'ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை': பகுதி 5 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

(சென்றவாரம்)
கண்ணீர்விட்டுக் கதறும் அவர்களிடம் வார்த்தையேதும் பேசாது கலங்கிய கண்களோடு, தீடீரெனக் கப்பல்
ஏறிவிடுகிறார் குருநாதர். திரும்பும்போது எந்நேரமும் இன்பத்துறையில் எளியவனான, கிரி என்னும் அவன் நண்பன்
சொன்னது, இப்போதும் அவனுக்கு ஞாபகத்தில் இருக்கிறது. “மச்சான் இந்த அஞ்சாறு நாளா காமங்கூட
வரேலடாப்பா”, இளையோரையும் ஈர்த்த ஏந்தல் அவர்.


ள்ளம் கவர்ந்த அவர் மூன்றாம்முறை வந்தபோது,
அவனும், அவன் நண்பர்களும்,
கொழும்பிலும் ஒருவிழா ஒழுங்கு செய்திருந்தார்கள்.
சிந்தாமணிப் பத்திரிகை ஆசிரியர் எஸ்.ரி.சிவநாயகம்,
அவ்விழாவிற்கு ஆதரவு செய்தார்.
கம்பன்கழகம் முழுவதும் ஒரு குழுவாக,
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குப் பயணித்தது.
குருநாதருக்கு இராமகிருஷ்ணமிஷனில் தங்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மற்றவர்களுக்கு வேறொரு வசதிகுறைந்த இடத்தில் இருப்பிடம் தந்திருந்தார்கள்.
கொழும்பில் இறங்கியதும் குருநாதருக்கு இந்த இடவேற்றுமை சொல்லப்பட்டது.
அன்றுதான் அவரின் கோபத்தை அவன் முதன்முதலில் பார்த்தான்.
“டேய் கம்பன்கழகம் ஒரு குடும்பம்,
அதில ஒருத்தருக்கு ஒருத்தர் வேற்றுமை இருக்கக்கூடாது தெரிஞ்சுக்கோ,
நானும் ஒங்ககூடவே தங்கிறேன்.” என்று சொல்லி,
கொசுக்கடிபட்டு அவர்களோடு தங்கிய,
அம் மாமனிதனின் பெருமையை என்னவென்பது?

🌺 🌺 🌺 🌺

கொழும்பிலிருந்தபோது கடையில்தான் சாப்பாடு.
வெங்காயம், பூடு உண்ணாதவர் அவர்.
வந்த பார்சல் சாப்பாட்டிலோ,
பூடும், வெங்காயமும் நிச்சயம் கலந்திருக்கும்.
மற்றவரை நோகச்செய்யக் கூடாது என்பதற்காக,
எல்லோருக்குமான அந்தப் பார்சலை தானும் எடுத்து,
கறிகள் படாத தனிச்சோற்றை அள்ளி வெறும்பால்விட்டு,
நான்குநாள் சோறுண்ட குருநாதரின் அந்தப் பெருந்தன்மையை என்னவென்பது?

🌺 🌺 🌺 🌺

அப்போது அமைச்சராகவிருந்த இராஜதுரை,
கொழும்பு விழாவில் குருநாதரின் பேச்சைக் கேட்டு மயங்கி,
நிறைவுநாளில் குருநாதருக்கு விருந்தளிக்கிறார்.
அவ்விருந்தில் அடுத்தடுத்த மாதத்தில் தான் நடாத்தவிருந்த,
இந்துமகாநாட்டுக்குக் குருநாதரையும் அழைக்கிறார்.
பணம், விமானடிக்கட் இன்னும் என்னென்னவோ சலுகைகள்,
அவரால் அறிவிக்கப்படுகின்றன.
சிறிது மௌனம் காத்த குருநாதர், 
“வேணாங்க,
இன்னொருமுறைக்கு இந்தப்பசங்ககிட்ட வர்றபோது பாக்கலாம்,”
ஒரே வசனத்தில் அமைச்சரின் கோரிக்கை நிராகரிக்கிறார்.
அமைச்சர் பரிசாகக்கொடுத்த வெள்ளித்தட்டத்தையும்,
விருந்துமுடிந்ததும்,
„டேய் இது ஒனக்கு‟, என்று,
அவன் கையில் திணித்து நடைபோடும்,
குருவின் திமிர் அவனுக்கு நிரம்பப் பிடித்தது.

🌺 🌺 🌺 🌺

அவன் குரு, தன்குரு பற்றி எப்போதும்,
மேடையில் பெருமையாய்ச் சொல்லுவார்.
அவரும் ஒரு சிறந்த பேச்சாளர்.
தமிழுலகில் மிகப்புகழ் பெற்ற ஒருவர்.
யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி வந்துபோகிறவர்.
முதல்தரமாய் இவன் குரு யாழ்ப்பாணம் வந்து சென்ற பின்பு,
வேறொரு பேச்சுக்காக அவரின் குரு யாழ். வந்திருந்தார்.
அவர் வந்தால் ஒரு பிராமணர் வீட்டில் தான் தங்குவார்.
தனது குருவின் குரு என்ற காரணத்தால்,
ஒரு பெரியவரோடு இவன் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தான்.
அந்த வீட்டின் கூடம்.
பலரும் அவ்வறிஞரைச் சூழ்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
இவனை அழைத்துச்சென்ற பெரியவர்,
“உங்கள் மாணவரின் மாணவன்” என்று அறிமுகப்படுத்தியதோடு நில்லாமல்,
“உங்க மாணவர் ரொம்ப அற்புதமாய்ப்பேசினார்” என்று,
இவன் குருவைப் புகழ,
இவன் குருவின் குருவிற்கு அது அவ்வளவாய்ப் பிடிக்கவில்லை.
அழைத்துச்சென்றவர் மீண்டும் அதே செய்தியைச்சொல்ல,
அவர் “ஆமா ஆமா இராதாகிருஷ்ணனா?,
அவன் நல்லா கத்துவான்.
அவனுக்கு ஒரு மாணவன் இருக்கான்,
சத்தியசீலன்னு பேரு, அவன நான் கத்தியசீலன்னுதான் கூப்பிடுவேன்.”
சிலேடையில் பெயர்பெற்ற அவர் சொல்ல,
கூடியிருந்த கூட்டம் சிரித்தது.
தன்குருவை நிந்தித்த அவனால் மதிக்கப்பட்ட அப்பெரியவர்,
அன்று அவன் மனதிலிருந்து வீழ்ந்து போனார்.

🌺 🌺 🌺 🌺

சிலகாலம் சென்று அவனின் குரு மீண்டும் யாழ் வந்தார்.
அவனுக்கோ எப்படியும் அவரின் குரு சொன்னதை,
அவரிடம் சொல்லிவிட வேண்டும் என்னும் உந்துதல்.
ஆனால் அதை அவர் எப்படி எடுப்பாரோ? என்ற பயம் அவனுக்கு.
குருவைக் குறைசொல்வது அவருக்குப் பிடிக்குமா?
தயங்கித் தயங்கி „உங்களின் குரு வந்தார்...‟ என்று தொடங்குவான்.
ஆனால் விடயத்தைச் சொல்லமுடியாது தயங்கி விட்டுவிடுவான்.
இப்படியே இரண்டு, மூன்று முயற்சிகள்.
நாலாந்தரம் இவன் இழுத்தபடி தொடங்க,
“டேய் அவர் என்னைப்பத்தி குறைவா சொன்னாராடா?
அதுக்கேன் நீ கவலைப்படுற?
பெரியவங்க என்ன சொன்னாலும் அதை ஏத்துக்கவேண்டியதுதான்,
போ போ உன் வேலையைப் பாரு” என்று,
பெருந்தன்மையாய் அவ்விடயத்தைத் தாண்டினார் குரு.
அவனுக்கு மகிழ்ச்சியும், ஆச்சரியமும்.
தன் மனதை குரு படித்துவிட்டதில் மகிழ்ச்சி.
அவர் பெருந்தன்மை கண்டு ஆச்சரியம்.
நெகிழ்ந்தான்.

🌺 🌺 🌺 🌺

கம்பன்கழக ஆசிரியர்களுள் ஒருவர்,
அன்புள்ளம் கொண்டவர். ஆனால் ரோஷக்காரர்.
அவரும் அவனைப் பிள்ளையாய் நேசிப்பவர்.
ஒருமுறை நிகழ்ச்சி நிரலில் தன்னைத் தக்கபடி போடவில்லை என்று,
அந்த ஆசிரியருக்குக் கோபம்.
அதனால் அம்முறை விழாவிற்கு வராமல் விட்டார்.
முதல்நாள் அவன் குருநாதர் பேசிமுடிந்து வந்ததும்,
“எங்கடா அவரைக் காணல” என்று,
ஓர் குடும்பத்தலைவனாய் அக்கறையாய்க் கேட்கிறார்.
அவன் விடயத்தைச் சொன்னதும்,
“ஓகோ அப்படியா? காலையில காருக்குச் சொல்லு,
நாங்க அவரைப் பாத்திட்டு வந்திடலாம்” குருவிடமிருந்து உத்தரவு பிறக்கிறது.

🌺 🌺 🌺 🌺

அடுத்த நாள் எல்லோருமாக அவ் ஆசிரியர் வீடு செல்கிறார்கள்.
குருநாதர் வீடு தேடிச் சென்றதும் அவ் ஆசிரியர் பதறிப்போய் விடுகிறார்.
“நேத்து உங்களக் காணல, அதான் பாக்க வந்தேன்”
குருநாதர் அன்பாய்ச் சொல்ல அதனால் நெகிழ்ந்து,
ஆசிரியர் தனக்கு நெஞ்சுவலி என்று பொய்யுரைத்துச் சமாளிக்கிறார்.
அவர் துணைவியாரும் அவரோடு சேர்ந்து கொள்கிறார்.
விசாரணை எல்லாம் முடிந்ததும் அனைவரும் புறப்படுகிறார்கள்.
காருக்குள் குருநாதர் அவனைப் பார்த்து,
'இப்ப எல்லாம் சரியாயிடுச்சு சாயந்தரம் வந்திடுவார்.
பெரியவங்க பிடிவாதம் பிடிச்சா நீ விட்டுக்குடுத்துடு,
அவங்க அன்பு முக்கியமில்ல?" என்று கூற,
அவன் தன் குருவிடம்,
அறிவுலக வாழ்க்கையைப் படித்துக்கொள்கிறான்.

🌺 🌺 🌺 🌺

வேறொரு சம்பவம்.
இது அவனது குருவின் நண்பரொருவர் தமிழகத்தில் சொன்னது.
மனைவிக்கும், தாய்க்கும் நடந்த சண்டையில் மனம்நொந்து,
யாருக்கும் சொல்லாமல் அவர் வீட்டை விட்டுப் போய்விட்டாராம்.
பதறிப்போன தாயும், மனைவியும்,
இவனது குருவுக்குத் தொலைபேசியில் சொல்ல,
“நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க,
நான் அவனோட வந்திடுறேன்” என்று போனை வைத்தவர்,
எங்கெல்லாமோ தொலைபேசியில் தொடர்புகொண்டு,
அவர் இருப்பிடத்தைக் கண்டு பிடித்தாராம்.
பின் தானே சென்று எதுவும் பேசாமல் அவரை அழைத்துக்கொண்டு,
அவரின் வீடு சென்றாராம்.
முதிர்ந்த தாயாரின் முன் அவரைவிட்டு,
தான் தோளில் இருந்த துண்டை இடுப்பில்கட்டி,
சாஸ்டாங்கமாக அத்தாயின் காலில் விழுந்து எழும்பி,
கண்ணீர் மல்க, “ஒங்கள இந்த வயசில வருத்திப்புட்டான்,
அவன் சிநேகிதனா நா உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்” என்று,
தன்னிடம் பேசாமல் திரும்பிப்போன அவரது நட்பை,
அந்தப் பெரியவர் கண்ணீரோடு சொல்ல,
தன்குருவின் பெருமையை இவனும் கண்ணீரோடு கேட்டான்.

🌺 🌺 🌺 🌺

                                                         (அடுத்த வாரமும் குருநாதர் வருவார்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்