'ஆகமம் அறிவோம்' பகுதி 19: "அக்கினி வழிபாடும் பூசையும்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ங்களுக்கு சிலவேளை,
சிரார்த்தம் பற்றி இவ்வளவு விடயமா என,
சலிப்பு ஏற்படுகிறதோ தெரியவில்லை.
ஆனாலும் ஒருவிடயத்தை,
முழுமையாய்த் தெரிந்து கொள்ளுதல் அவசியம் என்பதாலேயே 
சிரார்த்தம் பற்றிய முழுவிடயங்களையும்,
தொகுத்துத் தந்துகொண்டிருக்கிறேன்.
தயைகூர்ந்து பொறுமையாய்ப் படியுங்கள்.
பெரும்பாலும் அடுத்த வாரத்துடன்,
சிரார்த்தம் பற்றிய விடயங்கள் பூரணப்படும் என நம்புகிறேன்.

🔥 🔥 🔥

சிரார்த்தத்தில் அக்கினி வழிபாடு

சிவசத்தியிலிருந்து சிவ அக்கினி தோன்றியது. 
இவ் அக்கினி மூன்று கூறாக உரைக்கப்படுகிறது.
இவை வேத அக்கினிகளாம்.
சிவ அக்கினியின் ஆயிரத்தொரு கூறாகக் காருகபத்தியாக்கினியும்,
அதன் ஆயிரத்தொரு கூறாகத் தெட்ஷிணாக்கினியும்,  
அதன் ஆயிரத்தொரு கூறாக ஆகவனீயாக்கினியும் தோன்றியதாய்ச் சொல்லப்படுகிறது.
இதனாற் சிவாக்கினியே மேற் சொன்ன மூன்று அக்கினி ரூபங்களைப் கொண்டதென அறியலாம். 
சிவபெருமான் இம் மூன்று தீ வடிவாய் விளங்குகின்றார் என்பதை, 
முத்தன் காண்  முத்தீயும் ஆயினான் காண் என்னும்,
அப்பர் சுவாமிகளின் தேவாரத்தால் அறியலாம்.

🔥 🔥 🔥

சுபகாரியங்களிலும், பிதிர்காரியங்களிலும், தேவகாரியங்களிலும்,
முறையே இம்மூன்று அக்கினி வழிபாடும் செய்தல்வேண்டும் என்பது விதியாம். 
விவாகம் முதலிய சுபகாரியங்களில் காருக பத்தி அக்கினியும்; (வேத அக்கினி மூன்றில் ஒன்று), 
பிதிர் காரியங்களில் தெட்ஷிண அக்கினியும் (வேத அக்கினி மூன்றில் ஒன்று) 
பூசிக்கப்படத் தக்கன என்று பூர்வகாரண ஆகமத்தில் கூறப்பட்டிருக்கிறது. 

🔥 🔥 🔥

மேற்சொன்ன செய்தியினை,
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்(று) ஓம்பும்
உயர் புகழார் தரு மோமாம் புலியூர் எனத் திருநாவுக்கரசு நாயனாரும்,
ஆங்(கு) எரி மூன்றும் அமர்ந்(து) உடன் இருந்த அங்கையால் ஆகுதி வேட்டும்
ஓங்கிய மறையோ ஓமாம் புலியூர்
  எனத் திருஞானசம்பந்தசுவாமிகளும்,
எங்கும் இருந்த அந்தணர் எரிமூன்(று) அவை ஓம்பும் இடம் எனச் சுந்தரமூர்த்திசுவாமிகளும்,
மூன்றுவகைக் குறித்த முத் தீச் செல்வத்து 
இரு பிறப்பாளர் பொழு(து) அறிந்து நுவல. என நக்கீரரும் (திருமுருகாற்றுப்படை) 
இயற்றிய பாடல்களால் நாம் அறிதல் கூடும்.

🔥 🔥 🔥

சிரார்த்தம் செய்யும் போது அமைக்கப்படும்,
மந்திர மேடையிலே (தண்டிலத்திலே) அக்கினியைப் பூசித்து,
பிதிர் நாமங்களினால் ஒமம் செய்க என்று நூல்கள் உரைக்கின்றனவாம்.
🔥 🔥 🔥
சிரார்த்த பூசை செய்யும் முறை
சிரார்த்த தினத்திற்கு முதல் நாளிலே,
முதல் நாளிலே அபரான்னத்தில் (மதியத்தின் மேல் ஆறு நாழிகை) 
நியமிக்கப்பட்டவர்களாகிய சிரார்த்த யோக்கியருக்கு, 
எண்ணெய் முதலியவற்றைக் கொடுத்து, 
கவச மந்திரத்தால் ஸ்நானம் செய்வித்து, 
அவர்களுடைய காலைக் கழுவி உள்ளே அழைத்துப்போய். 
விசுவதேவர்களைக் கிழக்கு முகமாகவும், 
பிதிர்களை வடக்கு முகமாகவும், அதிதியையும் (அறிந்த விருந்தினர்),
அப்பியாகதரையும் (அறியப்படாத விருந்தினர்)  மேற்கு முகமாகவும்,
இருத்திப் பூசிக்க வேண்டும்.
சபிண்டீகரணத்தில் நிமித்தகரையும் (சோதிடர்),
மேற்கு முகமாகப் பூசிக்க வேண்டும். 
பிதாவை உத்தேசித்து கந்தரையும்,
பிதாமகரை (பாட்டன்)  உத்தேசித்துச் சண்டரையும்,
பிர பிதாமகரை (பூட்டன்) உத்தேசித்துக் கணாதீசரையும் பூசித்தல் விதியாம்.
(இம்மூவர் பற்றி முன்னர் சொல்லப்பட்டிருக்கிறது)

🔥 🔥 🔥

அதிதி, (அறிந்த விருந்தினர்),
அப்பியாகதர் (அறியப்படாத விருந்தினர்) ஆகியோர் சிவசத்தி வடிவினராம். 
'அதிதி, அப்பியாகதர் இடத்தில்,
சதாசிவராகிய விஷ்ணுவைப் பூசிக்க'
என்று காரண ஆகமம் கூறுகின்றது.
பூசை செய்யும்போது அவரவர் பெயரால்,
ஆவாகனமும் (அக்கினிக்குப் பலி செலுத்தல்), 
வாமதேய மந்திரத்தால் தாபனமும் (ஸ்தாபித்தல்), 
சந்நிதானமும் (அண்மை நிலை), 
சந்நிரோதமும் (சமாதிநிலை) செய்க. 
வாமதேவ மந்திரத்தால் இரட்ஷை (காப்புக் கட்டுதல்)  செய்க. 
விசுவதேவருக்கு நெல்லைக் கொண்டு,
அப்பிரதட்ஷணம் (இடமாகச் சுற்றுதல்) செய்க. 
அகோர மந்திரத்தால் விசுவதேவர்களுக்கு பாதம் முதல் சிரசு வரை நெல் தூவுக. 
பிதிர்களுக்கு சிரசு முதல் பாதம் வரை எள்ளுத் தூவுக என நூல்கள் உரைக்கின்றன.

🔥 🔥 🔥

அப்பியங்கத்தை (எண்ணெய் பூசுதல்) கவச மந்திரத்தால் செய்க. 
வஸ்திரத்தை (உடை) இருதய மந்திரத்தாலும், 
உத்தரீயத்தை (சால்வை) ஈசான மந்திரத்தாhலும் கொடுக்க. 
உப வீதத்தைத்(பூணூல்) தற்புருஷ மந்திரத்தாலும், 
சந்தனத்தை அகோர மந்திரத்தாலும், 
புஷ்பத்தை சத்தியோசாத மந்திரத்தாலும் கொடுக்க. 
பாத்தியத்தை (பாதம் கழுவும் நீரை) இருதய மந்திரத்தாலும், 
ஆசமனத்தை (நீர் பருகல்) ஈசான மந்திரத்தாலும். 
அருக்கியத்தை (படையல் செய்தல்) மூல மந்திரத்தாலும் கொடுக்க என்றும் உரைக்கப்படுகிறது.

🔥 🔥 🔥

இடத்தைக் கோமயத்தால் (பசுச் சாணம்) சுத்தி (சுத்தம்) செய்க. 
விசுவதேவருக்குச் சதுரமாகவும், 
பிதிர்களுக்கு விருத்தமாகவும் (வட்டம்) சுத்தி செய்க. 
வாழையிலையை நுனி இடப்பக்கம்  இருக்கும்படி போட்டுப் புரோஷித்து (நீர் தெளித்தல்), 
அன்னம், உப்பு, நெய், பால், தயிர், தேன், கறி முதலிய பொருட்களை வைத்து, 
அஸ்திர மந்திரத்தால் புரோஷித்து (தெளித்து) ,
ஈசான மந்திரத்தால் பரிஷேசனம் (சுற்றுதல்) செய்து, 
மூல மந்திரத்தை உச்சரித்து, 
அபி மந்திரித்துத் (உருப்போட்டு) தத்தம்  செய்க (நீர் வார்த்துக் கொடுத்தல்). 
உணவிட்ட பின் அவர்களிடம் பூசையால் திருப்தி எனும் வாக்கினைப்பெற்று,
அதன் பின் விகிரம் (பலியன்னம்) இட்டு பூணூலை,
பழையபடி மாற்றிக்கொள்ளுதல் விதியாம்.

🔥 🔥 🔥

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்