'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 71 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
ஸ்ரீதரசிங்குடன் மீண்டும் கைதானோம்

இரவு ஏழு மணியிருக்கும்.
திடீரென ஒரு பொலிஸ் ஜீப் எங்கள் வீட்டுவாசலில் வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கிய பொலிஸார்,
வீட்டைத் தலை கீழாக்கிச் சோதனை செய்தனர்.
பின்னர் ரத்தினகுமாரையும், குமாரதாசனையும், 
என்னையும் ஜீப்பில் ஏறச்சொன்னார்கள்.
குமாரதாசனின் மகன் பிரசன்னா கதறியழுதான்.
அவன் அழுவதைக் கண்டு வந்த இன்ஸ்பெக்டரே சங்கடப்பட்டான்.
'விசாரித்து விட்டு அப்பாவைக்கொண்டு வந்து விடுவோம்' என,
பிரசன்னாவுக்கு ஆறுதல் சொன்னான்.
ஜீப் கதவைத் திறந்து எங்களை ஏறச் சொன்னான்.
உள்ளே பார்த்தால் ரகுபரனும், ஸ்ரீதரசிங்கும் உட்காந்திருந்தனர்.
ரகுபரன் அதே சிரிப்புடன் இருந்தான்.
ஸ்ரீதரசிங் நடு நடுங்கிப் போயிருந்தார்.
வவுனியா இராணுவ முகாமில்,
அவர்கள் முகவரியை நாம் கொடுத்ததால்,
அவரையும் கைது செய்திருந்தார்கள்.
ஸ்ரீதரசிங்கும், அவர் குடும்பத்தாரும்,
எங்களோடு மிக நெருங்கியிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் ஒரு முறை புலிகள் ஒரு சிறு பிரச்சனைக்காக, 
ஸ்ரீPதரசிங்கின் தம்பியார் ராஜனைக் கடத்தி வைத்திருந்தனர்.
அப்போதெல்லாம் அவர்களுக்காகப் புலிகளுடன் நான் போய்ப் பேசினேன்.
அந்த நெருக்கம் பற்றிய உரிமையிலேயே,
அவர்களைக் கேட்காமலே அவர்களின் முகவரியை நாம் கொடுத்திருந்தோம்.
அதனால்த்தான் ஸ்ரீதரசிங்கும் கைதாக வேண்டிவந்தது.
அந்நேரத்தில் அவர் குடும்பத்தார் சிலர்,
நாம் அவர்களது முகவரி கொடுத்தது பற்றி,
வெறுப்படைந்ததாய் அறிந்து வருந்தினேன்.
ஆனால் ஸ்ரீதரசிங் துளியும் அப்படி நினைக்கவில்லை என்பது பின்னர் தெரிந்தது.
அதுபற்றிப் பின் சொல்கிறேன்.

🚩 🚩 🚩

மீண்டும் விசாரணை

கைது செய்த பொலிஸார்,
கல்கிசைப் பொலிஸ் ஸ்ரேசனுக்கு எம்மை அழைத்துச்சென்றனர்.
மேல் மாடியிலிருந்த விருந்தினர் இருக்கையில், 
எம்மை இருக்கச் சொல்லி விட்டு,
முதலில் என்னை விசாரிக்க உள் அழைத்தார்கள்.
ஒரு சிங்கள பொலிஸ் இன்ஸ்பெக்டரும், 
தமிழ் தெரிந்த பொலிஸ்காரருமாக விசாரணையை நடத்த முயன்றனர்.
மூன்று நாட்களாக அடுத்தடுத்து விசாரிக்கப்பட்டு களைத்துப் போயிருந்த எனக்கு,
மீண்டும் விசாரணை என்றவுடன் கடுங்கோபம் வந்தது.
நான் சொல்வதை இன்ஸ்பெக்டருக்குச் சொல்லும்படி,
பொலிஸ்காரனுக்குச் சொல்லிவிட்டுப் பேசத்தொடங்கினேன்.
'எங்களோடு அளவுக்கதிகமாய் விளையாடுகிறீர்கள்.
ஏற்கனவே இரண்டு மூன்று தரம் விசாரித்து விட்டு,
மீண்டும் விசாரிக்கக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
எங்கள் ஊரில் இருக்கையில்,
பொலிஸ் ஸ்ரேஷன் வாசலைக் கூட மிதித்தறியாதவர்கள் நாங்கள்.
எங்கள் தோற்றத்தைப் பார்த்து நாம் நல்லவர்களா? கெட்டவர்களா? என,
மதிக்கமுடியாத நீங்கள்,
எப்படி விசாரித்தும் உண்மையைக் கண்டு பிடிக்க மாட்டீர்கள்.
எனவே நீங்கள் எதைக் கேட்டாலும் நான் பதில் சொல்லப் போவதில்லை'
என,
உறுதியாய்ச் சொன்னேன்.
அந்தப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன், 
படித்தவன், துவேசம் இல்லாதவன், 
எனது உணர்வை அவன் புரிந்து கொண்டான்.
'நீங்கள் நல்லவர்கள் என்பது எனக்குத் தெரிகிறது. - கவலைப்படாதீர்கள்.
காலையில் மேலதிகாரிகள் வந்ததும்,
உங்களை அனுப்பி வைக்கிறேன்'
எனச் சொல்லிப் போய்விட்டான்.
இரவு முழுவதும் எல்லோரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தோம்.

🚩 🚩 🚩

மீண்டும் கைவிடப்பட்டோம்

காலையில் வந்த இன்ஸ்பெக்டரின் முகம் சுருங்கியிருந்தது.
'உங்களை விடும்படி கேட்டேன்.
'உனக்கென்ன அக்கறை?'
என்று என்மேல் மேலதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள்.
இனி என்னால் ஒன்றும் செய்ய முடியாது.
உங்களைச் சிறையில் அடைக்கும்படி உத்தரவாகியிருக்கிறது.
ஒரேயொரு உதவியை மட்டும் நான் செய்யலாம்.
மாலைவரை ஜெயிலுக்குள் போகாமல் என் அறையில் நீங்கள் தங்கியிருங்கள்,
எனது தொலைபேசியைத் தருகிறேன் உங்களுக்குத் தெரிந்த யாரையும் தொடர்பு கொண்டு,
உங்களை வந்து மீட்கச் சொல்லுங்கள்.
இரவு நான் எப்படியும் உங்களை ஜெயிலில் போடவேண்டி வரும்.
போட்டால் மூன்று கிழமைக்கு நீங்கள் வெளியே வர முடியாது.
அதற்குள், ஏதாவது செய்து தப்பப் பாருங்கள்|'
என்று அனுதாபத்தோடு கூறிச் சென்றுவிட்டார்.

🚩 🚩 🚩

சிறையிருந்தோம்

தொலைபேசியூடாகக் கொழும்பில் தெரிந்த ஒரு சிலருடன் தொடர்பு கொண்டோம்.
யாரும் எங்களுடன் பேசவே விரும்பவில்லை.
வித்துவான் வேலனுடன் பேசினோம்.
'முருகனைக் கும்பிடுங்கள் அவன் பார்த்துக்கொள்வான்' என்றார், சலிப்பாய் இருந்தது.
கம்பன் கோட்டச்செய்தி தவறென்று வித்துவான் வேலன்,
ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் எழுதப்போக,
அவர் வீட்டை இராணுவம் குடைந்திருந்தது.
அந்த அச்சத்தில் இருந்தார் அவர்.
காலை ஒன்பது மணியிருக்கும் ஒரு பொலிஸ்காரன் வந்து,
எங்கள் பெயர்களைச் சொல்லி அழைத்தான், புதியவனாய் இருந்தான்.
அருகில் சென்று என்னவென்று கேட்டோம்.
'உங்கள் பெயர் ஜெயில் பதிவேட்டில் பதிவாகியிருக்கிறது.
ஆகவே உங்களை ஜெயிலில் போட வேண்டும்'
என்றான்.
பதறிப்போனோம்.
எல்லோரையும் சப்பாத்து, பெல்ற் முதலியவற்றை கழற்றச் சொல்லி,
அவற்றை வாங்கிக் கொண்டான்.
பின்னர் பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே இருந்த,
ஒரு ஜெயிலுக்குள் அனைவரையும் ஒன்றாக விட்டுக் கதவைப் பூட்டினான்.

🚩 🚩 🚩

ஸ்ரீதரசிங்  மயங்கினார்

எல்லோரும் ஒன்றாய் இருந்த படியால்,
எங்களுக்கு அதிகம் பயம் வரவில்லை.
ரகுபரன் 'கண்ணன் பிறந்தும் சிறைச்சாலை' என்ற,
பாட்டைப் பாடத்தொடங்க,
எல்லோரும் வாய்விட்டுச் சிரித்தோம்.
திடீரெனப் பார்த்தால் ஸ்ரீதரசிங் மூச்செடுக்க முடியாமல்,
மயக்க நிலையை அடைந்து கொண்டிருந்தார்.
பதறிப்போனோம்.
பூட்டிய அறைக்குள் இருந்தால் அவருக்கு அப்படி வருமாம்.
டாக்டர் ரத்தினகுமார் அவருக்கு முதலுதவி செய்து,
எழுந்து உட்கார வைத்தார்.

🚩 🚩 🚩

சாத்திரம் சரியானது

நான் யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்படுவதன் முன் ஒரு நாள்,
பிரசாந்தனின் தந்தையிடம் எனது சாதகத்தைக் காட்டினேன்.
அவர் நல்ல சோதிடர்.
என் சாதகத்தைப் பார்த்து விட்டு,
'உங்களுக்கு இப்போது மூன்றில வியாழன், ஐஞ்சில சனி,
இதன் படி நீங்கள் சிறையில் இருக்க வேண்டும்'
என்றார்.
இயக்கத்தின் முரண்பாடும் இருந்த படியால்,
யாழ்ப்பாணத்தில் அத்தகைய சூழ்நிலை வந்து விடுமோ என அஞ்சினேன்.
அங்கு ஒன்றும் நடக்கவில்லை.
கொழும்பு வந்ததும் இனிப் பயமில்லை என நினைத்தேன்.
ஆனால் அங்குதான் விதி விளையாடி என்னை ஜெயிலில் இருக்க வைத்தது.

🚩 🚩 🚩

சிறையில் தோழமை

எங்களைப் போட்ட சிறையில் ஒரு தமிழ் நண்பர் ஏற்கனவே இருந்தார்.
அவர் 'ஓசியானிக் இம்பெக்ஸ்' புடைவைக்கடை முதலாளி சோதிநாதன்.
அவருக்கு எங்களைத் தெரிந்திருந்தது.
இயக்கத்திற்கு உதவி செய்ததாகக் கூறியே.
அவரையும் ஜெயிலில் அடைத்து வைத்திருந்தனர்.
பலகாலமாக அவர் ஜெயிலின் உள்ளிருந்ததால்,
அவர் பயந்தெளிந்தவராய் இருந்தார்.
தனது செல்வாக்கால் தொலைபேசி எல்லாம் உள்ளே வைத்திருந்தார்.
எங்களையும் அதனைப் பயன்படுத்தச் சொன்னார்.
அவர் ஆதரவு அந்த நேரத்தில் பெரிய ஆறுதல் தந்தது.

🚩 🚩 🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்