'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 30 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦


உல்லியன் நொல்லை அம்மன் கோயில்

எங்களது வடமராட்சிக் கம்பன் கழக அமைப்பாளரான தயாபரன்தான்,
இவ்வாலயச் சொற்பொழிவை ஒழுங்கு செய்தான்.
எனது பேச்சுக்குக் கிடைக்கும் வெற்றியைப் பார்த்து,
என்னைவிட மகிழ்பவர்களில் அவனும் ஒருவன்.
வடமராட்சிப் பக்கம் பேச்சென்றால்,
தயாபரன் வீட்டில் எனக்காக,
விதம்விதமாய் உணவு வகைகள் செய்து வைத்திருப்பார்கள்.
நானும் உடன் வருபவர்களும்,
அங்கு சென்று பசியாறியபின்தான் நிகழ்ச்சிக்குச் செல்வோம்.
அக்கழகத்தின் தலைவர், ஆசிரியர் மன்னவனும் தயாபரனும்,
எமது உரிமைக்காரர்களாய்த் தம்மை இனங்காட்டி,
என்னை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வர்.
நிகழ்ச்சிகளின் முடிவில் மன்னவனின்,
வெளிப்படையான விமர்சனம் எப்போதும் காத்திருக்கும்.
எங்களைக் காரில் அனுப்பிவிட்டு,
இளையவனான தயாபரனை 'பாரில்' இருத்தி,
மூத்தவரான மன்னவன் 
பின்னால் சைக்கிளில் வரும் காட்சி 
மறக்க முடியாதது.
இவ்வாலயத்தில்தான் வடமராட்சியில் பேச்சைக் கேட்கவென,
முதன்முதலாகப் பெரும் மக்கள் கூட்டம் கூடிற்று.
மேடையில் இருந்து நான் பார்த்தால்,
என் கண்ணுக்குத் தெரியும் தூரம் வரை,
மக்களின் தலைகளே கம்பளமாய் விரிந்திருக்கும்.
🚩 🚩 🚩

நெல்லியடித் தடங்கன்  புளியடி  முருகன் கோயில்

இது எங்கள் தயாபரனுடைய ஆலயம்.
இவ்வாலய நிர்வாகத்தில் இவன் முக்கிய பங்கு வகித்தான்.
இங்கு நிகழ்ச்சிகளை நடத்தும் பொறுப்பு 
இவனுடையதாய்த்தான் இருந்தது.

இவனுக்குப் பிடித்த இரண்டு நிகழ்ச்சிகளில்,
தவில் மேதை தட்சணாமூர்த்தியின் மைந்தனான,
உதய சங்கரது மேளக் கச்சேரி ஒன்று.
தயாபரன் தனது மகனுக்கும் 
சங்கர் என்றே பெயர் வைத்தான்.
அடுத்து அவனுக்குப் பிடித்தது என்னுடைய பேச்சு நிகழ்ச்சி.
இவ்வாலயச் சூழலில் சில கம்பன் விழாக்களையும்,
தயாபரன் மிக வெற்றிகரமாக நடாத்தினான்.
அதைவிட இந்த ஆலய முன்றலில்,
எங்களின் கம்பன் கழகத்தாரால் நடத்தப்பட்ட,
பட்டிமண்டபம் ஒன்றும் குறிப்பிடத்தக்கது.
ஆலயத்தின் வீதி முழுவதிலுமாக,
கூட்டம் நிரம்பியிருந்து 
கேட்ட பட்டிமண்டபம் அது.
இவ்வாலயத்தில் ஒரு கந்தசஷ்டி நிகழ்ச்சியின்போது,
நான் நிகழ்த்திய கந்தரநுபூதித் தொடர் விரிவுரை,
பலரதும் பாராட்டைப் பெற்றது.
அந்நிகழ்வின் இறுதி நாளில் 
யாழ். பல்கலைக்கழகத்தின்,
அப்போதைய 
துணைவேந்தரான துரைராஜா கலந்துகொண்டு,
என்னைப் பாராட்டினார்.
எனக்குத் தலைப்பாகை எல்லாம் வைத்து 
தயாபரன் பெரிய மரியாதை செய்தான்.
முறைப்படி தத்துவம் படிக்காத அந்த நாளில்,
எனக்குத் தெரிந்த தத்துவங்களை 
வைத்துக்கொண்டு,
பெரிய தத்துவ உரை நிகழ்த்துவதாய் நினைந்து,
அப்பேச்சினை நிகழ்த்தினேன்.
பின்னாளில் எனக்குத் தமிழையும் 
தத்துவத்தையும் முறைப்படி கற்பித்த,
பேராசான் இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகர்,
அந்த ஆறு நாட்களும் சபையில் வந்திருந்து,
உரைகளைக் கேட்டதோடல்லாமல்,
நிறைவு நாளில் என்னைப் பாராட்டவும் செய்தார்.
அப்போது, நான் தத்துவமாய் நினைந்து பேசியவற்றைக் கேட்டு,
அவர் என்ன நினைந்தாரோ! என எண்ணி இப்போதும் நாணுவேன்.
🚩 🚩 🚩

உடுப்பிட்டி பிள்ளையார் கோயில் - தங்கராசா ஆசாரியார்

இவ்வாலயத்திலும் எனது இராமாயணத் தொடர் விரிவுரை,
இரண்டு மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது.
தங்கராசா பத்தர் எனும் நகை செய்யும் பெரியவர்தான்,
அவ்வாலயத்தை அக்காலத்தில் நிர்வகித்து வந்தார்.
பக்தியும் அடக்கமும் ஆளுமையும் செல்வமும் மிக்கவர் அவர்.
எனது பேச்சை மிகவும் விரும்பி,
தொடர்ந்து தனது ஆலயத்தில் பலதரம் என்னைப் பேச வைத்தார்.
அங்கும் பெருந்தொகையான மக்கள் கூடி, 
சொற்பொழிவுகளைக் கேட்டனர்.
அக்காலத்தில், புலிகள் இயக்கத்திற்கும் எமக்கும் இடையில்,
சிறிய இடைவெளி ஏற்பட்டிருந்தது.
இவ்வாலய வீதிக்கு அப்பால்,
புலிகளது பெரிய முகாம் அமைந்திருந்தது.
நான் இராமாயணம் பேசும்போது பெருந்தொகையான மக்கள்,
அவர்களது முகாம் எல்லைவரை கூடியிருந்து கேட்பார்கள்.
அப்போது, முகாமிற்குள் இருக்கும் புலிகள் இயக்க உறுப்பினர்களும்,
மதிலால் எட்டிப் பார்த்து பெருங்கூட்டமாய் நின்றபடி,
என் பேச்சை விரும்பிக் கேட்பதை,
பார்த்து மனதிற்குள் இரசிப்பேன்.
🚩 🚩 🚩

கலட்டி அம்மன் கோயில்

இவ்வாலயத்தில் நடந்த
எனது இராமாயணத் தொடர் விரிவுரையை,
நான் மட்டுமல்ல, 
யாழ்ப்பாணமே மறக்க முடியாது என நினைக்கிறேன்.
அந்த அளவுக்கு வெற்றிகரமாய் நடந்த நிகழ்ச்சி இது.
எங்கள் கழகத்தோடு தொடர்புபட்டிருந்த,
கலட்டி அம்மன் கோயிலடியைச் சேர்ந்த,
தர்மராஜா(அப்பர் அண்ணை) எனும் நண்பரே,
இந்நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தார்.
திருவிழாவை ஒட்டி 
அவர் என்னைப் பேச அழைத்திருந்தார்.
முதல் நாள் நான் பேசியபோது,
கோயில் மண்டபத்திற்குள்
ஐம்பது பேரளவிலேயே இருந்து பேச்சைக் கேட்டனர்.
அடுத்தடுத்த நாட்களில், மண்டபம் நிரம்பி,
பிறகு கோயில் வீதி நிரம்பி,
பின்னர், அந்த வட்டாரத்து 
வீதிகளெல்லாம் நிரம்பும் அளவுக்கு,
கூட்டம் வரத் தொடங்கியது.
தர்மராஜாவுக்கு உற்சாகம் பிடிபடவில்லை.
சனம் திரண்டதைக் கண்ட அவர்,
திருவிழா முடிந்த பிறகும் 
சொற்பொழிவை நீட்டித்தார்.
கிட்டத்தட்ட முப்பது நாட்களுக்கு 
மேலாக அங்கு பேசியதாய் ஞாபகம்.
மிகத் தூர இடங்களிலிருந்தும்,
மக்கள் சைக்கிளிலும், 
ஓட்டோக்களிலும் வந்து குவிந்தனர்.
வாழ்க்கைச் சம்பவங்களையும் தொகுத்து 
இராமகாதையைச் சொல்வேன்.
அடுத்த நாள் 
சந்தை, தேநீர்க் கடை, சைக்கிள் கடை என,
எல்லா இடங்களிலும் 
நான் சொன்ன கதைகள் மக்களால் பேசப்படும்.
பேச்சுத் தொடங்குகிற நேரத்தில் 
நாலா திசைகளிலும் இருந்து,
வீதிகள் நிரம்ப மக்கள் வருவார்கள்.
நானே ஆச்சரியப்பட்டுப்போன நிகழ்ச்சி அது.
உரைகளைக் கேட்ட மக்கள், 
தங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவிக்கவென,
நிறைவு நாளில் தர்மராஜா ஒரு பெரிய பெட்டியை 
மேடைக்குமுன் வைத்தார்.
அதற்குள் ஆயிரக்கணக்கான கடிதங்கள் விழுந்தன.
இன்றும் எங்கள் கம்பன் கோட்டத்தில
 அக்கடிதங்கள் இருக்கின்றன.
நிகழ்ச்சி முடியுமன்று,
எங்கள் கழகத்தாரை இணைத்து 
ஒரு பட்டிமண்டபத்தினை நடாத்தினேன்.
பட்டிமண்டபத்தில் கலந்துகொண்ட அத்தனைபேருக்கும்,
தர்மராஜா தங்கப் பதக்கங்கள் சூட்டிக் கௌரவித்தார்.
இப்போதும் நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம்,
இந்நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிட்டுப் 
பலர் என்னோடு பேசுவார்கள்.
அந்நிகழ்ச்சி முடிந்த பின்பு,
தர்மராஜா எனக்குத் தந்த சன்மானம் போதாது 
என நினைந்த நான்,
அவர் என்மேல் வைத்திருந்த அன்பையும் 
மதிப்பையும் நினையாது,
சற்றும் பெருந்தன்மையில்லாது,
என் குறையை அவருக்கு 
மற்றொருவர் மூலம் தெரியப்படுத்த,
அதைப் பெரிதுபடுத்தாத அவர்,
பெருந்தன்மையோடு 
அப்பிரச்சினையைப் பண்பாய்க் கையாண்டு,
என்னில் சிறிதும் பகை காட்டாமல் என்னை நாண வைத்தார்.
🚩 🚩 🚩

புலிகளை முரண்படவைத்த நிகழ்ச்சி

இந்நிகழ்ச்சி எனக்கும், 
எங்கள் கழகத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஒரு தனி மனிதனுக்கென இத்தனை ஆயிரம்பேர் கூடியது,
புலிகள் இயக்கத்தைப் பாதித்தது.
மக்களை நாம் போராட்டத்திலிருந்து 
திசைதிருப்பிவிடுவோமோ என்று,
அவர்கள் இந்நிகழ்ச்சியைப் பார்த்து அஞ்சத் தொடங்கினர்.
புலிகளுக்கும் எங்களுக்குமான முரண்பாடுகள் 
இங்குதான் தொடங்கின.
🚩 🚩 🚩

யாழ். பேச்சுலகை மாற்றிக்காட்டினேன்

எனது ஆரம்பகாலப் பேச்சனுபவங்கள் கசப்பானவை.
அவை பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன்.
அக்காலத்தில் பேச்சாளர்களை 
யாரும் ஒரு பொருட்டாய் மதிப்பதில்லை.
ஆலய நிகழ்ச்சிகளில் 
மற்ற நிகழ்ச்சிக்காரர்களுக்குக் கொடுக்கும் மதிப்பில்,
ஆயிரத்தில் ஒரு பங்கைத்தானும் 
பேச்சாளர்களுக்குக் கொடுக்க மாட்டார்கள்.
மற்ற நிகழ்ச்சிக்காரர்கள் 
வர வாகன ஒழுங்கு செய்து கொடுப்பார்கள்.
பேச்சாளர்கள் சைக்கிளில்தான் சென்று பேச வேண்டும்.
மற்றைய நிகழ்ச்சிக்காரர்களின் வசதிக்கேற்ப,
பேச்சாளர்களின் நிகழ்ச்சி இஷ்டத்திற்கு உபயகாரர்களால் மாற்றப்படும்.
முக்கிய நிகழ்ச்சிக்காரர்கள் வந்துவிட்டால்,
பேச்சாளர்களின் பேச்சு உபயகாரர்களால் இடைநிறுத்தப்படும்.
பேச்சாளர்களுக்கு என்றுமே சன்மானம் வழங்கப்படுவதில்லை.
பேச்சின் முடிவில் கொடுக்கப்படும் காளாஞ்சிதான் சன்மானம்.
பேச்சாளர்களும் தாம் சமயத் தொண்டு செய்வதாய்ச் சொல்லி,
அதற்கு நாங்கள் பணம் வாங்குவதில்லை எனப் பொய்மை செய்வார்கள்.
பணம் கொடுத்து அழைக்கும் நிகழ்ச்சிக்காரர்களை,
நிகழ்ச்சியின் பின்னரும் உபயகாரரும் பேணிக்கொள்வார்கள்.
பணம் வாங்காத பேச்சாளன் ஒரு நூல் வெளியிட்டால்கூட 
யாரும் வரமாட்டார்கள்.
எங்கள் காலத்தில், மதிக்கப்பட்ட பேச்சாளர்கள் என்று,
இருவரைத்தான் சொல்ல முடியும்.
ஒருவர் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி.
மற்றவர், நல்லை ஆதீன முதல்வர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.
மற்றப் பேச்சாளர்கள் எல்லாம் பெரும்பாலும் எவராலும் போற்றப்படவில்லை.
பேச்சாளர்களுக்கு மதிப்பில்லை எனும் உணர்ச்சி,
என் மனதைத் தாக்கிக்கொண்டேயிருந்தது.
என் பேச்சுக்குச் சற்று மதிப்புண்டாகத் தொடங்கியதும்,
அந்தக் குறையை நீக்கும் வகையில் 
மிகக் கெடுபிடியாக நடந்துகொண்டேன்.
வேண்டுமென்றே என் பேச்சுக்கான சன்மானத்தை மிக அதிகரித்தேன்.
அந்தக் காலத்தில் ஒரு பேச்சுக்கு ஆயிரம் ரூபாய் வாங்கினேன்.
அது அப்போது பெரிய தொகை.
அதைவிட, என்னை அழைத்துச் செல்ல,
கார் அனுப்ப வேண்டும் என நிபந்தனை விதித்தேன்.
பணம் வாங்காமல் பணிந்து நான் பேசிய காலங்களில்,
என் பேச்சை யாரும் அக்கறையோடு கேட்கவில்லை.
பணம் வாங்கி நான் கெடுபிடி செய்து பேசத் தொடங்கியதும்,
எல்லோரும் என் பேச்சை அக்கறையோடு கேட்கத் தொடங்கினார்கள்.
'டிமான்ட்' கூடக் கூட நான் சன்மானத்தை அதிகரித்தேன்.
நான் சன்மானத்தை அதிகரிக்க அதிகரிக்க  'டிமான்ட்' மேலும் கூடியது.
அதுவரை பணம் வாங்காமல் பேசி வந்த பேச்சாளர்கள் பலரும்,
'ஜெயராஜ் சமயத்தை விற்கத் தொடங்கி விட்டார்' என்று,
தங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்கத் தொடங்கினர்.
பின்னாளில், அவர்களில் சிலரை என்னோடு 
நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று,
நான் சன்மானம் வாங்கிக்கொடுக்க, 
அதை மகிழ்ச்சியோடு அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
இப்படியாய், பேச்சு மேடைகளில் நான் செய்த கெடுபிடிகள் பற்பல.
அவற்றுள் சுவாரஸ்சியமான ஒருசிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.

🚩 🚩 🚩
தொடரும்...

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்