'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 32 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

🚩 🚩 🚩

வல்வெட்டித்துறை நிகழ்ச்சியில் பிரச்சினை

இதேபோல மற்றொரு நிகழ்ச்சி.
வல்வெட்டித்துறையில், 
'இந்திர விழா' என்ற ஒன்றை 
வருடந்தோறும் கொண்டாடுவார்கள்.
மிக ஆடம்பரமாக அவ்விழா நடைபெறும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒருமுறை என்னை அவ்விழாவிற்கு அழைத்தார்கள்.
முன்னரே அவ்விழாவைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால்,
அவ்விழாவிற்கு வரச் சம்மதித்தேன்.
விழாவன்று வல்வெட்டித்துறைக்குச் சென்றேன்.
அங்கே, ஒவ்வொரு சந்தியிலும்,
ஒவ்வொரு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.
என்னை அழைத்தவர்கள், ஒரு சந்தியில் மேடையிட்டு,
அதில் என்னை ஏறிப் பேசச் சொன்னார்கள்.
அந்தச் சந்திக்கு அடுத்த சந்தியில்,
வில்லுப்பாட்டு நடந்து கொண்டிருந்தது.
முதற்சந்தியில் ஓர் இசைக்குழு 
பாடிக்கொண்டிருந்தது.
நடுச் சந்தியிலிருந்து அவர்கள் என்னைப் பேசச் சொன்னார்கள்.
சத்தங்களுக்கு நடுவில் பேசுவதென்பது,
என்னால் நினைத்தும் பார்க்க முடியாத விடயம்.
அந்தச் சத்தங்கள் நின்றாலொழிய என்னால் பேச முடியாது என்றேன்.
அவர்கள் சற்றுச் சண்டித்தனத்துடன்,
'ஒத்துக்கொண்டு வந்த நீங்கள்,
பேசத்தான் வேண்டும்' எனப் பிடிவாதம் பிடித்தனர்.
'முடியவே முடியாது'
என்று சொல்லிக் காரில் ஏறிவிட்டேன்.
அவர்கள் காரைச் சூழ்ந்துகொண்டனர்.
எனது கார்க்காரரான மகான்,
காரிலிருந்த ஓர் இரும்புக் கம்பியை வெளியில் எடுத்து சுழற்றியபடி,
'நீங்கள் பயப்படாமல் உள்ளே இருங்கோ' எனச் சொல்லிவிட்டு,
திடீரெனக் கார்க் கதவைத் திறந்து,
தான் உள்ளே ஏறி பெரிய உறுமல் சத்தத்துடன் காரை 'றிவேசில்' எடுத்தார்.
கூடி நின்றவர்கள் பயந்து பின்வாங்க,
எங்கள் கார் யாழ் நோக்கிப் பறந்தது.
🚩 🚩 🚩

கலட்டி அம்மன் கோயில் பிரச்சினை

கலட்டி அம்மன் கோயிலில் எனது இராமாயணத் தொடர் விரிவுரை,
மிகச் சிறப்பாக நடந்து முடிந்த சில ஆண்டுகளின் பின்,
ஆலய நிர்வாகத்துக்குள் பகை மூண்டது.
எங்களது ஆதரவாளரான தர்மராஜா என்கின்ற அப்பர் அண்ணையை,
சபையிலிருந்து விலக்கிய பின்,
புதுச்சபையினர் தங்களது செல்வாக்கைக் காட்ட வேண்டும் என்பதற்காக,
அவ்வாண்டுத் திருவிழாவில் என்னைப் பேச வைக்க விரும்பினர்.
எனது மதிப்பிற்குரியவரான எழுத்தாளர் செங்கை ஆழியானும்,
அப்புதுச்சபையில் இருந்தார்.
எல்லோருமாக ஒருநாள், எங்கள் கோட்டத்திற்கு வந்து,
அவ்வாண்டு நான் பேச வேண்டுமென வலியுறுத்தினர்.
'அப்பர் அண்ணை என்னுடைய நண்பர்.
முதன்முதல் அவ்வாலயத்திற்கு என்னை அழைத்துச் சென்றவர்,
அவரை நீங்கள் ஒதுக்கிவிட்டு, என்னை அழைக்கிறீர்கள்.
அதை ஏற்று நான் அங்கு வந்தால், அது நட்புக்குச் செய்த துரோகமாக இருக்கும்.
அதனால், நான் வரமுடியாது'
எனச் சொன்னேன்.
அவர்கள், என்னை எப்படியும் வரச்செய்துவிடவேண்டும் என்பதற்காக,
அக்காலத்திலேயே, ரூபா ஐம்பதாயிரம் வரை தரலாம் எனச் சொல்லி,
என்னை ஈர்க்க முற்பட்டனர்.
எந்தச் சமரசத்திற்கும் வராமல் அவர்கள் கோரிக்கையை நிராகரித்தேன்.
அவர்களில் ஒருவர், பின்னர் எனது நண்பர் ஒருவரிடம்,
'அவர் எல்லாருக்கும் பொதுவாய்த்தானே இருக்க வேண்டும்,
எப்படி அப்பர் அண்ணைக்காக வரமுடியாது என்று சொல்லலாம்?
அவர் மட்டும் வராவிட்டால்,
கம்பன் கோட்ட வாசலில் வந்து சத்தியாக்கிரகம் நடத்துவோம்'
என்று சொல்லியனுப்பினார்.
வந்த நண்பரிடம், 'அது அவர்களின் உரிமை,
தாராளமாய் அவர்கள் சத்தியாக்கிரகம் நடத்தட்டும்.
ஆனால் ஒன்று, நாங்கள் வெளியே சென்று வருவதற்கு இடையூறாய்,
வாசலில் மட்டும் உட்காரக் கூடாது என்று போய்க் கூறுங்கள்' 

எனச் சொல்லியனுப்பினேன்.
அந்த வர்த்தகர், அதனால் என்மேல் பலகாலம் பகை பாராட்டினார்.
🚩 🚩 🚩

சாவகச்சேரி ஆலயப் பிரச்சினை

ஒருமுறை சாவகச்சேரி ஆலயம் ஒன்றிற்கு,
தேர்த்திருவிழாவிற்காக என்னைப் பேச அழைக்க வந்தனர்.
தேர்த்திருவிழாவன்று பேச்சுக்கள் சரியாக அமையாது என்று,
அனுபவத்தில் தெரிந்து வைத்திருந்ததால்,
நான் நிகழ்ச்சிக்கு வரமுடியாதென மறுத்தேன்.
அவர்கள் விடாப்பிடியாக, 
'சரியாக எட்டு மணிக்குச் சாமி தேரில் ஏறும்.
ஒன்பதரை மணிக்கு இருப்பிடம் வந்துவிடும்.
நீங்கள் பத்து மணிக்குப் பேசலாம்'
என 
உறுதிபடக்கூறி அழைத்தனர்.
அவர்கள் அவ்வளவு உறுதியாகச் சொன்னதால் நானும் சம்மதித்தேன்.
சரியாக ஒன்பதே முக்கால் மணிக்கு 
நான் கோவிலடிக்குச் சென்றால்,
அங்கு ஒருவரையும் காணவில்லை.
உபயகாரரை விசாரித்தால், 
இப்போதுதான் சாமிக்கு அலங்காரம் நடக்கிறது.
ஒரு மணி நேரத்தில் தேர் வெளிக்கிட்டுவிடும் என்று,
எந்தவித பதற்றமுமின்றிப் பதில் சொன்னார்.
கடுமையான ஆத்திரத்தில்,
பக்கத்தில்போய்த் தேநீர் 
அருந்திவிட்டு வருவதாய்ச் சொல்லிவிட்டு,
வீடு வந்துவிட்டேன்.
அதனால் கடுமையாகக் கோபங்கொண்ட அவர்கள்,
பின்னாளில் புலிகளுக்கும் எமக்கும் முரண்பாடு ஏற்பட்டபோது,
பிள்ளையாரின் சாபத்தால்தான் அது நடந்தது எனப் பிரசாரம் செய்தனர்.
🚩 🚩 🚩

மகான்

சொற்பொழிவு, பட்டிமண்டபம் என,
நான் இருக்க நேரமில்லாமல் ஓடித்திரிந்த காலமது.
யாழ்ப்பாணத்தில் பெற்றோல் இல்லாமல் போனதால்;,
மண்ணெண்ணெயிலேயே வாகனங்கள் ஓடின.
அக்காலத்தில் காரைப்  பயன்படுத்தியவர்கள் ஒருசிலர்தான்.
அந்த நாட்களில் பிரசங்கத்திற்கென,
காரில் போனவன் பெரும்பாலும் நானொருவன்தான்.
அப்போது எனக்குக் கார்  
ஓடியவர்,
திருநெல்வேலியைச் சேர்ந்த மகான் என்பவர்.
பழைய திருநெல்வேலிச் சண்டியர் அவர்.
காரை ஓர் உயிர்ப்பிராணி போல நேசிப்பார்.
வெறும் ஓட்டுநராய் அன்றி 
எனக்கு ஒரு 'பொடிகார்டாகவும்' செயல்படுவார்.
கழக உறவுகளில் அவரும் ஒருவராய் இருந்தார்.
பின்னாளில், 
புலிகள் இயக்கத்தில் மாத்தையாவால் நிகழ்ந்த குழப்பத்தின்போது,
புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டவர்,
பின்பு என்ன ஆனார் என்று தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை 
அவரது இழப்பும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒன்றே.

தொடரும்...

 

 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்