'ஆகமம் அறிவோம்' பகுதி 20: "சிரார்த்தம் - எஞ்சிய விபரங்கள்" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

யர் சிரார்த்தங்கள் பற்றிய விபர வரிசையில்,
நிறைவுப் பகுதியை இம்முறை எழுதுகிறேன். 
ஆம சிராத்தத்தில் (சமையாது பச்சையாய் கொடுப்பது) எண்ணெய் பூசுதல், 
நீராட்டல்  முதலியவைகளை அவ்வவற்றுக்குரிய மந்திரங்களைச் சொல்லி
அவ்வப் பொருட்களைக் கொடுப்பதாய் பாவனை செய்து,
பின்னர் அரிசியிட்டுத் திருப்தியோ என பாவனையால் கேட்டல் வேண்டும் என
நூல்கள் சொல்கின்றன.
அன்ன சிரார்த்தத்தில் ஆம பிண்டம் இடுதலும், 
ஆம சிரார்த்தத்தில் அன்ன பிண்டம் இடுதலும் குற்றமாம்.

பிண்டத்தில் பிதிர்தேவருக்கு ஆவாகனம் முதலிய  உபசாரங்களைச் செய்து வணங்கி, 
அவர்களது ஆசீர்வாதத்தைப் பெற்றபின், 
விசர்ச்சனம் (அனுப்பி வைத்தல்) செய்து எல்லாப் பிண்டங்களையும்,
பசுவுக்குக் கொடுத்தல் வேண்டும் அல்லது தூயநீரில் இடவேண்டும் என்பது விதியாம்.

💎  💎  💎

வேதம் ஓதுதல்

சிரார்த்தம் நடக்கும்போது வேதத்தையும், 
தேவாரம், திருவாசகம் முதலிய தமிழ் வேதங்களையும்,
புராணங்களையும், இதிகாசங்களையும், தரும சாஸ்திரங்களையும் படிப்பித்தல் வேண்டும். 
இது பிதிர்களுக்கு மிகத்திருப்தி தருமாம்.
இறந்தோர்க்(கு) ஊட்டுமேல் வைதனில் வேதம் புராணம் இதிகாசம்
சிறந்த தருமநூல் இனிதில் கேட்பித்திடுதல் சிறப்பாகும்.  (கூர்ம புராணம்)

💎  💎  💎

தட்சணை கொடுத்தல்

சிரார்த்த முடிவில் குருவுக்கும் உடன் வந்த மற்றையோருக்கும்,
தட்சணை கொடுத்து வணங்கி ஆசீர்வாதம் பெறுதல் வேண்டுமாம்.
தட்சணை பெறுவோர் அவ் ஆன்மா உய்யவேண்டும் என நினைந்து அதனை ஏற்கவேண்டும். 
தட்சணை கொடுப்பவரும் பிதிர்தேவருக்கு கொடுப்பதாய் நினைந்தே,
அத்தட்சணையைக் கொடுக்க வேண்டும்.
சிரார்த்தம் முடிந்த பின்பு சிரார்த்தம் ஏற்றவர்களை,
வலமாகப் பின்தொடர்ந்து வெளியே அனுப்பிவைத்தல் வேண்டும்.
சிரார்த்தம் செய்வித்தவராகிய குருவையும் உபசரித்து,
அங்ஙனமே அவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டுமாம்.
(சோமசம்புப் பத்ததி 22-23) 

💎  💎  💎

சிரார்த்தத்தின் பின் உணவு உண்ணுதல்

சிரார்த்தம் செய்த இடத்தைச் சுத்தம் செய்து,
கால், கைகளைச் கழுவி ஆசமனம் (துளியளவு நீர் பருகுதல்) செய்துகொண்டு,
சிவனது அடியார்களோடும், விருந்தினர்களோடும், 
தன் உறவினர்கள் முதலானோரோடும் இருந்து உணவு உண்ண வேண்டுமாம்.

💎  💎  💎

உணவு உண்ணும்போது செய்யத்தகாதவை 

உண்பதற்கு இடையில் உப்பையும், நெய்யையும் படைத்தல். 
போசனத்துக்கு உபயோகமாகாத வார்த்தைகளைப் பேசுதல்.
நாய், பன்றி, கோழி, காகம், பருந்து, கழுகு என்பவைகளையும், 
தாழ்ந்தவர்கள், விரதபங்கம் உடையவர், (விரதத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள்) 
மங்கைப் பருவப் பெண்கள் என்பவர்களையும் பார்த்தல் கூடாதாம்.
பிதிர் சிரார்த்த காலங்களிலே,
தபோதனருக்கு (முனிவருக்கு) அமுது செய்வித்தோர்,
தம்முடைய இருபத்தொரு தலைமுறைச் சுற்றத்தாரையும்,
நரகத்தில் கிடந்து வருந்தாமல் மீட்டு,
தாமும் சிவ சமீபத்திலே இருப்பர் என்று சிவதருமொத்தர ஆகமம் கூறுகிறதாம்.

💎  💎  💎

சிவயோகிக்குச் செய்யும் பூசையை சிவனும், பிரமாவும், விட்டுணுவும்,
மற்றும் உள்ள தேவர்களும், பிதிர்களும் தமக்கெனக் கொள்வராம்.
சிரார்த்த காலங்களிலே அதிதிகளுக்கு அன்னம் கொடுத்தல் பெரும் புண்ணியமாகும். 
பரமசிவனும், பார்வதி அம்மையும், முருகக்கடவுளும், 
திருமாலும், பிரமாவும், தரும தேவதையுமாகிய சகலரும் கூடி,
அதிதி வடிவமாய் வருவர் என்று அகோர சிவாசார்ய பத்ததியில் கூறுகிறது.
'சிரார்த்தத்திலே பிதிரரால் உண்ணப்பட்ட மிகுதி  அன்னத்தை,
சுற்றத்தாரோடு உண்க'
என்று காமிக ஆகமமும் சொல்கிறதாம்.
(தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்