்வேன். அதனை அவன் நிரூபித்துக் காட்டியிருக்கிறான். 

விமர்சனம், விமர்சனம் என்று கொண்டாடித்திரியும் பல்கலைக்கழகத்தார், தங்கள் மீதான விமர்சனங்களை என்றும் விரும்புவதில்லை. அவர்களுக்கும் பிரசாந்தன் வழிகாட்டியிருக்கிறான். எழுத்தில் என் எண்ணத்தை ஏற்றுக்கொண்டதைப் போலவே செயலிலும் அவன் செய்து காட்டினால் மிக, மிக மகிழ்வேன்.

 😂உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'நாரதர் கலகம் நல்லபடி முடிந்திருக்கிறது.' ஹீ....ஹீ... ஹீ....
 ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:- ஜனாதிபதி ஐ.நா. சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா சென்றிருக்கிறாரே?

பதில்:-சென்றிருக்கிறாரா? வரவைக்கப்பட்டிருக்கிறாரா? என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். சீன 'ட்றஹனால்' கவ்வப்பட்ட இலங்கைக் கோழிக் குஞ்சை, அமெரிக்கக் கழுகுபற்றி இழுத்துப் பறந்து செல்வதாய் அடிக்கடி ஓர் கற்பனை வருகிறது. விரைவில் உண்மையைக் காலம் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். 

🤗உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமுங்ங்ங்கோவ்!'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:- தமிழரசுக் கட்சியிலும் சரி, கூட்டமைப்பிற்குள்ளும் சரி சுமந்திரனை ஏன் எல்லோரும் எதிர்க்கிறார்கள்? அவரை வெளியே போட ஏன் துடிக்கிறார்கள்?
பதில்:- அதுதான் எனக்கும் புரியவில்லை! எல்லோரும் எதிர்க்கிறார்கள் என்பது சரியா?- தெரியவில்லை! பெரும்பான்மையினோர் எதிர்க்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சுமந்திரனின் பாராளுமன்ற உரைகள், அவர் ஊடகங்களுக்கு வழங்கும் பேட்டிகள், உள்நாட்டு, வெளிநாட்டுத் தலைவர்களுடன் அவரின் தொடர்பாடல்கள், நமது இனம் சார்ந்த சட்டப் பிரச்சனைகளில் அவரது ஆழமான பங்களிப்பு என அனைத்தையும் பார்த்து வருகிறேன். நிதானமான, ஆணித்தரமான, யதார்த்தம் அறிந்த, சட்டநுணுக்கம் பொருந்திய அவரது செயற்பாடுகளுக்கு மாற்றீடாய் நம் தலைவர்களுள் ஒருவர்தானும் இருக்கிறாரா? என்று நடுவுநிலைமையாய்ச்; சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் சொன்ன எந்தக் கட்சியிலும் அத்தகைய பன்முக ஆற்றல் கொண்ட ஒருவர்கூட இருப்பதாய்த் தெரியவில்லை. அப்படி எவரேனும் இருக்கிறார் என்றால், கட்சியை விட்டுத் தூக்கி எறிவதென்ன? வேண்டுமானால் கடலுக்குள் கூடத் தூக்கி எறிந்துவிடலாம்!

நான் நம் தலைவர்கள் எல்லோருடைய உரைகள், பேட்டிகள், அறிக்கைகள்  என அனைத்தையும் கவனித்து வருகிறேன். ஒருவர்கூடச் சுமந்திரனுக்கு அருகில் நிற்கும் அருகதை அற்றவர்களாய்த்தான் தெரிகிறார்கள். கட்சிக்கு, இனத்திற்கு என்றுகூட இல்லை. அவரை எதிர்ப்பவர்களுக்கே கூட  அவரின் தேவை இருப்பதை ஏனோ அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இந்த ஒரு விடயத்தில் மட்டும்தான் நான் தலைவர் சம்பந்தரை மனதாரப் பாராட்டுகிறேன். இருப்பவர்களுள் தக்கவர் யார் என்பதை அவர் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார். அவர் தரும் உறுதியால்த்தான் சுமந்திரனால் இன்றுவரை நின்றுபிடிக்க முடிகிறது.

பத்திலிருக்கும் ஒன்றை நீக்கிவிட்டால் பூச்சியம் மிஞ்சுமாற் போலத்தான் சுமந்திரனை அகற்றிவிட்டால் நம் தலைமைகளின் நிலை இருக்கப் போகிறது. இன்றைய நிலையில் சுமந்திரன் இல்லாத ஈழத்தமிழரின் அரசியலை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அச்சை முறிக்க ஆசைப்படும் இவர்களின் அறிவீனத்தை என் சொல்ல! சுமந்திரனை இவர்கள் எதிர்க்க, பொறாமையைத் தவிர வேறு காரணங்கள் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.

கூட்டமைப்புக்குள் இருக்கும் இளையோரும், சமூக அக்கறையுள்ள இளைஞர்களும் சுமந்திரனின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். தவறினால் நம் இனத்தார் அரசியல் அனாதைகள் ஆகப் போவது திண்ணம்.

👌உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'யாரங்கே? வாரிதியார் வீட்டிற்கு இரெண்டு 'சூட்கேஸ்கள்' உடனே போகட்டும்.  ச்சும்மா, ச்சும்மா  ஹீ....ஹீ... ஹீ....'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:- பல்கலைக்கழகத்தைக் கண்டிக்கும் நீங்கள் இதை எல்லாம் பார்க்கமாட்டீர்களா? என்று உங்கள் மாணவர் ஒருவர் எழுதிய வெண்பாவைக் குற்றம் சொல்லி முகநூலில் ஒருவர் பதிவிட்டிருக்கிறார். அவருக்கான உங்கள் பதில்தான் என்ன?​  
பதில்:-நானும் பார்த்தேன். தமிழ் மீதான அந்த நண்பரின் அக்கறையைப் பாராட்டுகின்றேன். அதே நேரத்தில் இந்த வெண்பா விடயத்தில் சிலவற்றை நான் பகிர்ந்து கொள்ள வேண்டியும் இருக்கிறது. தெரியாமல் ஒரு கேள்வியைக் கேட்டு என்னை 'உசுப்பேற்றி' விட்டீர்கள். கவிஞர்கள் தவிர்ந்த மற்றையவர்களுக்கு மகா 'போர்' அடிக்கத் தக்க  நீண்ட பதில் ஒன்றை எழுதப் போகிறேன். இந்தப் பதிலை மற்றவர்கள் சகித்துக் கொள்வார்களாக!

முதலில் அப் பாடலை வெண்பா என, எழுதியவர் எங்கேனும் குறிப்பிட்டிருக்கிறாரா? என்பதைப் பார்க்க வேண்டும். அவர் வெண்பா ஓசை வரத்தக்கதாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அவ்வளவுதான். அதே போல, வெண்பா ஓசை மட்டும் வரத்தக்கதாக நானும் பல கவிதைகள் எழுதியிருக்கிறேன். இந்த வேலை உங்களுக்கு எதற்கு? என்று கேட்பீர்கள், சொல்கிறேன்! 

நம் தமிழ்க் கவிதை இலக்கணங்களுள் வெண்பா இலக்கணம், மிக நுட்பமானது. அதனாற்தான் வெண்பாவை இலகுவாய் ஆட்சி செய்த ஒளவையான ஒளவையே, 'புலவர்க்கு வெண்பா புலி' என்று பாடியிருக்கிறார். எனது ஆசிரியர் மறைந்த பேரறிஞர் 'இலக்கணவித்தகர்' நமசிவாயதேசிகர் அவர்கள், ஒளவை பாடல்களிலேயே,  தளை பிழைத்த ஒரு வெண்பா இருப்பதாகவும்  அறிவுலகத்தார் ஒளவையின் ஆற்றல் அறிந்ததால் அதனையும் 'சவலை வெண்பா' எனக் குறிப்பிட்டு அங்கீகரித்துள்ளதாகவும் சொல்லியிருக்கிறார்.

இனி விடயத்திற்கு வருகிறேன். என்னைப் பொறுத்தவரை கவிதையின் இலக்கணம் காதால் கேட்டு உணரப்பட வேண்டும்.  ஒரு கவிதையின் அடிகளுக்குள் இருக்கும் ஓசை ஒத்திசைவு, எதுகை, மோனை போன்றவை பிழைத்தால் அக்கவிதையைக் கேட்டவுடன், அப் பிழை உடன் நம் காதுக்குத் தெரிய வேண்டும். சங்கீதத்தில் சுருதி பிழைத்தால் ஒரு வித்வானுக்கு எப்படி அது உடன் தெரியவருமோ, அப்படி ஒரு கவிதையின் இலக்கணம் பிழைத்தால் ஒரு கவிஞன் அதனைக் காதால் கேட்டவுடன்   உணர வேண்டும். 

ஓரளவு கவிதை அனுபவம் உடையவர்களுக்கு மற்றைய கவிதை வடிவங்களுள் மேற் சொன்னவாறு காதால் கேட்டுப் பிழை உணர்தல் சாத்தியப்படும். ஆனால் வெண்பா அதி நுட்பமானது. அதன் இலக்கணங்களுள் அசை, சீர், தளை என எல்லாவற்றுக்கும் கடுமையான நிபந்தனைகள் உண்டு.

வெண்பாவின் நான்கு அடிகளுள், முதல் மூன்று அடிகள் நான்கு சீர்களைக் கொண்டதாகவும் கடைசி அடி மூன்று சீர்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதும், ஈற்றுச் சீர் - நாள், மலர், காசு, பிறப்பு எனும் வடிவங்களுள் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதும், முதல் இரண்டு அடிகளில் வரும் எதுகை, கோட்டுச் சொல்லிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும், முதல் இரண்டு அடிகளிலும் வரும் எதுகை பின் இரண்டு அடிகளிலும் மாறலாம்  என்பதும், வெண்பாவுக்கான பொதுவான இலக்கணங்கள். இவை பிழைத்தால் ஓரளவு கவிதை அனுபவம் கொண்ட ஒருவர் அதனைக் காதால் கேட்டே இனங்கண்டு கொள்ள முடியும்.

இனித்தான் பிரச்சனை ஆரம்பமாகிறது! வெண்பாவின் அசைகளுக்கு இடையிலான தொடர்புபற்றி இறுக்கமான வரையறை உள்ளது. இதனையே 'தளை' என்கிறார்கள். வெண்பாவின் தளைகள் வெண்தளைகளாக அமைய வேண்டும் என்பது சட்டம். தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய், தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்பனவாய் அசைகளைப் பிரித்து இன்னதன் முடிவில் இன்னது வர வேண்டும் என இலக்கணப்படுத்தியிருக்கிறார்கள்.(இவற்றை எந்தச் சந்தையில் வாங்கலாம் என்று தயவு செய்து கேட்டுவிடாதீர்கள்). இந்த அசைகளுக்கிடையிலான தளைத் தொடர்பைக் காதால் கேட்டு உணரும் திறம் உள்ளோரே வெண்பா எழுதுகிற தகுதி உடையவர்கள் ஆவர். இன்று  வெண்பா எழுதுவோரில் பெரும்பாலோர்க்கு இத்தகுதி இல்லை. 

இலக்கணம் படித்து வெண்பா எழுதுகிற பல பேரும் கார் 'கராஜில்' இருக்கும் 'மெக்கானிக்' ஒரு ஆணியில் ஒரு நட்டைப் பூட்டிப்  பார்த்துவிட்டு இது பொருந்தவில்லை, அடுத்த நட்டைக் கொண்டுவா என்பதுவாய்  எழுத்துக்களை மாற்றி, மாற்றிப் போட்டு ஒரு மாதிரியாக வெண்பா இலக்கணத்தை, திருப்திப்படுத்த முயல்கிறார்கள். அங்ஙனம் செய்கையில் இலக்கணம் நிறைவாகுமே தவிர கவிதை நிறைவாகாது.

அப்படியானால் அந்த இலக்கணத்தை நீங்கள் நிராகரிக்கிறீர்களா? என்று கேட்பீர்கள். ஒரு நாளும் இல்லை! அதை நிராகரிக்க நான் யார்?  எதுகை, மோனை,  வரிகளுக்கிடையிலான ஒத்திசைவு என்பவற்றைக் காதால் கேட்டுத் தெரிந்து கொள்வதைப் போல, இந்த வெண்பாவில் தளை பிழைக்கிறது என்பதையும் காதால் கேட்டே சொல்லக் கூடியவருக்குத்தான் வெண்பா எழுதும் உரிமை உண்டு என்பதே எனது அபிப்பிராயம்.   அங்ஙனம் இல்லாமல் எழுத்துக் கூட்டி 'றிப்பயர்' பார்த்து எழுதும் 'கத்துக்குட்டிகள்' எழுதும் வெண்பாக்களை நான் வெண்பாக் கவிதைகளாக ஒத்துக் கொள்ள மாட்டேன். நம் பழைய இலக்கணக்காரர்களும் 'காரிகை கற்றுக் கவி பாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைத்தல் நன்றே' என உரைத்திருக்கிறார்கள். அவர்கள் என்னை விடப் பெரிய கிண்டல்காரர்களாய் இருப்பார்கள் போல! 

அத்தகைய நுட்பமான செவி எனக்கு இல்லை! அதனாற்தான்  கழட்டிப்பூட்டி வெண்பா ஆக்குகிறேன் என்ற பேரில் அதனை அசிங்கப்படுத்த நான் விரும்புவதில்லை. ஆனாலும் வெண்பாவில் தொனிக்கும் ஒரு கட்டளை ஓசை எனக்கு நிரம்பப் பிடிக்கிறது. சில விடயங்களைச் சொல்ல அது எனக்குத் தேவையாகவும் இருக்கிறது. அதனாற்தான் என் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவும், அதே நேரத்தில் வெண்பா இலக்கணத்தை மாசுபடுத்தாது இருக்கவும் வழிதேடி, வெண்பா என்று பெயரிடாமல் வெண்பா ஓசை வடிவம் மட்டும் கொண்ட கவிதைகளை எழுதுகிறேன். என்றைக்கு அசைகளுக்கிடையிலான தளைத் தொடர்பை என் செவி தானாய் விளங்குகிறதோ அன்றைக்கு வெண்பா எழுத முயற்சிப்பேன். அவ்வளவுதான்.

🤨உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'இவ்வளவு நீண்ட பதில் எழுதும்படியான கேள்வியைக் கேட்டு நம்மை வருத்தியவரை உடனே தூக்கில் போடுங்கள்!  ஹீ....ஹீ... ஹீ....'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்