'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 27 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

பாண்டிச்சேரி விழாவில் முதற் பங்கேற்பு - 1988

கம்பன் அடிப்பொடியின் நண்பரான, 
புதுவையைச் சேர்ந்த கம்பவாணர் என்கின்ற புலவர் அருணகிரி அவர்கள்,
கம்பன் அடிப்பொடியின் திருவடிகளை நாங்கள் வாங்கி வந்ததால்,
எங்கள்மேல் பெரிய அன்பு பூண்டிருந்தார்.
இடைக்காலத்தில் நாம் தமிழகம் செல்லாமல் விட்டதும்,
போரில் எங்களுக்கு என்ன ஆயிற்றோ என அவர் பெரிதும் கவலைப்பட்டாராம்.
மேடைகளில் பேசும்போது,
'அந்தப் பையன்கள் உயிரோடு இருக்கிறாங்களோ?இல்லையோ'
எனச் சொல்லிக் கண்ணீர்விட்டு அழுவாராம்.
புதுவை சென்றிருந்த யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர் 
சண்முகலிங்கன் அவர்களிடம், 
எங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்ட அவர்,
நீண்ட நாட்களின் பின் கடிதம்மூலம் எங்களுடன் தொடர்புகொண்டு,
புதுவை விழாவிற் பங்கேற்க எமக்கு அழைப்பு விடுத்தார்.
1988 மே மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெற்ற அக்கம்பன் விழாவில்,
நானும், குமாரதாசனும், இரத்தினகுமாரும், ரகுபரனும்,
பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர்,
இ. பாலசுந்தரமும் கலந்துகொண்டோம்.
புதுவை எங்கள்மேல் பேரன்பு காட்டியது.
கம்பவாணரும் அப்போதைய புதுவைக் கம்பன்கழகச் செயலாளரான,
வக்கீல் முருகேசனும் எமக்கு நெருங்கிய உறவானார்கள்.
அன்றுதொட்டு இன்று வரை ஒருசில ஆண்டுகள் தவிர்த்து,
இக்கழகத்தின் விழாக்களில் ஆண்டுதோறும் நாம் பங்குபற்றி வருகிறோம்.
இவ்விழாவில் நம் நாட்டைச் சேர்ந்த பல அறிஞர்களையும் 
பங்கேற்க வைத்தோம்.
சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, பேராசிரியர் சண்முகதாஸ்,
பேராசிரியர் சிவலிங்கராஜா, தமிழருவி சிவகுமார்,
ஏ.ரி. பொன்னுத்துரை, ஜெ.கி. ஜெயசீலன்,
சட்டத்தரணி ஏகநாதன், எங்கள் நண்பன் மகாராஜா,
சிவராமலிங்கம் மாஸ்டர், முரசொலி சிவராசா, ஆறு. திருமுருகன் என 
நூற்றுக்கும் மேலானோர் எம்மோடு பிற்காலத்தில் புதுவை வந்தனர்.
கம்பவாணரின் மறைவின் பின்பு,
அக்கழகத்தின் செயலாளரான வக்கீல் முருகேசன்,
எங்களைத் தன்னுறவாய், உயிராய்ப் பேணிவந்தார்.
சென்ற ஆண்டு (2015) காலம் அவரையும் எங்களைவிட்டுப் பிரித்தது.
அக்கழகத்தின் தலைவரான கோவிந்தசாமி முதலியார், 
பொருளாளர் வேல் சொக்கநாதன், துணைச்செயலர் கல்யாணசுந்தரம், 
தற்போதைய துணைத்தலைவர் சிவக்கொழுந்து என,
அங்கிருந்து எம்மேல் அன்பு காட்டுவோர் வரிசை மிக நீண்டு வருகிறது.
அக்கழகத்திற்தான் 
பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனின் தொடர்பு கிடைத்தது.
குன்றக்குடி அடிகளார், புலவர் கீரன், வ. சுபமாணிக்கம் போன்ற,
பேரறிஞர்களின் தொடர்பை இங்குதான் நான் பெற்றுக்கொண்டேன்.
🐦 🐦 🐦

மீண்டும்  கம்பன்  விழாக்கள் நின்றுபோயின

புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும்
இடையிலான சண்டையில்,
புலிகள் தலைமறைவு வாழ்க்கை தொடங்கியதும்,
மீண்டும் கம்பன்விழாக்கள் யாழில் தடைப்பட்டுப் போயின. 
ஆனாலும் அந்த இடைக்காலத்தில் வேறு ஊர்களில் 
சில விழாக்களை நடாத்தினோம்.
🐦 🐦 🐦

கடன்பட்டார் நெஞ்சம் - மா. தவயோகராஜா

யாழ். கம்பன்கோட்டம் கட்டப்பட்டுக்கொண்டிருந்த வேளை அது.
மனவூக்கத்தால் மட்டும் வேலைகளைத் தொடங்கியதால்,
கையில் பணமில்லாமல் இடையில் இடர்ப்பட்டோம்.
தொடர்ந்தும் கட்டிட வேலையை முன்னெடுக்க முயன்றோம்.
அக்காலகட்டத்தில் கவிஞர் சோ.ப. எங்களோடு மிக நெருங்கியிருந்தார்.
அதுபற்றி முன் சொல்லியிருக்கிறேன்.
லண்டனிலிருந்து உழைத்து மிச்சப்படுத்திய பணத்தை,
சோ.ப. வட்டிக்குக் கொடுக்கும்படி எம்மிடம் அனுப்பிவைத்தார்.
அக்காலத்தில் சி.வி.கே. சிவஞானம் அவர்கள்,
எங்கள் கட்டிட நிதிக்காக,
மாநகரசபை ஊழியர்களிடம் பணம் சேர்த்திருந்தார்.
அப்பணம் வந்ததும் கடனைக் கொடுக்கலாம் என நினைத்து,
சோ.ப.வின் பணத்தை (கிட்டத்தட்ட முப்பத்தையாயிரம்),
வட்டிக்குப் பெற்று கம்பன்கோட்ட வேலைகளைச் செய்தேன்.
சி.வி.கே. அவர்கள் சேர்த்த பணம் எங்கள் கைக்கு வராமற்போயிற்று.
அந்த விபரத்தை முன்னரே சொல்லியிருக்கிறேன்.
வருமென்று நினைத்த அந்தப் பணம் 
கைக்கு வராததால் கடனாளிகளானோம்.
சோ.ப.வின் கடன் ஏறிக்கொண்டே போயிற்று.
நாளடைவில் வட்டிக்கும் வட்டிபோட்டு சோ.ப. கணக்கிட,
கடன்தொகை பெரிதாயிற்று.
ஒருநாள் மகனை வெளிநாடு அனுப்பவென,
சோ.ப. தனது முழுத்தொகையையும் உடன் தரும்படி கேட்க,
(கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம்)
செய்வதறியாது நான் திகைத்தேன். 
அவரைச் சமாளிக்கவென,
கொழும்பு சென்று தெரிந்த ஒருவரிடம் பணம் பெற்றுவருவதாய்க் கூறி,
நானும் இரத்தினகுமாரும் திருநந்தகுமாரும் புறப்பட்டோம்.
கொழும்பில் எங்களுக்கு அப்போது யாரையும் தெரியாது. 
மாணிக்கத்துடன் தொடர்புகொண்டு அவர்களின் உறவினரான,
'வி. மாணிக்கம் பிரதர்ஸ்' உரிமையாளர்,
திரு. தவயோகராஜா அவர்களைச் சந்திக்க,
நானும் திருநந்தகுமாருமாகச் சென்றோம்.
எனக்கு நேரடியாக அப்போது அவரைத் தெரியாது.
மாணிக்கமும் கந்தசாமியும் எங்களை அவரிடம் அழைத்துச் சென்றபோதும்,
அவர்மேல் இருந்த பயபக்தியால்,
அவர்கள் பேசத் தயங்கி, மௌனித்து நின்றனர்.
அறிமுகமில்லாத அவரிடம்,
நான் கடன்பட்ட கதையைச் சொல்லி,
அதை யாரேனும் தீர்த்து வைத்தால்,
வருங்கால இளைஞர்களை வன்முறையிலிருந்து விடுவித்து,
நல்வழிப்படுத்த என்னால் வழிகாட்ட முடியும் எனக் கூறி,
தயங்கித் தயங்கி உதவி கோரினேன்.
மௌனமாக என் கதையைக் கேட்ட அவர்,
வேறு யாரெல்லாம் உங்களுக்கு உதவ இருக்கிறார்கள் என வினவினார்.
ஒரு சில பெரிய மனிதர்களின் பெயரைச் சொல்லி,
அவர்களிடமும் செல்ல இருப்பதாய்ப் பொய்யாய்ச் சொன்னேன்.
பத்தாயிரம் ரூபாயாவது தருவார் என்று நம்பிக்கை இருந்தது.
அவர் எதுவும் பேசாமல் நான் சொன்னதைக் கேட்டார்.
'ஒருவரிடமும் கைநீட்டப் போக வேண்டாம்.
இரண்டுநாள் கழித்து என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்'
என்று சொல்லி,
எங்களை வழியனுப்பி வைத்தார்.
அடுத்த நாள்வரை அவரிடமிருந்து பதிலேதும் இல்லை.
என்ன செய்வதென்று தெரியாத நிலை.
ஜே.வி.பி. இயக்கம் கொழும்பில் அட்டூழியம் செய்து கொண்டிருந்த நேரமது.
அவர்கள்  மறுநாள் திடீரெனக் கடைகளை மூட உத்தரவிட்டனர் 
அச்சூழ்நிலையால் பயந்து, நாம் மீண்டும் யாழ் செல்ல முடிவு செய்தோம்.
போகுமுன் தவயோகராஜா அவர்களிடம்,
அவர் கடையிலிருந்தே தொலைபேசியால் தொடர்புகொண்டேன்.
என்னிடம் பேசிவிட்டு,
கடை மனேஜரிடம் தொலைபேசியைக் கொடுக்கச் சொன்னார். 
மனேஜர் பேசியபின் தொலைபேசி மீண்டும் என் கைக்கு வந்தது.
தவயோகராஜா பேசினார்.
'இரண்டு இலட்சம் ரூபா தரச்சொல்லியிருக்கிறேன்.
உங்கள் முழுக்கடனையும் கொடுங்கள்.
உங்களால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது'
என்று சொல்லி,
போனை வைத்தார்.
உடன் என்கையில் ஒன்றரை இலட்சம் ரூபா பணம் தரப்பட,
நான் திகைத்த திகைப்புக்கு ஓரளவில்லை.
அன்று இரவு பூராகவும் அழுதேன்.
அன்று அந்தப் பணம் கிடைத்திருக்காவிட்டால்,
தற்கொலை செய்யலாமோ என்று கூட நினைத்திருக்கிறேன்.
தவயோகராஜா என்னையும், கழகத்தையும் அன்று உயிர்ப்பித்தார்.
பின் சோ.ப. வின் கடனைத் தீர்த்தேன்.
வட்டியைச் (குட்டி) சிறிது குறைத்ததற்கு,
'தன்னிடம் வாங்கிய பணம் 
கழகத்திற்குத்தான் செலவழிக்கப்பட்டது என்பதற்கு,
என்ன சாட்சி?'
என்று கேட்டுச் சோ.ப. எனக்குக் கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தைப் படித்துக் கோபத்தில் ரகுபரன் அழுதது,
இன்றும் எனது மனதில் நிற்கிறது.
பிற்காலத்தில் சோ.ப. எங்களோடு பகைத்து,
பொன். சுந்தரலிங்கத்தோடு இணைந்து,
எங்கள் விழா முயற்சிகளைப் புறக்கணித்தார். 
ஆனாலும், முற்றாய்ப் பகைக்காமல் இன்றும் அவர் தொடர்பை நாம் பேணுகிறோம்.
🐦 🐦 🐦

டொமினிக் ஜீவா

முற்போக்கு அணியைச் சேர்ந்தவரான இவர்,
மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியராவார்.
தான் செய்த சவரத் தொழிலை விட்டுவிட்டு,
ஆண்மையோடு இலக்கியப் பணியாற்ற வந்த பெருமனிதர் இவர்.
மதுரைத் தமிழாராய்ச்சி மாநாட்டில் என் உரையைக்கேட்டு,
என்னில் அன்பு பூண்டவர்.
1985 இல் எங்களோடு தொடர்புகொண்டார்.
எங்களுடனான இவரது நட்பு மெல்ல மெல்ல வளர்ந்தது. 
கருத்தியலில் வேறுபாடு கொண்டிருந்தபொழுதும்,
இலக்கிய ஈடுபாடு, சமூகஅக்கறை என்பவற்றால்,
எம்மோடு மிக நெருங்கியிருந்தார் அவர்.
எம்மேல் அவர்கொண்ட அன்பு பின் உறவாய் நெருங்கிற்று.
யாழ். கோட்டை தாக்கப்பட்டபோது,
யாழ்ப்பாணம் இராணுவ விமானத்தாக்குதலால் அதிர்ந்தது. 
அப்போது இவர் எங்கள் கழகத்திலேயே சிலகாலம் எம்மோடு தங்கினார்.
இவரது ஒரே மகனான திலீபனின் திருமணப்பதிவு,
எங்கள் யாழ். கம்பன்கோட்டத்திற்தான் நடைபெற்றது.
இன்று திலீபன் கொழும்பில் நல்ல நிலையில் இருக்கிறான்.
அவனது மகளுக்கும் திருமணமாகி விட்டது.
வியாபாரத் தொடக்கம், வீடுகுடி புகுதல், மகளின் திருமணம் என,
தன் வீட்டு எல்லா நன்முயற்சிகளுக்கும்,
என்னை அழைப்பதை அவன் வழக்கமாய்க் கொண்டிருக்கிறான்.
குமாரதாசனுக்கும் எனது தங்கைக்கும் நடைபெற்ற திருமணப்பதிவில்,
ஜீவாதான் முதலில் சாட்சிக் கையெழுத்திட்டார்.
யாழ். கம்பன்கோட்டத்திற்கு 
அடிக்கல் நட்டவர்களில் இவரும் ஒருவர்.
கழக வளர்ச்சியைக் கண்டு உள்மகிழும் மனிதர்.
கழக இளைஞர்களை உலகத்திற்கு இனங்காட்டி
எப்போதும் ஊக்குவிப்பவர்.
1995இன் பின் இவரும் எம்மோடு கொழும்புக்கு இடம்பெயர்ந்தார்.
எங்களைப்போலவே,
சோர்வுராமல் தன் இலக்கியப் பணியைக் 
கொழும்பிலும் பலகாலம் ஆற்றினார்.
எங்கள் கம்பன் விழாக்கள் ஒன்றினையும் தவறவிடமாட்டார்.
எங்களோடு வந்து பாண்டிச்சேரி கம்பன் விழாவிலும் 
ஒருமுறை கலந்து கொண்டார்.
இவரது கொள்கை அணி சார்ந்தோர்,
கம்பன் கழகத்துடனான இவரது தொடர்பை 
அதிகம் விரும்பாதபோதும்,
அதுபற்றி எதுவித கவலையும் இல்லாமல் 
எம்மைத் தொடர்ந்து நேசித்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்திலேயே,
எனது படத்தைத் தனது மல்லிகை அட்டையில் போட்டு,
மரியாதை செய்தார்.
பலதரம் இவரும் நானும் கருத்தளவில் முரண்பட்டிருக்கிறோம்.
ஆனாலும், எங்களின் அன்பு குறைந்ததில்லை.
இன்று தனது இலக்கியப் பணியை நிறுத்தி,
பற்றற்று வாழ்ந்து வருகிறார்.
ஆனாலும், எங்கள்மேல் அவர் வைத்த பற்றுத் தொடர்கிறது.
🐦 🐦 🐦

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்