'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 68 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
மீண்டும் விசாரிக்கப்பட்டேன்

பெரிய கூட்டம் அங்கிருந்தது.
யாழிலிருந்து வந்தவர்களை, கொழும்பு உறவினர்கள் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் குறைய ஆரம்பித்தது.
இடப்பெயர்வுக்கு முன்னரே கொழும்பு வந்துவிட்ட எனது அக்கா குடும்பத்தாரும், 
குமாரதாசன் குடும்பத்தாரும் வெள்ளவத்தையில் ஒரு வீடு எடுத்துத் தங்கியிருந்தனர்.
அவர்கள் முகவரி எங்களுக்குத் தெரியாததால்,
நண்பரான பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங்கின் வீட்டு முகவரியையே,
நாங்கள் இராணுவ முகாமில் கொடுத்திருந்தோம்.
கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் போய்க் கொண்டிருந்தார்கள்.
எங்களை மட்டும் அனுப்புகிற பாடாய்த் தெரியவில்லை.
பயணக்களைப்பு ஒரு புறம் ஒரு மரத்தின் கீழ் நால்வரும் குந்தியிருந்தோம்.
திடீரென என்னை மட்டும் விசாரணைக்கு மீண்டும் அழைத்தார்கள்.
எங்களைப் பற்றிய விபரங்களை ஒவ்வொன்றாய் கேட்கத் தொடங்கினார்கள்.
பிரபாகரன் மாளிகை விடயம் தவிர மற்ற எல்லாவற்றையும் சொன்னேன்.
அவர்கள் பொதுப்பட என்னை விசாரிக்கிறார்கள் என்றே நினைத்தேன்.
சுற்றி வளைத்து விசாரித்தவர்கள் இறுதியில், 'உங்களது இடம் நல்லூர் என்கிறீர்கள்.
அங்கு இருந்த பிரபாகரன் மாளிகையைத் தெரியுமா?'
என்று கேட்டார்கள்.
உடனே நான் உசாரானேன்.

🚩 🚩 🚩

தெரிந்தே பிடித்தது தெரியவந்தது

இவர்கள் விடயந் தெரிந்து தான் என்னை விசாரிக்கிறார்கள் என்று உள்ளுணர்வு சொல்ல,
சுதாகரித்துக் கொண்டு 'அது பிரபாகரனின் கட்டடம் இல்லை, எங்களது கட்டடம்தான்.
தெரியாமல் அதைப் பிழையாய் அறிவித்துவிட்டார்கள்'
என்றேன்.
'யார் கட்டிடத்தின் பொறுப்பாளி' என்று கேட்டார்கள், 'நான்தான்' என்றேன்.
'உன்னோடு வந்திருக்கும் மற்றவர்கள் யார்?' என்றார்கள்.
அவர்களுக்கும் பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காக,
'அவர்கள் என் நண்பர்கள்' என்று மட்டும் சொன்னேன்.
ஆரம்ப காலத்தில் சிலாபத்தில் படித்ததால் எனக்கு, சிங்களம் ஓரளவு விளங்கும்.
ஆனால், பேசமாட்டேன்.
விசாரணையின்போது எனக்குச் சிங்களம் கொஞ்சமும் தெரியாததாய் நான் காட்டிக்கொண்டேன்.
அவர்கள் எனக்குச் சிங்களம் தெரியாது என்று நினைத்துத் தமக்குள் சிங்களத்தில் பேசிக்கொள்ள,
விஷயம் தெரிந்து தான் அவர்கள் என்னை விசாரிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.
மனதுக்குள் பெரும் பதற்றம் ஆனாலும் வெளிக்காட்டாமல் துணிந்தவன்போல், 
நான் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
பிறகு என்னோடு வந்தவர்களையும் ஒவ்வொருவராய் விசாரித்தார்கள்.
நல்லவேளை, யார் விசாரித்தாலும் உண்மையை மட்டுமே சொல்வதென,
நாம் முன்னரே கூடி முடிவெடுத்திருந்தோம்.
அதனால் எங்கள் பதில்களுக்குள் முரண்பாடு இருக்கவில்லை.
நாம் தப்புவதற்கு அதுவும் ஒரு காரணமாயிற்று.

🚩 🚩 🚩

அரச அதிபர் கைவிட்டார்

விசாரித்து விட்டு, 
விட்டுவிடுவார்கள் என நினைத்தோம்.
அது நடக்குமாப்போல் தெரியவில்லை, நேரம் ஆகஆக பயம் பிடித்துக்கொண்டது.
எங்களோடு வந்த சனம் எல்லாம் போய்க்கொண்டிருக்க நாங்கள் மட்டும் தனித்திருந்தோம்.
வவுனியா அரச அதிபரைச் சந்தித்து நாங்கள் யார் எனும் விடயத்தை, 
இராணுவத்திற்குச் சொல்லச் சொன்னால் ஒருவேளை எம்மை விடக்கூடும் என, 
எங்களுக்குள் கூடி முடிவெடுத்து,
நானும் ரத்தினகுமாருமாக ஒரு ஓட்டோ பிடித்து அரச அதிபரின் அலுவலகத்திற்குச் சென்றோம்.
அங்கு ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
எங்கள் பதட்டத்தில் அதைப் பற்றிக் கவலைப்படாமல் உள் நுழைந்தோம்.
அப்பொழுது கணேஸ் என்பவர் வவுனியா அரச அதிபராக இருந்தார்.
அவருக்கு எங்களைத்தெரிந்திருந்தது.
நாம் நிலைமையைச் சொன்னதும் அவர் நடவடிக்கை எடுப்பாரென நினைந்தோம்.
ஆனால், அவரோ 'உங்கட கட்டடத்தைத்தான், பிரபாகரனது மாளிகை என்று காட்டினது,
தெரிந்தால் பிறகேன் வெளிக்கிட்டு வந்தனீங்கள்?'
என்றார்.
சப்பென்று போய்விட்டது.
'எதற்கும் நான் பேசிப்பார்க்கிறேன்' என்று கூறி அனுப்பி வைத்தார்.
ஒன்றும் நடக்கவில்லை.
இரவு எட்டு மணிபோல அவரும், 
அப்போது கிளிநொச்சி ஜி.ஏ. ஆக இருந்த தில்லைநடராஜா அவர்களும்,
முகாமிற்கு வந்து எங்களுக்கு ஆறுதல் மட்டும் கூறிச் சென்றனர்.
அடுத்த நாள் அகளங்கன் போன்ற இலக்கியக்காரர் ஓரிருவரும்,
முகாமுக்கு வந்து எங்களைப் பார்த்துச் சென்றனர்.

🚩 🚩 🚩 

ஓட்டோக்காரனின் அன்பு

சொகுசாய் வாழ்ந்து பழகிவிட்ட எனக்கு,
குளித்து உடை மாற்ற வேண்டும் எனும் தவிப்பு ஒரு பக்கம்.
வவுனியாவிலிருக்கும் யாராவது கையொப்பம் இட்டால்,
அவர்கள் வீட்டிற்கு எங்களை அழைத்துச் செல்லலாம் என்றார்கள்.
தெரிந்தவர்கள் பலர் அங்கிருந்தனர்.
முள்ளுக்கம்பி வேலிக்கூடாக எங்களைக் கண்டு பேச வந்தவர்கள்,
நிலைமை அறிந்ததும் மெல்ல நழுவினார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்தபோது பட்டிமண்டபங்களுக்கு,
சிலவேளைகளில் ஓட்டோவில் செல்வோம், ஒரு ஓட்டோவில் ஏழு பேர்வரை ஏறுவோம்.
டிரைவருக்கு இருபக்கத்திலும் இருவர், பின் சீற்றில் மூவர், அவர்கள் மடியில் இருவர் என,
பயணம்  'சர்க்கஸ்' வேடிக்கையாய் நடக்கும்.
அப்போது எங்களை ஓர் இளைஞன்தான் ஓட்டோவில் அழைத்துச் செல்வான்.
அந்த இளைஞன் வவுனியாவில் எங்களைக் கண்டதும், கையொப்பமிட்டு, 
தன் வீட்டுக்கு எங்களை அழைத்துச் செல்ல முயன்றான்.
இராணுவம் அவனை இரகசியமாகக் கூப்பிட்டு மிரட்டியது.
அவனுக்கும் பிரச்சினை வேண்டாமே என்று அவனைப் போகச்சொல்லி விட்டோம்.

🚩 🚩 🚩

இறைகருணை அங்கும் இருந்தது

அன்றிரவு வெறும் நிலத்தில் துண்டை விரித்துப் படுத்தோம்.
என்னை நடுவில் படுக்க விட்டு ரகுபரனும், ரத்தினகுமாரும்,
இரண்டோரங்களிலும் படுத்துக்கொண்டனர்.
அவர்கள் அதிகம் பயப்படவில்லை.
நானோ பயத்தில் விறைத்துப் போயிருந்தேன்.
அநியாயமாய், சாவகச்சேரியை விட்டு வந்தோமே என மனம் சலித்துக்கொண்டது.
இனி என்ன நடக்கப்போகிறதோ? என்ற பயத்தில் அன்று கண்மூடமுடியவில்லை.
நடுங்கியபடி இரவு பூராகவும் கிடந்தேன்.
காலையில் கண்விழித்துப் பொதுத் தொட்டியில் முகம், கை, கால் கழுவி,
மீண்டும் வந்து உட்கார்ந்தோம்.
வசதியாய் வாழ்ந்த எனக்கு அது பெரிய தண்டனையாய் இருந்தது.
அந்த முகாமுக்குள் ஓர் அரச அலுவலகம் இயங்கியது.
அவ் அலுவலகத்திற்கு ஒரு மட்டக்களப்பு இளைஞன் பொறுப்பாக இருந்தான்.
வெளியில் வந்த அவனுக்கு, என்னைத் தெரிந்திருந்தது.
தானாக வந்து மரியாதையாய்ப் பேசினான்.
எங்கள் நிலையை அறிந்து, 'கவலைப்படாதீர்கள் எனது அறையில் நீங்கள் தங்கலாம்' எனக் கூறி,
இராணுவத்திடம் சொல்லிவிட்டு தன் அறைக்குள் எம்மை அழைத்துச் சென்றான்.
'அட்டாச் பாத்ரூம்', கட்டில்களோடு அந்த அறை இருந்தது.
எனக்குச் சொர்க்கத்தைக் கண்டது போன்ற மகிழ்ச்சி.
ஆசை தீரக்குளித்து, கொஞ்ச நேரம் கட்டிலில் படுத்துறங்கினேன்.
முகாமுக்குள்ளும் வசதியாக இருந்த ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்.
இறை கருணை அங்கும் பொழிந்தது.
என் நிலை கண்டு ரத்தினகுமாரும், ரகுபரனும் பெரிதும் வருந்தினார்கள்.
என்னைத் தெம்பூட்டி ஆறுதல் சொல்லியபடி இருந்தார்கள்.
இடையிடையே இராணுவம் மூவரையும் தனித்தனி அழைத்து,
திரும்பத்திரும்ப ஓரே விஷயங்களையே  விசாரித்தது.
பிறந்ததிலிருந்து வவுனியா வந்தது வரையிலான,
அனைத்து விடயங்களையும் கேட்டு எழுதினார்கள்.
ஒவ்வொருதரம் அழைக்கப்படுகையிலும் அதே கேள்விகளே மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டன.
ஒரே பதிலைச் சொல்லிச் சொல்லி, சலித்துப் போய்விட்டோம்.
பொய்யான பதிலானால் திரும்பத்திரும்பக் கேட்கப்படுகையில்,
மாறிப் பதில் சொல்லுவோம் என எதிர்பார்த்தார்கள் போலும்.
அவர்கள் நோக்கம் நிறைவேறவில்லை.

🚩 🚩 🚩

எதிரிக்கும் வேண்டாம் இத்துன்பம்

இப்படியே மூன்று நாட்கள் கழிந்து போயின.
இன்று விடுபடுவோம், நாளை விடுபடுவோம் என நினைந்து, நினைந்து,
நாம் ஏங்கிய ஏக்கத்தை, வார்த்தைகளிற் சொல்லிமாளாது.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஜெயிலில் வருடக்கணக்கில் வாடுவதாய்,
பத்திரிகையில் படிக்கும் போதெல்லாம் அன்று நான் பட்ட துன்பம்தான் ஞாபகத்திற்கு வரும்.
துடித்துப் போவேன்.
மூன்றாம் நாள் முடிந்து விடிய ஆச்சரியம் காத்திருந்தது.

🚩 🚩 🚩

விடுவிக்கப்பட்டோம்

விடியக்காலை எங்களைத் தேடி கொழும்பிலிருந்து குமாரதாசனும், 
எனது அத்தானும், ரகுவின் அப்பாவும், வந்திருந்தனர்.
இராணுவம் அறிவித்ததால், எங்களைக் கூட்டிச் செல்ல வந்ததாய்ச் சொன்னார்கள்.
அன்று நான் பட்ட ஆனந்தத்திற்கு ஓர் அளவில்லை.
அன்றும் இராணுவம் எங்களை மீண்டும் விசாரித்து விடுவித்தது.
இரவு பத்து மணி ரயிலில் கொழும்பு செல்வதென முடிவு செய்தோம்.
ஏனோ இரவு புறப்படுவதில் ரத்தினகுமாருக்கு உடன்பாடிருக்கவில்லை.
ஆனால் எனது பிடிவாதத்தால் புறப்படுவதாய் முடிவாயிற்று.
இரவு எட்டரை மணிக்குச் சாப்பாடுகளும் கட்டிக்கொண்டு,
'ரயில்வே ஸ்ரேசன்' வந்து சேர்ந்தோம்.

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்