செங்கை பங்கயம்-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

யர் நாடொன்றின் சிறப்பை வர்ணிக்கப்புகும் புலவர்கள்
பல்லாற்றானும் அந்நாட்டில் உள்ள அனைத்திலும்,
மலர்ச்சியைக் காட்ட முனைவர்.
வயல்கள், சோலைகள், ஆடவர், மகளிர் என,
அனைவரினதும் நிறைநிலையை மலர்ச்சியாய்,
பல காட்சிகளூடும் வெளிப்படுத்துவர்.
கம்பனும் இவ்வாறே அயோத்தியின் சிறப்பை,
பல கற்பனைக் காட்சிகளூடு விதிமுகத்தான் கூறத் தலைப்படுகிறான்.
கற்பனை, கடலெனப் பெருகுகின்றது.
வர்ணனைப் பாடல்கள் ஆயிரமாய் விரிந்தும் கம்பனுக்குத் திருப்தியில்லை.
வம்பனல்லவா? புதுமை செய்ய விரும்புகிறான்.
செங்கோன் மன்னவர் நாட்டில் வெளிப்படும் மலர்ச்சியை
இஃதே போல் பல புலவர்களும் பாடியிருப்பதால்,
அந்நெறியினின்றும் மாறுபட்டுப் பாடத் தலைப்படுகின்றான்.
மலர்ச்சியை,
எதிர்முகத்தான் கூறும் கவிதையொன்றை
கோசல வர்ணனைப் பாடல்களுள் அமைக்கிறான்.
அவ்வற்புதப் பாடல் காண்பாம்.

🌷 🌷 🌷

தசரதன் தன் செங்கோலாட்சியால் கோசலத்தில்,
கூம்புதல் எங்குமின்றி அனைத்துமே மலர்ந்திருக்கின்றன.
எனவே, மலர்ச்சியை அன்றிக் கூம்புதலை அந்நாட்டில் காட்டுதலே
புதுமை எனக் கருதுகிறான் கம்பன்.
அக் கூம்புதலும் நாட்டின் செழிப்பை வெளிப்படுத்த வேண்டும்.
இஃது அவன் எண்ணம்.
செழிப்பை வெளிப்படுத்தும் கூம்புதலைத் தேடுகிறான் அவன்.
கம்பனுக்கா காட்சி கிடைக்காது?
அற்புதமான ஓர் கற்பனை வாய்க்கக் கவிதை பிறக்கிறது.

🌷 🌷 🌷

அயோத்தி.
மக்கள் வாழும் செழிப்புற்ற ஒரு வீதி.
மாலை நேரம்.
தன் பிள்ளைக்கு உணவூட்ட விழையும் ஓர் தாய்,
பூரண சந்திரன் போலப் பொலிந்து நிற்கும் அக் குழந்தையை,
தன் சிற்றிடையில் இருத்தி நிலாக் காட்டிச் சோறூட்ட முனைகிறாள்.
இஃதே கம்பன் கைக்கொண்ட காட்சி
இக் காட்சியில் கூம்புதலுக்கு எங்கே இடம்?
நம்மனம் வியக்கிறது.
கம்பனோ அவ்விடத்துக்கே நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறான்.
தாயின் சிற்றிடையில் குழந்தை.
அதனை அணைத்துள்ள அவள் கையில் ஒரு பொற்கிண்ணம்.
அக் கிண்ணத்தில் அன்னமிட்டு,
குழந்தையின் விருப்புக்கேற்ப,
அதனுடன் பாலும் சர்க்கரையும் சேர்த்து
குழந்தையின் நலன் கருதி அக்கிண்ணச் சோற்றை,
தன் வண்ணக் கையால் இறுகப் பிசைகிறாள் அத்தாய்.
தனக்காகத் தாய் பிசையும் அமிழ்து கண்டு,
பசி மிக மழலையின் சிறுவாயினின்றும்,
அமுதநீர் மாலையாய் வழியத் தொடங்குகிறது.
குழந்தையின் மார்பிலோ காவல் வேண்டி
திருமாலின் பஞ்சாயுதங்களை ஒன்றாக்கி தாயிட்ட ஐம்படைத்தாலி.
உணவை உடன்வேண்டி அங்குமிங்குமாய்க் குழந்தை அசைய,
அவ்வசைவிற்கேற்ப அசையும் அப்பொற்றாலிறக்குப் போட்டியாய், 
மழலையின் வாயினின்று ஒழுகும் அமுதநீர் மாலையும் அசைந்திட
மகவிற்குப் பாற்சோறு ஊட்டுகிறாள் அவள்.
இக் காட்சியைக் கவிதையாக்குகிறான் கம்பன்.
தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார்.

இதுவரை இக்காட்சியூடு செழிப்பைக் கண்ட கம்பன்,
திடீரெனச் சிலிர்க்கிறான்.
அயோத்தியில் அதுவரை காணாத குவிதலைக் கண்டதே,
சிலிர்ப்பின் காரணம்.
இக்காட்சியில் குவிதல் எங்கே? விளக்கும் வகையில் கம்பன்கவி தொடர்கிறது.
பிள்ளையின் பசிவேட்கை கண்ட தாய், அது தீர்க்க எண்ணி,
இதுவரை தான் பிசைந்த சோற்றை,
குழந்தையின் குமுத வாய்க்குள் செலுத்தக் கருதி,
அச்சோற்றின் ஒரு சிறு பகுதியை,
தன் நுனிக்கைக்குக் கொண்டு வந்து,
குழந்தையின் முகம் நோக்கி நீட்டுகிறாள்.
எண்ணத்தை வெளிப்படுத்த இடங்கிடைத்ததில் கம்பனுக்கு மகிழ்ச்சி.
அயோத்தி முழுவதும் குவிவைத் தேடிய கம்பன்,
முதன் முறையாய், உணவூட்டும் தாயின் கைக்குவிவைக் கண்டு,
'இஃதொன்றே அயோத்தியில் குவிந்துள்ளது.
மற்றவை அனைத்திலும் மலர்ச்சியே'
என
அயோத்தியின் சிறப்பை எதிர்முகத்தான் காட்டி நிறைவு கொள்கிறான்.
இராமன் பிறக்கப்போகும் நாட்டில் இக்குவிதல் தானும் இருக்கலாமா?
கம்பன் மனதில் கேள்வி.
இக்குவிதலுக்கும் கற்பனையாய்த் தக்கதோர் காரணம் தேடுகிறான்.
கிடைத்த கற்பனை கவிதையாய் விரிகிறது.
இதோ, அக்காரணம், சோற்றைப் பிசைதலே கடுஞ்செயலாக,
தன் இயல்பான மென்மையால் அந்த இளந்தாயின் வெண் கை,
செங்கையாகித் தாமரைபோற் காட்சி தருகிறது.
செழிப்புற்ற குழந்தையின் முகமோ பூரண சந்திரனாய்ப் பொலிவுற்றுக் கிடக்கிறது.
இவ்விரு நிலையையும் காட்டிய கம்பன்,
'கையாகிய தாமரை முகமாகிய சந்திரனை நெருங்கினால்,
குவிதல் இயல்பன்றோ?'
எனக்கேட்டு,
சந்திரனைக் கண்டு குவியும் தாமரையின் இயல்பு பற்றியே இக்கை குவிந்தது.
அன்றேல் இக்குவிதலும் அயோத்தியிலிருக்க இடமில்லை எனக்கூறி,
அயோத்தியின் சிறப்பை உச்சநிலைக்கு உயர்த்தி விடுகிறான்.
கவிதை பூரணமாகிறது.
தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப் 
பாலின் ஊட்டுவார் செங்கை பங்கயம்
வால் நிலா உறக் குவிவ மானுமே.

கவிச் சக்கரவர்த்தியை,
கற்பனைச் சக்கரவர்த்தியாய்க் காட்டும் இக்கவிதை
எண்ணி எண்ணி மகிழத்தக்கதன்றோ?

🌷 🌷 🌷

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்