'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 67 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩  🚩  🚩
குமாரதாசன் குடும்பம் கொழும்பு புறப்பட்டது

மீண்டும் விட்ட இடத்திலிருந்து விடயங்களைத் தொடர்கிறேன்.
சாவகச்சேரியில் எல்லோரும் மகிழ்வாக இருந்த போதிலும்,
குடும்பஸ்தர்கள் எதிர்காலம்பற்றி உள்ளூரக் கவலைப்படத்தொடங்கினர்.
இந்த நேரத்தில் கொழும்பு போய்விட்டால் வெளிநாடு போய் விடலாம்,
எனும் எண்ணம் என் தங்கைக்கு வர,
குமாரதாசன் குடும்பம் கொழும்பு போவதென முடிவு செய்தது.
நாட்டுச் சூழ்நிலையால் புலிகளின் 'பாஸ்' முறை அப்போது தளர்ந்திருந்தது.
அச் சூழ்நிலையைப் பயன்படுத்தி 'பாஸ்' பெற்று அவர்கள் கொழும்பு சென்றனர்.
சிவசங்கரும் அவர்களோடு கொழும்பு சென்றான்.
குமாரதாசனது மகன் பிரசன்னாவை, நான்தான் ஆசையாய் வளர்த்தேன்.
அதுபோலவே, குமாரதாசனது மனைவியான தர்ஷியை,
என் தங்கையாய் அன்றிப் பிள்ளையாய் வளர்த்தவன் நான்.
அவர்களதும் குமாரதாசனதும் பிரிவு என்னை மிகவும் பாதித்தது.
அப்படியே அவர்கள் வெளிநாடு சென்றுவிட்டால்,
அவர்களைப் பார்க்க முடியாமற் போய்விடுமோ?
என நினைந்து படுத்திருந்து அழுவேன்.
கையிலிருந்த காசும் கரையத்தொடங்கிவிட்டது.
நானும் ஒரு தரம் கொழும்பு சென்று அவர்களைப் பார்த்துவிட்டு, 
வெளிநாட்டில் வசிக்கும் சகோதரர்களிடம்,
பண உதவியும் பெற்றுத் திரும்பலாம் என முடிவு செய்தேன்.

🚩  🚩  🚩
பாஸ் கிடைத்தது

எனது முடிவின்படி,
நானும், ரத்தினகுமாரும், ரகுபரனும், அவனது தந்தையும், 
கொழும்பு செல்ல 'பாஸ்' எடுக்க முடிவு செய்தோம்.
சாவகச்சேரியில் விண்ணப்பித்தால் ஒரு வேளை எங்களைத் தெரிந்து,
'பாஸ்'தராமல் விட்டு விடுவார்களோ என எண்ணி,
வடமராட்சி சென்று பாஸூக்காய் விண்ணப்பித்தோம்.
ஆச்சரியமாய் அடுத்த நாளே 'பாஸ்'  கிடைத்து விட்டது.
ஆனாலும் பயம் போகவில்லை.
பாஸ் கிடைத்து, கொழும்பு செல்லும் வழியில்,
நல்லூர் முதலாளி குடும்பத்தினரை,
புலிகள் திருப்பி அனுப்பிய செய்தி தெரியவந்ததால்,
எங்களையும் அப்படி அனுப்பி விடுவார்களோ எனப் பயந்தோம்.

🚩  🚩  🚩
கம்பன் கோட்டம் பிரபாகரனது மாளிகையானது

இந் நிலையில் யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியது.
நல்லூரில் பிரபாகரனது மாளிகையை இராணுவம் மீட்டுவிட்டதாக, 
வானொலிச் செய்திகள் முழங்கின.
நல்லூரில் பிரபாகரன் இருக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரியும்.
பின்னர், பிரபாகரனின் மாளிகை என்று எதைச் சொல்கிறார்கள் எனக் குழம்பினோம்.
நல்லூர் மனோன்மணி அம்மன் கோயிலின் பக்கத்தில்,
ஆறுமுகம் ஐயா என்பவரது பெரிய மேல் வீடு இருந்தது.
இயக்கம் அதனை முகாமாக வைத்திருந்தது.
அதைத்தான் பிரபாகரனது மாளிகை என்கிறார்களா?
அல்லது, எங்கள் கம்பன் கோட்டத்தைத்தான்,
பிரபாகரனது மாளிகை என்கிறார்களா? என உள்ளுணர்வில் ஓர் ஐயம்.
எங்கோ தூரத்தில் ஒரு வீட்டில் சைக்கிள் டைனமோ வைத்து,
ரி.வி. பார்ப்பதாய் அறிந்து இரவுச் செய்தி பார்க்க அவ்வீட்டிற்குச் சென்றோம்.
வெளிமதிலால் எட்டி ரி.வி. செய்தி பார்த்தபோது,
செய்தியில் எங்கள் கம்பன் கோட்டம்தான்,
பிரபாகரனது மாளிகையாய்க் காட்டப்பட்டது.
அதிர்ந்து போனோம்.
அடுத்த நாள் கொழும்பு புறப்பட வேண்டும்.
செய்தி பிழையானது என்பதாலும், 
கம்பன் கோட்டத்தை அனைவருக்கும் தெரியும் என்பதாலும்,
புலிகளுடனான எமது முரண்பாடு பிரசித்தம் என்பதாலும்,
பயப்படத்தேவையில்லை என நினைந்து, 
அடுத்த நாள் புறப்பட்டோம்.

🚩  🚩  🚩
தடுத்த புலிப் போராளி

எங்களது முயல்களை நெல்லியடி தயாபரனிடமும்,
நாய்களை மணிமாறன், பிரசாந்தனிடமும் ஒப்படைத்துவிட்டு,
அடுத்த நாள் காலை விதி விளையாடிய ஒரு நேரத்தில்,
நாலுபேரும் கொழும்பு நோக்கிப் புறப்பட்டோம்.
ஒவ்வொரு புலிகளின் 'சென்றி'களையும் தாண்டும்போது நெஞ்சு படபடக்கும்.
ஆனால் யாரும் எங்களைத் தடுக்கவில்லை.
புலிகளின் எல்லை தாண்டுகின்ற கடைசித் தடைமுகாம் வர,
இனித் தப்பினோம் என நினைத்து அதைத் தாண்ட முற்படுகையில்,
ஒரு போராளி என்னைத் தனியே அழைத்தான்.
நெஞ்சு விறைத்து விட்டது.
உள்ளே அழைத்துச் சென்று, 'அண்ணே நீங்கள் போவது புத்திசாலித்தனம் இல்லை.
உங்களைப் போல முக்கியமானவர்களை வவுனியாவிலிருந்து ஹெலிக்கொப்டரில்,
யாழ்ப்பாணம் கொண்டு போய் இறக்கி முக்கியமானவர்கள் இடம்பெயரவில்லை என,
அரசாங்கம் காட்ட நினைக்கும்.
அதோட உங்கட கம்பன் கோட்டத்தைத்தான் தலைவற்ற மாளிகை என்று நேற்றுக் காட்டினவங்கள்.
அதாலயும் உங்களுக்குப் பிரச்சனை வரலாம் என்றபடியால்,
நீங்கள் கொழும்பு போகாமல் விடுவது நல்லது'
என்றான்.
நான் துணிந்து, 'தம்பி! கையில செலவுக்குக் காசில்ல,
கொழும்புக்குப் போய், 
வெளிநாட்டில இருக்கிற அண்ணனிட்ட காசு வாங்கி வரத்தான் போறன்.
கம்பன் கோட்டத்தை எல்லாருக்கும் தெரியும்.
அவங்கள் பிழையாய் அறிவிச்சுப் போட்டாங்கள் என்றபடியால் பயமில்லை.
நான் போயிற்று வாரன்'
என்றேன்.
'அதுக்குமேல் உங்கள் இஷ்டம்' என்று சொல்லி அவன் என்னை அனுப்பிவிட்டான்.
தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என நினைத்துக் கொண்டு,
கஷ்ட காலம் காத்திருப்பது தெரியாமல்,
தடையைக்கடந்து வவுனியாவுக்குள் கால் வைத்தோம்.

🚩  🚩  🚩
தடுத்து வைக்கப்பட்டோம்

புலிகளின் இறுதித் தடை தாண்டியதும்,
வயல் வரம்புகள் ஊடாக நடந்து ஒரு பாலம் தாண்டி,
இராணுவ 'செக்போஸ்ட்டு'க்குள் நுழைய வேண்டும்.
ஒவ்வொருவராக அடையாள அட்டை பார்த்து, பின்னர்,
வவுனியா 'ரயில்வே ஸ்ரேஷனு'க்கு அருகிலிருந்த,
தடை முகாமுக்கு அனுப்பி வைப்பார்கள்.
அங்கு கொழும்பில் நாம் சென்று தங்கப்போகிற முகவரி, 
தொலைபேசி இலக்கம் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.
பிரச்சினை ஒன்றும் இல்லையென்றால் நாம் கொடுக்கிற முகவரிக்கு,
இராணுவம் எங்கள் வருகையை அறிவிக்கும்.
அவர்கள் வந்து கையொப்பம் இட்டு எங்களை அழைத்துச்செல்ல வேண்டும்.
அதுதான் அப்போதைய நடைமுறையாய் இருந்தது.
பொதுவாக என் தோற்றம் கண்டு யாரும் என்னை விசாரிப்பதில்லை.
ரத்தினகுமார், ரகுபரன் ஆகியோரைத்தான் விசாரிப்பார்கள் என நினைத்திருந்தோம்.
'செக்போஸ்ட்' தாண்டும்போது ஓர் இராணுவ வீரன் என்னைத்தான் அழைத்து,
பொதுப்பட விசாரித்தான்.
கம்பன் கோட்டத்தைப் பிரபாகரனின் மாளிகை என்று அறிவித்திருந்தபடியால்,
ஏதாவது பிரச்சனை வருமோ? எனும் பயம் உள்ளிருந்தது.
ஆனால், அவன் அதுபற்றி ஏதும் கேட்காமல் என்னைப் போகச்சொல்ல,
எல்லோருமாகத் தடை முகாமுக்கு வந்து சேர்ந்தோம்.

🚩  🚩  🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்