'வெல்ல வல்லமோ?' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகியலில்
ஒன்றுக்கொன்று முற்றாக வேறுபட்டிருக்கும்,
தனி மனிதர்தம் வாழ்வினை,
ஆராயத் தலைப்பட்ட நம் ஞானிகள்
உணர்ந்து கொண்ட உண்மைத் தத்துவமே விதியாம்.

🦌 🦌 🦌

இன்பம்-துன்பம்,
செல்வம்-வறுமை,
அறிவு-அறியாமை,
நோய்-ஆரோக்கியம் என,
சமூகத்தில் விரிந்திருக்கும் ஏற்றத் தாழ்வுகளை
ஆராயத் தலைப்பட்டோர் கண்ட பெருந்தத்துவம் இது.
ஊழ், தெய்வம், முறை என பல பெயர்களால் அழைக்கப்படும் இவ் விதியினை
முற்றாய் விளங்குதல்  அரிதான காரியமாம்.

🦌 🦌 🦌

முற் பிறவிகளில் நாம் செய்த கருமங்களே
இப் பிறவியின் செயற்பாட்டுக்குக் காரணங்களாய் அமைகின்றன.
இஃது, விதிக் கொள்கையாளர் முடிவு.
முன் செய்த நல்வினை, தீவினைகள்
பாவ புண்ணியங்களாய்ப் பதியப் பெற்று
பின் இன்ப, துன்பங்களாய் வெளிப்படுகின்றன
என்பது அவர்தம் கொள்கையாம்.
இக்கொள்கையை பெரும் புலவர்களும் அங்கீகரித்துள்ளனர்.
வள்ளுவக்கடவுளார், தமது நூலில் ஓர் அதிகாரத்தையே ஓர் இயலாக்கி 
இவ் ஊழினைப்பற்றி விளக்கம் செய்கிறார்.

🦌 🦌 🦌

ஏலவே வகுக்கப்பட்டதாகிய விதியினை
முயற்சியால் மாற்றுதல் கூடுமோ? என்பது பற்றியதான சர்ச்சை,
அன்று தொட்டு இன்று வரை நிலவிவருகிறது.
இன்றுவரை இச் சர்ச்சைக்கான முடிவு  தெளிவுபடுத்தப்படவில்லை.
ஊழ் என்னும் அதிகாரத்தில்,
முயற்சியால் வெற்றி பெற முடியாதது விதி
என்கிறார் வள்ளுவர்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும் 

இஃது அவர்தம் மேற் கருத்தின் சான்றாம்.

🦌 🦌 🦌

பின்னர், அவரே
'ஆள்வினையுடைமை' எனும் அதிகாரத்தில்
விதி வெல்லப்படக் கூடியதே என்பதாய் நினையத்தக்க
கருத்தினையும் பதிவாக்குகின்றார்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலி தரும்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித்
தாழாது உஞற்றுபவர்

வள்ளுவரின் இக்குறள்கள்
விதி வெல்லப்படக்கூடியதே எனக் கருத வைக்கின்றன.

🦌 🦌 🦌

குழப்பமாய்த் தோன்றிடினும்
உட்புகுந்து ஆராயத் தலைப்பட்டால்
ஊழ் பற்றிய வள்ளுவர் கருத்தில் முரணின்மை தெற்றென வெளிப்படும்.
விதி முற்றாக வெல்லப்பட முடியாததே!எனும்
விதிக் கொள்கையாளர்தம் முடிவோடு
வள்ளுவரும் முரண்படாமை நிஜமாம்.

 🦌 🦌 🦌

இவ் விதியினை ஒத்துக் கொள்ளாத விதி மறுப்பாளர் என்றும் உளராம்.
இக்கொள்கையை இன்றைய அறிவியலாளர் சிலர்
சோம்பேறிகளின் கொள்கை என நையாண்டி செய்கின்றனர்.
உலகியல் அனுபவத்தோடு ஆழச் சிந்திப்பவர்கள்
இக்கொள்கையை முற்றாய் மறுக்க முனையாராம்.

🦌 🦌 🦌

வாழ்வின் சில சந்தர்ப்பங்களில்
வரப்போகும் துன்பம் பற்றி முன்னறிந்தும்,
அதைத் தடுக்கும் வழியறிந்தும்,
சூழ்நிலையால் அதனைத் தடுக்க இயலாமற் போகையிலே
அவ் இயலாமை பற்றிய காரணத்தைத் தேட,
அக் காரணம் அறிவு கடந்து நிற்பதை ஒப்ப வேண்டி வருகையில்
விதியினை ஏற்க மறுப்போரும் 
அதனை மறுக்க வழியின்றித் தத்தளித்தல் கண்கூடு.
அந்நிலையில்,
உண்மைத் தேடுதல் உள்ளோர்
விதிக்கொள்கையை அங்கீகரித்து,
தெளிவு பெறுகின்றனர்.

🦌 🦌 🦌

விதி பற்றிய, இவ் வேறுபட்ட எண்ணங்களையும்,
சர்ச்சைகளையும், முடிவினையும்,
தன் கதை மாந்தரூடு கம்பன் கையாளுந் திறன் 
கற்போர்தம் சிந்தையைக்  கவர வல்லது. 
விதி பற்றிய விளக்கமாய் அமையும் 
கம்பனின் கைத்திறம் காண்பாம்.

🦌 🦌 🦌

கைகேயியின் சூழ்வினையால்,
நிச்சயிக்கப்பட்ட இராமனின் முடிசூட்டு விழா நிறுத்தப்படுகிறது.
நேற்று முன்தினம் வரை சக்கரவர்த்தித் திருமகனாய் மகிழ்வுடன் இருந்த இராமன்,
நேற்றைய தினம் தசரதனின் மனமாற்றத்தால் சக்கரவர்த்தியாய் முடிவாகி,
இன்று கைகேயி சூழ்வினையால் முன்னிரு நிலைகளையுமிழந்து
காடேகும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

🦌 🦌 🦌

தவிர்க்க முடியாது நிகழ்ந்த இம் மாற்றங்களினூடு
விதியினைப் பற்றிப் பதிவு செய்கிறான் கம்பன்.
விதி பற்றிய சர்ச்சையினை இவ்விடத்தில் ஆரம்பிக்க நினைக்கும் அவன்
இலக்குவன் மூலம் அச் சர்ச்சையைத் தொடக்கி வைக்கிறான்.

🦌 🦌 🦌

இராமன் முடியிழந்து காடேகும் செய்தி, இலக்குவனின் செவிக்கு எட்டுகிறது.
கொதித்தெழுகிறான் அவன்.
நிகழ்ந்த இக் காரியங்களை 
விதியின் விழைவாய் ஏற்க அவன் மனம் மறுக்கிறது.
தசரதன், கைகேயி, பரதன் ஆகியோரின் 
சதியின் காரியங்களே இவை என நினைகிறான் அவன்.
இந் நிகழ்ச்சிகளுக்குள் மனித முயற்சிகளை மீறியதொரு சக்தி தொழிற்படுவதை
அவனது இளமை மனம் ஒப்ப மறுக்கிறது.
தன் முயற்சியால் இக் காரியங்களை மாற்றலாமென அவன் கருதுகிறான்.
அதனால், இராமனுக்கு எதிராய்ச் சதி செய்தோரை எதிர்க்கத் தயாராகின்றான்.
அவனது வில் நாணின் ஓசையால் அயோத்தி அதிர,
கோபங் கொண்டான் இலக்குவன் என்பதறிந்து
உண்மையுணர்த்தி அவனைச் சமாதானம் செய்யும் நோக்குடன்
அவனிருப்பிடம் தேடி வருகிறான் இராமன்.

🦌 🦌 🦌

கோபக்கனல் பொங்க நிற்கும் இலக்குவனைச் சமாதானம் செய்யும் முகமாக
பேசத் தொடங்குகிறான் அவன்.
'சிறிதும் கோபம் வராத உனக்கு இன்று கோபம் வந்தது எங்ஙனம்?'
இங்ஙனமாய் இராமன் தனது உரையாடலைத் தொடங்குகிறான். 
கோபம் வராதவன் நீ என, தான் உரைப்பின்
தன் கருத்தைக் காக்கவேனும்
இலக்குவன் கோபத்தைக் கைவிடுவான் என்பதாய் நினைந்தே 
இக் கருத்தை உரைக்கிறான் இராமன்

மின் ஒத்த சீற்றக் கனல் விட்டு விளங்க நின்ற,
பொன் ஒத்த மேனிப் புயல் ஒத்த தடக் கையானை,
என் அத்த! என் நீ இறையேனும் முனிந்திலா தாய்
சன்னத்தன் ஆகித் தனு ஏந்துதற்கு ஏது?என்றான்.

🦌 🦌 🦌

இராமனின் எதிர்பார்ப்புத் தோல்வியடைகிறது.
இராமனின் சாந்தநிலை கண்டு
இத்தகையவனுக்கா தீங்கு விளைவிக்கின்றனர்?
எனும் எண்ணம் மேலும் கோபத்தைத் தூண்ட
தன் கருத்தைக் கோபத்தோடு உரைக்கிறான் இலக்குவன்.
சிற்றன்னைக்கு எதிராய் நினக்கு மௌலி சூட்டுவேன்,
தடுப்பவர் தேவரேனும் என் கணையால் அவரைச் சுடுவேன்
என்கிறான் அவன்.

மெய்யைச் சிதைவித்து, நின் மேல் முறை நீத்த நெஞ்சம்
கையில் கரியாள் எதிர், நின்னை அம் மௌலி சூட்டல்
செய்யக் கருதி, தடை செய்குநர் தேவரேனும்,
துய்யைச் சுடு வெம் கனலில் சுடுவான் துணிந்தேன்.


புருஷோத்தமனான இராமன் முன்,
தந்தைக்கு எதிராகப் போர் தொடுப்பேன் எனக் கூறத் தயங்கி,
'தேவரேனும் சுடுவான் துணிந்தேன்' என இலக்குவன் பேசுதல்
கம்பனின் பண்பாட்டு முத்திரையாம்,

🦌 🦌 🦌

அரசுரிமைக்காக ஏங்காத இராமன் முன்
உனக்கு யான் அரசு தருவன் எனவும்,
அக் காரியத்தைச் செய்து முடிக்கும் வினைத்திறன்
தனக்குளது எனவும்
தன் முயற்சி இடருறாது எனவும்,
இடருறின் தீர்க்கும் திறனுளது எனவும்,
காரண காரியங்களை எடுத்துக் காட்டி
அறியாமையாற் பேசுகிறான் இலக்குவன்.

'வலக் கார்முகம் என் கையது ஆக, அவ் வானுளோரும்
விலக்கார் அவர் வந்து விலக்கினும், என் கை வாளிக்கு
இலக்கா எரிவித்து, உலகு ஏழினொடு ஏழும், மன்னர்
குலக் காவலும், இன்று, உனக்கு யான் தரக் கோடி' என்றான்.

🦌 🦌 🦌

இராமனோ புன்னகை மாறாது பேசத் தொடங்குகிறான்.
நீதியின் மாறுபடாத நன்னெறியின் பால் ஈடுபடும்
அறிவுடைய உனக்கு,
அறத்தின் மாறுபட்ட இச் சீற்றம் விளைந்தது எங்ஙனம்? எனக் கேட்டு
மீண்டும் அவன் சீற்றம் தணிவிக்க முயல்கிறான்.

இளையான் இது கூற, இராமன், 'இயைந்த நீதி
வுளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே?
உளையா அறம் வற்றிட, ஊழ் வழுவுற்ற சீற்றம்,
விளையாத நிலத்து, உனக்கு எங்ஙன் விளைந்தது?' என்றான். 

🦌 🦌 🦌

பல திறத்தானும் இலக்குவன் சீற்றத்தைத் தணிக்க முயன்ற இராமன் 
முடிவில், இக்காரியங்கள் அனைத்தும் விதியின் செயல் எனும் 
தத்துவநிலையை ஓர் உவமையூடு எடுத்துக் காட்டுகிறான்.
நீரின்றிப் போவது நதியின் பிழை அன்றே.
அஃதே போல், நடந்திருக்கும் இச் செயல்களும்
தந்தையாம் பதியின் பிழை அன்று.
தாயின் மதியின் பிழையன்று.
மகனாம் பரதன் பிழையுமன்று.
அனைத்தும் விதியின் பிழை.
இஃது உணர்க! எனப் பேசுகிறான்.

நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை, அற்றே,
பதியின் பிழை அன்று, பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று, மகன் பிழை அன்று மைந்த!
விதியின் பிழை, நீ இதற்கு என்னை வெகுண்டது? என்றான்.

🦌 🦌 🦌

இலக்குவனோ இளமைத் துடிப்பால்
தன் முயற்சியில் அளவிலா நம்பிக்கை கொண்டு
இராமனின் அக்கருத்தை மறுக்கிறான்.
மற்றவர் ஏவல் கொண்டு, நினைத்தது முடித்து வாழும்
அரண்மனை வாழ்வு பழக்கப்பட்டதால்
அதுவே வாழ்வெனக் கொண்டு
மாற்றங்களை ஏற்க மறுக்கிறது அவன் மனம்.
இச் செயல்கள், விதியினால் விளைந்தன அல்ல.
கைகேயியின் மதியினால் விளைந்தவை.
நீ கூறுவது போல் அவை விதியே எனினும்
என் விற்றொழிலால் அவ் விதிக்கோர் விதியை நானே வகுப்பன்
எனக் குதர்க்கம் பேசுகிறான் அவன்.

உதிக்கும் உலை உள் உறு தீயென ஊதை பொங்க,
'கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? கோள் இழைத்தாள்
மதிக்கும் மதியாய், முதல் வானவர்க்கும் வலீஇது ஆம்
விதிக்கும் விதி ஆகும் என் வில் தொழில் காண்டி' என்றான்.

🦌 🦌 🦌

அதுவரை கோபம் வராத இராமனுக்குக் கோபம் வருகிறது.
விதியின் ஆற்றல் விளங்கிய அவன்,
விதியை வெல்வேன் எனும் இலக்குவன் வார்த்தையில் வெளிப்பட்ட
அறியாமை கண்டு சலிப்புறுகிறான்.
'உண்மைகளை விளக்கம் செய்யும் வேதத்தினைப் படித்த நீ
வாய் தந்தன பேசுதியோ?
தாய், தந்தையரை கோபித்தல் எவ்வாறோ?'
என 
இலக்குவனைக் கடிகிறான்.

ஆய்தந்து, அவன் அவ்வுரை கூறலும், 'ஐய! நின்தன்
வாய் தந்தன கூறுதியோ, மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே, நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ?'

🦌 🦌 🦌

சலிப்புற்ற இராமன்,
தொடர்ந்து இலக்குவனை அடக்குதற்கான
தன் இறுதி அஸ்திரத்தைப் பிரயோகிக்கிறான். 
என்னை இதுவரை அறிவு தந்து வளர்த்த
தந்தை சொல்லை நான் கடவேன்.
மூத்தோனாகிய என் சொற் கடப்பதில் உனக்கு எக்குற்றம் உண்டாகும்? 
நீ உன்னிஷ்டம் போல் நடந்து கொள் என்கிறான்.

நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து, எற்கு அரசாள்வது தக்கது அன்றால்
என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஈனம்? என்றான்
தென் சொல் கடந்தான், வடசொல்-கலைக்கு எல்லை தேர்ந்தான்.

இராமன் மனம் நொந்தான் என்றதும்,
இலக்குவன் சீற்றம் உடன் தணிகிறது.
இவ்விடத்திலும்,
அண்ணன் மனவருத்தத்தால் அவன் அடங்கினானே தவிர
விதிக் கொள்கையை அவன் மனம் ஏற்றுக்கொள்ள வில்லையாம்.

🦌 🦌 🦌

இவ்வாறு,
இலக்குவப் பாத்திரங் கொண்டு
விதிக் கொள்கை பற்றிய சர்ச்சையை,
தொடங்கி வைத்த கம்பன்,
அப்பாத்திரம் கொண்டே
சர்ச்சையின் முடிவினையும் அறிவிக்க விரும்புகிறான்.

🦌 🦌 🦌

அரண்மனை வாழ்விழந்து,
பதின்மூன்றாண்டுகள் கானகத்தில் தனியராய்த் திரிந்து,
உலகியல் கற்றதால் அனுபவம் பெற்ற இலக்குவன் அறிவு,
வளர்ச்சியுறுகின்றது.
அவனுக்கு வாழ்க்கைப் பாடம் விளங்கத் தலைப்படுகிறது.
அந் நிலையில் விதிக் கொள்கை பற்றிய தன் எண்ணத்திற்கு
முடிவுரை எழுதும் காட்சியை அமைக்கிறான் கம்பன்.

🦌 🦌 🦌

சூர்ப்பனகையின் தூண்டுதலால் சீதைபால் காமுற்ற இராவணன்,
அவளை அபகரிக்கக் கருதி,
மாமன் மாரீசனை, மாயமானாய் அனுப்பி வைக்கிறான்.
இராவணன் எண்ணப்படியே, மாயமான் கண்டு மையல் உறுகிறாள் மைதிலி.
விதி உந்த, இராமனிடம் அம் மானைப் பற்றித்தருக – என
நெற்றிப் பிறையாள் முற்றிப்பொழி காதலொடு முறையிடுகிறாள்.
அது கேட்டு,
வெற்றிச் சிலை வீரன் அம் மானைப்
பற்றித்தர விரைகிறான்.
விதி வயப்பட்ட இராமனதும், சீதையினதும்
அறிவு, மழுங்கிய இந்நிலையில்
இலக்குவன் அறிவு நுண்மையாய் வேலை செய்கிறது.

🦌 🦌 🦌

தங்கம், மணி முதலியவற்றால் ஆன
இம் மான், பொய்மான் என்பது
சொல்லாமல் புரிந்து போக,
அதனைப் பற்றப் புறப்பட்ட இராமனிடம்
இஃது அரக்கர் வினையெனக் கூறித் தடுத்து நிற்கிறான் இலக்குவன்.

🦌 🦌 🦌

விதி வயப்பட்ட இராமனோ,
அறிவு மழுங்க, அம் மானின் மாயம் உணராது,
இவ்வுலகில் இல்லாதன இல்லை.
பல்லாயிரங் கோடி உயிர்களும் நாம் பார்த்ததல்லவே
எனப் பேசுகிறான்.

நில்லா உலகின் நிலை, நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர், மன் உயிர் தாம்
பல் ஆயிரகோடி பரந்துளவால்,
இல்லாதன இல்லை-இளங்குமரா!

🦌 🦌 🦌

தெளிவாய்ச் சரியெனத் தெரியும் தன் கருத்து
மறுக்கப்படுவது கண்டு இலக்குவன் மனம் துணுக்குறுகிறது.
மீண்டும், இஃது அரக்கர் மாயச் செயலே என அவன் வலியுறுத்துகிறான்.
இராமனோ, மாயமேல் மடிவிற்பேன் தூயதேல் பற்றிக்கொணர்வேன்,
என மீண்டும் இலக்குவனை மறுத்துரைக்கிறான்.

🦌 🦌 🦌

இலக்குவனோ தொடர்ந்தும் வாதாடுகிறான்.
இம் மான் மாயமெனின், இதன் பின் நிற்பார் யாரென அறிகிலம்.
எத்தனை பேர் இச்சதியிற் கூட்டென்பதும் தெரிகிலம்.
தெளிவுறா இச் செய்கையிற் செயற்படல் அறிவுடைத்தன்று எனப் பேசுகிறான்.
விதி விடுவதாயில்லை!
இராமன் தொடர்ந்தும் இலக்குவனின் கருத்தை மறுதலிக்கிறான்.
மாய வடிவு நோக்கியும், பலர் என்பதாலும்
அரக்கரை அழிப்போம் எனும் நம் விரதத்தைக் கைவிடுதல் தகுமோ?
அம் மான் மாயமானே எனினும், அதனை அழித்தல் நம் கடமையன்றோ!
எனத் தன் கருத்தில் பிடிவாதம் செய்கிறான் இராமன்.

பகையுடை அரக்கர் என்றும், பலர் என்றும், பயிலும் மாயம்
மிகையுடைத்து என்றும், பூண்ட விரதத்தை விடுதும் என்றல்
நகையுடைத்து ஆகும் அன்றே? ஆதலின் நன்று இது என்னா
தகையுடைத் தம்பிக்கு, அந்நாள், சதுமுகன் தாதை சொன்னான்.

விதியை வகுப்பவனான நான்முகனின் தந்தையாயிருந்தும்
விதிக்குட்பட்டு நிற்கும் இராமனை,
நகை தோன்ற,
அந்நாள் சதுமுகன் தாதை என்றும்
தெளிவுடன் இருக்கும் இலக்குவனை
அப்போதைய இராமனின் அறியாமை நிலையோடும் ஒத்து
தகையுடைத் தம்பி என்றும்
கம்பன் பேசுதல் அவன் கைவண்ணமேயாம்

🦌 🦌 🦌

விதியின் விளையாட்டே இஃதென உணர்கிறான் இலக்குவன்.
எனினும் எப்படியும் அதைத் தடுக்க வேண்டுமெனும் முடிவோடு
தன் முயற்சியைத் தொடர்கிறான் அவன்.
இராமனை நோக்கி,
அங்ஙனமாயின் யானே சென்று அம் மானைப் பற்றி வருவன் என்கிறான்.
விதியோ விடுவதாயில்லை.
சீதை, என்றும் இல்லாத பிடிவாதத்துடன்
தன் நளினங்கள் அனைத்தும் பொருத்தி,
மழலைச் சொற்களால், வருத்தம் உற்றவள் போல
தலைவா! நீயே அம் மானைப் பற்றித்தர மாட்டாயோ? என 
ஊடிச் சினக்கிறாள்.

ஆயிடை, அன்னம் அன்னாள், அமுது உகுத்தனைய செய்ய
வாயிடை, மழலை இன் சொல் கிளியினின் குழறி, மாழ்கி,
நாயக! நீயே பற்றி நல்கலை போலும் என்னா,
சேயரிக் குவளை முத்தம் சிந்துபு சீறிப் போனாள்.

🦌 🦌 🦌

அவளது ஊடலுக்கு ஆட்பட்ட இராமன்,
இலக்குவனிடம்,
மானை நானே பற்றிவருவன், அன்னையைக் காத்தி நீ!
என உறுதியாயக் கூறி மான் பின்னே செல்கிறான்.
தீமை வரப்போவது தெரிந்தும்
அத் தீது தடுக்க இயலா ஆற்றாமையுடன் நிற்கும் இலக்குவன்
அப்போதும் தன் முயற்சியில் நம்பிக்கை தளராது,
அன்னையைக் காப்பேன் எனும் உறுதியோடு,
பர்ணசாலையின் புறத்தே காவல் நிற்கிறான்.

🦌 🦌 🦌

மானைத் தொடர்ந்த இராமனோ,
அஃது மாயமானே என உணர்ந்து,
அதன் மேல் அம்பினைப் போட,
அம் மான், தன் குரலை இராமனின் குரலாய் மாற்றி,
கதறி வீழ்கிறது.
அவ்வோசை, இராமனுக்காய்க் காத்திருந்த சீதையின் காதில் வீழ,
பதறுகிறாள் அவள்.
இராமனுக்குத் தீங்கு நேர்ந்ததோ? எனத் துடித்து,
அவனுக்குத் துணை செய்யச் செல்லுமாறு இலக்குவனைப் பணிக்கிறாள்.

🦌 🦌 🦌

விதி வெல்ல முனைவதையுணர்ந்த இலக்குவன்
மீண்டும் தன் முயற்சியால் அதனைத் தடுக்க முயல்கிறான்.
இராமனை வெல்லத்தக்கார் யாருமில்லை, அஞ்சற்க!
எனச் சீதையை ஆறுதல் செய்ய முனைகிறான் அவன்.
சீதையோ, தன்னுரை கேளாமல் நிற்கும் இலக்குவனை
விதியுந்த, ஐயுற்றுப் பேசுகிறாள்.

நின்ற நின் நிலை, இது, நெறியிற்று அன்று
எனும் கடும் வார்த்தைகள் அவள் வாயினின்றும் வருகின்றன.
ஒரு பகல் பழகினாரும் இராமனுக்காய் உயிர் விடுவர்.
நீயோ! அவர் வருத்தக் குரல் கேட்டும் அசையாது நின்றனை.
இனியும் ஈங்கு நிற்பியேல் நெருப்பிடை வீழ்ந்து இறப்பன் என்கிறாள்.
 
ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்
பெரு மகன் உலைவுறு பெற்றி கேட்டும் நீ
வெருவலை நின்றனை வேறு என்? யான் இனி
எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென்,  ஈண்டு எனா,

🦌 🦌 🦌

சீதையின் பிடிவாதத்தால் அவளைத்  தனியே விட்டுப் போவது,
தவிர்க்க முடியாததாகிறது.
தீமை வரப்போவது உறுதியாய்த் தெரிந்தும்,
அதைத் தடுப்பதற்காம் வழி தெரிந்தும்,
தடுக்க இயலாமல் அமைந்த அச் சூழ்நிலையின் வலிமைகண்டு
திகைக்கிறான் இலக்குவன்.
இதற்கான காரணத்தை அறிவால் விளங்க முற்பட்டு
அது முடியாமற் போகவே
விதிக்கொள்கையை விளங்கிச் சரணடைகிறான் அவன்.
அயோத்தியில்
விதிக்கு விதியாகும் என் விற்றொழில் காண்டி
என இடக்காய்ப் பேசிய அவன் மனமும், வாக்கும்
விதிக்கொள்கையை ஏற்றுத் தாழ்கின்றன.
விதியை ஒத்து அவன் மனம் பேசுகிறது.

துஞ்சுவது என்னை? நீர் சொன்ன சொல்லை யான்
அஞ்சுவென், மறுக்கிலென், அவலம் தீர்ந்து இனி,
இஞ்சு இரும், அடியனேன் ஏகுகின்றனென்
வெஞ்சின விதியினை
வெல்ல வல்லமோ?

🦌 🦌 🦌

இயற்கையை விளங்கி சான்றோர் வகுத்த, விதிக் கொள்கையை
இலக்குவனைக் கொண்டு சர்ச்சையாக்கி,
பின் அவன் மூலமே அக் கொள்கையை ஏற்கவும் வைத்து
இலக்குவற்கும், நமக்கும் ஊழின் வலியுணர்த்தி,
தானும் அக் கொள்கையை அங்கீகரித்து நிற்கும்
கம்பன் பாங்கு பாராட்டத்தக்கதாம்

🦌 🦌 🦌

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்