'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 72 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
ஸ்ரீதரசிங் விடுதலை

ஒரிரு மணித்தியாலங்கள் உள்ளே இருந்திருப்போம்.
வெளியே சென்றிருந்த இன்ஸ்பெக்டர் திரும்பி வந்து,
நாங்கள் சிறைக்குள் இருப்பதைக்கண்டு பதறிப்போனார்.
உடனடியாக எங்களை வெளியே விடும்படி சொல்லி.
மாடியிலிருந்த தனது அறைக்கு,
எங்களை அழைத்துச் சென்று உட்கார வைத்தார்.
'இரவு வரை தான் என்னால் இந்த உதவியைச் செய்யமுடியும்.'
என்று மீண்டும் கூறிப்போனார்.
நேரம் போய்க்கொண்டேயிருந்தது, 
மாலையாகிவிட்டது.
ஸ்ரீதரசிங்கின் நண்பர் 'ஜெயா புக் டிப்போ'
அதிபர் ஜெயராஜா,
தன் செல்வாக்கால் ஸ்ரீதரசிங்கை மீட்க 
ஒழுங்குசெய்து பார்க்க வந்தார்.
ஸ்ரீதரசிங்கை வெளியில் விடப் பொலிசார் ஆயத்தமாயினர்.
தப்பினேன் என்று ஓட நினைக்காமல்,
'உங்களைத் தனியே விட்டு விட்டுப் போக 
எனக்கு விருப்பமில்லை.
நானும் உங்களோடேயே இருக்கப்போறன்'
என்று சொல்லி,
ஸ்ரீதரசிங் கதறி அழுதார்.
அந்த அன்பை, சாகும்வரை மறக்க முடியாது.

🚩 🚩 🚩

தெய்வமாய் வந்து காத்த 
மலையக எம்.பி. யோகராஜன்

நேரம் ஆக ஆக எங்களுக்கும் 
நெஞ்சம் பதறிக்கொண்டிருந்தது.
சிறை வாழ்வு நிச்சயம் என 
நினைத்து நடுங்கிப்போனோம்.
அப்போது எங்கள் நண்பன் 
மாணிக்கத்தின் தமையன் கந்தசாமி,
துணிந்து எங்களைச் சிறையில் வந்து பார்த்தார்.
அதன் பின் எழுத்தாளர் சோமகாந்தனும், 
பிரேம்ஜீயும் ஒன்றாய் வந்து எங்களைப்பார்த்து,
'உங்கள் விடுதலைக்காக 
முயற்சிக்கிறோம் பயப்படாதீர்கள்.'

என்று சொல்லிப்போனார்கள்.
அந்த நேரம் அவர்கள் வருகையும், வார்த்தையும்,
எமக்குப் பெரும் ஆறுதலைத்தந்தன.
நன்றாக இருட்டி விட்டது.
எங்கள் பெயர்களை ஜெயில் ரெஜிஸ்ரரில்.
உறுதியாய்ப் பதிவு செய்ய ஆயத்தம் செய்தனர்.
அந்த நேரம் 'டை' கட்டிய  ஒரு மனிதர்,
'டிப்டொப்பாய்' உள்ளே நுழைந்தார்.
அவரை யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை.
எங்களை நோக்கி நேராக வந்த அவர்,
'நான் தான் யோகராஜன் இ.தொ.கா. எம்.பி' என்று,
தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
ஏதோ அலுவலாய் வந்திருக்கிறார் என நினைத்து,
நான் எழும்பக்கூட இல்லை.
அவர் 'உங்களை மீட்கத்தான்  வந்திருக்கிறேன்' என்று 
சொல்லி விட்டு,
பொலிஸ்காரர்களிடம் போய்,
'இவர்கள் முக்கியமானவர்கள் 
உடன் இவர்களைவிட வேண்டும்'
என்று,
சண்டை பிடித்தார்.

🚩 🚩 🚩

விரிவுரையாளர் பெற்றுத் தந்த விடுதலை

அன்று காலை யோகராஜன் எம்.பியை,
ஏதோ காரியமாகச் சந்திக்கச் சென்ற,
கைதடி ஆயுள்வேதக்கல்லூரி 
விரிவுரையாளர் வசந்தி என்பவர்,
எங்களைப் பற்றி அவரிடம்  சொல்லி,
'போர்க்காலத்திலும் யாழ்ப்பாணத்தில் 
தமிழ்த்தொண்டு செய்தவர்கள் அவர்கள்.
அவர்களைச் சிறையில் வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் எல்லாம் இருந்து என்ன பிரயோசனம்?'
என்று 
சண்டை பிடித்தாராம்.
கம்பன் விழாக்களுக்குத் தொடர்ந்து வரும் ரசிகை அவர்.
அவர் வார்த்தையால் தூண்டப்பட்டு,
யாரென்றே தெரியாத எங்களை மீட்க,
தன்னலமற்ற மனநிலையோடு,
யோகராஜன் எம்.பி கடைசி 
நேரத்தில் வந்து சேர்ந்தார்.
அவரது முயற்சியால் இரவு எட்டு மணிபோல,
நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.
அவர் மட்டும் வராதிருந்திருந்தால்,
மூன்று வாரச் சிறை நரக வேதனையை,
நாம் அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும்.
முருகனே யோகராஜன் வடிவில் 
வந்ததாய் நினைந்து,
கண் கசிந்தேன்.

🚩 🚩 🚩

மீண்டும் பிரச்சினைகள்  

இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர்,
இடம்பெயர்ந்த மக்களெல்லாம் யாழ் திரும்பினர்.
நாங்கள் கொழும்பு வந்து சிறைப்பட்டு 
சில மாதங்களின் பின் இது நடந்தது.
இதற்குள் பல வதந்திகள் 
எம் காதுக்கு வந்தன.
கம்பன் கோட்டம் முழுவதையும் 
இராணுவம் இடித்து விட்டதாகவும்,
கோட்டத்தின் ஒரு பகுதி இடிந்து கிடப்பதாகவும்,
பலரும் பலதையும் சொன்னார்கள்.
கொழும்பு வாழ்க்கையின் சிரமமும் குறைந்த பாடில்லை.
இராணுவமும், பொலிஸூம் எங்களை விசாரிக்க வந்ததால்,
எங்கள் வீட்டின் சொந்தக்காரர்கள்,
உடனே எம்மை வீட்டை விட்டு எழும்பச்சொல்லி விட்டனர்.
சிரமப்பட்டு வேறு வீடு தேடினோம்.
யாரும் எங்களுக்கு வீடு தரத்தயாராயில்லை.
அருகிலேயே குடியிருந்த,
பின்னாளில் கொழும்பு மேயராய் வந்த,
காமில் என்னும் இஸ்லாமிய நண்பர்,
அதே வீதியிலிருந்த தனது சகோதரியின் வீட்டை,
துணிந்து எமக்கு வாடகைக்குத் தந்தார்.
அங்கும் மூன்று தரம் இராணுவமும், 
பொலிஸூம் வந்து கரைச்சல் தந்தது.

🚩 🚩 🚩

உதவியால் வந்த உபத்திரவம் 

ரத்தினகுமாரின் தமையன் 'எயார்போர்ஸில்' பயிற்சியாளராக இருந்தார்.
தம்பியைப் பார்க்க வேண்டும் என நினைந்த அவர்,
ஓர் இரவு  'எயார்போர்ஸ் டிறக்கில்'  பல வீரர்களோடு,
எங்கள் வீட்டு வாசலில் வந்து இறங்கினார்.
அயல் வீட்டிலிருந்தோர் அதை 'எயார்போர்ஸிற்கு'அறிவிக்க,
'ட்ரக்கோடு' அவர் ஏன் இங்கு வந்தாரென,
எங்களிடமும், அவரிடமும் நீண்ட நாட்கள் விசாரணை நடந்தது.
அடிக்கடி 'எயார்போர்ஸ்'க்காரர்கள் துப்பாக்கியோடு வாசலில் நிற்க,
'எயார்போஸ் சி.ஐ.டி.யினர்' எங்களை விசாரித்துச் சென்றனர்.
அதனால் எங்கள்மேல் அயலவர்களுக்கு, பெரிய ஐயம் ஏற்பட்டது.
நாங்கள் புலிகள் தான் என,
அவர்கள் தங்களுக்குள் முடிவே செய்து விட்டிருந்தனர்.

🚩 🚩 🚩
ரகுபரன் மீண்டும் கைதானான்

ஒரு முறை ரகுபரனும், ஊரெழு விதானையார் ஒருவரும், 
எங்களைக் காண வந்தனர்.
விதானையாருக்கு நோய் காரணமாக.
உடம்பு முழுவதும் வெள்ளை நிறம் படர்ந்திருந்தது.
பார்த்தால் அவர் வெள்ளைக்காரர்போல் இருப்பார்.
யாரோ வெள்ளைக்காரர் தான் எங்களைச் சந்திக்க வந்ததாக நினைத்து,
அயலவர் பொலிஸூக்கு அறிவிக்க,
உடனே பொலிஸ் வந்து அவ்விருவரையும் பிடித்துச் சென்றது.
ஒரு நாள் முழுவதும் வெள்ளவத்தை பொலிஸ் ஸ்ரேஷனில்,
அவர்களை வைத்திருந்து விசாரணை செய்த பின்பே,
அவர்களை விடுவித்தது.
இப்படிப் பலசோதனைகள்

🚩 🚩 🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்