'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 74 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
மீண்டும் யாழ் புறப்பட்டோம்

கொழும்பு வாழ்க்கை எனக்கு ஒத்துவரவில்லை.
பிரசங்கங்களுக்கூடாக நடக்கும் 
மக்கள் சந்திப்பு, காலையில் கேட்கும் நல்லூர் மணியோசை, 
அழகிய கம்பன் கோட்டம் 
தந்த நிழல்,
வணங்கிய சிவலிங்கம் இவையெல்லாம்  மீண்டும் மீண்டும் நினைவில் வந்து,
செயற்கையான 
கொழும்பு வாழ்வை 
வெறுக்கச் செய்தன.
ரத்தினகுமாருக்கும் யாழில் வேலை 
போய் விடுமோ எனும் பயம்.
மீண்டும் யாழ் போவதென முடிவு செய்தோம்.
வெளிநாடு போகும் எண்ணம் இருந்ததால்,
குமாரதாசன் எம்மோடு வரவிரும்பவில்லை.
யாழ் சென்று வர எவ்வித போக்குவரத்து வசதியும் 
அப்போது இருக்கவில்லை.
இராணுவ விமானத்தில் தான் 
ஓரிருவர் சென்று வந்தனர்.
இராணுவத்தினர் சென்று வருகிற விமானம் அது.
சிபாரிசின் பேரில் பொதுமக்கள் 
சிலபேரையும் அதில் அழைத்துச் செல்வார்கள்.
பலரையும் பிடித்து நானும், ரத்தினகுமாரும்,
விமானம்மூலம் யாழ்செல்ல ஆயத்தமானோம்.
அன்று நானும், ரத்தினகுமாரும், 
டாக்டர் கணேசரட்ணமும் தான்,
அவ் விமானத்துள் இருந்த பொது மக்கள்.
விமானத்தின் பின் பக்கம் திறக்கும், 
அதற்குள் ஏற வேண்டும்.
விமானம் பறக்கத்தொடங்கியதும் 
அப்பின்கதவு தானாக மெல்ல மெல்ல மூடும்.
புலிகள் எந்நேரமும் தாக்கிவிடுவார்கள் என்ற 
அச்சம் வேறு.
விமானத்தின் நடுவில்
ஒரு 'கேபிள் வயர்' கட்டப்பட்டிருந்தது.
அதைப்பிடித்தபடி 
பஸ்ஸில் நிற்பது போல் 
நின்று தான் போனோம்.
ஒரு மாதிரி ஒரு மைம்மல் பொழுதில்,
எமது கோட்டத்திற்குப் போய்ச் சேர்ந்தோம்.

🚩 🚩 🚩
கலைந்து கிடந்த கழகம்

பளபளக்க நான் வைத்திருந்த கோட்டம்,
தூசும், இருளும் மண்டிக்கிடந்தது.
முடிந்தவரை அப்போதே சுத்தம் செய்தோம்.
இருண்டு போனதால் நேரம் தெரியவில்லை.
எங்கள் வரவேற்பறைச் சுவரில் முன்பு நாம் மாட்டியிருந்த,
மணிக்கூடு இருந்த இடத்தில் 
புதியதோர் மணிக்கூடு மாட்டப்பட்டிருந்தது.
'பற்றரியில்லாமல்' அது ஓடாமல் இருந்தது.
அப்போது யாழ்ப்பாணத்தில் 'பற்றரிகள்' வாங்குவது கஷ்டம் என்றபடியால்,
கொழும்பிலிருந்து 'பற்றரிகள்' வாங்கிச் சென்றிருந்தோம்.
ரத்தினகுமாரிடம்  அந்த மணிக்கூட்டிற்கு,
'பற்றரி' போடச் சொன்னேன்.
களைத்துப் போயிருந்தபடியால்,
'இனிப் படுப்பம், 
காலையில பார்ப்போம்'
என்று 
ரத்தினகுமார் சொல்ல,
இரவு படுத்துவிட்டோம்.
காலையில் பிரசாந்தனும் வந்துவிட்டான்.

🚩 🚩 🚩
மீண்டும் உயிர் தப்பினோம்

பழையபடி துப்பரவாக்கும் 
பணியைத் தொடங்கினோம்.
மீண்டும் மணிக்கூட்டிற்கு 
'பற்றரி' மாற்றும் படி,
ரத்தினகுமாருக்குச் சொன்னேன்.
எங்களுக்குள் இரத்தினகுமார் கொஞ்சம் நிதானமானவன்.
எதனையும் ஆலோசித்துச்செய்வான்
மணிக்கூட்டைக் கழற்றிய அவன் 
நிதானமாக அதைத் தூசு துடைத்து,
பின்பக்கம் எல்லாம் திருப்பிச் சுத்தம் செய்தான்.
திடீரென அவன் முகத்தில் அதிர்ச்சி,
எங்களை அவசரமாய்க் கூப்பிட்டான்.
'இந்த மணிக்கூட்டுக்குள் குண்டு வைத்திருக்கிறார்கள்.
'பற்றரி' போட்டால் உடன் வெடிக்கும்படி,
'செற்' பண்ணியிருக்கிறார்கள்' என்றான்.
பதறிப்போனோம்.
நானோ, பிரசாந்தனோ 'பற்றரி' போட முனைந்திருந்தால்,
எதனையும் பார்க்காமல் 
உடன் 'பற்றரியைப்' போட்டிருப்போம்.
எங்கள் மூவரோடு கட்டிடமும் 
அன்று தொலைந்திருக்கும்.
முருகன் அப்போதும் வந்து எம்மைக் காத்தான்.
பின்னர் அப்படியே மணிக்கூட்டை 
ஓரிடத்தில் வைத்துவிட்டோம்.
நாங்கள் திரும்பவும் கொழும்பு வந்தபிறகு,
அந்த மணிக்கூட்டைப் பிரித்து ஜெயசீலன் முதலியோர்,
அக் குண்டினை அப்புறப்படுத்தினார்கள்.
'யார் வைத்த குண்டு அது?' எனப் பலரும் கேட்டார்கள்.
அதுவும் அந்த முருகனுக்குத்தான் வெளிச்சம்.

🚩 🚩 🚩
கொழும்பில் புதிய வாழ்க்கை தொடங்கினோம்

குண்டுச் சம்பவம் எங்கள் மனதைப் பெரிதும் பாதித்தது.
அப்போது யாழ்ப்பாணத்தில் படுபயங்கரமான சூழ்நிலை,
இளைஞர்களை ராணுவம் கண்டபடி கைது செய்தது.
மின்சாரமில்லாத இரவுகளில்,
அங்கங்கு தாய்மாரின் அவலச்சத்தம் கேட்கும்.
அந்தச் சத்தத்தில் அடி வயிறு கலங்கும்.
இந்தச் சூழ்நிலையில் இனி வாழ முடியாது என முடிவு செய்தோம்.
மீண்டும் கொழும்பு திரும்புவதாய் முடிவெடுத்தோம்.
கொண்டு போன விமான 'ரிக்கற்றைப்' பயன்படுத்தி,
மீண்டும் கொழும்பு வந்திறங்கினோம்.
எமது வாழ்க்கையிலும் கழக முன்னேற்றத்திலும்,
கொழும்பில் புதிய அத்தியாயங்கள் திறந்தன.
அவற்றைப் பற்றிக் கழக வரலாற்றின் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்