'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 70 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
திடீரென வந்த துணிவு

ஏனோ தெரியவில்லை அப்போதும் எனக்கு அச்சம் வரவில்லை.
எனக்கு முன்னிருந்த அதிகாரி விசாரணையைத் தொடங்கினான்.
அவனுக்கு ஓரளவு தமிழ் தெரிந்திருந்தது.
அவன் ஓர் இஸ்லாமியன்.
மனம் நன்கு தெளிந்திருந்ததால் அவனை முந்திக் கொண்டு நான் பேசத்தொடங்கினேன்.
'மேற்படிக் கட்டிடத்திற்கு நான் தான் உரிமையாளன்,
என்னோடு வந்தவர்கள் நட்பால் எனக்குத் துணை செய்தவர்களே,
அவர்களுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.
நீ யாரையாவது கொல்ல நினைத்தால் முதலில் என்னைக் கொல்!,
என் கண் முன்னால் என்னோடு வந்தவர்களுக்கு எந்தத்துன்பமும் செய்யக் கூடாது.
அப்படிச் செய்தால் இங்கேயே தற்கொலை செய்து உயிரை விடுவேன்'

என உறுதியாய்க் கூறினேன்.
என் வார்த்தைகள் அவனது மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின.
என்மேல் அவனுக்கு மரியாதை உண்டாகியதை அவனது கண்கள் காட்டின.
அவன் சிறிய பதற்றத்தோடு,
'உங்களை நாங்கள் விசாரிக்கத்தான் அழைத்து வந்திருக்கிறோம்.
உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யமாட்டோம்'
என்றான்.
நான் அவன் வார்த்தைகளை நம்பாமல்,
'நான் குழந்தையில்லை.
மூன்று நாள் தடுத்து வைத்து விசாரித்து விடுவித்தபின்னர்,
பெரும் குற்றவாளிகளைப் போல் எங்களைக் கடத்தி வந்திருக்கிறீர்கள்.
விசாரிப்பதானால் அங்கேயே வந்து விசாரித்திருக்கலாமே?
உங்கள் வார்த்தையை நான் நம்பமாட்டேன்'
எனக் கூறி,
முன் சொன்னதையே திரும்ப வலியுறுத்தினேன்.

🚩 🚩 🚩

இராணுவ அதிகாரியின் மனமாற்றம்

அவன் சங்கடப்பட்டுப் போனான்.
மீண்டும் தான் சொன்னதை வலியுறுத்தினான்.
எனக்குப் பின்னால் நின்றவர்களை அழைத்து,
எங்கள் எல்லோருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுக்கும்படி உத்தரவிட்டான்.
சுடச்சுட அனைவருக்கும் பால் தேநீர் வந்தது.
இப்போது அவன் வார்த்தைகளில் 
எனக்கு நம்பிக்கை பிறந்திருந்தது.
பின்னர் என்னை அவர்கள் விசாரிக்கத் தொடங்க,
கொஞ்சமும் பயமில்லாமல் அவர்களைத் திட்டித் தீர்த்தேன்.
'இயக்கத்தின் ஆட்சியிலேதான் இவ்வளவு நாளும் இருந்தோம்.
அவர்களோடு தொடர்பு இல்லாமல் எப்படி இருந்திருக்க முடியும்?
உங்கள் தலைவர்கள் கூட அவர்களை வந்து சந்தித்தார்களே,
அவர்களை உங்களால் ஏதும் செய்யமுடியுமா?
அப்பாவிகளைத்தான் எல்லோரும் வருத்துகிறீர்கள்.
நீங்கள் கடத்தி வந்த விதத்தில்,
எங்களில் ஒருவருக்கு 'கார்ட் அட்டாக்' வந்திருந்தால்,
உங்களால் என்ன செய்திருக்க முடியும்?'
என்று கேள்விகளால் அவர்களைத் துளைத்தெடுத்தேன்.
இப்போது அவர்களுக்கும் முழுமையாய் எங்கள்மேல் 
நம்பிக்கை பிறந்திருந்தது.
நாம் இலக்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றறிந்ததும்,
பொன். சுந்தரலிங்கத்தைப்பற்றியும் எங்களிடம் விசாரித்தார்கள்.
அவர் எங்கள்மேல் அவ்வளவு பகை செய்திருந்தாலும்,
ஒரு நல்ல கலைஞரான அவருக்கு,
ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக,
அவரும் சூழ்நிலை, நெருக்கடி காரணமாகத்தான்,
இயக்கப்பாடல்கள் பாடினார் எனச்சொல்லி,
அவரது பாதுகாப்பையும் உறுதி செய்தோம்.
நாம் சொன்னவையெல்லாம், 
அவர்களால் பதிவு செய்யப்பட்டன.
பின்னர் இரவு முழுவதும் அங்கேயே தூங்கினோம்.
தமது மேலதிகாரி வந்ததும் 
காலையில் உங்களை விடுவிக்கிறோம் என்றார்கள்.
விடிந்ததும் அந்த இராணுவ வீரரில் சிலர்,
குளிக்கவும், பாத்ரூம் செல்லவும், 
தாங்களே எனக்குத் தண்ணீர் அள்ளிக்கொண்டு வந்து தந்தனர்.
அந்த அளவிற்கு அவர்களில் மாற்றம் வந்திருந்தது.

🚩 🚩 🚩

மீண்டும் விடுதலை

காலை பதினொரு மணியளவில்,
அவர்களுள் உயர் பதவி வகித்த ஒருவன் மீண்டும் வந்து,
எங்களை ரயில்வே ஸ்ரேசனில் கொண்டு போய் விடுவதாய்ச் சொன்னான்.
எங்களை முதலில் விசாரித்தது பொலிஸ் சி.ஐ.டி என்றும்,
கடத்தி வந்து விசாரித்தது ஆமி சி.ஐ.டி என்றும்,
அவன் சொல்லத் தெரிந்து கொண்டோம்.
பதினொரு மணியளவில் எங்களை,
அவர்களது இராணுவ ஜீப்பில் ஏற்றிக்கொண்டு,
ரயில் நிலையத்திற்கு அழைத்துப் போனார்கள்.
நாம் இராணுவ ஜீப்பில் வந்து இறங்கியதை புலிகள் அறிந்தால்,
இராணுவத்தின் கையாட்கள் இவர்கள் என ஐயப்பட்டு,
எம்மைக் கொல்லக்கூடும் எனப் பயந்து,
முகத்தை மூடி, தலையைக்குனிந்தபடி ஜீப்பினுள் இருந்தோம்.
பின்னர் ரயில் நிலையம் வந்து கொழும்பு பயணமானோம்.
கொழும்பு வந்து சேரும் வரை,
வேறு யாரும் இடையில் மீண்டும் வந்து கடத்துவார்களோ? என,
அஞ்சியபடி இருந்தோம்.
எங்களுக்கு ஒரு சிறு தீங்கும் செய்யாத அந்த இராணுவக்குழு,
கடுமையான சித்திரவதைகளையும் செய்வார்கள் என,
பின்னர் அறிந்தபோது நடு நடுங்கிப்போனோம்.
பருத்தித்துறை குகனது மகனை அவர்கள் பிடித்து,
பெற்றோல் ஊற்றிய 'ரிசு'ப்பையால் அவர் முகத்தைச் சுற்றிக்கட்டி,
விசாரித்ததாய் பின்னர் அவர் சொல்லக் கேள்விப்பட்டேன்.
அவர்கள் விரல் நுனியும் எங்கள்மேல் படாமல்.
அன்பும், ஆதரவும் செய்து எங்களை அனுப்பி வைத்தது.
ஆண்டவனது அருள் அன்;றி வேறெதுவாய் இருக்க முடியும்?

🚩 🚩 🚩

கொழும்பு வந்தோம்

இன்னல்கள் தாண்டிக் கொழும்பு வந்து சேர்ந்தோம்.
முதல் நாள் இரவு நாம் கடத்தப்பட்ட செய்தி,
கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் 
பத்திரிகைகளில் வெளிவந்திருந்தது.
என் தங்கை, அக்கா குடும்பத்தினர் 
அச்செய்தியைப் பார்த்து,
கலங்கிப் போயிருந்தனர்.
நாம் கொல்லப்பட்டு விட்டதாகவே 
அவர்கள் நினைத்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் அச்செய்தியைப் பார்த்து,
சிவராமலிங்கம் மாஸ்ரரும், 
கழக இளைஞர்களும் கலங்கிப்போனார்களாம்.
எல்லோருக்கும் எதுவும் செய்யமுடியாத கையறுநிலை.
நாங்கள் வந்து இறங்கியதும் வீடு மகிழ்ச்சியில் நிறைந்தது.
வெள்ளவத்தை தர்மராம வீதியின் ஓர் குறுக்கொழுங்கையில்,
சிறிய வீடொன்றினை எடுத்து,
அக்கா, தங்கை இருவரது குடும்பங்களும் தங்கியிருந்தன.
ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு அறைகளும், 
குசினியும் அமைந்த வீடு அது.
ஒன்றுக்கூடாகத்தான் மற்றைய அறைக்குச் செல்ல வேண்டும்.
இருக்கக் கதிரையில்லை, படுக்கக்கட்டில் இல்லை.
ஆனாலும் பட்ட கஷ்டத்தில் அந்த வீடு கூட, சொர்க்கமாய்த் தெரிந்தது.
நான்கு நாள் களைதீர,
கூடத்தில் பாய் விரித்துப் படுத்துறங்கினோம்.
🚩 🚩 🚩

பி.பி.சி. பேட்டி கேட்டது

யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியிருந்த நேரம் அது,
புலிகள் எந்நேரமும் எதுவும் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டதால்,
நாடு முழுவதும் கடும் உசார் நிலையில் இருந்தது.
இலங்கைச் செய்திகளை வெளிநாட்டு ஊடகங்கள் எல்லாம்,
பரபரப்பாய் வெளியிட்டுக்கொண்டிருந்தன.
நாம் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதை எப்படியோ அறிந்து,
எங்கள் தொலைபேசி இலக்கத்தைத் தேடிப்பிடித்து.
பி.பி.சி. ஆனந்தி என்னுடன் தொடர்பு கொண்டார்.
'கட்டிடம் புலிகளினதா? ஏன் நீங்கள் கடத்தப்பட்டீர்கள்?',
என்றெல்லாம் கேள்விகள் தொடுத்தார்.
அப்போதிருந்த அபாயகரமான சூழ் நிலை அறிந்து,
பேட்டி தர மறுத்து விட்டேன்.

🚩 🚩 🚩

 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்