'முடியா வழக்கு' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

வாலி வதை.

கம்ப காவியத்தில் என்றும் விமர்சனத்திற்குரியதாய் விளங்கும் பகுதி இது.

'வாலி வதை நியாயமானதா?' பேரறிஞர் பலரின் ஆராய்ச்சிக்கு  உட்பட்டும்

இக்கேள்விக்கான சரியான பதில் இன்றுவரை கிடைத்ததாய்த் தெரியவில்லை.

இன்றும் வாலி வதை வழக்காய் இருப்பதே இதற்காம் சான்று.

பேரறிஞர்களால் நடத்தி முடிக்கப்பட்ட வாலிவதை பற்றிய விவாதங்களில்,

சரியென்றோ,பிழையென்றோ ஓர் முடிவு தெளிவாய்ப் பிறந்திருக்குமேல்,

அவ் வழக்கு முற்றுப் பெற்றிருக்கும்.

ஆனால் வாலிவதை வழக்கோ முற்றுப் பெறவில்லை.

இன்றும் அது தொடர்ந்தபடியே இருக்கிறது.

வாலி வழக்கு கடைப்போக முடியாமல் நிற்பதற்காம் காரணமென்ன?

வாலிவதையை முடியா வழக்காய்க் கம்பன் கையாண்டது எங்ஙனம்?

ஆராய்தல் அவசியமாகிறது.

ஆராய்வாம்.

ழூழூழூழூழூழூ

ஒரு வழக்கை இருநிலை கொண்டு ஆராயலாம்.

ஒன்று, நீதி.- மற்றது, தருமம்.

இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாடு என்ன?- கேள்வி பிறக்கும்.

உலகியலுக்கு உட்பட்டது நீதி.

அதனையும் கடந்து நிற்பது தருமம்.

நீதி, பல இடங்களிலும் தருமத்தினின்றும் வேறுபடுதல் கண்கூடு.

ழூழூழூழூழூழூ

வள்ளுவன்,

பொருட்பாலில் கூறும் அறங்கள் வரையறுக்கப்பட்ட எல்;;லைகளுக்குள்ளேயே,

அறங்களாய்க் கருதப்படத்தக்கவை.

அவ்வெல்லைகள் நீங்கின் அவை அறமெனப்படா.

வள்ளுவரால் அறத்துப் பாலில் கண்டித்துரைக்கப்பட்ட கொலை,

பொருட்பாலில் அங்கீகரிக்கப்படுதல் சிந்தனைக்கு உரியதாம்.

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாந் தரும்

இஃது கொல்லாமையில் வள்ளுவனின் கொலை பற்றிய கண்டிப்;;;;;;;;;;;;பு.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களை கட்டதனொடு நேர்.

இஃது செங்கோன்மையில் வள்ளுவனின் கொலைக்கான அங்கீகரிப்பு.

ழூழூழூழூழூழூ

நீதி செய்ய வேண்டிய அரசன்

கொடியவன்

சமூகப் பாதுகாப்பு

இம் மூன்று எல்லைகளுக்குள் உட்படும்போது,

வள்ளுவரால் கொலை அறமாய் அங்கீகரிக்கப்படுகிறது.

உலகியல் நலன் கருதி, சில எல்;லைகளுக்குள் வரையறுக்கப்பட்டு,

அறமாய் அங்கீகரிக்கப்படும் விடயங்கள் நீதி எனப்படும்.

இவ்வெல்லை கடந்து, இயற்கையோடு பொருந்தி நிற்கும் விடயங்கள்,

அறம் அல்லது தருமம் என்று உரைக்கப்படும்.

இதனாலேயே, குறளின் அறத்துப்பாற் கருத்துக்கள் முதலறங்கள் எனவும்,

பொருட்பாற் கருத்துக்கள் சார்பறங்கள் எனவும் பெரியோரால் கணிக்கப்படுகின்றன.

முதலறங்களே தருமங்கள். - சார்பறங்களே நீதிகளாம்.

சார்பறமாகிய நீதி கொண்டே உலகியல் வழக்குகள் தீர்க்கப்படும்.

இஃதே இயற்கை.

இவ்வியற்கையின் மாறுபட்டு நீதியைப் புறந்தள்ளி,

தரும அடிப்படையில் மனுநீதி கண்ட சோழன் செய்த தீர்ப்பு,

இன்றும் வரலாறாய்ப் பேசப்படுகின்றது.

ழூழூழூழூழூழூ

ஆன் கன்றைக் கொன்றான் மைந்தன் என்ற செய்தி கேட்டு,

துடி துடிக்கும் மனுநீதிச்சோழனிடம் சார்பறமாம் நீதியை எடுத்துக் காட்டி,

அதனையே அறமாய் உரைத்து சமாதானம் செய்ய முயல்கின்றனர் மந்திரிகள்.

இறந்ததோ பசுக் கன்று. -கொன்றவன் மைந்தன்.

மனிதன், மிருகம் என இரு நிலைப்பட்டு இவர்கள் நிற்பதால்,

மறைநூலார் வகுத்த பிராயச்;;; சித்தங்களைச் செய்ய கொலைப் பாவம் நீங்கும்.

இஃதே அறம் என நீதியை அறமாய் அவர்கள் எடுத்துக்; காட்டுகின்றனர்.

மந்திரிகள் அது கண்டு

   மன்னவனை அடி வணங்கி

சிந்தை தளர்ந்து அருளுவது

   மற்று இதற்கு தீர்வன்றால்

கொந்தலர்தார் மைந்தனைமுன்

   கோவதை செய்தார்க்கு மறை

அந்தணர்கள் விதித்த முறை

   வழிநிறுத்தல் அறம்   என்றார்.

மன்னனோ,

நீவிர் உலகியல் வசப்பட்டு உயிர்களுள் பேதங் கண்டு,

சார்பறமாம் நீதியை அறமாய் உரைக்கின்றீர்.

நூலோர் வகுத்த பிராயச்சித்தங்கள் அப்பசுவின் துன்;;பம் தீர்க்குமோ?

நீவிர் அறமென்று எடுத்துச் சொன்ன பொய்களை யான் ஏற்றால்,

தருமம்தான் சலியாதோ என்கிறான்.

'வழக்கென்று நீர் மொழிந்தால்

   மற்று அதுதான் வலிப்பட்டுக்

குழக்கன்றை இழந்து அலறும்

   கோ உறுநோய் மருந்தாமோ?

'இழக்கிறேன் மைந்தனை'என்று

   எல்லீரும் சொல்லிய இச்

சழக்கின்று நான் இசைந்தால்

   தருமந்தான் சலியாதோ?'  

சழக்கு - பொய்

ழூழூழூழூழூழூ

மனுநீதி கண்ட சோழனின் மந்திரிகள் பொய்யர்கள் அல்லர்.

மன்னன் மகன் என்பதற்காய்;ச் சார்ந்துரைப்பாரும் அல்லர்.

அங்ஙனமேல் அவர் சொன்ன நீதியை மன்னன் பொய்யென்று உரைத்ததேன்?

தருமமெனும் முதலறம் சார்ந்து நின்ற சோழனுக்கு,

சார்பறமாம்; நீதி சார்ந்து நின்ற மந்திரிகளின் உரை.

பொய்யாய்த் தெரிவதாய்ச் சுட்டவே மனுநீதிச் சோழனைக் கொண்டு,

அங்ஙனம் உரைப்பிக்கிறார் தெய்வச் சேக்கிழார்.

ழூழூழூழூழூழூ

மந்திரிகள் கூற்றை அறமென்றும், மன்னன் கொள்கையைத் தருமமென்றும்,

சேக்கிழார் பிரித்துச் சுட்டுதல் இங்கு கவனிக்கத் தக்கது.

இச் செய்தியால் அறத்திற்கும் தருமத்திற்கும் இடையிலான வேறுபாடு,

தெளிவாய்ப்; புரிகிறது.

ழூழூழூழூழூழூ

உலகியல் வயப்பட்ட அறிஞர்கள் சார்பறமாம் நீதியை அறமென்றும் உரைப்பர்.

உலகியலில் வழக்கு என்று வந்துவிட்டால்,

அதனை நீதியை அடிப்படையாய்க் கொண்டே தீர்த்தல் வேண்டும்.

எனவே வாலி வழக்கையும் அங்ஙனமே தீர்த்தல் அவசியம்.

தருமத்தை அடிப்படையாய்க் கொண்டு,

அவ்வழக்கைத் திர்த்தல் ஆகாதோ? எனின் ஆகாதாம்.

காரணம்.

உலகியலைக் கடந்து நிற்கும் தருமத்தின் தலைவன் இறைவன்.

அத்தலைவனாம் இராமனே வதை செய்தான் என்னும் போது,

அச்செயல் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டியதாகிறது.

'வாலி மோட்சம்' எனும் தலைப்பில் வழக்கு அடங்கிப் போகிறது.

ழூழூழூழூழூழூ

எனவே, உலகியலுக்குட்பட்ட நீதி கொண்டே,

இவ்வழக்கை நாம் ஆராய வேண்டியுள்ளது.

மிருகம், மனிதன், தெய்வம் என்னும் பிரிவுகளை உட்கொண்டு,

உலகியல் நீதிகள் பாகுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நீதிகளில் உயர்வு நோக்கிய சலுகைகள் உண்டு.

ழூழூழூழூழூழூ

உலகியல் நீதிகளில் ஓர் வழக்குக்கு முடிவுகாண வேண்டுமாயின்,

வாதி, பிரதிவாதிகள் சமநிலைப்படுதல் அவசியமாம்.

வழக்காளிகள் சமநிலைக்கு உட்படுத்தப்பட்டாலே,

வழக்கின் முடிவினை நாம் காணுதல் கூடும்.

இவ்வுண்மையை வள்ளுவக் கடவுளார்,

சமன் செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்

கோடாமை சான்றோர்க கணி.

எனும் குறளில் தெளிவுபடுத்துகிறார்.

இச் சமன் செய்தல் நிகழ்ந்தாலே ஆய்வுக்குட்படும் வழக்கு முடிவைத் தரும்.

இன்றேல், முடிவு காணல் சாத்தியமில்லையாம்.

இவ்வமைப்பை விளக்கியே கம்பன்,

வாலிவதையை நுட்பமாய் அமைத்துள்ளான்.

அதனாலேயே வாலிவதை வழக்கு,

இன்றுவரை முடிவு காணப்பட முடியாததாய்த் திகழ்கிறது.

ழூழூழூழூழூழூ

கற்போர் மனதில், இராமன், வாலி இருவரும் சமநிலைப்பட்டவராக,

தோற்றந் தரும் வண்ணம் அற்புதமாய்க் கம்பன் காதையை அமைத்ததால்,

அறிஞர்கள் அவ்விருவரையும் சமநிலைப்படுத்;தியே வழக்கை ஆராயத் தலைப்படுகின்றனர்.

படலம் முழுவதும் இச்சமப்படுத்தல்  சாத்தியம் ஆகாவண்ணம் சமைத்த,

கம்பன் கைவண்ணம் வியக்கத் தக்கது.

ழூழூழூழூழூழூ

வாலியும், இராமனும் ஒருவரையொருவர் மூன்று நிலைகளிற் புரிந்து கொள்கின்றனர்.

இம் மூன்று நிலை புரிதலிலும் இருவரும் சமப்படும்; வகையிலான,

ஒரு நிலையும் அமையாதவாறு கவனமாய்ப் பார்த்துக்கொள்கிறான் கம்பன்.

அம்மூன்று நிலைகளையும் ஆராய்வாம்.

ழூழூழூழூழூழூ

முதல் நிலையில்,

தம்பியின் மனைவியைக் கைப்பற்றி அவனைக்;; கொல்லத்

துணியும் மிருக நிலையில் உள்ளவன் வாலி என்பதே.

வாலி பற்றிய இராமனின் அபிப்பிராயம்.

சகோதரச் சண்டையில் இடை புகலாமோ? எனும் இலக்குவன் கேள்விக்கு,

இப்பித்தாய விலங்கின் ஒழுக்கினைப் பேசலாமோ?

என இராமன் அளிக்கும் பதில்,

வாலி பற்றிய அவன் முதல்நிலை அபிப்பிராயத்தைத் தெளிவுபட வெளிப்படுத்துகிறது.

ழூழூழூழூழூழூ

இம் முதல் நிலையில்,

இராமன் பற்றிய வாலியின் அபிப்பிராயமோ,

தம்பிக்காகத் தன் இராச்சியம் துறந்த அதிமானுடன் அவன் என்பதேயாம்.

சுக்கிரீவற்கு இராம, இலக்குவர் துணை வந்தார் எனும்,

தாரையின் கூற்றுக்குப் பதில் அளிக்கையில்,

உழைத்த வல் இரு வினைக்கு ஊறு காண்கிலாது

அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம்

இழைத்தவற்கு, இயல்பு அல இயம்பி என் செய்தாய்?

பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்றான்  என வாலி பதிலிறுப்பது,

வாலியின் இராமன் பற்றிய அபிப்பிராயத்திற்குச் சான்றாம்.

ழூழூழூழூழூழூ

எனவே,

இம் முதல் நிலையில்,

மனிதன், மிருகம் என ஒருவருக்கொருவர் மாறுபட்டு,

சமநிலை காணாது போகின்றனர்.

ழூழூழூழூழூழூ

இரண்டாம் நிலையில்,

இராமனின் அம்புபட்டு வீழ்ந்த வாலி தன்மேல் அம்பு போட்டது நீதியோ? என,

அறங்களை எடுத்துக்காட்டி வாதிடுகிறான்.

அந்நிலையில், நீதியுணர்ந்த வாலியை மானுடன் எனக் கொள்கிறான் இராமன்.

கலங்கலா அற நல்நெறி காண்டலில்

விலங்கலாமை விளங்கியது எனும்,

இராமனின் இக்கூற்று இரண்டாம் நிலையில் வாலி பற்றிய,

அவன் பார்வையை தெளிவாய் விளக்குகின்றது.

ழூழூழூழூழூழூ

ஆனால் இவ் இரண்டாம் நிலையில்,

தன் செயலை நியாயப்படுத்துவதற்காக,

வாலி தன்னை விலங்கெனவே பேசுகிறான்.

மணமுமில்லை மறைநெறி வந்தன

குணமுமில்லை, குலமுதற்கு ஒத்தன

உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுங்கு அலால்

நிணமும் நெய்யும் இணங்கிய நேமியோய்

விலங்கொழுக்கே தன் ஒழுக்கென அவன் பேசுதல்,

காவியத்தில் தெளிவாய்ப் பதிவாகியிருத்தல் கண்கூடு.

ழூழூழூழூழூழூ

இவ்விரண்டாவது நிலையிலும் இராமன் வாலியை

மனிதன் எனக் கொள்ள

வாலி தன்னை விலங்கெனக் கொள்வதால்

இங்கும் அவ்விருவரையும் சமன் செய்யும் வாய்ப்புத் தவறுகின்றது.

ழூழூழூழூழூழூ

மூன்றாம் நிலையில்,

அறமுணர்ந்த நீ விலங்கல்ல மனிதனே என,

வாலிக்கு எடுத்துக்காட்டுகிறான் இராமன்.

தக்க இன்ன, தகாதன இன்ன, என்று

ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள

மக்களும் விலங்கே, மனுவின் நெறி

புக்கவேல், அவ் விலங்கும் புத்தேளிரே.

என இராமன் எடுத்துரைக்க,

அவ்வுரை அமையக் கேட்ட அரிகுலத்து அரசும் மாண்ட

செவ்வியோய் அனையது ஆக! செருக களத்து உருத்து எய்யாதே

வௌ;விய புளிஞர் என்ன, விலங்கியே மறைந்து, வில்லால்

எவ்வியது என்னை? என்றான் இலக்குவன் இயம்பலுற்றான்.

வாலியும், தான் மனிதன் என ஒத்துக் கொண்டு,

தனது வாதத்தை வேறு திசைக்குத் திருப்புகிறான்.

இந்நிலையில், வாலி மனிதனாகப் பதிவாதல் கண்கூடு.

ழூழூழூழூழூழூ

'நான் மனிதனாகில் என்னை மறைந்து நின்று கொன்றது எப்படி?' என்ற,

வாலியின் கேள்விக்குப் பதிலுரையாமல் இராமன் மௌனிக்க,

இடைபுகுந்து இலக்குவன் ஏதோ சமாதானம் சொல்கிறான்.

அந்நிலையில், வாலியால் இராமனது தெய்வ அம்சம் உணரப்படுகிறது.

இம்மூன்றாம் நிலையில் மனித நிலையுற்ற வாலி,

இராமனை மனிதரின் மேம்பட்ட தெய்வமாகக் கருதுகிறான்.

ஏவு கூர் வாளியால் எய்து, நாய் அடியனேன்

ஆவி போம் வேலைவாய், அறிவு தந்து அருளினாய்,

மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!

பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ!  உறவும் நீ!

என இராமனை வாலி போற்றுவது,

வாலி பார்வையில் இராமன்,

தெய்வமானதைத் தெளிவாய்க் காட்டுகின்றது.

ழூழூழூழூழூழூ

எனவே,இந்த மூன்றாம் நிலையிலும்,

இராமன் பார்வையில் வாலி மனிதனாக,

வாலி பார்வையில் இராமன் தெய்வமாவதால்,

சமநிலைச் சாத்தியம் அற்றுப் போகிறது.

ழூழூழூழூழூழூ

இராமன்,வாலி என்னும் இருவரும்,

இப்படலத்தில் எங்கும் சமநிலைப்பட்டு நில்லாததால்

ஒத்த நிலையில் இவ்விருவரையும் வைத்து

வழக்கை ஆராயும் வாய்ப்பு அற்றுப் போகிறது.

இஃதே, இன்றுவரை இவ்வழக்கு நீள்வதற்கான காரணமாம்.

வாதி, பிரதிவாதிகள் இருவரும் ஒரே காட்சியில்,

வேறு, வேறு நிலைகள் உற்று நிற்பதால்,

இருவர் நிலையையும் சமப்படுத்திக் கூறுவதாகிய உலக நீதியை,

இருவர்க்கும் பொதுமை கண்டு கூறப்பட முடியாமல் போகிறது.

ழூழூழூழூழூழூ

இவ்வாறு, இவ்வழக்கை கம்பன் ஆழ்ந்து சிந்தித்து அமைத்த விதம்

வியப்பிற்குரியதாம்.

எனவே,வாலி வழக்கு என்றும் முழுமையாய்த்

தீர்க்கப்படப் போவதில்லை.

அதனால் சர்ச்சைக்குரியதாய் என்றும் நிலைத்து,

'வாலிவதை வழக்கு' முடியா வழக்காய்,

அறிஞர்க்கு இன்பம் தரப் போவது திண்ணம்.

ழூழூழூழூழூழூ

 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்