'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 31 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

🚩  🚩  🚩
பேச்சு மேடையில் எனது கெடுபிடிகள்

ஆலயங்களில் எனது பேச்சுக்கு முக்கியத்துவம் வரத்தொடங்கியதும்,
பல விசயங்களில் நான் இறுக்கமாக 
இருக்கத் தொடங்கினேன்.
அந்த நாட்களில், பெற்றோல் இல்லாததால் கார்கள் அதிகம் ஓடுவதில்லை.
ஒரு சில கார்கள் பெற்றோலையும் மண்ணெண்ணையையும் கலந்து ஓடின.
அதனால், வாடகைக் கார்ச்செலவு,
மிக அதிகமாக இருந்தது.
அப்போதும் பேச்சு நிகழ்ச்சியானால்,
நான் காரில்தான் செல்வேன்.
என்  பேச்சு சன்மானத்தைவிட, கார் வாடகை அதிகமாக இருக்கும்.
அதுபற்றி நான் கவலைப்பட மாட்டேன்.
எனக்கு, ஒரு நல்ல கார்க்காரர் அகப்பட்டார்.
மகான் என்று அவருக்குப் பெயர்.
அவரைப் பற்றிப் பின்னே சொல்லியிருக்கிறேன்.
பேச்சிற்கு, குறித்த நேரத்தில் சரியாகச் செல்வேன்.
அவர்கள் தாமதப்படுத்தினால்,
நிகழ்ச்சியை இரத்துச் செய்துவிட்டுத் 
திரும்பி வந்துவிடுவேன்.
பேச்சுக்காரர்களுக்கு ஒலிபெருக்கி நுட்பம் தெரியாதிருந்தது.
கோயிலுக்குள் 'மைக்கை' வைத்துவிட்டு,
'ஸ்பீக்கர்களை' எல்லாம்,
வெளியில் நிற்கும் பனைமரங்களில் கட்டி விடுவார்கள்.
மைக் காரர் வந்து 'நீங்கள் யோசிக்காமல் பேசுங்கோ!
உங்கட பேச்சு ஊரெல்லாம் கேட்கும்'
என்பார்.
உண்மையில் எங்கள் பேச்சு ஊரெல்லாம் கேட்கும்தான்.
ஆனால், பேசும் எங்களுக்குத்தான் கேட்காது.
பேசத் தொடங்கி பத்து நிமிடங்களில் 
தொண்டைத் தண்ணீர் வற்றிவிடும்.
இசையாளர்கள் கச்சேரி தொடங்கிய பின்பும்,
ஒலிபெருக்கியை சரிசெய்து கொண்டிருப்பார்கள்.
பேச்சை ஒரு கலையாகச் செய்யத் தொடங்கிய காரணத்தால்,
சரியான முறையில் ஒலிபெருக்கியை அமைக்காது விட்டாலும்,
பேச்சினை இரத்துச் செய்துவிட்டு வந்துவிடுவேன்.
பேச்சாளர்களுள் 'பீ(f)ட்பாக் சவுண்ட்' வேண்டும் எனக் கேட்ட,
முதற்பேச்சாளன் நானாகத்தான் இருப்பேன்.
ஒலிபெருக்கி சரியாக அமையாது விட்டால்,
மைக்கிற்கூடாகவே சவுண்ட் சரியில்லை என்று
 சொல்லிவிட்டு,
பேச்சை அப்படியே இடையில் நிறுத்தி விட்டுப் பேசாமல் இருப்பேன்.
கூடியிருக்கும் ஆயிரக்கணக்கானோரின் பார்வையைத் தாங்க முடியாமல்,
உபயகாரர்களும் ஒலிபெருக்கிக்காரர்களும்,
ஓடித்திரிந்து ஒலிபெருக்கியைச் சரிசெய்வார்கள்.
அதனால், நான் பேச வருவதென்றாலே,
ஒலிபெருக்கிக்காரர்கள் பயப்படுவார்கள்.
🚩  🚩  🚩

சித்தங்கேணிப் பிள்ளையார் கோயில் பிரச்சினை

ஒரு முறை சித்தங்கேணிப் பிள்ளையார் கோயிலில்,
சொற்பொழிவுக்கு அழைத்திருந்தார்கள்.
பேச்சுத் தொடங்கிச் சில நிமிடம் பேசியிருப்பேன்.
கோயிலின் சுற்றுமதிலின் மேலாக ஓர் இளைஞன் எட்டிப்பார்த்து,
வேண்டுமென்றே கூ... எனச் சத்தம் போட்டுவிட்டு
 இறங்கிவிட்டான்.
ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தி, அண்ணாந்து பார்த்தேன்.
கூட்டமும் அந்த இடத்தை அண்ணாந்து பார்த்தது.
இரண்டு நிமிடம் பேசாதிருந்தேன்.
பிறகு, நிசப்தம் நிலவியது.
திரும்பப் பேசத் தொடங்கினேன்.
பத்து நிமிடம் ஆவதற்குள்,
மீண்டும் அதே இளைஞன் முதற்செய்ததுபோலவே செய்தான்.
இப்போதும் பேச்சினை நிறுத்தித் திரும்பிப் பார்த்தேன்.
மீண்டும் மௌனம்.
மீண்டும் நான் பேச்சைத் தொடங்க,
துணிவு பெற்ற அந்த இளைஞன் அதே செயலைத் திரும்பச் செய்தான்.
உடனே, இந்தச் சபையில் இனிப் பேச முடியாது என்று சொல்லிவிட்டு,
மேடையால் இறங்கி விட்டேன்.
காரை நோக்கி நான் நடக்க,
உபயகாரர்களும், ஊர் மக்களும் மன்னிப்புக் கேட்டபடி,
என் பின்னால் ஓடி வந்தார்கள்.
என்னை மீண்டும் பேசும்படி கேட்டார்கள்.
'இத்தனை பேரும் இருக்கத்தக்கதாக,
ஒரே பிழையை அவன் இரண்டு தரம் செய்தான்.
அவனைக் கண்டிக்கும் துணிவு உங்களில் யாருக்கும் இல்லை.
எனவே, இப்போது நீங்கள் கேட்கும் மன்னிப்புக்கு அர்த்தமில்லை.
இனி இந்தச் சபையில் பேசினால்,
என் தமிழுக்கு மரியாதை போய்விடும்'
என்று சொல்லிவிட்டு,
காரில் ஏறிவிட்டேன்.
பின்னர், அந்த இளைஞனுக்கு அடி விழுந்ததாக அறிந்தேன்.
🚩  🚩  🚩

கொக்குவில் மஞ்சவனப்பதி கோயில் பிரச்சினை

ஒருமுறை கொக்குவில் மஞ்சவனப்பதி ஆலயத்தில்,
சொற்பொழிவுக்குக் கேட்டார்கள்.
பல ஆலயங்களில் நிகழ்ச்சிகளை ஒத்துக்கொண்டிருந்தபடியால்,
அவர்களின் நிகழ்வுக்கு வரமுடியாதென மறுத்தேன்.
அவர்கள் விடுவதாக இல்லை.
'நீங்கள், எந்நேரத்தில் வந்தாலும் 
உடனே உங்களைப் பேச விடுகிறோம்'
என,
வாக்குத்தந்து, என்னைச் சம்மதிக்க வைத்தார்கள்.
ஒன்பது மணியளவில் நிகழ்ச்சிக்கு வந்துவிடலாம் என நினைத்த நான்,
முதல் நிகழ்ச்சிக்காரர்கள் தாமதம் செய்ததால்,
அரை மணி நேரம் தாமதமாய் வந்து சேர்ந்தேன்.
எனக்காகக் காத்திருந்த உபயகாரர்கள்,
எனது வருகை தாமதமானதால்,
மங்கள இசைக்காரர்களை மேடையேற்றி விட்டனர்.
எனது கார் வந்ததும் எனக்குத் தந்த வாக்கை நினைத்து,
மேடைக்கு ஓடிய உபயகாரர்,
தவில்க்காரர்கள், தொப்பிதட்டி கச்சேரியை ஆரம்பித்துவிட்ட நிலையில்,
'ஜெயராஜ் வந்துவிட்டார், 
மேடையை அவருக்குக் கொடுக்க வேண்டும்'
என்று கேட்க,
அதனால் அவர்கள் கடுங்கோபம் கொண்டதாய் அறிந்தேன்.
அதனைக் கேள்விப்பட்டு, 
அக்கலைஞர்களின் கோபத்தின் நியாயம் அறிந்து,
உபயகாரர்களிடம், 
நான் பிறகு வந்து பேசுவதாய்ச் சொல்லிச் சென்றேன்.
🚩  🚩  🚩

இசை வேளாளர்களின் கோபம்

இதேபோல், ஒருமுறை உடுப்பிட்டியிலும்,
நான் மங்கள இசைக் கலைஞர்களின் வெறுப்புக்கு
ஆளாக வேண்டி வந்தது.
முதன்முறை 
இராமாயணத் தொடர் சொற்பொழிவு நடைபெற்றபோது,
அங்கு பெருங்கூட்டம் கூடியதைப்பற்றி 
முன்னரே சொல்லியிருக்கிறேன்.
ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து 
சொற்பொழிவைக் கேட்டனர்.
அயல் ஊர்களிலிருந்தெல்லாம் அவர்கள் வந்திருந்தனர்.
ஒரு உபயகாரர், 
எனது சொற்பொழிவின்பின்,
நாதஸ்வரக் கச்சேரிக்கு ஒழுங்கு செய்திருந்தார்.
அன்றைய பிரபல நாதஸ்வரத் தவில் வித்துவான்கள் அனைவரும்,
கச்சேரிக்காக வந்திருந்தனர்.
சொற்பொழிவு முடிந்தால், 
கூட்டம் கலைந்துவிடும் என்பதால்,
சொற்பொழிவு முடியும் தருவாயில்,
அத்தனை தவில் நாதஸ்வர வித்துவான்களையும்,
வாத்தியங்களோடு கூட்டத்தினிடையே 
மேடைநோக்கி அழைத்து வந்தார்.
அத்தனை பெரிய வித்துவான்களும்;,
எங்கள் கழகத்தின்மேல் அன்பு பாராட்டுபவர்கள்.
அவர்களைக் கண்டதும், 
அவர்களின் நிகழ்ச்சிக்கு இடங்கொடுக்க வேண்டும் என்னும் நினைப்பில்,
நான் எனது சொற்பொழிவினை நிறைவு செய்தேன்.
நான் சொற்பொழிவினை நிறைவு செய்தவுடனே,
ஊர்க்காரர்கள் ஐம்பது அறுபது பேரைத் தவிர,
சபையில் இருந்த அத்தனைபேரும் எழும்பிச் சென்று விட்டனர்.
உடனேயே சபை வெறுமையானது.
இந்நிகழ்வாலும் ஒருசில வித்துவான்கள்,
என்மேல் கோபங்கொண்டதாய்ப் பின் அறிந்தேன்.
🚩  🚩  🚩

பத்து நிமிடமே பேசினேன்

இதே உடுப்பிட்டித் திருவிழாச் சபையில்,
மற்றொரு சம்பவமும் நடந்தது.
சரியாக ஏழு மணிக்கு மேடையேறி,
எட்டு மணிக்கு என் உரையை முடித்து இறங்குவதாய் ஒப்பந்தம்.
எனக்காகப் பெருங்கூட்டம் வந்ததால்,
ஆலய நிர்வாகத்தினரும் விழா உபயகாரர்களும்,
மேற்சொன்ன எனது நிபந்தனைக்கு உடன்பட்டிருந்தனர்.
மிகச்சரியாக மேடையேறி,
மிகச்சரியாகப் பேச்சை முடித்து இறங்குவேன்.
வசதி மிகுந்த ஓர் உபயகாரருக்கு,
எனது நிபந்தனையில் உடன்பாடில்லை.
அவர் தனது திருவிழாவன்று,
நிறைய நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்ததோடு,
மின்சார அலங்காரம் முதலியவையும் செய்து,
தனது திருவிழாவைப் பிரமாதப்படுத்தினார்.
அன்று அவர்களால் குறித்த நேரத்திற்கு,
எனது உரையை ஆரம்பிக்க முடியவில்லை.
குறித்த நேரத்திற்குச் சென்ற நான் காத்திருந்தேன்.
சரியாக ஏழு ஐம்பது மணிக்குத்தான் 
அவர்கள் என்னை மேடையேற்றினர்.
ஒன்றும் பேசாமல் மேடையேறிய நான்,
எனது சொற்பொழிவைத் தொடங்கினேன்.
விழாக்காரர் செல்வர் என்றதால்,
நான் சமரசம் செய்து கொண்டதாகப் பலரும் நினைந்தனர்.
பேசத் தொடங்கிய நான் சரியாக எட்டு மணிக்கு எனது பேச்சை நிறுத்தி,
'எனது நேரம் முடிந்து விட்டது, 
நாளை உரை தொடரும்'
எனக்கூறி விடைபெற்றேன்.
சபை திகைத்து விட்டது.
🚩  🚩  🚩
(கெடுபிடிகள் தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்