'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 69 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩

ரயிலிலிருந்து கடத்தப்பட்டோம்

இதற்கிடையில் எங்களை இராணுவம் தடுத்து வைத்திருக்கும் செய்தி, 
வவுனியா முழுக்கப் பரவியிருந்தது.
நாங்கள் ஸ்ரேசனுக்கு வர அங்கிருந்த தமிழ் ஸ்ரேசன் மாஸ்ரர் ஒருவர்,
அக்கறையாய் நடந்தவற்றை விசாரித்தார்.
'பிரபாகரன் மாளிகைச் செய்தி பொய்யா?' என ஆச்சரியப்பட்டுக் கேட்டார்.
அவருக்குப் பக்கத்தில் ஒரு சிங்களப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நின்றிருந்தார்.
ஸ்ரேசன் மாஸ்ரர் எங்களுக்கு நடந்ததையெல்லாம்,
அந்த இன்ஸ்பெக்டருக்கு சிங்களத்தில் சொல்ல,
அவரும் அனைத்தையும் ஆச்சரியமாய்க் கேட்டார்.
பிறகு நாங்கள் ரயிலில் ஏறி எங்கள் இருக்கைகளில் அமர்ந்துவிட்டோம்.
துன்பம் தீர்ந்த மகிழ்ச்சியில் நாங்கள் சிரித்துப் பேசியபடி இருந்தோம்.
ரயில் புறப்பட ஆயத்தமாயிற்று.
திடீரென ஏழெட்டுப்பேர் காற்சட்டை, ரீசேட்டுடனும்,
விதம் விதமான தாடி, மீசைகளுடனும், கைத்துப்பாக்கிகளுடனும்,
நாங்கள் இருந்த ரயில் பெட்டிக்குள் ஏறினர்.
நடப்பது என்ன என நாம் அறிவதற்கு முன் அவர்கள் எங்கள் அருகில் வந்து,
துப்பாக்கியைக் காட்டி, உடன் எங்களை ரயிலால் இறங்கச் சொன்னார்கள்.
ரத்தினகுமார்  துணிந்து அவர்களை 'நீங்கள் யார்?'என மிரட்டிக் கேட்டார்.
தாங்கள் இராணுவம் என்றார்கள்.
அதற்கான அடையாளஅட்டையைக் காட்டினால் தான்,
இறங்குவோம் என ரத்தினகுமார் தர்க்கித்தார்.
பின்னர் அவர்களில் தலைவனாய் இருந்தவனைத் தள்ளிவிட்டு,
ரயிலால் குதித்து நாம் வரும்போது வாசலில் நின்ற,
பொலிஸ் இன்ஸ்பெக்டரை நோக்கி ஓடத்தொடங்கினார்.
ரத்தினகுமார் ஓட அவர்கள் துப்பாக்கியுடன் துரத்த நாம் பின்னால் ஓட,
ரயில்வே ஸ்ரேசன் அல்லோலகல்லோலப்பட்டது.
ஓடும் ரத்தினகுமாரை,
துப்பாக்கி வைத்திருப்பவன் சுட்டு விடுவானோ? என நான் பதறிப்போனேன்.
நல்ல வேளை அவன் சுடவில்லை.
வாசலில் நின்ற இன்ஸ்பெக்டரிடம் ரத்தினகுமார் விடயத்தைச் சொல்ல,
வந்தவர்களிடம் அவர் ஏதோ சிங்களத்தில் கதைத்து விட்டு,
நீங்கள்  அவர்களுடன் போகத்தான் வேண்;டும் என்று சொல்லி விட்டார்.
அந்தக் குழுவினர் எம்மைச் சூழ்ந்தபடி,
துப்பாக்கி முனையில் எம்மை ஸ்ரேசனுக்கு வெளியே கொண்டுவந்தனர்.

🚩 🚩 🚩

தப்பிய ரகுபரன் அகப்பட்டான்

இந்தக் கலவரத்தில் திடீரெனத் திரும்பிப் பார்த்தால்,
உடன் வந்த ரகுபரனையும், தந்தையையும் காணவில்லை.
அவ்விருவரும் மெல்ல தண்டவாளத்தில் இறங்கி,
'ஸ்ரேசனின்' பிற்பகுதியால் நழுவியிருந்தனர்.
அவ்விருவராவது தப்பினால்,
எங்கள் நிலையை யாருக்காவது போய்ச் சொல்வார்களே என நினைந்து,
திருப்தியுற்றோம்.
ஆனால் 'ஸ்ரேசனு'க்கு வெளியில் நாங்கள் வருகையில்,
அவ்விருவரையும் வேறொருவன் துப்பாக்கி முனையில்,
பின் பக்கத்தால் கூட்டி வந்தான்.
அந்தத் துரதிஷ்டமான நிலையிலும்,
ரகுபரன் தாம் அகப்பட்டதை நினைந்து,
விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டு வந்த காட்சி,
இப்போதும் என் கண்களில் நிற்கிறது.

🚩 🚩 🚩

'வானில்' ஏற்றப்பட்டோம்

நான், ரத்தினகுமார், குமாரதாசன், ரகுபரன், 
எங்கள் அத்தான், ரகுபரனின் அப்பா என,
எம் ஆறு பேரையும் வெளியில் நின்ற வான் ஒன்றினுள் ஏற்றினார்கள்.
நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனையை வைத்து,
ஒருவரோடொருவர் பேசக் கூடாது என உத்தரவிட்டார்கள்.
வான் சிறிது தூரம் போனதும் அதனை இடையில் நிறுத்தி,
வேறொரு வானுக்குள் எல்லோரையும் மாற்றி ஏற்றினார்கள்.
வான் ஒரு காட்டிற்குள் போகத் தொடங்கியது.
நாம் கொல்லப்படப் போகிறோம் என்பது,
ஐயத்திற்கு இடமில்லாமல் மனதில் பதிந்தது.
புத்தி அச்சத்தின் உச்சத்தைத் தொட்டது.
எங்கள் கோட்டத்தைப் பிரபாகரனின் மாளிகை என,
அவர்கள் தவறாக அறிவித்த செய்தி,
ஆங்கில, சிங்கள, தமிழ் பத்திரிகை அனைத்திலும் வெளி வந்திருந்தது.
நாம் கொழும்பு போனால் எல்லோருக்கும் உண்மை தெரியவந்துவிடும் என்பதால்,
எம்மை அழிக்கப் போகிறார்கள் எனப் புத்தி ஊகித்தது.
அப்போதும் ரத்தினகுமார் ரகசியமாய் என் கையைப் பிடித்து இறுக்கி,
அஞ்சாமல் இருக்கும்படி உணர்த்தினார்.
எனக்கு என்னைவிட மற்றவர்களைப்பற்றித்தான் அதிகம் கவலையாக இருந்தது.
குமாரதாசனின் மகன் தந்தையைப் பிரிந்து ஒரு நிமிஷமும் இருக்கமாட்டான்.
அத்தான் இல்லாத அக்காவின் குடும்ப நிலை,
கஷ்டப்பட்டு மகனை டாக்டராக்கிய ரத்தினகுமாரின் குடும்ப நிலை,
ரகு மேல் உயிரை வைத்திருந்த அவர்களின் குடும்ப நிலை,
இவற்றையெல்லாம் நினைக்க நினைக்க என்மனம் எல்லையின்றி வேதனைப்பட்டது.
எனது முயற்சிக்குத் துணை செய்ய வந்து,
இவர்கள் எல்லாம் வருந்தப்போகிறார்களே என நினைந்து நினைந்து வாட்டமுற்றேன்.

🚩 🚩 🚩

காட்டுக்குள் இருந்த  வீட்டுக்குள் அடைக்கப்பட்டோம்

நேரம் கிட்டத்தட்ட நடுச்சாமம் ஆகிக்கொண்டிருந்தது.
வெளிச்சமே இல்லாத ஒரு காட்டுப் பகுதிக்குள் இருந்த,
ஒரு வீட்டின் வாசலில் எங்களை அழைத்துச் சென்ற வான் நின்றது.
துப்பாக்கி முனையில் இறக்கப்பட்டு,
அந்த வீட்டினுள் இருந்த அறைகளில் இருவர் இருவராக அடைக்கப்பட்டோம்.

🚩 🚩 🚩

அப்போதும் தூங்கிய ரகுபரன்

என்னையும், ரகுபரனையும் ஓர் அறையில் அடைத்தார்கள்.
ரகுபரன் துளியேனும் பயப்பட்டதாகத் தெரியவில்லை.
எனக்கு எரிச்சல் வரும்படி நடந்ததை நினைந்து சிரித்துக்கொண்டேயிருந்தான்.
பிறகு கொஞ்ச நேரத்தால், 'எனக்கு நித்திரை வருகுது,
இதுல கிடக்கிற கட்டில்ல கொஞ்ச நேரம் படுக்கட்டே?' என்றான்.
அத்தகைய சூழலில் நித்திரை கொண்ட ஒரே ஆசாமி இவனாகத்தான் இருப்பான்.

🚩 🚩 🚩

மனந்துணிந்தேன்

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அடைத்து வைக்கப்பட்டிருந்தோம்.
அந்த நேரத்தில் எனக்குள் ஓர் அதிசய மாற்றம் நிகழ்ந்தது.
அச்சத்தின் உச்சியில் நின்ற எனது மன நிலையில்,
மெல்ல மெல்ல பயம் போய்த் தெளிவு பிறந்தது.
அந்த ஒரு மணிநேரம் அசையாது இறைவனை வணங்கினேன்.
அந்தச்சூழ்நிலையில், அந்த நேரத்தில்,
இறைவனை வலிந்து வணங்கும் மனநிலை உருவானது ஆச்சரியம்தான்.
கொஞ்ச நேரத்தில் ஒரு சிலர் மீண்டும் துப்பாக்கிகளுடன் வந்தனர்.
ஒருவன் கையில் ஓர் அயன் பொக்ஸை எடுத்துச்சென்றான்.
'சரி இன்றைக்கு சித்திரவதைதான்' என்று முடிவு செய்தேன்.
அவர்களோடு முரண்பட்டதால் ரத்தினகுமாரை,
கடுமையாய்த் தண்டித்து விடுவார்களோ எனும் பயம் என்னை வாட்டியது.
ஆனாலும் அப்போதைய மனத்தெளிவால் அச்சம் வரவில்லை.
பிரார்த்தித்தபடி இருந்தேன்.

🚩 🚩 🚩

விசாரணை தொடங்கியது

சிறிது நேரத்தில் என்னையும், ரத்தினகுமாரையும் மட்டும் வெளியே கொண்டு வந்தார்கள்.
இருவரையும் தனித்தனி அறைகளுக்குக் அவர்கள் கூட்டிச்சென்றனர்.
என்னை அழைத்துச் சென்ற அறையில் ஒரு மேசை போடப்பட்டு,
அதன் முன் ஓர் இளைய இராணுவ அதிகாரி உட்கார்ந்திருந்தான்.
அவனுக்கு நேர் எதிரே மேசைக்கப்பால் போடப்பட்டிருந்த கதிரையில்,
அவர்கள் என்னை உட்கார வைத்தார்கள்.
எனக்குப் பின்னே நான்கு முரடர்கள் நின்று கொண்டனர்.
பின்னால் இருந்து என் தலையில் அடித்து,
என்னைக் கொல்லப்போகிறார்கள் என நினைத்தேன்.

🚩 🚩 🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்