'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 28 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

🚩 🚩 🚩

எழுத்தாளர்  பிரேம்ஜி

ஜீவாவைப் போலவே முற்போக்கணியைச் சேர்ந்த வேறுசிலரும்,
எங்களை உண்மையாய் நேசித்தனர்.
அவர்களுள் பிரேம்ஜி முக்கியமானவர்.
இவரும் ஒரு முற்போக்கு எழுத்தாளர்.
முற்போக்கு அணியின் தலைவராய் இருந்தவர்.
கொமியூனிஸ் கட்சிகளுடன் 
நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
தேசம் பற்றியும், தமிழ்ச்சமூகம் பற்றியும் 
அதிக அக்கறை கொண்டவர்.
எளிமையானவர்.
எதையும் நிதானித்துச் செய்பவர்.
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட ஒரு சந்திப்பை வைத்து,
எங்களின் உறவைத் தீர்மானித்தவர்.
எங்கள் மேல் பாரிய நம்பிக்கை வைத்திருந்தார்.
பின்னாளில் கனடா சென்று தங்கினார்.
அங்கிருந்து அவர் எமக்கு எழுதிய ஒரு கடிதத்தை,
எங்கள் கோப்புக்களில் பொக்கிஷமாய்ப் 
பாதுகாத்து வருகிறோம்.
பின்னாளில் கொழும்பில் நடந்த எங்கள் கம்பன்விழாவில்,
இவரை கௌரவித்தோம்.
 
🚩 🚩 🚩

எழுத்தாளர்  தெணியான்

எம்மேல் அன்பு செய்த மற்றொரு முற்போக்கு எழுத்தாளராக,
தெணியான் விளங்கினார்.
அவரும் முற்போக்கு அணி சார்ந்தோரின்,
எம்மைப் பற்றிய கருத்துக்களை நிராகரித்து,
எம்மை அங்கீகரித்த ஒருவராவார்.
எமது கழகம் பிரிவுகளை விலக்கி 
அனைவருடனும் ஒன்றிணைந்து நின்றது,
என்பதற்கு மேற்பெரியோர்களுடனான எமது உறவு ஒரு சான்று.
 
🚩 🚩 🚩

குமாரதாசனின் திருமணம்

1989 ஜனவரியில் குமாரதாசனுடைய திருமணம் நடந்தது.
இடைக்காலத்தில் குமாரதாசனுக்கும், என்தங்கைக்கும் இடையில்,
காதல் பிறந்திருந்தது.
ஆரம்பத்தில் எனக்கு அது தெரிந்திருக்கவில்லை.
பின்னர் நண்பர்கள் மூலம் அச்செய்தி எனக்கு வந்தது.
முதலில் கடுமையாய்க் கோபித்தேன்.
குமாரதாசனின் தாய், தந்தையர் ஏற்கனவே என்மேல் கோபமாய் இருந்தனர்.
இச்செய்தி தெரிந்தால்,
ஏதோ திட்டமிட்டு நான் மாப்பிள்ளை பிடித்துவிட்டதாய்,
சொல்வார்களே எனப் பயந்தேன்.
கழகத்தை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும் என்பதற்காகத்தான்,
இந்தக் காதலை விரும்பினேன் என்று குமாரதாசன் சொல்ல,
என்மனம் இளகிற்று.
ஒருநாள் நேராக குமாரதாசன் பெற்றோரிடம் சென்று பேசினேன்.
நான் எதிர்பார்த்தது போலவே குமாரதாசனின் தந்தை பேசத் தொடங்கினார்.
அவரை இடைமறித்து 
'உங்களை மீறி இந்தக் கல்யாணம் ஒருநாளும் நடக்காது,
நீங்கள் பார்க்கும் பெண்ணுக்கு நானே முன்னின்று குமாரதாசனுக்குக் கல்யாணம் செய்து வைப்பேன்' என்று கூறிவிட்டுப் புறப்பட்டேன்.
குமாரதாசனின் தாயார் உடனே குறுக்கிட்டு,
தந்தையை நிறுத்தி விட்டு 'எங்களுக்கு நல்ல விருப்பம்,
கல்யாணத்தை வடிவாய்ச் செய்வோம்' என்றார்.
உண்மையிலேயே எங்கள் வீட்டில் பெண் எடுக்க 
அவர் மனம் விரும்பி இருந்தார்.
குமாரதாசனது கல்யாணம் நல்லூர்ச் சிவன் கோயிலில் நடந்தது.
கழகச் செல்வாக்கால் அத்தனை நாதஸ்வர தவில் வித்வான்களும் 
அங்கு வந்திருந்தனர்.
கவிஞன் முருகையனின் தலைமையில் கவியரங்கம்.
புலவர் ஈழத்துச் சிவானந்தன் தலைமையில் வாழ்த்தரங்கம் என,
அக்கல்யாணவீடு சிறு இலக்கியவிழாவாகவே நடந்தது.
அதன் பிறகு நடந்த எங்கள் கழகக் கல்யாணவீடுகள் அத்தனையிலும்,
இவ் வாழ்த்தரங்க முறை கடைப்பிடிக்கப்பட்டது.
எங்களது மூன்றாவது அலுவலகமான 
வைமன் றோட்டில் அமைந்திருந்த,
எங்கள் சங்கீத ஆசிரியை சத்தியபாமா இராஜலிங்கம் அவர்கள் 
வீட்டிலேயே பந்தலிட்டு விருந்தினர்களுக்கு விருந்திட்டு மகிழ்ந்தோம்.
 
🚩 🚩 🚩

வைமன் வீதியிலிருந்து புறப்பட்டோம்

வைமன் வீதி அலுவலகத்தில் குமாரதாசனது திருமணம் நடந்த பின்பு,
உதயன் சரவணபவன் வேண்டிக்கொள்ள,
அவரது மூத்த மைத்துனரது திருமணத்தில் மாப்பிள்ளைவீடாய்,
எங்களது அலுவலகத்தைப் பாவிக்க அனுமதித்தோம்.
இவ்விடத்தில் நாங்கள் ஒரு தவறு செய்தோம்.
இவ்விரண்டு விடயத்திற்கும் வீட்டுக்காரரான இராஜலிங்கத்திடம்
நாம் அனுமதி பெறவில்லை.
அது, அவர்கள் மனதில் சற்று சங்கடத்தை ஏற்படுத்த,
அதனால் சில முரண்பாடுகளோடு,
50, வைமன் றோட் அலுவலகத்திலிருந்து நாம் புறப்படவேண்டி வந்தது.
எங்களது உதவியை வேண்டிப் பெற்ற
எமது சங்கீத ஆசிரியை எம்மைச் சற்று நோகடித்தார்.
ஆனால், அவரது கணவரான இராஜலிங்கம்
மிகப்பெருந்தன்மையாக அப்பிரச்சினையை தீர்த்து வைக்க,
கழகம் தனது சொந்தக் கட்டிடத்திற்கு குடிபெயர்ந்தது.
 
🚩 🚩 🚩

கம்பன்  கோட்டம்  மீளப் புதுப்பித்தலும்

கழகம்  குடிபுகலும் 
கழகத்தின் நான்காவது அலுவலகம் (1989) 
இந்திய இராணுவ வருகையோடு,
கொழும்பு சென்ற இராஜலிங்கம் குடும்பத்தினர் திரும்பிவர,
அவர்கள் வீட்டில் அவர்களோடு சில காலம் நாம் ஒன்றாயிருந்தோம். 
புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்குமிடையிலான சண்டையின் பின்,
அவர்கள் வயதான தமது தந்தையாரை அழைத்துக் கொண்டு,
மீண்டும் கொழும்பு சென்றனர்.
நாங்கள் திரும்பவும் அவர்கள் இல்லத்திலேயே தங்கியிருந்தோம்.
பின்னர், சில கசப்புகள் உருவாக,
கம்பன் கோட்டத்திற்கே நாம் செல்வதென முடிவு செய்தோம்.
இடைக்காலத்தில் கம்பன்கோட்டம் பாழாகியிருந்தது. 
பழையபடி அதற்குப் புத்துயிர்ப்புக் கொடுப்பதென முடிவு செய்து,
அப்போது எம் கழகத்தோடு நெருங்கியிருந்த கட்டிட அமைப்பாளர்,
மனோகரபூபனின் துணையை நாடினோம்.
அவர் பெருமனத்தோடு 
கோட்டத்தின் கீழ்ப்பகுதியைச் சில திருத்தங்களோடு,
முழுமையாய்ப் புதுப்பித்துத் தந்தார்.
கிட்டத்தட்ட ஒன்றேகால் இலட்சம் செலவாயிற்று.
அவரே முதலிட்டுத் திருத்தினார்.
பின்னர் பகுதி பகுதியாய் அக்கடனைக் கொடுத்து முடித்தோம்.
1989இல் இரண்டாந்தரமாய்ப் பால் காய்ச்சிக் குடிபுகுந்தோம். 
அந்நிகழ்வில் புலவர் ஈழத்துச் சிவானந்தனின் மனைவி 
பால் காய்ச்சினார்.
சுன்னாகம் சர்வேஸ்வரக் குருக்கள் கிரியைகள் செய்தார்.
கழக அறிஞர்களும், அயலவர்களும் கலந்துகொண்டனர்.
 
🚩 🚩 🚩

ஆஞ்சநேயர் படத்திறப்பு  (1989)

ஓவியர்கள் மணியம் - ஞானகுரு

1989இல் கழகக் கட்டிடத்தில் 
ஆஞ்சநேயர் ஓவியமொன்றினை ஸ்தாபித்தோம்.
ஒரு கார்த்திகை விளக்கீட்டன்று அப்படத்தைத் திறந்து வைத்தோம். 
நண்பன் வசந்தனது குடும்பத்தாரும், 
என் குடும்பத்தாரும் இந்நிகழ்விற் கலந்துகொண்டனர்.
அவ் ஓவியத்தை நல்லூரில் வசித்த 
ஓவியர் மணியம் அவர்கள் ஆக்கித்தந்தார்.
பின்னாளில் எங்கள் கோட்டத்தை 
அவரது பல ஓவியங்கள் அழகு செய்தன.
அவரது மாணாக்கரான ஞானகுரு,
அவ் ஓவியத் தொடர்பை எம்முடன் இன்றுவரை பேணுகிறார். 
அவரது ஓவியங்கள் பலவும்கூட,
யாழ். கம்பன் கோட்டத்தினையும், 
கொழும்புக் கம்பன் கோட்டத்தினையும்,
இன்று வரை அழகு செய்து வருகின்றன.
அண்மையில்  நாம் புதிதாய் அமைத்த 
ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி திருக்கோயிலையும்,
ஞானகுருவின் ஓவியங்கள் அலங்கரித்து நிற்கின்றன.
குருவின் உறவு மாணவரால் தொடர்கிறது.
 
🚩 🚩 🚩

புலவர் ஈழத்துச் சிவானந்தன்

கழகத்தோடு இவர் தொடர்பு கொண்டது 1987 ஆம் ஆண்டுதான்.
எங்கள் ஆசிரியர் சிவராமலிங்கத்தின் தம்பி இவர்.
கடும் சைவப்போர்வை போர்த்தி,
ஆரம்பத்தில் கழகத்தைப் பகையாய்க் கருதித் திரிந்தவர்.
பின் மெல்ல மெல்ல எம்மோடு இணைந்தார்.
எங்கள் கழகக் குடும்பத்தில் ஒருவரானார்.
ஊர்தோறும் நாம் நடாத்திய எங்கள் பட்டிமண்டபங்கள் இவரால் சிறந்தன.
இவர் துணைவியாரைச் சித்தி என்றுதான் நாம் அழைப்போம்.
தாய்போல் எங்களை நேசித்தவர் அவர்.
கழகத்தோடு இணைந்த பின்பு,
நன்மை, தீமை அனைத்திலும் எம்மோடு இவர்கள் இணைந்திருந்தனர்.
அவர்கள் வீட்டில் என்ன நல்ல உணவு செய்தாலும்,
சித்தி எங்களுக்கென ஒரு பகுதியைக் கொடுத்துவிட,
கொட்டும் மழையிலும் புலவர் அதனைக் கொண்டுவந்து தருவார்.
புலவரது மனது குழந்தைத்தனமானது.
தன்னை யாரும் தாழ்த்தி விடுவார்களோ எனும் எதிர்ப்புணர்ச்சி,
எப்போதும் அவர் மனதில் இருக்கும். 
சித்தியையும் அவரது சின்ன மகளையும் தவிர,
என் ஒருவனால் மட்டுமே அவரைச் சமாளிக்க முடிந்தது.
பின்னாளில் குடும்பம் கொழும்பு செல்ல,
கழகத்திலேயே அவர் எம்மோடு சிலகாலம் தங்கியிருந்தார்.
நாம் நிறையச் சண்டை பிடிப்போம்.
இவரும் ஊர்விட்டுப் போய்விடப் போகிறாரே எனும் நினைப்பில்,
அன்பினால் அவரோடு வேண்டுமென்றே மோதுவேன்.சகித்துக்கொள்வார்.
இப்போது அதை நினைக்க மனம் சங்கடப்படுகிறது.
பின்னர், கொழும்புக்குச் சென்று அங்கிருந்து அவர் கனடா சென்றார்.
அப்போது ஒருவர் கொழும்பு செல்வதானால்,
அவருக்குப் பொறுப்பு நின்று,
இயக்கத்திற்கு யாராவது ஒருவர் கையெழுத்திட வேண்டும்.
இவர் கொழும்பு செல்ல,
இயக்கத்திடம் என் நண்பனைக் கொண்டு கையெழுத்திட்டேன்.
திரும்பி வருவதாய்ச் சொல்லிச் சென்று ஏமாற்றினார்.
இவரது இரண்டு பிள்ளைகளும் என்னை அண்ணனாகவே கருதினார்கள்.
இளையவள் பூப்படைந்த விழாவிற்கு,
அண்ணனாய் இருந்து சேலை வாங்கிக் கொடுத்தேன்.
பின்னாளில் நானும், பிரசாந்தனும் கனடா சென்றபோது,
அவர்கள் வீட்டில்தான் தங்கினோம்.
சொந்தமாய்க் கருதி அனைவரும் எம்மேல் அன்பு செய்தனர். 
சித்தி தாயாய் அன்பைப் பொழிந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சித்தி திடீரென இறந்துபோனது,
எங்கள் கழகத்திற்கு பெரிய இழப்பு. அண்மையில் புலவரும் அமரரானார்.
 
🚩 🚩 🚩

கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை

1987 ஆம் ஆண்டுதான் இவரும் கழகத்தோடு தொடர்பு கொண்டார்.
குரும்பசிட்டியைச் சேர்ந்தவர் இவர்.
நாடகத்துறை அறிஞர்.
கலைப் பேரரசர் எனப் பட்டம் பெற்றிருந்தார்.
தொடக்க காலத்தில், மரபு நாடகங்களில் ஈடுபட்ட இவர்,
பிற்காலத்தில் பல்கலைக்கழகத்தில்,
நவீன நாடக முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது,
தானும் ஒரு மாணவன்போல் இளைஞர்களோடு சேர்ந்து,
நாடகப் பட்டறைகளில் பயிற்சி பெற்றார்.
ஆரம்ப காலத்தில் பல்கலைக்கழகத்தாரின் சார்புபட்டு,
ஓரளவு எங்களை வெறுத்து நின்றவர் இவர்.
பின்னாளில் எங்களது அன்பினைப் புரிந்துகொண்டு,
எம்மோடு இரண்டறக் கலந்தார்.
நாங்கள் அக்காலத்தில் பிரபலமாய் நடத்திக்கொண்டிருந்த பட்டிமண்டபங்களில்,
இவரையும் ஒரு பேச்சாளராய் அறிமுகப்படுத்தினோம்.
நாடகத் தன்மையோடு இவர் பேசிய பேச்சுக்கள்,
இவரை பட்டிமண்டப மேடைகளில் பிரபலப்படுத்தின.
எங்களோடு சேர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட பட்டிமண்டபங்கள் பேசினார்.
மக்களைச் சந்திப்பதில் அவருக்கு அளவற்ற மகிழ்ச்சி.
புகழில் தன்னை மறந்து போவார்.
பட்டிமண்டபங்களில் எங்கள் புலவருக்கும் அவருக்கும் ஏற்படும் மோதல்களை,
சபை நன்கு இரசிக்கும்.
இலக்கியத்தில் பெரிய அளவு ஆழங்கால் படாவிடினும்,
தனக்குத் தெரிந்த அடிப்படை இலக்கியச் செய்திகளை,
நாடகத் தன்மையோடு சுவைபடப் பேசி,
சபையைக் கவர்வதில் வல்லவர்.
பட்டிமண்டபங்களால் எங்களோடு மிக நெருங்கி,
பிற்காலத்தில்,
சிலகாலம் கம்பன் கோட்டத்திலேயே எங்களோடு வந்து தங்கியிருந்தார். 
தான் கலந்து கொண்ட பட்டிமண்டபங்களைக் கணக்கில் வைத்து,
இருபத்தைந்து, ஐம்பது, நூறு பட்டிமண்டபங்களைத் தாண்டும் போதெல்லாம், 
எமக்கு விருந்தளித்து மகிழ்வார். 
அவரது இரண்டு பிள்ளைகளும் நல்ல பதவியில் இருந்தனர்.
எங்கள் கம்பன் மேடையில் நாடக நிகழ்ச்சிகளை நாம் நடாத்தியபோது,
பெரிதும் துணை செய்தார்.
இராமாயணப் பாத்திரங்களாய் வேடமிட்டு,
பலதரம் எம் மேடையில் நடித்தும் உள்ளார்.
எங்களுடன் கொழும்பு, இந்தியா எனப் பல இடங்களுக்கும் வந்தார்.
பாண்டிச்சேரி விழாவிலும் கலந்து கொண்டார்.
என்னை, தன் பிள்ளைபோல் நேசித்தார்.
1995 இடப்பெயர்வோடு நாம் கொழும்பு வந்ததும்,
சிலகாலம் இவரது தொடர்பு தடைப்பட்டுப் போனது.
நீண்ட நாட்களின் பின்,
நான் யாழ் சென்றபோது நோய்வாய்ப்பட்டிருந்தார்.
கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும்,
என்னைக் கண்டதும் மனம் மலர்ந்து மகிழ்ந்தார்.
'விரைவில் நாம் இணைந்து இயங்குவோம்' எனக் கூறி,
அவரை வார்த்தைகளால் ஊக்கப்படுத்தினேன்.
அதை முழுமையாய் நம்பி ஊக்கப்பட்டார்.
ஆனால், நோயிலிருந்து அவர் முழுமையாய் மீளவேயில்லை.
கழகத்தை, தம் வீடாய் நினைந்து,
உறவாய் வாழ்ந்த அறிஞர்களுள் 
புலவருக்கு அடுத்த இடம் இவருக்கே உரியது.
நாட்டுச் சூழலால், அவரது மரண வீட்டில் கூட 
என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.
கழகத்தாரால் மறக்க முடியாத மனிதர் இவர்.
 
🚩 🚩 🚩

பட்டிமண்டப எழுச்சி

இக்காலகட்டத்தில் ஊரூராக நாங்கள் நடாத்தி வந்த பட்டிமண்டபங்கள்,
மிகப்பெரிய எழுச்சி கொள்ளத் தொடங்கின.
எனது தலைமையில்,
புலவர் ஈழத்துச் சிவானந்தன், கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை,
திருநந்தகுமார், குமாரதாசன், சிவகுமார், திருமுருகன், 
நாகேஸ்வரன், செல்வவடிவேல் ஆகியோர்,
இப்பட்டிமண்டப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
இடையிடையே பிரசாந்தன், மணிமாறன், ஜெயநிதி ஆகியோரும் இணைந்தனர்.
பேச்சாளர்கள் கிடைக்காத இக்கட்டான வேளைகளில்,
சோதி அண்ணன் போன்றோரும் பேச்சாளராய் மேடையேறினர்.
பொதுமக்கள் எமது பட்டிமண்டப நிகழ்ச்சிகளை,
பெரிதும் வரவேற்கத் தொடங்கினார்கள்.
1990களில் இந்நிகழ்ச்சி 
ஆலயங்களில் பெரிதும் புகழ்பெற்ற நிகழ்ச்சியாயிற்று.
அக்காலத்தில் சில இடங்களில்,
பத்தாயிரம் பேர் வரை இப்பட்டிமண்டபங்களைக் காணக் குவிந்தனர்.
ஆலயத்திருவிழாக்களில் இது முக்கிய நிகழ்ச்சியாயிற்று.
ஓர் இரவில்  மூன்று பட்டிமண்டபங்கள் கூட நடாத்தியிருக்கிறோம்.
அக்காலத்திலேயே ஒரு பட்டிமண்டபத்திற்கு 
பத்தாயிரம் ரூபா வரை வாங்கினேன்.
பேச்சாளருக்கு அதில் மூன்றில் ஒரு பங்கை மாத்திரம் 
பகிர்ந்து கொடுப்பேன்.
மிகுதியைக் கழக முயற்சிகளுக்குப் பயன்படுத்துவேன்.
அதிலும் பேச்சாளர் சிலருக்கு கசப்புக்கள் வந்ததுண்டு.
அக் காலத்தில் திருவிழா நிகழ்ச்சிகளில்,
எங்கள் நிகழ்ச்சியே தலைமை நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது.
கயிறு கட்டி சனம் விலத்தி எங்களை மேடைக்கு அழைத்துச் செல்வார்கள்.
நிகழ்ச்சி முடிந்ததும் உபயகாரர்கள்,
வாழைக்குலை, வெங்காய முடிச்சு போன்றவற்றை,
எங்களின் கார் நிரம்ப ஏற்றிவிடுவார்கள்.
இன்றைய இந்தியப் பட்டிமண்டபங்களின் எழுச்சிக்கு முன்னரான 
எழுச்சி அது.

🚩 🚩 🚩
தொடரும்...

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்