உரையாற் சிறக்கும் உவமை -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

யர் கம்பனை வியவாதார் எவர்?
கம்பன், எல்லையொன்றின்மை எனும் பொருளதனையும்,
குறிகளாற் காட்ட முயன்றவன், என்கிறான் பாரதி.
ஆழப் பொருள்களையும் தெள்ளிதாய் விளக்கம் செய்வதில் வல்லவன் கம்பன்.
 
☘️ ☘️ ☘️
 
நேரடியாய் உணர்த்த முடியாத பொருட்களை
தக்க உவமைகளால் அவன் உணர்த்தும் பாங்கு தனித்துவமானது.
கம்பனால் தனித்துவமாய்க் கையாளப்பட்ட உவமைகள் பலப் பல.
மற்றைப் புலவர்களால் தொடத்தானும் முடியாத,
பல அற்புத உவமைகளைக் கையாண்ட கம்பனின் திறம் கண்டு வியவாத கற்றோர் இலராம்.
 
☘️ ☘️ ☘️
 
கம்பன் கையாண்ட புதியதான உவமைகள் புதுமை தருதல் வியப்பன்றாம். 
புலவர்களால் மட்டுமன்றி, சாதாரண பொதுமக்களாலும் கூட,
பரவலாய்ப் பன்படுத்தப்படும் ஓர் பழைய உவமையை,
சூழ்நிலைக்குப் பொருத்தமாய்க் கம்பன் கையாண்டமையையும்,
அதனால் அப்பழைய உவமை புதுமை பெற்று,
காவியக் காட்சி ஒன்றை தெளிவுற விளக்குவதையும்.
உரையாசிரியர்கள் அற்புதமாய் எடுத்துக் காட்டுகின்றனர்.
அவர்தம் உரையாற் சிறக்கும் அவ்வுவமையைக் காண்பாம்.
 
☘️ ☘️ ☘️
 
வனத்தில் தான் செய்யும் யாகத்தை,
அரக்கர் வந்து இடையூறு செய்யாவண்ணம் காப்பதற்காய்,
இராம, இலக்குவர்களை அழைத்துச் செல்கிறார் விசுவாமித்திரர்.
வழியில் தாடகை வதம் நிகழ்கிறது.
பின்னர், மாபலிச் சக்கரவர்த்தி யாகம் செய்த இடத்தைத் தேர்ந்தெடுத்து,
தன் யாகத்தைச் செய்யத் தலைப்படுகிறார் முனிவர்.
யாகசாலை அமைத்து முடிந்ததும்,
யாகத்தைக் காக்கும்படி இராம, இலக்குவரைப் பணித்து,
யாகசாலையின் புறத்தே அவர்களைக் காவலுக்காய் நிறுத்தி,
சாலையின் உட்புகுந்து யாகம் தொடங்குகிறார் அவர்.
 
☘️ ☘️ ☘️
 
ஆறு நாட்களாக நடைபெற்ற அந்த யாகத்தை
இராம, இலக்குவர் சிறப்புறக் காவல் செய்கின்றனர்.
அவர்தம் காவற் சிறப்பை விளக்கம் செய்யப் புகுந்த கம்பன்,
பலராலும் கையாளப்பட்ட ஓர் மிகச் சாதாரண உவமைகொண்டு,
அதனை விளக்கம் செய்கிறான்.
அவ் விளக்கத்தை வெளிப்படுத்தும் பாடல் இது.
 
எண்ணுதற்கு, ஆக்க, அரிது இரண்டு-மூன்று நாள்
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை,
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர்
 
☘️ ☘️ ☘️
 
இராமனும், இலக்குவனும் முனிவரின் யாகத்தை,
'கண்ணை இமை காப்பது போல்' காத்தனராம் என்கிறது இப்பாடல்.
கண்ணை இமை காத்தல் எனும் இவ் உவமை மிகச் சாதாரணமானது.
எனினும் கம்பனின் கையாளுகையில்,
எவ்வாறு அவ்வுவமை, உவமேயப் பொருளைச் சிறப்புற விளக்கி நிற்கிறதென்பதை,
உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டும் பாங்கு இரசனைக்குரியது.
அவ் உரைச்சிறப்பை இனிக் காண்பாம்.
 
☘️ ☘️ ☘️
 
கண்ணை இமை காக்கும் விதத்தை,
அவ் உரையாசிரியர்கள் சற்று நுணுகிக் காண்கின்றனர்.
நம் ஒரு கண்ணை இரு இமைகள் காக்கின்றன. 
அவற்றில் மேல் இமை பெரியது, கீழ் இமையோ சிறியது.
இவ்விரு இமைகளும் விழியினைக் காத்தல் எங்ஙனம்?
சிறியதாய கீழ் இமை அசையாமல் நிலைத்திருக்கும்.
பெரியதாகிய மேலிமையோ அசைந்து, அசைந்து,
அசையும் ஒவ்வொரு தரத்திலும் கீழிமையைத் தொட்டுச் செல்லும்.
இஃது கண்ணை இமை காக்கும் முறைமை.
 
☘️ ☘️ ☘️
 
இவ் உண்மையோடு உவமையைப் பொருத்தி,
உரையாசிரியர்கள் சுவை காண்கின்றனர்.
அவர்கள் தரும் விளக்கம் பின்வருமாறு.
 
☘️ ☘️ ☘️
 
விழிபோல நடுவில் இருக்கும் யாகசாலையை,
இராம, இலக்குவர்கள் இமைகள்போல் நின்று காவல் செய்கின்றனராம்.
யாகசாலையின் வாயிலில் இலக்குவனை அசையாமல் நிறுத்தி,
இராமன் அந்த யாகசாலையைச் சுற்றிச் சுற்றி வந்து காவல் செய்கிறானாம். 
அவ்வாறு சுற்றிவரும் ஒவ்வொரு தடவையும்,
இலக்குவனை ஊக்கப்படுத்துதற்காய் அவனை முதுகில் தட்டி,
செல்கின்றானாம் அவன். 
 
☘️ ☘️ ☘️
 
சிறியவனான இலக்குவன் நிலையாய் நிற்க,
பெரியவனான இராமன் யாகசாலையைச் சுற்றிவந்து காவல் செய்தலையும்,
அங்ஙனம் சுற்றி வரும் ஒவ்வோர் முறையும்,
இராமன் இலக்குவனைத் தட்டிச் செல்லுதலையும்,
முன் சொன்ன, கண்ணை இமைகள் காக்கும் முறையோடு ஒப்பிட்டு,
கற்பனை செய்தனர் உரையாசிரியர்கள். 
பெரிய இமை சிறிய இமையைத் தட்டி,
விழியைக் காவல் செய்யும் நிலையோடு,
இராம, இலக்குவர்களின் காவல் ஒத்திருப்பதை அவர்கள் எடுத்துக்காட்ட,
கம்பனால் கையாளப்பட்ட இப் பழைய உவமை,
உரையாசிரியர்களின் இப் புதிய விளக்கத்திற்கு இடங்கொடுத்து,
புதுமை பெற்று  நம்மையும் வியக்க வைக்கிறது.
 
☘️ ☘️ ☘️
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்