பாட்டும் நானே! பாவமும் நானே! பகுதி 37: -'கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ்-

கேள்வி 01:- உங்கள் கழகக் குடும்பத்தைச் சேர்ந்தவரையே பகிரங்கமாய் நீங்கள் விமர்சிக்கிறீர்கள். அப்படிச் செய்வது தவறில்லையா?
பதில்:-

மற்றவர்கள் விமர்சிப்பதன் முன்னர் நான் விமர்சிப்பது நல்லது என்று நினைத்தேன். இதைச் சொல்லும் போது ஒரு சம்பவம் என் ஞாபகத்திற்கு வருகிறது. எங்கள் ஆசிரியர் வித்துவான் ஆறுமுகம் அவர்கள் மிகமென்மையானவர். ஒருமுறை அவருடைய மருமக்களான அண்ணன், தம்பியர் இருவர்க்கிடையில் வியாபாரம் சம்பந்தமாய் சண்டை வந்து, ஒருவரோடு ஒருவர் அடிபட இறுதியில் பொலிஸ் வந்து இருவரையும் கைது செய்து கொண்டுபோனது.
 
மருமக்கள்மீது பெரிய அன்புகொண்டிருந்த எங்களது வித்துவான், அவர்களை மீட்டுவர பொலிஸ் ஸ்ரேஷனுக்குச் சென்றாராம். மென்மையான அவர் அங்கு வைத்துத் தன் மருமக்களின் கன்னத்தில்  அறைந்ததாகக் கேள்விப்பட்டேன். பின் அவரைச் சந்தித்தபோது ஏன் அப்படிச் செய்தீர்கள்? எனக் கேட்டேன். 
அதற்கு அவர், 'நான் நிற்கத்தக்கதாக அவர்கள் பொலிஸ்காரரின் முன்னாலேயே அடிபடத் தொடங்கி விட்டார்கள். பேசாமல் விட்டால் எனக்கு முன்னாலேயே அவர்களை இன்ஸ்பெக்டர் அடிப்பார் போலத் தெரிந்தது. அதனால்த்தான் நான்  முந்திக் கொண்டு  அவர்களை அடித்தேன். இன்ஸ்பெக்டர் திடுக்கிட்டு என்னைச் சமாதானம் செய்து, பின் அவர்களை அனுப்பிவிட்டார். நான் அடித்திராவிட்டால் அவர் அடித்திருப்பார்' என்றார்.
 
உரிமையுள்ளவர்களை மற்றவர்கள் சீண்டும்படியாக விட்டுவிடக்கூடாது. அதைவிட நாம் முந்திக்கொண்டு விமர்சித்து விடுவதுதான்  நல்லது. அதனால்த்தான் நானே முந்திக் கொண்டு விமர்சித்தேன். இப்போதும் சொல்கிறேன். நான் சொன்னவை அத்தனையும் நிச்சயமான உண்மைகள்தான். 

😏உலகநாதரின் ஒப்பீனியன்​: 📣  'விஷயமுள்ள வித்துவான்தான்......'  நான் அந்தப் பழைய வித்துவானைச்  சொல்லுகிறேன். ஹி...ஹி...ஹி..
❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 02:- கடைசியில், கூட்டுக்கட்சியினரை விரும்பினால் நீங்கள் வெளியே போகலாம் என்று பிரதமர் சொல்லி விட்டாரே பார்த்தீர்களா?
பதில்:-

அவர்களாய்ப் போவதற்கு முன் தானாய்ச் சொன்னால் மரியாதையாய் இருக்கும் என்று நினைத்திருப்பார் போல... 

 😂உலகநாதரின் ஒப்பீனியன்: 📣 'சட்டி சுட்டதடா கை விட்டதடா' 
 ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 03:- பல பட்டங்களைப் பெற்று வைத்திருக்கும் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைப்  பேராசிரியர்களை  எதற்கெடுத்தாலும் குறை சொல்கிறீர்கள்.  அவர்கள் பெற்ற பட்டங்கள் எல்லாம் உங்களுக்குப் பெறுமதியாய்த் தோன்றவில்லையா?
பதில்:-

மீண்டும் ஒருசம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒருநாள் இலக்கண வித்தகர் நமசிவாயதேசிகரிடம் பாடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு விரிவுரையாளர் அங்கு வந்தார். வந்தவர், என்னை முறைத்துப் பார்த்துவிட்டு வித்தகரை வணங்கினார். பின்னர் 'ஐயா! எனக்குக் கலாநிதிப் பட்டம் கிடைத்துவிட்டது, அதைச் சொல்லிட்டுப் போகத்தான் வந்தனான்' என்று மகிழ்ச்சியோடு சொன்னார். அவர் முகத்தில் எல்லையற்ற பிரகாசம். செய்தியைச் சொல்லிவிட்டு வித்தகர் ஐயாவின் வாயிலிருந்து ஒரு பாராட்டை எதிர்பார்த்தபடி நின்றார் அவர். 

வித்தகர் ஐயாவோ கண்ணை மூடி, எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் சிறிது நேரம் மௌனமாக வெற்றிலை சப்பினார். பின் கண்ணைத் திறந்தவர், அந்த விரிவுரையாளரைப் பார்த்து 'கலாநிதிப்பட்டம் கிடைத்தது மெத்தச் சந்தோசம். அப்ப இனி நீர் பயப்படாமல் படிக்கத் தொடங்கலாம்.' என்றாரே பார்க்கலாம்! விரிவுரையாளரின் முகம் கறுத்தே போய்விட்டது. 
உங்களின் கேள்விக்கான பதில் இந்தச் சம்பவத்திற்குள் இருக்குமென்று நினைக்கிறேன்.

🤗உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'வித்தகக் குசும்பு என்கிறது இதைத்தானோ?'

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 04:- ஒரு மாணவனிடம் கேள்வி கேட்கும் போதும், அவனுக்குப் பதில் சொல்லும் போதும் என்ன நோக்கத்தோடு ஒரு ஆசிரியர் செயற்பட வேண்டும்?
பதில்:- கேள்வி கேட்கும் போது மாணவனைத் தன் நிலைக்கு உயர்த்த நினைத்துக் கேட்கவேண்டும். பதில் சொல்லும் போது தான் மாணவனின் நிலைக்கு இறங்கி வந்து பதில் சொல்ல வேண்டும். கேள்வியை அப்படிக் கேட்டால் அறிவுள்ள மாணவன் உயர்வான். பதிலை இப்படிச் சொன்னால் அறிவில்லாத மாணவனும் உயர்வான்.

👌உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'வாள் வெட்டுக்குப் பயந்து  வாத்திமார் கேள்வி கேட்கிறதை விட்டுக் கன நாளாச்சுங்கோ...' ஹி...ஹி...ஹி....

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

கேள்வி 05:- அண்மையில் பாராளுமன்றத்தில் சிறீதரன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் இருந்த சாணக்கியன் கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் தொலைபேசியில் சத்தமாய்ப் பேசிக் கொண்டிருந்ததையும், சிறீதரனும் சுமந்திரனும் ஜாடை காட்டிக் குறிப்பால் உணர்த்தவும் அதை அலட்சியம் செய்து அவர் நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததையும் முகநூலில் பார்த்தீர்களா? அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  
பதில்:-

கவனித்துக் கவலைப்பட்டேன். தன் கட்சியைச் சேர்ந்த அனுபவத்திலும் வயதிலும் தன்னைவிட மூத்த ஒருவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் சிறிதும் இன்றி, சாணக்கியன் நடந்து கொண்ட விதம் மிக அநாகரிகமானது. பாராளுமன்றில் எதிரணி உறுப்பினர் ஒருவர் பேசினாற்கூட அப்படி நடந்துகொள்வது தவறென்றே நினைக்கிறேன். கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் என்று அழைக்கப்படுவதன் அர்த்தத்தைச் செயலில் காட்ட சாணக்கியன் பழகிக் கொள்ள வேண்டும்.
பாராளுமன்றினுள் நுழைந்ததும் மும்மொழி ஆட்சியோடும், தர்க்க அறிவோடும், சுய கௌரவத்தோடும், இனப்பற்றோடும் சாணக்கியன் ஆற்றிய உரைகளைக் கேட்டு உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்கள் பெருமை கொண்டார்கள். பாராட்டு மழை பொழிந்தது. அந்தப் பாராட்டு மழையில் சாணக்கியனின் சமநிலை கெட்டுவிட்டதோ என நினைக்கும்படி அண்மைக் காலமாக அவரின் செயற்பாடுகள் இருக்கின்றன.
 
பாராளுமன்றில் எதிரணியினரோடு சிங்கள மொழியிலேயே விளாசித்தள்ளுகிறார். அவரது மொழியாற்றல், கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தமிழின் உரிமைக்காக உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறவர், பாராளுமன்றில் தமிழில் பேசும் தன் உரிமையை விட்டுக் கொடுப்பது சரியா? என்று எண்ணத் தோன்றுகிறது. 
அவர் பேசும் கருத்துக்களில் பிழை இல்லை. பேசும்  தொனியில் பிழை இருக்குமாற்போல் தெரிகிறது. ஒரு சான்றோன் போல் அன்றி, வர வர ஒரு சண்டியன்போல் பேசப் பார்க்கிறார். அன்று தொட்டு நம் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், பெரும்பாலும் கௌரவத்திற்கு உரியவர்களாகவே பேரினத்தாராலும் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். சபையில் அவர்களை எதிர்த்தவர்களும் வெளியில் அவர்களை மதித்து நடந்ததுதான் வரலாறு.
 
சாணக்கியன் அண்மைக்காலமாக பாராளுமன்றில் எதிரணியினருடன் செய்யும் விவாதங்கள் 'சந்திச் சண்டைகள்' போல் இருக்கின்றன. பேசும் தொனி, பேசும் மொழிநடை, உடல்மொழி என்பவற்றில் கௌரவத்தன்மை குறைந்து கொண்டே வருகிறது. அது அவருக்கு மட்டுமன்றி, நம் இனத்திற்கும் மதிப்பைத் தேடித்தரப் போவதில்லை. சில கீழ்மட்ட மக்களிடம் கைதட்டை வாங்கித்தர மட்டுமே  அது உதவும். உயர்ந்தோரிடம் கண்ணியத்துடன் கூடிய மதிப்பை நிச்சயம் அது பெற்றுத்தராது.
பலவிடயங்களிலும் சுமந்திரனைப் பின்பற்றும் சாணக்கியன் இந்த விடயத்திலும் அவரைப் பின்பற்றுவது நல்லது. 'இளங்கன்று பயமறியாது' என்பார்கள். இளவயது இரத்தமும் அவருடைய இந்தப் போக்கிற்குக் காரணமாக இருக்கலாம். புகழுக்கு அசையாதவனே வாழ்வில் உயர முடியும். நீண்ட நாட்களிற்குப் பிறகு தமிழினத்திற்குக் கிடைத்த ஒரு ஆற்றலாளன். தமிழினம் அவரை இழந்துவிடக்கூடாது எனும் அக்கறையிலேயே இதை எழுதுகிறேன். சிந்திப்பாராக!

👍உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'சபாஷ்! சரியான நேரத்தில் போடப்படும்  சறுக்குக் கட்டை' 

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆
கேள்வி 06:- கூட்டமைப்புக்குள் சுமந்திரனின் தன்னிச்சையான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று, தன்னைச் சந்தித்து முறையிட்ட மாவை, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிடம் கட்டாயம் தான் அதைச் செய்வதாய், சம்பந்தர் ஐயா வாக்குறுதி அளித்திருக்கிறாராமே?

பதில்:- அந்த வாக்குறுதியைத் தண்ணியில்த் தான் எழுதி வைக்கவேண்டும். இது எத்தனையாவது முறை அளிக்கப்படும் வாக்குறுதியாம்? சைவசித்தாந்திகள், சிவமும் சக்தியும் இரண்டாகக் காட்சி தந்தாலும் அவை இரண்டும் ஒன்றேதான் என்பார்கள். அதுபோல சம்பந்தரும் சுமந்திரனும் இரண்டாகக் காட்சிதந்தாலும் அவ்விருவரும் ஒருவர்தான் என்பதும், சக்தி இல்லாமல் சிவம் இல்லை என்பதும் பாவம் இந்த 'அப்பிராணிகளுக்குத்' தெரியவில்லை. முறைப்பாடு வைக்க வருகிறவர்களை வார்த்தைகளால் மட்டும் திருப்திப்படுத்துவதில் சம்பந்தருக்கு நிகர் சம்பந்தர்தான்.

👌உலகநாதரின் ஒப்பீனியன்: 📣  'நீ பாதி நான் பாதி கண்ணே! அருகில் நீயின்றி தூங்காது கண்ணே!'- சூப்பர் சோங். ஹி..ஹி..

❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆  ❆❆❆❆❆❆

ஹலோ... உங்களைத்தான்!.....
பாட்டையும் பாவத்தையும் மட்டும் இரசித்துவிட்டுப் போகாமல்,
நீங்களும் கச்சேரியில் இணைந்து கொண்டு,
சமூகம், தமிழ் மற்றும் சமயம் சார்ந்த உங்கள் கே
ள்விகளையும் அனுப்பி வையுங்கள்.
மின்னஞ்சல் முகவரி: mailuharam@gmail.com

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்