'ஆகமம் அறிவோம்' பகுதி 16: 'சிரார்த்தங்களும் பிண்டங்கள் பற்றிய விபரங்களும்' - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

யர் பிதிர்களுக்காகச் செய்யப்படும் சிரார்த்தங்கள் பற்றி,
கடந்த இரண்டு வாரங்களாகச் சொல்லி வருகிறேன்.
இம்முறையும் அச்சிரார்த்த வகைகளில்,
இன்னும் சிலவற்றைப் பற்றியே கூறப்போகிறேன்.

⚜️  ⚜️  ⚜️

கயா சிரார்த்தம்

வடதேசத்தில் உள்ள ஒரு புண்ணிய சேஷத்திரத்தில் செய்யப்படும் சிராத்தம்,
கயா சிரார்த்தம் எனப்படும். 
இச்சிரார்த்தம் பிதிர்களுக்குத் திருப்தியைக் கொடுப்பதாயும், 
போக, மோட்சங்களைக் கொடுப்பதாயும் சொல்லப்பட்டிருக்கிறது. 
கயா சிரார்த்தத்தால் ஏழு கோத்திரங்களில் உள்ள,
நூற்றொரு குலமும் விருத்தியாகும் என்கின்றனர்.
அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை என்னும்,
ஏழு முத்தித் தலங்களிலும் ஏனைய புண்ணிய ஷேத்திரங்களிலும்,
சிரார்த்த கருமம் செய்வது மிக்க புண்ணியமாகும் என நூல்கள் உரைக்கின்றன.

⚜️  ⚜️  ⚜️

கோத்திரம் பற்றிய விபரங்கள்
ஒரு சந்ததியின் புகழ் பெற்ற தொடக்க கர்த்தாவாக இருந்த ஒருவரின்,
பெயரால் வழங்கப்படுவது கோத்திரம் ஆகும்.
பெரும்பாலும் இத் தொடக்க கர்த்தாக்கள் ரிஷிகளாய் அமைவர்.
அத்ரி, வசிட்டர், காஷிபர், கௌதமர், பரத்வாசர், விச்வாமித்ரர், ஜமதக்னி எனும்,
இவ் ஏழு ரிஷிகளும் சப்தரிஷிகள் என உரைக்கப்படுகின்றனர்.
இந்த ரிஷிகள் குபேரனின் ஆசிரியர்கள் என சொல்லப்படுகின்றனர்.
இந்த ரிஷிகளின் சந்ததியில் வந்தவர்கள் தம்மை,
மேற்சொன்ன ரிஷியின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என உரைப்பர்.
அத்ரி கோத்திரம், வசிட்ட கோத்திரம், காஷிப கோத்திரம் என,
மேற்சொன்ன ரிஷிகளின் பெயரால் கோத்திரங்கள் அமைந்துள்ளன.
இன்றும் குறித்த ஒரு கோத்திரத்தில் பிறந்த அந்தணர்கள்,
அதே கோத்திரத்தைச் சேர்ந்த குடும்பத்தில்,
திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை எனும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
அங்ஙனம் செய்தால் அது சகோதரத் திருமணமாகிவிடும் என்பதாலேயே,
அம்மரபை அவர்கள் பேணி வருகின்றனர்.
தம் முன்னோருள் குறித்த சிறப்புமிக்க ஒருவரை அறியாதவர்கள் கோத்திரம் சொல்கையில்,
தாம் எப்படியும் தெய்வத்தை முதலாகக் கொண்டுதான் தோன்றியிருப்போம் என்பதை வைத்து,
அவர்தம் கோத்திரம் வினவப் படுகிறபொழுது,
சிவகோத்திரம் என்றோ விஷ்ணு கோத்திரம் என்றோ,
தம்மரபு உரைத்து பெருமை கொள்வர். 
இஃதே கோத்திரம் பற்றிய விபரங்களாம்.

⚜️  ⚜️  ⚜️

101 குலம் பற்றிய விபரங்கள்
மேலே கயா சிரார்த்தத்தால் 101 குலமும் விருத்தியாகும் என,
சொல்லப்பட்டதை அறிவீர்கள்.
அந்த 101 குலங்களின் விபரம் பின்வருமாறு:
தந்தையின் குலம் இருபத்து நான்கு, 
தாயின் குலம் இருபது,
மனைவியின் குலம் பதினாறு, 
சகோதரி குலம் பன்னிரண்டு,
மகள் குலம் பதினொன்று,
தந்தையின் சகோதரி குலம் பத்து,
தாயின் சகோதரி குலம் எட்டு ஆக,
குலம் நூற்றொன்று எனப்படுகிறது.

⚜️  ⚜️  ⚜️

தந்தை, தாயருக்கான மாதாந்த சிரார்த்த திதி விபரம்
மனிதர்களுடைய ஒரு மாதம், பிதிரர்களுக்கு ஒரு தினமாம். 
அதில் பூர்வபக்கம் (வளர்பிறை நாட்கள்) பகலும், 
அபரபக்கம் (தேய்பிறை நாட்கள்) இரவுமாம். 
ஆதலால் மாதம் தோறும் வரும் அமாவாசையில்,
தவறாது தருப்பணம் செய்து விரதமுடையவர்களாயிருத்தல் வேண்டும் என்பது விதி.
அமாவாசையில் தந்தையைக் குறித்தும்,
பூரணையில் தாயைக் குறித்தும் விரதம் அனுட்டித்தல் மரபு.
அமாவாசைச் சிரார்த்தம் அனுட்டித்தார் பெறும் பயனும் பிறவும்,
காரண ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. 

⚜️  ⚜️  ⚜️

நவச்சிரார்த்தம் 
ஒருவர் மரணமடைந்த பின்,
முதலாம் நாள், மூன்றாம் நாள், ஐந்தாம் நாள், 
ஏழாம் நாள், ஒன்பதாம் நாள், பதினொராம் நாள் ஆகிய இந்நாட்களில்,
உத்தம குண அந்தணரை (சற்பாத்திரரை) வருவித்து, 
தூபம், தீபம், சந்தனம் முதலியவை தவிர்ந்த பொருட்களைக் கொடுப்பது,
நவச்சிராத்தம் ஆகும். (நவம் - புதிது)
நவச்சிரார்த்தம் எனும் இத்தொடருக்கு முதலில் செய்யப்படும் சிராத்தம் என்பது பொருளாம்.
இது மரணத்தின் பின் செய்யப்படும் எட்டாவது கிரியையாகும்.

⚜️  ⚜️  ⚜️

பிண்டத்தின் விபரங்கள்

இனி பிதிர்களுக்கு அளிக்கப்படும் பிண்டம் பற்றிச் சொல்கிறேன்.
பிதுர்த்தேவர்களுக்கு சிரார்த்தம் செய்யும் போது,
விளாங்கனியின் அளவாகப் இடப்படும் சோற்று உருண்டைப் பலியே,
பிண்டம் எனப்படுகிறது. 
பிதுர்களையும் பிண்டம் எனும் பெயரால் அழைக்கும் வழக்கம் உள்ளது. 

⚜️  ⚜️  ⚜️

பிதுர்களுக்குப் பிண்டம் எனப் பெயர் வந்ததன் காரணம்
வராக அவதாரத்தில் பூமியைத் தனது கொம்பில் தாங்கிய திருமால்,
தனது கொம்பினில் மூன்று மண் கட்டிகளைக் கொண்டு,
பூமியில் தர்ப்பைப்புற்களின் மேல் வைத்து அதில் தம்மை நினைந்து,
அபரக்கிரியையை தமது அங்கம் ஒன்றில் (கோமுஷ்ணத்தில்) பிறந்த எள்ளினை,
இடப்பக்கமாகச்சுற்றி (அபசங்கியமாக) இறைத்து, 
'நானே பிதுர்களைச் செய்கிறேன்' என்றார். 
உடனே அவருடைய கோரப் பற்களிலிருந்து உண்டான,
அந்தப் பிண்டங்கள் தென்திசையை அடைந்தன. 
அப்போது ஸ்ரீவராக மூர்த்தி,
'இந்தப் பிண்டங்களே பிதா (தந்தை), பிதாமகர் (பாட்டன்), 
பிர பிதாமகர் (பூட்டன்) என்பவராகுக. 
நானே இம்மூன்று பிண்டங்களிலும் உள்ளவனாகிறேன்'
என்றார். 
இதனால் பிதுர்களுக்குப் பிண்டங்கள் என்ற பெயர் உண்டாயிற்று.

⚜️  ⚜️  ⚜️

சிரார்த்தத்துக்கேற்ப பிண்டமிடுதலில் வேறுபாடு 
அன்ன சிரார்த்தம் செய்வோர் சமைத்த அன்னத்துடன், எள்ளு, நீர், 
தயிர், பால், நெய், தேன், வாழைப்பழம் எனும் பொருள்களைச் சேர்த்து, 
பிதிர்களை நினைந்து பிண்டம் இடுதல் வேண்டும். 
இக்கிரியையில் சமய, விஷேட தீட்சை பெற்று உயர்வுற்ற,
கந்தர், சண்டர், கணாதீசர் என்போர்க்கான மந்திரங்களை,
சுவாகா என்னும் தொடர், நிறைவில் வரும்படியாக (சுவாதாந்தமாக)உச்சரித்து,
பிண்டம் இடுதல் வேண்டும்.
(ஸ்கந்தாய சுவாகா, சண்டாய சுவாகா, கணாதீசாய சுவாகா)

⚜️  ⚜️  ⚜️

சமய, விஷேட தீட்சை  பெற்றோருடைய உயிர்கள்,
சபிண்டீகரணம் என்னும் கிரியையினாலே சிவலோகத்தை அடையும். 
அங்கு பிதாவினுடைய உயிர் ஸ்கந்த சொரூபமாக இருக்கும். 
பாட்டனுடைய உயிர் சபீண்டீகரண மண்டபத்திலே சண்ட சொரூபியாக இருக்கும். 
முப்பாட்டனுடைய உயிர் கணாதீப பதத்திலே கணாத சொரூபியாக இருக்கும். 
இவர்களுக்கு தலைவர்களாக ஸ்கந்தர், சண்டர், கணாதீசர் என்னும் மூவர், 
அதி தெய்வங்களாக விளங்குவர். 
இவர்களையும் பிதிர் தேவதைகள் என்று அழைப்பது வழக்கமாம்.
அத்தேவதைகளை ஆராதனை செய்து வழிபடுவது சிரார்த்தம் எனப்படும்.

⚜️  ⚜️  ⚜️

நிர்வாண தீட்சை பெற்றவர்களின் பிதிர் தேவதைகள்,
ஈசர், சதாசிவர், சாந்தர் எனப்படுவர். 
இறக்கும் கால நேரங்களை பொறுத்து,
உயிர்களை நற்பேறடையச் செய்ய சிரார்த்தம் இன்றியமையாதது. 
மாதா மாதம் வரும் அமாவாசை, தந்தை வழி பிதிர் கருமத்திற்கு சிறப்பானது. 
எனினும் ஆடி அமாவாசையே தந்தை வழி, 
பிதிர் கருமத்திற்கு மிகவும் புனிதமானதும், சிறப்பானதுமாகும்.
அதுபோலவே மாதா மாதம் வரும் பௌர்ணமி தாய் வழி பிதிர் கருமத்திற்குச் சிறப்பானது.
எனினும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினம் தாய் வழி, 
பிதிர் கருமத்திற்கு மிகவும் புனிதமானதும், சிறப்பானதுமாகும்.

⚜️  ⚜️  ⚜️

தந்தையின் சிரார்த்தமாயின் அவர் வம்சத்தில்,
பிதா, பிதாமகர், பிர பிதாமகர் மூவரையும் நினைந்தும்,
தாயின் சிரார்த்தமாயின் அவர் வம்சத்தில்,
மாதா(தாய்), பிதாமகி(பாட்டி), பிர பிதாமகி(பூட்டி) மூவரையும் நினைந்தும்,
பிண்டமிடுதல் வேண்டும்.

⚜️  ⚜️  ⚜️

இதுவரை சொன்னவை அன்னசிரார்த்தம் பற்றிய  விபரங்கள்.
இனி, ஆமசிரார்த்தம் பற்றிய விபரங்களைத் தருகிறேன்.
ஆமம் என்ற சொல்லுக்கு பச்சை என்பது பொருள்.
ஆம சிரார்த்தம் என்பது சிரார்த்தப் பொருட்களை,
சமைக்காமல் பச்சையாகப் பயன்படுத்தலாகும்.
ஆம சிராத்தம் செய்வோர் சமைக்காத அரிசியுடன், எள்ளு, 
உழுந்து, தயிர், பால், தேன், வாழைப்பழம், நெய்,
எனும் பொருள்களைச் சேர்த்து பிண்டமிடுதல் வேண்டும். 
இவ் எட்டுப் பொருள்களும் அட்டாங்கம் எனப்படும். 

⚜️  ⚜️  ⚜️

சிரார்த்தம் பற்றி இன்னும் சில விடயங்கள் சொல்லவேண்டியிருக்கிறது.
உங்கள் களைத்த முகம் என் கண்ணில் வருவதால்,
இப்போதைக்கு  இந்த விடயங்களை  நிறுத்திக் கொள்கிறேன்.
அடுத்தவாரம் உற்சாகமாக மீண்டும் சந்திக்கலாம்!

⚜️  ⚜️  ⚜️

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்