'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 73 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
'றோட்டறிக்' கழகம் தந்த ஆதரவு

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது,
உதயன் சரவணபவனின் வேண்டுதலால் குமாரதாசனும், 
ரத்தினகுமாரும்,
'றோட்டறிக் கிளப்பில்' இணைந்திருந்தமை 
பற்றிச் சொல்லியிருக்கிறேன்.
கொழும்பு வந்தும் அவர்களுக்கு 
அத்தொடர்பு நீடித்தது.
இராணுவப் பயத்திலிருந்து நீங்க,
கொழும்பில் தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும் என நினைந்து,
எங்கள் வீட்டில் ஓர் இரவு 
'றோட்டறிக்  கிளப்பினருக்கு' விருந்தளித்தோம்.
செல்வாக்கும், செல்வமும் மிகுந்த அவர்களெல்லாம்,
பெரிய பெரிய வாகனங்களில் வந்திறங்க,
அயலவர்கள் உடனே அதனையும் பொலிஸூக்கு அறிவித்தனர்.
உடனேயே பொலிஸ் வந்திறங்கியது.
வந்திருந்த சிங்களப் பிரமுகர்களுக்கு எங்கள் பிரச்சனை தெரியும்.
மேல்மட்ட செல்வாக்குள்ளவர்கள் அவர்கள்,
வந்த பொலிஸ்காரர்களிடம் எங்களைப் பற்றி,
உயர்வாய்ச் சொல்லி அவர்கள் வாதிட்டனர்.
அப்போது தான் பொலிஸூக்கு எங்களைப் பற்றி ஓரளவு தெரியவந்தது.

🚩 🚩 🚩

பகையைப் பண்பால் வென்றோம்

அக்காலத்தில் அயலில் வசித்த சிங்களவர்கள்,
எங்களைப் பார்த்துச் சிரிக்கக் கூடமாட்டார்கள்.
எப்படி இப்பகையை நீக்குவதென நினைத்தேன்.
அப்போது தைப்பொங்கல் வந்தது.
பெரிய அளவில் பொங்கல் பொங்கி, 
வடை, மோதகம், கேசரி எல்லாம் செய்து,
தட்டுத்தட்டாக அயல் வீடுகளுக்குக் கொடுத்தனுப்பினேன்.
அதிகம் பிரச்சனை தரும் வீடுகளுக்கு 
நானே கொண்டு சென்று கொடுத்தேன்.
அதன் பின்னர் தான் 
அவர்கள் எங்களோடு நட்புடன் பழகத்தொடங்கினர்.
அவர்களது பெருநாள்களுக்கு 
பலகாரங்கள் எல்லாம் கொடுத்தனுப்பினர்.
அக்காலத்தில் வீதியின் ஒரு முடக்கில் இருந்த 
எங்கள் வீட்டடியில்,
வாகனங்கள் ஏதும் சத்தமாய்த் திரும்பினாலே,
இராணுவ வாகனமோ என 
நெஞ்சு பதறும்.
ஒருவாறு இப்பிரச்சனைகளைக் கடந்தோம்.

🚩 🚩 🚩
இராணுவத்தளபதி ஜானக பெரேராவைச் சந்தித்தோம்

நாங்கள் கொழும்பு வந்ததும் ஒரு நல்ல காரியத்தைத் துணிந்து செய்தோம்.
அப்போது இராணுவம் சாவகச்சேரிக்குள் நுழையவில்லை.
கம்பன் கோட்டம் பிரபாகரனின் மாளிகை என்று அறிவிக்கப்பட்ட விடயத்தை,
அரச மட்டத்தில் இல்லாமல்ச் செய்ய வேண்டும் என நினைத்தோம்.
நாம் யாழில் இருந்த கடைசிக்காலத்தில் உதயன் சரவணபவன்,
'றோட்டறிக்கழகத்' தலைவராய் இருந்த விடயம்பற்றி,
முன்னரே சொல்லியிருக்கிறேன்.
அப்போது அவர் நடத்திய ஒரு மாநாட்டிற்கு,
சிங்கள நண்பர்களை யாழ்ப்பாணம் அழைத்து வந்ததையும்,
அவ்விருவருக்கும் எங்கள் கம்பன் கோட்டத்தில்,
ஒரு நாள் காலை விருந்தளித்ததையும் முன்பே சொன்னேன் அல்லவா?
அவ் விருந்தால் நாங்கள் அவர்கள் மனதில் பதிந்திருந்தோம்.
அங்கு வந்த ஜானக எதிரிசிங்கவின் மிக நெருங்கிய உறவினன்தான்,
அப்போதைய இராணுவத்தளபதி ஜானக பெரேரா.
திருநந்தகுமார் ஜானகவுடன் பேசி,
இராணுவத்தளபதியுடனான சந்திப்பு ஒன்றுக்கு ஒழுங்கு செய்தான்.
ஜானக எதிரிசிங்கவின் வீட்டில் அச்சந்திப்பு நிகழ்ந்தது.
திருநந்தகுமார், குமாரதாசன், 
ரத்தினகுமார் ஆகியோரோடு நானும் சென்றேன்.
மாளிகை போன்ற அந்த வீட்டின் மேல் மாடியிலிருந்த ஒரு கூடத்தில்,
இராணுவத்தளபதி மது அருந்தியபடி இருந்தார்.
ஜானக அவருக்கு எம்மை அறிமுகம் செய்து,
எமது பிரச்சனைகளை அவருக்கு எடுத்துச் சொல்லச் சொன்னார்.
நாங்கள் சொன்ன செய்திகள் 
இராணுவத் தளபதிக்குப் புதுமையாய் இருந்தன.
முன்பு ஒருமுறை இணுவிலில் ஒரு வீட்டில் அழகான 
சிற்ப வேலை நிறைந்த,
கருங்காலி இருக்கைகள் இரண்டு இருப்பதாகவும்,
அதனை அவ்வீட்டுக்காரன் உடைக்கப் போவதாகவும் அறிந்து,
இரவிரவாகத் திருமுருகனுடன் சென்று,
அவ்விரண்டு இருக்கைகளையும் நான் வாங்கி வந்தேன்.
அவற்றிற்கு 'குஷன்' அடித்து 'பொலிஷ்' பண்ண,
புதியவை போல் அவை மிக அழகாய் இருந்தன.
அவற்றை நாம் கம்பன் கோட்டத்தில் வைத்திருந்தோம்.
இராணுவத்தளபதி அந்த இருக்கைபற்றிச் சொல்லி,
'அந்த இருக்கையின் மேற் பகுதியில்,
பிரித்தானிய அரச சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
அதனை யாழ் கோட்டையைக் கைப்பற்றியபோது,
புலிகள் தான் எடுத்திருக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக,
புதிய கட்டிடங்கள் கட்டப்படவில்லை.
உங்கள் கட்டிடம் புதிதாக இருந்தது.
இவற்றை வைத்துத்தான் அது பிரபாகரனின் வீடு என,
முடிவு செய்தோம்'
என்றார்.
பின்னர் நாங்களும் ஜானகவும் சேர்ந்து,
அக்கட்டிடம் எங்களதுதான் என உறுதிப்படுத்திய பின்னர்.
அவர் அதை நம்பினார்.
உங்கள் கட்டிடத்தை உங்களிடமே ஒப்படைக்க ஒழுங்கு செய்கிறேன்.
எனக் கூறி அனுப்பி வைத்தார்.
அப்போது நாடு இருந்த சூழ்நிலையில்,
நாம் இராணுவத்தளபதியை சந்தித்த செய்தி வெளிவந்திருந்தால்,
எங்கள் கதி அதோகதியாகத்தான் மாறியிருக்கும்.
பின் நாளில் தேர்தல் ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில்,
அந்த இராணுவத்தளபதி இறந்து போனார்.

🚩 🚩 🚩

கழக இளைஞர்கள் தப்பியது அருந்தப்பு

இது நடந்து சில காலத்தின் பின்னர்.
சாவகச்சேரியும் இராணுவத்தால் கைப்பற்றப்பட,
யாழ் மக்கள் மீண்டும் ஊர் திரும்பினர்.
அப்போது கழக இளைஞர்களான,
பிரசாந்தன், மணிமாறன், ஜெயசீலன் ஆகியோர்,
இராணுவ முகாமுக்குச் சென்று அங்கிருந்த உயர் அதிகாரியிடம்,
கம்பன் கோட்டக் கட்டிடத்திற்கு உரிமை கோரியிருக்கின்றனர்.
நல்ல காலம் நாங்கள் இராணுவத்தளபதியைச் சந்தித்து,
உண்மையை விளங்கப்படுத்தியிராது விட்டிருந்தால்,
அவர்கள் கதையும் 'செம்மணியில்'தான் முடிந்திருக்கும்.
துணிந்து சென்று 
கம்பன்கோட்டக் கட்டிடத்தைப் பெற்றுக்கொண்டு,
நான் யாழில் இல்லாதிருந்தபோது,
சில காலம் பௌர்ணமி நிகழ்ச்சிகளையும் 
இவ் இளைஞர்கள் நடாத்தினார்கள்.
அவர்கள் நேர்மையை என் நெஞ்சு பாராட்டியது.
அந்நிகழ்வுகளின் அனுபவங்களை அவர்கள்தான் எழுத வேண்டும்.

🚩 🚩 🚩

 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்